சீமான் சிறப்புப் பேட்டி: ஜக்கியை நான் ஆதரித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? விஜயகாந்த் மட்டுமல்ல, வைகோ, ராமதாசும் பாடம்தான்

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திமுக அரசாங்கத்தின் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கும் விமர்சனங்கள், குறிப்பாக அண்மையில் அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் காலில் அணிந்திருந்த செருப்பைக் காட்டி விமர்சித்தது, யூடியூபர் மாரிதாஸ் கைது குறித்து அவர் வெளியிட்ட கருத்து ஆகியவை விவாதப் பொருளாக மாறியுள்ளன.
இந்த சமீப கால சர்ச்சைகள் குறித்து சீமானுடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்க்காணலில் இருந்து...
கே:சட்டமன்றத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. ஆனால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஓர் ஒன்றிய கவுன்சிலர் இடம்கூட கிடைக்கவில்லை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: நாங்கள் வெற்றி பெறவில்லைதான். அதற்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 12 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். தற்போது கிராம ஊராட்சியில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளோம். பணமும் சாதியும்தான் உள்ளாட்சியில் வெற்றி பெற வைக்கும். இதில் போட்டி போடுவது என்பதே பெரிய விஷயம். தொடர்ந்து போட்டி போட்டு வருகிறோம். வெற்றி பெறுகிறோமா, இல்லையா என்பதையெல்லாம் யோசிப்பதில்லை.
கே:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதற்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையில் தயாராகி வருகிறது?
ப:``நகர்ப்புற உள்ளாட்சியில் 12,000 பதவிகளுக்கு போட்டி நடக்க உள்ளது. நாங்கள் போட்டியிடுவோம். கூட்டணியை எதிர்பார்த்து நாங்கள் இல்லை. இதற்காக எந்த வியூகமும் வகுக்கவில்லை. மாற்றத்தை விரும்பும் தலைமுறை எங்களைத்தான் தேடவேண்டும். அதற்கான வாய்ப்பாக நாங்கள் போட்டியிடுவோம்".
கே:தமிழ்நாட்டின் அரசியல் களம் என்பது கூட்டணிகளை நம்பித்தான் உள்ளது. கூட்டணிகளே இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என எப்படி நம்புகிறீர்கள்?
ப:`` எங்களுக்குப் பாடமாக எங்கள் தலைவர் இருக்கிறார். அவர், `எங்கே உண்மையும் நேர்மையும் இருக்கிறதோ அங்கே மக்கள் வருவார்கள்' என்றார். அதுதான் நடந்தது. இது சாத்தியமா எனப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த அரசியல் தேவையா, தேவை இல்லையா என்பதுதான் முக்கியம். இவர்கள் யாரையாவது தனித்து நிற்கச் சொல்லுங்கள். அரை விழுக்காடு, ஒரு விழுக்காடு என வாக்கு வங்கி உள்ள 30, 40 கட்சிகளை சேர்த்துக் கொண்டுதான் இவர்கள் களத்தில் நிற்க வேண்டும். நான் சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு, பொறியல் எடுத்துக் கொள்வேன். புலி சண்டைக்குப் போகும்போது செந்நாய், கழுதைப் புலியையெல்லாம் கூட்டிக்கொண்டு போகாது. புலி தனியாகத்தான் சண்டை போடும். நான் புலி, தனியாகத்தான் சண்டை போடுவேன்".
கே:தே.மு.தி.கவை தொடங்கிய காலத்தில் தனித்துப் போட்டியிட்டபோது நாடாளுமன்றத் தேர்தலில்10 சதவிகித வாக்குகள் வரையில் விஜயகாந்த் பெற்றார். அதன்பிறகு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால் அவருக்கு சரிவு ஏற்பட்டதாகச் சொல்லப்படுவது உண்டு. இதையும் உதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்களா?

பட மூலாதாரம், Getty Images
ப:``இவையெல்லாம் ஒரு படிப்பினைதான். அவர் மட்டும் எனச் சொல்ல முடியாது. வைகோ, திருமாவளவன், ராமதாஸ் ஆகியோரை அடிச்சுவடாக பார்க்கிறேன். என்னுடைய தனித்துவத்தை விட்டுவிடக் கூடாது என நினைக்கிறேன். `துக்ளக்' ஆசிரியர் சோ, விஜயகாந்த்தை அ.தி.மு.க கூட்டணியில் சேர்த்தார். அதில்தான் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. அ.தி.மு.கவுடன் அவர் சண்டையிட்டுப் பார்த்தும் ஒன்றும் முடியவில்லை. அவர் கூட்டணி வைத்திருக்கக் கூடாது. இப்போது அவரிடம் சென்று, `இவ்வாறு செய்திருக்கக் கூடாது' எனக் கூறுவதைவிட, நாம் அவ்வாறு செய்யாமல் இருந்தால் போதும் என நினைக்கிறேன்".
கே:`சசிகலாவுடன் குடும்பரீதியான உறவு உண்டு' எனப் பேசினீர்கள். அ.தி.மு.கவில் இரட்டைத் தலைமையை ஒற்றை வாக்குகள் மூலம் தேர்வு செய்யும் வகையில் விதிகளைத் திருத்தியுள்ளனர். இதன்மூலம் சசிகலாவுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகச் சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப:``அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா கூறியபோது, `அது தவறு' எனக் கூறினேன். அவர் இல்லாவிட்டால் அ.தி.மு.க இல்லை. நான் தற்போதுள்ள அ.தி.மு.கவைப் பற்றிச் சொல்கிறேன். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவர் ஒருவரால்தான் அ.தி.மு.கவை காப்பாற்ற முடிந்தது. அவர் வருவதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை ஒரு வரலாற்று வாய்ப்பாக எடப்பாடி கருதுகிறார். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு 3 மணிநேரம் சசிகலாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் கூறினார்".
கே:அந்த மூன்று மணிநேர பேச்சில் அவர் ஆதங்கமாகப் பேசிய விஷயங்கள் எதாவது இருக்கிறதா?
ப:``ஆதங்கமாக அவர் பேச மாட்டார். `நாம் இருக்கும்போது எப்படி நிர்வாகம் செய்தோம்' என்பதைப் பற்றித்தான் பேசுவார். ஜெயலலிதா இல்லாத அவரது வலியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஜெயலலிதா இல்லாத சசிகலாவை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது மிகுந்த வேதனையாக இருக்கும்".
கே:அண்மைக் காலமாக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா சில அறிக்கைகளை வெளியிடுகிறார். முன்னதாக சில ஒலி நாடாக்களை வெளியிட்டார். இதன்மூலம் அக்கட்சியின் தொண்டர்களை ஈர்க்க முடியும் என நம்புகிறாரா?
ப:``ஒலி நாடாக்களை வெளியிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது நாகரிகமாக இருக்காது என சசிகலா தரப்புக்கு சொல்லியனுப்பினேன். அப்போது, `ஒருவர் பேசுவதை பதிவு செய்து வெளியிடுவது சரியாக இருக்காது. மக்களையும் தொண்டர்களையும் சந்தித்து முடிவெடுக்கலாமே தவிர, தொண்டன் நம்பிப் பேசுவதை வெளியிடுவது நன்றாக இருக்காது' என்றேன். அதன்பிறகு ஒலிநாடாக்களை வெளியிடுவது நின்றுவிட்டது".
கே:எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளே அவரை ஓர் ஆளுமையாக மாற்றிக் காட்டியது. அது போன்று எதுவும் செய்யாமல் சசிகலா அமைதியாக இருப்பதன் மூலம் என்ன சாதித்துவிட முடியும்?
