தமிழ்நாடு அரசியல்: சசிகலா பற்றி எதிர்கருத்து - ஓபிஎஸ் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?

ஓபிஎஸ் சசிகலா எடப்பாடி பழனிசாமி
படக்குறிப்பு, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வி.கே.சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. `டெல்லி பயணத்துக்குப் பிறகு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையில் சமரச உடன்பாடு எட்டப்பட்டு விட்டதையே இது காட்டுகிறது' என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோதியை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். நாடாளுமன்ற வளாகத்தில் காலை 11.10 மணியளவில் நடந்த இந்தச் சந்திப்பில் சுமார் 40 நிமிடங்கள் பல்வேறு அரசியல் விவகாரங்கள் பேசப்பட்டன. சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து தி.மு.க அரசு நடத்தும் சோதனை நடவடிக்கைகள், சசிகலா விவகாரம், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்தும் அவர்கள் பேசியதாக தகவல் வெளியானது.

தினகரனின் `திடீர்' பேட்டி

தினகரன்
படக்குறிப்பு, டி.டி.வி. தினகரன்

பிரதமருடனான சந்திப்பில், மேக்கேதாட்டு, நீட் தேர்வு விவகாரம் ஆகியவை தொடர்பாக பேசப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதேநேரம், சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, `நன்றி' எனக் கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி சென்று விட்டார். அடுத்ததாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அ.தி.மு.கவில் சசிகலாவை இணைப்பது தொடர்பாகப் பேசப்பட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாயின.

இதன் தொடர்ச்சியாக, இரண்டு நாள்களுக்கு முன்பு திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ` அ.தி.மு.கவை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்காக இருக்கிறது. அ.தி.மு.கவை தொடங்கியது முதலே ஒற்றைத் தலைமையின்கீழ் அ.தி.மு.க இருந்தது. சசிகலா சிறைக்குச் செல்லும் வரையில் இதே நிலைமைதான் இருந்தது. தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது,' என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்காமல் தினசரி அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்த தினகரன், திடீரென அ.தி.மு.கவுக்கு உரிமை கொண்டாடிப் பேசியது, விவாதத்தை ஏற்படுத்தியது. `இ.பி.எஸ், ஓ.பி.எஸ்ஸின் டெல்லி பயணத்தின் விளைவாகவே, தினகரன் பேசத் தொடங்கியிருக்கிறார்' எனவும் கூறப்பட்டது.

மறுபுறம், `அ.தி.மு.கவை மீட்பேன்' எனக் கிளம்பிய சசிகலாவுக்கு எதிராக மாவட்டங்களில் அ.தி.மு.க நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினாலும் ஓ.பி.எஸ்ஸின் தேனி மாவட்டம் உள்பட டெல்டா பகுதிகளில் எதிர்ப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், `சசிகலா பக்கம் ஓ.பி.எஸ் சென்றுவிடுவார்' எனப் பேசப்பட்டது.

ஓ.பி.எஸ்ஸின் `உரிமை முழக்கம்'

ஓபிஎஸ்

பட மூலாதாரம், O.Paneerselvam

படக்குறிப்பு, டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில், தி.மு.க அரசுக்கு எதிராக உரிமைக் குரல் முழக்க போராட்டத்தை வியாழக்கிழமையன்று போடிநாயக்கனூரில் ஓ.பி.எஸ் நடத்தினார். இந்தப் போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், `` முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியை ஒற்றுமையாக வழிநடத்தி வருகிறோம். இதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கான ஆட்சியாக அ.தி.மு.க செயல்பட்டது. என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

மேலும், `மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது' என்பதற்காகத்தான் டெல்லி சென்றோம். அ.தி.மு.கவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். சசிகலாவால் இந்தக் கட்சியை ஒருபோதும் கைப்பற்ற முடியாது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திலும் என்னுடைய சொந்தப் பணி காரணமாக ஆஜராக முடியவில்லை. அடுத்த முறை விசாரணை தொடங்கினால் முதல் ஆளாக ஆஜராவேன்" என்றார். ஓ.பி.எஸ்ஸின் இந்த அதிரடி பேட்டி, சசிகலா தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல கோடி சொத்துகள்

``சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அ.தி.மு.கவில் அனைவரும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியது. ஆனால், `கட்சிக்கு நாங்கள்தான் உரிமையாளர்' என்ற மனநிலையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் உள்ளனர். காரணம், இந்தக் கட்சிக்கு என ரூ.5,000 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன. அதனை எளிதாக கைவிடுவதற்கு இவர்கள் தயாராக இல்லை. இவ்வளவு நாள் ஓ.பி.எஸ் அமைதியாகத்தான் இருந்தார். நேற்று மாற்றிப் பேசிவிட்டார். இதன் பின்னணியில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கலாம்" என்கிறார்.

