ராட்சத காற்றாடி கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்த இளைஞர்: கீழே விழுந்து முதுகுத் தண்டு பாதிப்பு

- எழுதியவர், யூ.எல்.மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ராட்சத காற்றாடி (பட்டம்) ஒன்றை பறக்க விட்டபோது, பட்டம் விடுவதில் அனுபவமற்ற இளைஞர் ஒருவர், அதன் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் சுமார் 120 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து, அதிருஷ்டவசமாக தப்பிய சம்பவமொன்று இலங்கையின் பருத்தித்துறை - குரும்பசிட்டி பகுதியல் நடந்துள்ளது.
மனோகரன் என்ற அந்த இளைஞருடைய வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் இளைஞர்கள் சிலர் இணைந்து, ராட்சத காற்றாடி ஒன்றைப் பறக்க விட்டனர். காற்றாடி விடுவதில் எந்தவித முன் அனுபவங்களும் அற்ற மனோகரன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.
பட்டம் மேலெழும் போது அதன் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், சிறிது சிறிதாக கயிற்றை விட வேண்டும் என்பது தெரியாத மனோகரன், காற்றாடியின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டிருக்க, அவர் பட்டத்துடன் மேலெழத் தொடங்கினார்.
இப்படி ஆகாயத்தில் கயிற்றைப் பிடித்தவாறு உயரத் தொடங்கிய மனோகரன், சுமார் 120 அடி வரை தான் கயிற்றுடன் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார்.
கடந்த சனிக்கிழமை (18) பிற்பகல் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆகாயத்தில் மனோகரன் உயர்ந்த நிலையில், அவரை சத்தமிட்டு தைரியப்படுத்திய நண்பர்கள், மிகச் சிரமத்துடன் கயிற்றை கீழே இழுத்து மனோகரனை தரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்த நிலையில் - தான் பிடித்திருந்த கயிற்றை கைவிட்டு கீழே குதித்துள்ளார் மனோகரன்.

இதன்போது தனது உடலில் அடிபட்டதாகவும் முள்ளந்தண்டில் (முதுகுத் தண்டில்) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனோகரன் தெரிவித்தார்.
சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன், மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது விருப்பத்தின் பேரில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.
ஆனாலும் முள்ளந்தண்டில் தற்போதும் வலி உள்ளதாக மனோகரன் கூறினார்.
திருமணமான மனோகரன் வெற்றிலைக் கடையொன்றை நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
மனோகரன் காற்றாடியின் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த காட்சியை அப்போது அவரது நண்பர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் படமெடுத்துள்ளனர்.
அந்தப் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பிற செய்திகள்:
- 6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு - அறிவியல் அதிசயம்
- தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகள்: இணையத்தில் வைரலாகும் படங்கள், காணொளி
- ஜக்கியை நான் ஆதரித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? சீறும் சீமான்
- 6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு - அறிவியல் அதிசயம்
- தடுப்பூசி போட்டால் மதுவுக்கு 10% தள்ளுபடி, இலவச எண்ணெய்: மக்களை கவருமா ஊக்கப்பரிசுகள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












