விண்வெளியில் 312 நாட்கள்: சோவியத்தின் 'கடைசி குடிமகன்' பூமி திரும்பியதும் சந்தித்த அதிர்ச்சி

Sergei Krikalev

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கார்லெஸ் செரெனோ
    • பதவி, பி பி சி நியூஸ் வர்ல்ட்

30 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்யராக விண்வெளிக்கு சென்ற செர்கே க்ரிகல்யொஃப், பூமிக்கு திரும்பியபோது அவரது தாயகம் தனது அடையாளத்தை இழந்திருந்தது.

விண்வெளி வீரர் சர்கே க்ரிகல்யொஃப் சோவியத் யூனியனின் எம்ஐஆர் விண்வெளி நிலையத்தில் இருந்து உலகம் முழுவதையும் பார்க்க முடிந்தது. ஆனால் அந்த உயரத்தில் இருந்து தன் நாட்டில் பற்றி எரியும் அரசியல் போராட்டம் அவருக்கு தென்படவில்லை.

இது மே 18, 1991 அன்று நடந்த நிகழ்வு. சோயுஸ் விண்கலம், ஐந்து மாத கால பயணத்தில் கிரிகலேவை எம்ஐஆர் விண்வெளி நிலையத்திற்கு இட்டுச் சென்றது. சோவியத் யூனியனின் மற்றொரு விஞ்ஞானி அனடோலி ஆர்டெபார்ஸ்கி மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஹெலன் ஷெர்மன் ஆகியோர் அவருடன் சென்றனர்.

கஜகஸ்தானில் உள்ள பைக்கனூர் விண்வெளி மையத்தில் இருந்து அவர்களது விண் கலம் ஏவப்பட்டது.

விண்வெளி போட்டியில் அமெரிக்காவை சோவியத் யூனியன் முந்திச் சென்று பூமியின் வட்டப்பாதையில் முதலாவது செயற்கைக்கோளை நிறுவியதும் லைக்கா என்ற நாயை விண்வெளிப் பயணத்திற்கு அனுப்பியதும் 1961இல் விண்வெளியில் முதல் மனிதரான யூரி ககாரினை அனுப்பியதும் இதே மையத்திலிருந்து தான்.

எம் ஐ ஆர் விண்வெளி நிலையம் விண்வெளிப் பயணத் துறையில் சோவியத் சக்தியின் அடையாளமாக மாறியது.

சர்கே க்ரிகல்யொஃப் ஒரு நிர்ணயிக்கப்பட்ட பயணத்தில் விண்வெளிக்குச் சென்றார். அவர் சில பழுதுகளைச் சரிசெய்து நிலையத்தை மேம்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் விண்வெளியில் எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்த போது, பூமியில் சோவியத் யூனியன் வேகமாக சிதைந்து கொண்டிருந்தது.

சில மாதங்களுக்குள், க்ரிகல்யொஃப் விண்வெளியில் இருந்தபோது, பரந்த மற்றும் வலிமைமிக்க சோவியத் யூனியன் சிதைந்தது. இதன் காரணமாக, எளிதான பயணத்தில் விண்வெளி மையத்தை அடைந்த க்ரிகல்யொஃப், பல மாதங்கள் அந்தரத்தில் ஊசலாடும் நிலை ஏற்பட்டது.

அவர் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட இரு மடங்கு காலம் விண்வெளியில் தங்க வேண்டியிருந்தது.

சர்கே க்ரிகல்யொஃப் என்ற அந்த விண்வெளி வீரர், பத்து மாதங்கள் கழித்து, உலக வரைபடத்தில் இருந்து தனது நாட்டின் பெயர் அழிக்கப்பட்டபோது, மீண்டும் பூமிக்கு வந்த கதை இது.

அவரது பணியின் காரணமாக, அவர் உலகம் முழுவதும் 'சோவியத் யூனியனின் கடைசி குடிமகன்' என்று அறியப்படுகிறார்.

Sergei Krikalev 1

பட மூலாதாரம், Getty Images

அதிகம் விவாதிக்கப்பட்ட விண்வெளி வீரர்

சர்கே க்ரிகல்யொஃப் 1958 இல் சோவியத் யூனியனில் உள்ள லெனின்கிராட் நகரில் பிறந்தார், இது இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்று அழைக்கப்படுகிறது.

அவர் 1981 இல் லெனின்கிராட் மெக்கானிக்கல் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்று, நான்கு வருடப் பயிற்சிக்குப் பிறகு அவர் விண்வெளி வீரரானார்.

1988ஆம் ஆண்டில், பூமியிலிருந்து நானூறு கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த எம்ஐஆர் விண்வெளி நிலையத்தை (மிர் ஸ்பேஸ் சென்டர்) சர்கே க்ரிகல்யொஃப் முதன்முறையாக அடைந்தார்.

தற்போது, க்ரிகல்யொஃப் , விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் துறையின் இயக்குநராக உள்ளார்.

மே 1991 இல், க்ரிகல்யொஃப் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

விண்வெளிப் பயணங்களின் வரலாற்றாசிரியர் கேத்லீன் லெவிஸ், "க்ரிகல்யொஃப் ஒரு விண்வெளி வீரராக இருந்ததால், விண்வெளி நிலையத்தின் வானொலி மூலம் பூமியில் உள்ள சாதாரண மக்களுடன் உரையாடியதால் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார்."

கிரிகாலேவ் விண்வெளியில் நீண்ட நேரம் செலவிட்டதைக் குறிப்பிடுகையில், லெவிஸ், அவர் வானொலியைப் பயன்படுத்தி தனது அலைவரிசையில் கிடைத்த, பூமியில் உள்ள சாதாரண மக்களுடன் உரையாடிவந்தார் என்று கூறுகிறார்.

"அவர் உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு உறவை உருவாக்கி வைத்திருந்தார். " என்று லெவிஸ் கூறுகிறார். சர்கே க்ரிகல்யொஃப் MIR விண்வெளி நிலையத்தில் தனியாக இருந்ததில்லை, ஆனால் அவர் மிகவும் பிரபலமானவர்.

லெவிஸ், "அவர் விண்வெளி நிலையத்தில் தனியாக இல்லை. ஆனால் அவர் மட்டுமே வானொலியில் பேசிக் கொண்டிருந்தார்."

மற்றொரு சோவியத் குடிமகன் அலெக்சாண்டர் வோல்கோவ் விண்வெளி நிலையத்தில் இவருடன் இருந்ததாக வரலாற்றாசிரியர் லெவிஸ் கூறுகிறார். ஆனால் க்ரிகல்யொஃப் மட்டுமே 'கடைசி சோவியத் குடிமகன்' என்று உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

Russian

பட மூலாதாரம், Getty Images

'சிதைந்தது சோவியத் யூனியன்'

1990 முதல் 1991 வரை, சோவியத் யூனியனில் இருந்த அனைத்து குடியரசுகளும் தங்கள் சுதந்திரத்தை அறிவித்தன.

அதே நேரத்தில், சோவியத் ஒன்றியத்தின் தலைவர், மிக்கைல் கோர்பச்சொஃப், தனது புகழ்பெற்ற பிரசாரமான பெரெஸ்த்ரோயிகா மூலம், நாட்டை நவீனமயமாக்கினார், முதலாளித்துவத்தை நோக்கி நாட்டை இட்டுச் சென்று பல நிறுவனங்களின் பொருளாதார சக்தியை பரவலாக்கினார். இதன் மூலம், அவர் தனியார் வணிகங்களை உருவாக்குவதற்கான வழியைத் திறந்தார்.

இந்த நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 1991 ஆகஸ்ட் 19 மற்றும் 21 க்கு இடையில், கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் வாய்ந்த பிரிவு கோர்பச்சொஃபுக்கு எதிராக சதி செய்ய முயற்சித்தது.

இந்த சதி தோல்வியடைந்தது ஆனால் சோவியத் யூனியனுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

Sergei Krikalev 2

பட மூலாதாரம், Getty Images

'அனைத்தும் நன்றாக இருக்கிறது'

கோர்பச்சொஃப் தனது நாட்டின் மீதான தனது கட்டுப்பாட்டை இழக்கும் போது கிரிகாலேவ் விண்வெளியில் இருந்தார்.

சோவியத் யூனியன் எதிர்கொள்ளும் ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அடுத்த உத்தரவு வரும் வரை கிரிகாலேவ் விண்வெளியிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

1993 இல் ஒரு பிபிசி ஆவணப்படத்தில், க்ரிகல்யொஃப், "இது எங்களுக்கு மிகவும் எதிர்பாராதது. நடப்பவை எல்லாம் எங்களுக்குப் புரியவில்லை. அவர்கள் கொடுத்த சிறிய தகவலைக் கொண்டு, நாங்கள் முழு விஷயத்தையும் புரிந்து கொள்ள முயற்சித்தோம்." என்று கூறியிருந்தார்.