தொடர்ந்து மேலதிக தகவல்களைப் பட்டியலிட்டார். `` அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். இவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இவர்கள் அடிமையாகத்தான் இருந்தார்கள். `அ.தி.மு.கவில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை அனுமதிக்க மாட்டோம்' என்கிறார்கள். அந்தக் குடும்பத்தில் சசிகலாவின் கணவராக இருந்த நடராசன், 88 ஆம் ஆண்டு அ.தி.மு.கவை இணைப்பது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் மரணம் அடையும் வரையில் அ.தி.மு.கவில் அசைக்க முடியாத தூணாக இருந்தார்.

ஓ.பி.எஸ் மகனுக்குப் பதவி

ஓபிஎஸ்

பட மூலாதாரம், O.Paneerselvam

ஆனால், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்பட எதையுமே ஜெயலலிதா கொடுத்ததில்லை. அந்தக் குடும்பத்தில் தினகரனுக்கு மட்டும்தான் ஜெயலலிதா அங்கீகாரம் கொடுத்தார். பெரியகுளத்தில் எம்.பி தேர்தலில் நின்று தினகரன் வெற்றி பெற்றார். ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வானார். அ.தி.மு.கவின் பொருளாளராகவும் இருந்தார். இதன்பின்னர், 2011 ஆம் ஆண்டு அவரை ஜெயலலிதா வெளியில் அனுப்பிவிட்டார். அதன்பிறகு தினகரன் அமைதியாகவே இருந்தார்.

அதேநேரம், தினகரனைப் போன்று சசிகலாவுக்கு எந்த முக்கியத்துவத்தையும் ஜெயலலிதா கொடுக்கவில்லை. திவாகரன், இளவரசி ஆகியோருக்கும் கொடுக்கவில்லை. இதில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் எங்கே வருகிறது? நேற்று ஓ.பி.எஸ்ஸின் மகனுக்கு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் பதவியை கொடுத்துள்ளனர். அவர் மத்திய இணையமைச்சராக வேண்டும் என ஓ.பி.எஸ் எதிர்பார்த்தார். ஆனால், `ஒரு குடும்பத்தின் ஆதிக்கம்' என ஓ.பி.எஸ் பேசி வருகிறார். சொல்லப் போனால், அவரது குடும்பம்தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

`சசிகலாவை சேர்க்க முடியாது' என இவர்கள் டெல்லியில் கூறியிருக்கலாம். தற்போது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையில் சமரசம் ஏற்பட்டதால் வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க அவர்கள் விரும்பவில்லை. அ.தி.மு.க என்ற கட்சியின் கட்டுப்பாட்டை பா.ஜ.க எடுத்துக் கொண்டது. `தி.மு.கவுக்கு அடுத்தபடியாக நாங்கள்தான்' என அவர்கள் பேசி வருகின்றனர். அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை. சசிகலா உள்ளே வந்தாலும் ஆறு வருடத்துக்கு அவரால் தேர்தலில் நிற்க முடியாது. அப்படியானால் இவர்களுக்கு அவர் எந்தவகையில் போட்டியாக இருக்கிறார்?" என்கிறார்.

ஜெயலலிதா கொடுக்காத அங்கீகாரம்

அதிமுக

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, கோப்புப்படம்

``இனி சசிகலாவுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?" என்றோம். ``அ.தி.மு.கவுக்கு உரிமை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வரும் வரையில் சசிகலா பேசுவார். தேர்தல் ஆணையத்தில் 2/2017 உத்தரவின்படி ஓ.பி.எஸ, செம்மலை, மதுசூதனன் ஆகியோர் கைகளில் இரட்டை இலை கொடுக்கப்பட்டுவிட்டது. இதில் செம்மலையும் மதுசூதனனும் அமைதியாகிவிட்டனர். ஓ.பி.எஸ் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவர், இப்போது பேசத் தொடங்கிவிட்டார். இவர்கள் மீண்டும் தேர்தல் ஆணையம் சென்று, `சசிகலாவுக்கும் அ.தி.மு.கவுக்கும் சம்பந்தம் கிடையாது' எனப் புகார் கொடுக்கலாம். அதேநேரம், சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நடந்து கொண்டேயிருக்கும்.

இதன்மூலம் அ.தி.மு.கவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கிறேன். பா.ஜ.கவுக்கு வழிவிடும் முயற்சி நடப்பதாகவே அறிய முடிகிறது. சட்டசபையில் 66 எம்.எல்.ஏக்களோடு அ.தி.மு.க இருக்கிறது. அங்கு இன்னமும் குழப்பம் நீடிப்பதால், மிடில் லெவலில் உள்ள தலைவர்கள் எல்லாம் தி.மு.க பக்கமோ அல்லது வேறு கட்சிகளின் பக்கமோ சென்றுவிடுவார்கள். ஒரு கட்சிக்கு மிடில் லெவல் தலைவர்கள் மிக முக்கியம். கட்சியின் கட்டுமானத்தை வளர்த்தெடுப்பதில் அவர்கள் முக்கியமானவர்கள். இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோரின் செயல்பாடுகளால் அ.தி.மு.க கரைந்து கொண்டிருக்கிறது. இது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும். மேயர்கள், நகராட்சித் தலைவர் பதவிகளில் பின்னடைவு ஏற்படும்போது தெரியவரும். அப்போது சசிகலா தொடர்பான பேச்சுகள் மீண்டும் வரலாம்" என்கிறார்.

``ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா உறவுகளின் ஆதிக்கம் அதிகமானதைத்தானே அ.தி.மு.க நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்?" என்றோம். `` சசிகலா மட்டும் வருவதால் குடும்பத்தின் ஆதிக்கம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஜெயலலிதா இருந்தவரையில் அந்தக் குடும்பத்தின் ஆதிக்கம் எங்கே இருந்தது? சசிகலாவுக்கு அங்கீகாரம் கொடுத்ததே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர்தான். சொல்லப்போனால் ஜெயலலிதா கொடுக்காத அங்கீகாரத்தை இவர்கள் கொடுத்தனர்.

ஜெயலலிதா இறந்த பிறகு இவர்களில் ஒருவரை பொதுச்செயலாளராக முன்னியிருத்திருக்கலாமே? எந்த அடிப்படையில் சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராகக் கொண்டு வந்தனர். அப்போது ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தார். ஒரே நபரால் குடும்ப ஆதிக்கம் வரும் என்றால், இவர்கள் செய்து வரும் அரசியலுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. `இனி இந்தக் கட்சியில் எதிர்காலம் இல்லை' என முடிவெடுத்து மாற்றுக் கட்சிகளை நோக்கி முக்கிய நிர்வாகிகள் படையெடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் அ.தி.மு.கவின் நாடோடி மன்னனாக பிரதமர் மோதி இருக்கிறார். ஆயிரத்தில் ஒருவனாக அமித் ஷா இருக்கிறார்" என்கிறார்.

அ.தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.கதான்

வைகைசெல்வன்

பட மூலாதாரம், Vaigaiselvan

ஓ.பி.எஸ்ஸின் பேச்சு தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் செய்தித் தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஒரு குடும்பத்தின்கீழ் அ.தி.மு.க நிர்வகிக்கப்படுவதை தொண்டர்கள் விரும்பவில்லை. ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் இந்த இயக்கத்தை நல்லமுறையில் கொண்டு செல்வதை நிர்வாகிகள் விரும்புகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். இதனை பல தருணங்களில் இரு தலைவர்களும் உணர்த்தியுள்ளனர். அதேநிலை தற்போதும் நீடிக்கிறது" என்கிறார்.

``தி.மு.கவுக்கு போட்டி நாங்கள்தான் என்கிறது பா.ஜ.க. அ.தி.மு.கவில் நிலவும் குழப்பங்களால் முக்கிய நிர்வாகிகள் பலரும் வேறு கட்சிக்குச் செல்லவே நினைப்பார்கள் என்கிறார்களே?" என்றோம். `` அப்படியெல்லாம் இல்லை. பத்தாண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வேறு கட்சிக்குத் தாவுவது என்பது எல்லா கட்சியிலும் இருக்கக் கூடிய ஒன்றுதான். பதவி ஆசைக்காகப் போனவர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்கத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது. அ.தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.க மட்டும்தான். அடுத்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம்" என்றார்.

``இ.பி.எஸ்ஸை தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸும் சசிகலாவுக்கு எதிராக அணி திரண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என அ.ம.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஓ.பி.எஸ் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பல்வேறு காலகட்டங்களில் பலவிதமாக அவர் பேசி வந்துள்ளார். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும் சசிகலா சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார். அப்போது அவர் என்ன பேசப் போகிறார் என்பதைப் பொறுத்தே எங்களால் கருத்துகூற முடியும். அதுவரையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் எனத் தலைமை கூறியுள்ளது. விரைவில் சூழல்கள் மாறும் என நம்புகிறோம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :