"அதிமுக அட்வைசரா அண்ணாமலை?" சீறும் ஜெயக்குமார் - ஓபிஎஸ் பேச்சுக்கு புது விளக்கம்

விஜயானந்த்
படக்குறிப்பு, டி.ஜெயக்குமார், தமிழக முன்னாள் அமைச்சர்
    • எழுதியவர், ஆ, விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

`திருந்தி வந்தவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு' என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சசிகலா கட்சிக்கு மீண்டும் வருவதை பொருள்படும் வகையில் `அவர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை' என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

சென்னை சேத்துப்பட்டில் திங்கள்கிழமையன்று அ.தி.மு.க சார்பாக கிறிஸ்துமல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், குட்டிக் கதை ஒன்றைச் சொன்னார். அப்போது அவர், ``இயேசு சொல்கிறார், நான் நல்லவர்களைக் காப்பதற்காக புவிக்கு வரவில்லை. பாவத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்ய வந்திருப்பதாகக் கூறினார்.

நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திரும்பி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு,'' என்றார்.

இந்த வார்த்தைகள் சசிகலாவை மையப்படுத்திப் பேசுவதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ` தவறு செய்தவர்கள் என்ற வகையில் பார்க்காமல் தவறை உணர்ந்தவர்கள், இனி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் வருகிறவர்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால், சசிகலாவுக்கு மன்னிப்பு கிடையாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார்,' என்றார்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் இன்று நடத்திய ஃபேஸ்புக் நேரலை பேட்டியின் எழுத்து வடிவத்தை இங்கே வழங்குகிறோம்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குத் தேர்தல் நடந்த பிறகு நடந்த முதல் கூட்டமான கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் பங்கேற்றனர். அப்போது பேசிய ஓ.பி.எஸ், ` மனம் திருந்தியவர்களை ஏற்பதே நல்லது` எனக் கூறியதை எடப்பாடி பழனிசாமிக்கு கூறியதாகத்தானே பார்க்கப்படுகிறது?

``அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. அது கிறிஸ்துமஸ் பெருவிழா. இயேசு பிரானின் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் எடுத்துச் சொல்லக் கூடிய விழா. எதிரியாக இருந்தாலும் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவின் அடிப்படை நெறிகள். மன்னிக்கின்ற மனப்பாங்கை மனிதகுலம் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அவர் பேசினார். அதற்கு ஒரு உருவத்தை வைத்துப் பேசுவதை ஏற்க முடியாது. கட்சியைப் பொறுத்தவரையில் எந்தப் பிரச்னைகளும் இல்லை. ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக வழிநடத்திக் கொண்டு போகும்போது இதை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. அது உண்மையல்ல.

சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என இருவருமே குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் உறுதியாக இருக்கிறார். ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கக் கூடாது. குறிப்பாக, சசிகலாவின் ஆதிக்கம் கட்சியில் வரக்கூடாது என்பது அவரின் எண்ணம். இதை முடிச்சுப் போடுவது என்பது தேவையற்ற ஒன்று''.

அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ்

பட மூலாதாரம், TTV Dinakaran

படக்குறிப்பு, கோப்புப்படம்

இதுதொடர்பாக ஓ.பி.எஸ் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லையே?

``விளக்கம் கொடுக்கும் வகையில் அவர் என்ன தவறாகச் சொல்லிவிட்டார். இயேசு பிரான் செய்த உபதேசங்களைத்தான் அவர் கூறினார். கட்சி தெளிவாக உள்ளது. இவ்வாறு சம்பந்தப்படுத்திப் பேசுவதை ஒருங்கிணைப்பாளரும் விரும்பவில்லை. இணை ஒருங்கிணைப்பாளரும் விரும்பவில்லை. 2017 மார்ச் மாதம் எடுத்த முடிவு இப்போதும் தொடர்கிறது, நாளையும் தொடரும்''.

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தொடர்பான பணிகளுக்காக சென்ற ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, `தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள்' என்றார். அவர் தொடர்ந்து பேசி வருவது அ.தி.மு.க தொண்டர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

``அதற்குத் தலைமைக் கழகத்திலேயே அவர் பதில் சொல்லிவிட்டார். ஊடகங்களுக்கு செய்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளியிடுகின்றனர். இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை''.

`நல்ல தலைமைக்கு எது அழகு' என ஓ.பி.எஸ் கொடுத்த விளக்கத்தைப் பார்க்க முடிகிறது. தலைமையை விமர்சித்ததற்காக அன்வர்ராஜா நீக்கப்பட்டார். ஓ.பி.எஸ், சசிகலாவை மையமாக வைத்துத் தொடர்ந்து பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா எனவும் சிலர் கேள்வியெழுப்புகின்றனரே?

``அன்வர்ராஜாவையும் அவரையும் ஒப்பிட முடியாது. கட்சி விஷயத்துக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர் செயல்படவில்லை. கட்சியின் கொள்கை என்னவோ அதன்படிதான் அவர் செயல்படுகிறார். ஒரு கட்சியை ஏற்றுக் கொள்ள முடியாமல் வெளியில் அன்வர்ராஜா பேசினார். எதற்கும் ஓர் அளவு உண்டு. அந்த அளவு எனக்குத் தெரியும் என்பதால் அதனை உணர்ந்து பேசி வருகிறேன். அளவு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் கொள்கைகளின்படிதான் ஒருங்கிணைப்பாளர் செயல்பட்டு வருகிறார்.''

உங்கள் கூட்டணியில்தான் பா.ஜ.க உள்ளது. `பழைய அ.தி.மு.கவாக ஒற்றுமையாக இருப்பதற்கு சசிகலாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதை எப்படிப் பார்ப்பது?

``அண்ணாமலை தனது கட்சி வேலையை பார்க்கட்டும். எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவை சேர்க்குமாறு அறிவுரை கொடுக்க இவர் யார்? இவர் என்ன எங்களின் அட்வைசரா? அவரவர் வேலையை அவரவர் பார்க்கட்டும். பா.ஜ.கவில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கிறார்கள். அது பற்றி நாங்கள் பேசுகிறோமா? சசிகலாவை வேண்டுமானால் பா.ஜ.கவில் சேர்த்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.''

அண்ணாமலை

பட மூலாதாரம், Annamalai BJP

படக்குறிப்பு, அண்ணாமலை, தலைவர் - தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி

அண்ணாமலை பேட்டியின் தொடர்ச்சியாக ஓ.பி.எஸ் பேசுகிறார். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?

``இது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது. உள்நோக்கம் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர் பேசுகிறார். கிறிஸ்துமஸ் விழா அன்று வராமல் இருந்திருந்தால் அவர் பேசப் போவதில்லை. இயேசு பிரானின் நெறிமுறைகளைப் பற்றித்தான் பேசினார். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. நீங்கள் நினைப்பதுபோல எந்தவித பிளவும் அ.தி.மு.கவுக்குள் இல்லை. இந்தக் கட்சியை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள்''.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகி வருகிறது. அந்தநேரத்தில் அ.தி.மு.க வலிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என பா.ஜ.கவினர் கருதுகிறார்கள். அப்படியொரு அழுத்தம் பா.ஜ.கவில் இருந்து வந்தால் சசிகலாவை சேர்த்துக் கொள்வீர்களா?

``அந்தமாதிரி எந்த அடிப்படையும் அவர்களுக்கு இல்லை. யாரை சேர்க்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் விருப்பம். சசிகலாவும் அவர்களைச் சார்ந்தவர்களும் தேவையில்லை என்ற முடிவின்படி எங்கள் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான கேள்வி எழவேண்டிய அவசியம் இல்லை. எடுப்பார் எல்லாம் சொல்வதைக் கேட்கும் கட்சி இது அல்ல. எங்களுக்கென்று கொள்கைகளும் லட்சியங்களும் உள்ளன. எங்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது.''

ராஜேந்திர பாலாஜி

பட மூலாதாரம், Rajendra Balaji

படக்குறிப்பு, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.கவில் பா.ஜ.கவின் முகமாக பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ளார். வழக்கை சந்திக்காமல் தலைமறைவாக இருப்பது சரிதானா?

``பத்து தனிப்படைகளை அமைத்து அவரைத் தேடி வருகிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனையில் இருப்பார்கள். அதற்காக தலைமறைவாக இருப்பதாகத் தகவல் பரப்பி, அ.தி.மு.கவுக்கு கெட்ட இமேஜை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார்கள். இது திட்டமிட்டுப் பரப்பப்படுகிற சதியாகப் பார்க்கிறேன். எத்தனையோ தலைமறைவு குற்றவாளிகள் உள்ளனர். அவர்களை எல்லாம் பறக்கும்படை அமைத்துத் தேட வேண்டியதுதானே. இன்றைக்கு நாளிதழைப் பார்த்தாலே கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, பாலியல் வன்கொடுமை என சர்வசாதாரணமாக செய்திகள் வருகின்றன. தி.மு.க அரசுதான் இதற்கு முழுப் பொறுப்பு. தி.மு.க அரசு வரும்போதெல்லாம் மக்கள் வாழ முடியாத நிலைதான் ஏற்படுகிறது. அமைதியான அரசு என்பதெல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும்தான் இருந்தது.''

முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடவடிக்கை பாய்கிறது. இது அ.தி.மு.கவின் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தாதா?

``என்ன வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். இது மன்னர் நாடு அல்ல. நீதிமன்றத்தில் எங்கள் தரப்பினர் உண்மையை நிரூபிப்பார்கள். இவர்கள் என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள்போல அவதாரம் எடுத்துள்ளனர். பசுத்தோல் போர்த்திய புலியாக அவர்களின் செயல்பாடு உள்ளது. எத்தனையோ அடக்குமுறைகளை சந்தித்துள்ளோம். இதையெல்லாம் கடந்து போவோம்.''

திமுகவை எதிர்ப்பதில் அ.தி.மு.க சிறப்பாக செயல்படவில்லை என சீமான் சொல்கிறாரே?

``உலகத்துக்கே தெரியும். ஒரு கோடியே 45 லட்சம் வாக்குகளை வாங்கினோம் என்றால் யார் எதிர்க்கட்சி? ஆட்சிக்கு எதிராக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். அண்மையில்கூட மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சிலர் பேசுகிறார்கள். மக்கள்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். எலுமிச்சம் பழத்தை மறைக்கலாம். எரிமலையை மறைக்க முடியாது. நாங்கள், நாங்கள்தான்''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: