புத்தாண்டு 2022: 2021இல் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திய அசாதாரண வானிலை நிகழ்வுகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மேட் மக்ராத்
- பதவி, சுற்றுச்சூழல் நிருபர்
காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வானிலை நிகழ்வுகள், 2021ஆம் ஆண்டில் உலகளவில் லட்சக்கணக்கான மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக, புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
சாரிட்டி கிறிஸ்டியன் எய்ட் (charity Christian Aid) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை, இந்தாண்டில் 1.5 பில்லியன் டாலர்களுக்கு மேல் சேதாரங்களை ஏற்படுத்திய 10 அதீத காலநிலை நிகழ்வுகளை அடையாளம் கண்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் ஏற்பட்ட இடா சூறாவளி மற்றும் ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளம் இரண்டும் அதிகமான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்திய அதீத காலநிலை நிகழ்வுகளாகும்.
பல ஏழை நாடுகளில், வெள்ளப்பெருக்கு மற்றும் புயல்கள் ஆகியவை, அதிகளவிலான மக்களின் இடப்பெயர்வுக்கும் பெருமளவிலான இன்னலுக்கும் வழிவகுத்தது.
காலநிலை மாற்றத்திற்கும் அதீத காலநிலை நிகழ்வுகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதில் விஞ்ஞானிகள் துணிச்சலுடன் ஈடுபட்டாலும், அனைத்து அதீத காலநிலை நிகழ்வுகளும் காலநிலை மாற்றத்தால் ஏற்படுவதல்ல அல்லது அதனுடன் தொடர்புடையதல்ல.
முன்னணி ஆராய்ச்சியாளரான டாக்டர் ஃப்ரெய்டிரெய்க் ஓட்டோ இந்தாண்டின் தொடக்கத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில், இந்த உலகத்தில் தற்போது நிகழும் அனைத்து வெப்ப அலைகளும் மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் உருவாக "அதிக சாத்தியம் கொண்டவை மற்றும் தீவிரமானவை" என்று பதிவிட்டிருந்தார்.
புயல்கள் மற்றும் சூறாவளிகளை பொருத்தவரையில், காலநிலை மாற்றமும் இந்த நிகழ்வுகளை பாதிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.
ஆகஸ்ட் மாதத்தில், காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) அதன் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்டது.
சூறாவளி மற்றும் வெப்பமண்டல சூறாவளிகள் தொடர்பாக, அதன் மீதான மனிதர்களின் தாக்கங்கள் குறித்த சான்றுகள் வலுப்பெற்றுள்ளதாக, அதிக நம்பிக்கை இருப்பதாக, அவ்வறிக்கையின் ஆய்வாளர்கள் கூறினர்.
"தீவிர வெப்பமண்டல சூறாவளிகள், சராசரி உச்ச வெப்பமண்டல சூறாவளி காற்றின் வேகம் மற்றும் மிகவும் தீவிரமான வெப்பமண்டல சூறாவளிகளின் உச்ச காற்றின் வேகம் ஆகியவை அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலுடன் உலக அளவில் அதிகரிக்கும்," என அவ்வறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை வெளியான சில வாரங்களிலேயே, அமெரிக்காவை இடா சூறாவளி தாக்கியது.

பட மூலாதாரம், Getty Images
கிறிஸ்டியன் எய்ட் அறிக்கையின்படி, இடா சூறாவளி இந்த வருடத்தில் பொருளாதார ரீதியிலான அதிக அழிவுகரமான வானிலை நிகழ்வு என குறிப்பிடுகிறது.
இந்த மெதுவாக நகரும் சூறாவளி லூசியானாவில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியது.
அந்த புயல் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தியது, இதனால், நியூயார்க்கில் முதல் முறையாக திடீர் வெள்ள அவசர எச்சரிக்கையும் வெளியிடப்பட்டது.
சுமார் 95 பேர் உயிரிழந்தனர். பொருளாதார இழப்புகள் 65 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.
ஜூலை மாதம் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பரவலான வெள்ளப்பெருக்கு, இவ்வாண்டு ஏற்பட்ட நிதிச் செலவு மிகுந்த இரண்டாவது வானிலை நிகழ்வாகும்.
இந்த வெள்ளப்பெருக்கில், தண்ணீரின் வேகம் மற்றும் தீவிரம் பாதுகாப்புகளை மூழ்கடித்தது மற்றும் 240 பேர் உயிரிழந்தனர். சுமார் 43 பில்லியன் டாலர்கள் சேதம் என அறிவிக்கப்பட்டது.
ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள பெரும்பாலான வானிலை நிகழ்வுகள் வளர்ந்த நாடுகளில் நிகழ்ந்தவையாகும்.

பட மூலாதாரம், Getty Images
ஏனென்றால், காப்பீட்டுக் கோரிக்கைகளிலிருந்து நிதி இழப்புகளை மதிப்பிடுவது மிகவும் சாத்தியமானது மற்றும் இவை பொதுவாக பணக்கார நாடுகளில் கிடைக்கின்றன, ஏனெனில், அங்கு மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் தொழில்களை காப்பீடு செய்ய முடியும்.
காப்பீட்டு நிறுவனமான Aon இன் கூற்றுப்படி, கடந்த ஐந்தாண்டுகளில் நான்காவது முறையாக உலகளாவிய இயற்கை பேரழிவுகள் 100 பில்லியன் டாலர்களை விட அதிகமாக செலவுகளை ஏற்படுத்திய ஆண்டு 2021.
இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் நிதி தாக்கத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கும், ஆனால் மக்கள் மீதான தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் பல நிகழ்வுகளையும் அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
மே மாதம் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவைத் தாக்கிய தெள-தே புயலில் இருந்து தப்பிக்க 2,00,000 பேர் இடம்பெயர வேண்டிய நிலையில், தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்தால் 8,00,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
"மனிதர்கள் மீது நிகழ்ந்த மிகப்பெரிய அளவிலான தாக்கம் இது," என, இவ்வறிக்கையின் ஆய்வாளர் டாக்டர் கேட் கிரேமர் தெரிவித்தார்.
"உங்கள் வீடு, உங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் அனைத்தையும் இழந்து, அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமானது. அதேசமயம், உங்களிடம் காப்பீடு இருந்தால், அதைக் கட்டியெழுப்ப உங்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன."
எதிர்கால வானிலை தொடர்பான தாக்கங்களைக் குறைக்க கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அதிக முயற்சிகளின் அவசியத்தை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய காலநிலை ராஜரீக அதிகாரிகள், பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் ஏழை நாடுகளுக்கு உதவுமாறு இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
கிளாஸ்கோவில் நடந்த COP26 உலகளாவிய காலநிலை மாநாட்டில், காலநிலை தொடர்பான நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி விவகாரம் நாடுகளுக்கு இடையே பெரும் கருத்து வேறுபாட்டைக் கண்டது. வளரும் நாடுகளுக்கு பணம் தேவை - பணக்காரர்கள் இந்த கேள்விக்கு இன்னும் பேச்சுவார்த்தை தேவை என்று கூறினர்.
"COP26 இல் இழப்பு மற்றும் சேதம் பற்றிய பிரச்னை ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், காலநிலை மாற்றத்தால் நிரந்தர இழப்பை சந்திக்கும் மக்களுக்கு உதவ ஒரு நிதியை அமைக்காமல் வெளியேறியது கசப்பான ஏமாற்றத்தை அளிக்கிறது," என்கிறார், கிறிஸ்டியன் எய்ட் அமைப்பின் வங்கதேச காலநிலை நீதி ஆலோசகர் நுஷ்ரத் சவுத்ரி.
"அந்த நிதியை உயிர்ப்பிப்பது 2022 இல் உலகளாவிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்."
பிற செய்திகள்:
- கொரோனா: எச்சில் துப்புவதற்கு எதிரான இந்தியாவின் 'வெல்ல முடியாத போர்' எந்த நிலையில் உள்ளது?
- நரேந்திர மோதிக்கு புதிய மெர்செடீஸ் மேபேக்: ரூ. 12 கோடி கார் பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- வயாகரா முதல் 24,000 ஆண்டுகளுக்குப் பின் உயிர்த்தெழுந்த உயிரினம் வரை - 2021இன் சுவாரசிய அறிவியல் நிகழ்வுகள்
- கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ்: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
- 'இந்திய கிரிக்கெட்டுக்கு இரு கேப்டன்கள் நல்லதுதான்' - ரவி சாஸ்திரி கூறுவது ஒத்து வருமா?
- 'கோயில், மடங்களுக்கு மதம் மாற்ற இலக்கு': சர்ச்சையால் பின்வாங்கிய தேஜஸ்வி சூர்யா
- பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள்: அரசு செய்ய வேண்டியது என்ன?
- அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்பு வெளிநாட்டு நிதி பெற இந்திய அரசு தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












