தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத் துறை புதிய அறிவிப்பு - யாருக்கெல்லாம் கிடையாது?

பட மூலாதாரம், Getty Images
'கூட்டுறவு வங்களில் நகைக்கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி கிடையாது' என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை பதிவாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு, கூட்டுறவுத்துறையில் கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
இதில் பல மாவட்டங்களில் ஒரே நபர் 300க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்றது, போலி நகைகளை அடமானம் வைத்துக் கடன்பெற்றது, நகையே பெறாமல் கடன் கொடுத்தது எனப் பல்வேறு மோசடிகளை வெளிக்கொண்டு வந்தது.
இதுதொடர்பாக, ஒவ்வொரு மாவட்டங்களிலும் முழுமையாக ஆய்வு நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார். இரவு பகலாக நகைக்கடன், பயிர்க்கடன் விவரங்களை கூட்டுறவு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
இதில் பல மாவட்டங்களில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அ.தி.மு.க நிர்வாகிகள் ஏராளமான முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
நகைக்கடன் பெற்ற போலியான நபர்கள்
இந்நிலையில், ஐந்து சவரனுக்குக்கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறி அதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டது. ஆனால், அந்த அரசாணை செயல்படுத்தப்படாமல் இருந்தது. `நகைக்கடன் பெற்றவர்களில் போலியான நபர்கள் இருப்பதால் அதனை முழுமையாக ஆய்வு செய்த பிறகே வழங்கப்படும்' என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பொது நகைக்கடன் மற்றும் தள்ளுபடி பெறப்போகும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ், கடந்த 28 ஆம் தேதி சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் உள்பட அனைத்து மண்டலங்களிலும் உள்ள இணைப் பதிவாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அந்தக் கடிதத்தில், ` பொது நகைக்கடன்களை ஆய்வு செய்வதற்காக அயல் மாவட்டங்களில் உள்ள அலுவலர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவானது சேலம் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்ப்புப் பணிகளை நிறைவு செய்து அந்தத் தகவலை பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைவதற்குக் காலதாமதம் ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டும் இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையின்றி நிதியிழப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதுதொடர்பாக, 48,84,726 நகைக்கடன் விவரங்கள் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் 35,37,693 கடன்களுக்கு மட்டும் அரசாணையில் உள்ள நிபந்தனைகளின்படி நகைக்கடன் தள்ளுபடியை பெறாத நேர்வுகள் என முடிவு செய்யப்பட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், ''கடந்த 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தினர், நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர், 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்ற நபர், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், குடும்ப அட்டைக்கான எண்ணை தவறாக வழங்கியவர்கள் அல்லது அதற்கான எண்ணையே கொடுக்காதவர்கள், ஆதார் எண் கொடுக்காதவர்கள், தவறாகக் கொடுத்தவர்கள், எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள், 40 கிராமுக்கும் கூடுதலாக நகைக்கடன் பெற்ற ஏஏஒய் குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தள்ளுபடிக்கு தகுதிபெறும் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் மாவட்டவாரியாக எக்செல் படிவத்தில் இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கும் 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் கூடுதலாக நகையை அடமானம் வைத்துக் கடன் பெற்றிருந்தாலும் தள்ளுபடி கிடையாது எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- 'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
- மத்திய கிழக்கை 2021இல் உலுக்கிய இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள்
- 'விமானங்களில் இந்திய இசை' - விமானப் போக்குவரத்து அமைச்சர் கடிதம்
- புத்தாண்டு 2022: 2021இல் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திய அசாதாரண வானிலை நிகழ்வுகள்
- 2021இல் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்த மிகச் சிறந்த படங்கள் எவை?
- கொரோனா: எச்சில் துப்புவதற்கு எதிரான இந்தியாவின் 'வெல்ல முடியாத போர்' எந்த நிலையில் உள்ளது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