ப:``நீங்கள் எல்லாம் நினைப்பதுபோல் அவர் கிடையாது. மிகவும் வெள்ளந்தியான மனுஷி அவர். அவரிடம் பேசிப் பார்த்தால், இவர் எப்படி ஜெயலலிதா கையாண்டார் என நினைப்பீர்கள்".
கே:சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக எடப்பாடியிடம் பேசுவதாக சொன்னீர்கள். அதற்கான முயற்சியில் இறங்கினீர்களா?

பட மூலாதாரம், NAAMTAMILARKATCHIOFFL FACEBOOK PAGE
ப:``நான் பேசிப் பார்ப்பதாக சசிகலாவிடம் சொன்னேன். அவரும் சரி என்றார். ஒருகட்டத்தில், `அவர் ஒத்துக் கொள்ளவில்லையே' என்றார். இவர்கள் எதற்காக சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. எடப்பாடி சரிவரவில்லை. அதுதான் காரணம்".
கே:அ.தி.மு.கவில் தற்போதுள்ள இரட்டைத் தலைமை சரியாக செல்வதாக பார்க்கிறீர்களா?
ப:``60 பேர் பயணிக்கும் பேருந்து என்றாலும் ஓர் ஓட்டுநர்தான் ஓட்ட வேண்டும். ஆயிரம் பேர் பயணிக்கும் கப்பலாக இருந்தாலும் ஒரு மாலுமிதான் ஓட்ட வேண்டும். அது எப்போதுமே சிக்கல்தான். 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிகப்படியான இடங்களில் வென்று காட்டிவிட்டார்கள். அதனால் தப்பித்துவிட்டது. இல்லாவிட்டால் பெரும் சிக்கல் வந்திருக்கும். வெகுவான மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எந்தப் பணியையும் செய்யாததைத்தான் மக்கள் கவனிப்பார்கள். அரசைக் கேள்வி கேட்பதில்லை. எதிர்க்கட்சிக்கான தகுதி அதற்கில்லை. காரணம், கடந்த காலங்களில் அதே தவறை அவர்கள் செய்ததுதான்".
கே:`சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருந்தாலும், நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி' என பா.ஜ.க சொல்கிறது. களநிலவரம் அப்படித்தான் உள்ளதா?
ப:``அவர்கள் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். கர்நாடகா வரையில் பா.ஜ.க வந்துவிட்டது. கேரளாவில் அவர்களால் முடியவில்லை. தமிழ்நாட்டுக்குள் வர விரும்புகிறார்கள். பா.ஜ.க வென்ற நான்கு இடங்களிலும் அவர்களைத் தோற்கடிக்க தி.மு.க வேலை செய்யவில்லை. அதில் தி.மு.க தவறு செய்துவிட்டது. நான் தனியாக நின்று 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றேன். அவர்கள் தனியாக நிற்பார்களா அல்லது காங்கிரஸ் நிற்குமா? அதனால் தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்கிறார்கள். அவர்கள் ஆசைப்படுகிறார்கள், சொல்லிவிட்டுப் போகட்டுமே.
கே:``மாரிதாஸ் கைது விவகாரத்தில், `அவரது கோட்பாட்டில் உடன்பாடில்லை. ஆனால், கைது நடவடிக்கையை எதிர்க்கிறேன். ஜனநாயக நாட்டில் எதையும் பேசக் கூடாது என்ற பா.ஜ.கவின் செயல்பாட்டில் முரண்படுகிறேன். தி.மு.க செயல்பாட்டையும் கண்டிக்கிறேன்' என்கிறீர்கள். இது குழப்பமாக இல்லையா?

பட மூலாதாரம், @MaridhasAnswers twitter handle
ப:``இதை எனக்குக் கற்பித்தது இந்தத் திராவிடத் திருவாளர்கள்தான். `உன்னுடைய கருத்தில் நான் முரண்படுகிறேன், ஆனால் உனக்கான உரிமையைப் பெற்றுத் தர உயிரைக் கொடுத்தேனும் போராடுவேன்' என வால்டேர் கூறினார். நான் சிறுவனாக இருந்தபோது, இந்தக் கருத்தை இவர்கள் பேசியதை அமர்ந்து கேட்டிருக்கிறேன். என் தம்பி துரைமுருகனுக்கு ஒரு நீதி, மாரிதாஸுக்கு ஒரு நீதி என வைத்திருப்பதை எப்படி ஏற்பது? நான்கு மாதங்களாக துரைமுருகனுக்கு பிணை கொடுக்காமல் தொல்லை கொடுத்தார்கள். நான்தான் அவரை சரணடைய அனுப்பி வைத்தேன். `குண்டர் சட்டம் எல்லாம் போடக் கூடாது' எனக் கூறி அனுப்பினேன். மாரிதாஸ் எதிரில் இவர்களால் நிற்க முடிந்ததா? ஒரு வழக்கறிஞர் போய் நின்றாரா? இவர்கள்தான் உண்மையான சங்கி.
அதேபோல், ஜக்கி வாசுதேவ் விவகாரத்தில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், `ஜக்கி மீதான குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளது' என்றார். அதெல்லாம் ஒன்றும் இல்லை என்கிறார்கள். நான் ஜக்கியை ஆதரித்திருந்தால், இந்த வாடகை வாய் என்னவெல்லாம் பேசியிருக்கும்? இப்போது ஏன் பேச மறுக்கிறார்கள்? நேர்மையாளர்கள், நடுநிலையாளர்கள் இதையும் பேசட்டும். எப்படிப் பார்த்தாலும் சரணடைந்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது. அது அடிமை ஆட்சியாக இருந்தது. இது கொத்தடிமை ஆட்சியாக உள்ளது. அவர்களுக்கு பா.ஜ.க தேவைப்பட்டது. இவர்களுக்கு அது தேவையில்லை. மம்தா, பினராயி போல தி.மு.க இருக்க வேண்டியதுதானே?"
கே:அண்மையில் அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் எனக் கூறி காலில் அணிந்திருந்த காலணியை கழட்டிக் காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது உங்கள் தொண்டர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாதா?
ப:``நான் இப்படிப்பட்டவன்தான் என்பது என் தம்பிகளுக்குத் தெரியும். அதனால்தான் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த பத்தாண்டுகளாக நீங்கள் பார்க்கும் சீமான் என்பது வேறு. 90 விழுக்காடு என் கட்சியில் இந்து எனச் சொல்கிற அவர்தானே சங்கி. என்னைத் திரும்ப திரும்ப சங்கி என அழைத்தால் கோபம் வரத்தானே செய்யும். செருப்பைக் காட்டியதோடு நான் நிறுத்திக் கொண்டேன். நானும் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். என் கட்சித் தொண்டர்களையும் கட்டுப்படுத்தி வைக்கிறேன்".
கே:`உங்களைக் கவனிக்கின்ற தலைமுறைக்கு இது தவறான வழிகாட்டுதலைக் கொடுக்கலாம்' என்ற ஐயத்தில்தான் கேட்கிறேன்?
ப:``இதில் என்ன தவறு நடந்துவிட்டது எனச் சொல்லுங்கள். செருப்பை எடுத்துக் காட்டினேன். ஆமாம் வேண்டுமென்றே தான் எடுத்துக் காட்டினேன். அதுதான் நான். என்னை ஏன் வேடம் போட வைக்கிறீர்கள்? என்னோடு சண்டை போட்டுப் பார்க்கட்டும். எதற்கும் ஓர் அளவு இருக்கிறது. பழைய சீமானாக இருந்திருந்தால் வீடு தேடிப் போயிருப்பேன். அதை ஒரு பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருப்பார்கள். உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள், இந்தியாவிலேயே நான்தான் பா.ஜ.கவை எதிர்க்கிறேன். மம்தா முதல்வராக இருப்பதால் அவர் பெயர் வெளியில் வருகிறது".

பட மூலாதாரம், Facebook
கே:சாட்டை துரைமுருகன் கைதுக்காக நான்கு மாதங்கள் பிணை கேட்டு அலைந்ததாக சொல்கிறீர்கள். ஏழு பேர் விடுதலை, இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை எனத் தொடர்ந்து பேசி வருகிறீர்கள். ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சாட்டை துரைமுருகன் கூறிய கருத்தை ஆதரிக்கிறீர்களா?
ப:``நான் அதனை ஆதரிக்கவில்லை. அதுபோல பேசக் கூடாது எனக் கண்டித்திருக்கிறேன். அவர் இப்போதுதான் பக்குவப்பட்டு வருகிறார். நான் செருப்பைக் காட்டியதைத்தான் பார்த்தீர்கள். அவரை ஒருமுறை அடித்திருக்கிறேன். அதையெல்லாம் செய்யாமல் நான் இருப்பேன் என நினைக்க வேண்டாம். ராஜீவ்காந்தி தொடர்பாக அவர் பேசிய கருத்தில் உடன்பாடில்லை".
கே:ஆனால், விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நீங்கள் பேசிய பேச்சைத்தான் சாட்டை துரைமுருகனும் பேசினார். அதையே உங்கள் கட்சித் தொண்டர்களும் கடைப்பிடிப்பதாக பார்க்கலாமா?
ப:``இருக்கலாம். ஆனால், ஏழு பேர் விடுதலையை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணம், `எங்கள் தலைவரைக் கொன்றுவிட்டார்கள்' என்பதுதான். உங்கள் தலைவர், ராணுவத்தை அனுப்பி 20,000 மக்களைக் கொன்றதையும் ஒருமுறை பேசுங்கள் என்றுதான் கேட்கிறேன். `விடுதலைப் போராட்டத்தில் கறுப்புக் காலங்கள் என்பதே இந்திய ராணுவம் நுழைந்ததுதான்' என அண்ணன் பிரபாகரன் சொல்கிறார். ஓர் ஆசாரி தனது உளியை அடமானம் வைத்து இந்திய ராணுவத்துக்கு சோறு போட்டார். அதே ராணுவம் தன்னை அழிக்கும் என அவர் நம்பவில்லை. ராஜீவ் மரணத்துக்கு வருந்துகிறோம். அதே நேரம் இதையும் பேச வேண்டும் என்கிறோம்".
கே:கே.டி.ராகவன் விவகாரத்தில் யாரும் செய்யாததையா செய்துவிட்டார் என்றீர்கள். இதற்கு கரூர் எம்.பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மாரிதாஸ் விவகாரத்திலும் கருத்து தெரிவித்திருந்தீர்கள். இதையெல்லாம் வைத்து, உங்களை பா.ஜ.கவின் பி டீம் என்கிறார்களே?
ப:``அதற்குத்தான் செருப்பால் அடிப்பேன் என்றேன். ராகவன் விவகாரத்தில் நான் என்ன பேச வந்தேன் என்பதை பார்த்தால் தெரியும். `அது ஒரு சமூகக் குப்பை, அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. எவ்வளவோ பணிகள் இருக்கிறது' என்றேன். கோவையில் நடந்த வன்புணர்வு, கொலை பற்றியெல்லாம் ஜோதிமணி குரல் கொடுக்கவில்லை. கரூரில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றியும் அவர் பேசவில்லை. என்னை எதிர்த்துப் பேச வேண்டும் என நினைக்கிறார். அது அண்ணன், தங்கை சண்டை. அவர் பேசிவிட்டுப் போகட்டும்"
பிற செய்திகள்:
- யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் முதல்வர் 'மகாராஜா' ஆக மாறியது எப்படி?
- மலேசியா மழை: 100 ஆண்டுகளுக்கு பிறகு கதி கலங்க வைக்கும் காட்சிகள்
- யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?
- தாய்மை அச்சுறுத்துகிறதா? - குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை
- ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கத் துறை விசாரணை - பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