மேற்கத்திய நாடுகளின் மக்களுடன் பேசியதில் தான் கிரிகாலேவ் விஷயத்தை அறிந்தார் என்கிறார் லெவிஸ். ஏனென்றால் அந்த நாட்களில் சோவியத் யூனியனில் 'மாதம் மும்மாரி பொழிவதாக' முழக்கமிட்டது.

க்ரிகல்யொஃபின் மனைவி எலினா தெரெகினா சோவியத் விண்வெளி திட்டத்தில் ரேடியோ ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தார்.

அவரும் தன் கணவருடன் பேசினார். ஆனால் நிலைமை குறித்துத் தெரிவிக்கவில்லை.

பிபிசி ஆவணப்படத்தில், தெரிகினா நினைவு கூர்ந்தார், "நான் அவரிடம் சோகமான விஷயங்களைச் சொல்வதைத் தவிர்த்து வந்தேன். அவரும் அதையே செய்கிறார் என்று நினைக்கிறேன்.

எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர் எப்போதும் சொல்வார், எனவே அவர் இதயத்தில் என்ன உணர்கிறார் என்பதை அறிவது மிகவும் கடினமாக இருந்தது."

கடமையாற்றும் பொறுப்பு

க்ரிகல்யொஃப் விண்வெளியில் தனது பணியைத் தொடர ஒப்புக்கொண்டார். ஆனால் அது எளிதானது அல்ல என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் நினைவு கூர்ந்தார், "எனக்குப் போதுமான வலிமை இருக்குமா. நீண்ட காலத்திற்கு நான் என்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியுமா. இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை."

க்ரிகல்யொஃப் மற்றும் வோல்கோவ் எந்த நேரத்திலும் திரும்பியிருக்கலாம், ஆனால் அது விண்வெளி நிலையத்தை ஆளில்லாமல் விட்டு விடக் கூடிய சூழலை உருவாக்கியிருக்கும்.

"இது ஒரு அதிகாரத்துவ பிரச்சனை" என்று லெவிஸ் கூறுகிறார். அவர்கள் நிலையத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஆனால் மற்றொரு விண்வெளி வீரரை அனுப்ப அவர்களிடம் போதுமான நிதி இல்லை.

Sergei Krikalev 3

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிர் ஸ்பேஸ் சென்டர்

அதே நேரத்தில், ரஷ்ய அரசாங்கம் கஜகஸ்தானுடனான தனது உறவை மேம்படுத்துவதாகக் கூறியது. கிரிகாலேவுக்குப் பதிலாகத் தனது விண்வெளி வீரர் ஒருவரை அனுப்ப கசாக் ஒப்புக்கொண்டது.

இருப்பினும், கஜகஸ்தானில் க்ரிகல்யொஃப் போன்ற அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் இல்லை, எனவே கால தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், கிரிகாலேவ் விண்வெளியில் உடல் மற்றும் மன பாதிப்புகளை அனுபவித்தார், இது பற்றிய முழுமையான தகவல்கள் இன்றும் கிடைக்கவில்லை.

விண்வெளியில் நேரத்தை செலவிடுவதால், கதிர்வீச்சுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது, இது புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்று நாசா கூறுகிறது.

புவியீர்ப்பு விசை இல்லாததால் தசை மற்றும் எலும்பு நிறை குறைவதோடு, தனிமையில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் மற்றும் மனநல பிரச்சனைகளும் ஏற்படலாம்.

இருப்பினும், கிரிகாலேவ், விண்வெளி நிலையத்தில் தங்குவது தனது கடமை என்று உணர்ந்ததாகவே கூறுகிறார்.

மாற்றுக்கு வீரர் இல்லை

இதற்குப் பிறகு, அக்டோபர் மாதம் மூன்று புதிய விண்வெளி வீரர்கள் எம்ஐஆர் விண்வெளி நிலையத்தை அடைந்தனர். ஆனால் அவர்களில் யாரும் க்ரிகல்யொஃபுக்கு இணையான போதுமான பயிற்சி பெற்றிருக்கவில்லை.

லெவிஸின் கூற்றுப்படி, கிரிகாலேவைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டவர்கள் சோவியத் யூனியனுக்கு வெளியே இருந்து கொண்டு, விண்வெளியில் தனித்துவிடப்பட்ட ஒரு மனிதனின் நிலைமை குறித்துக் கற்பனை செய்துகொண்டிருந்தனர்.

அதே நேரத்தில், ரஷ்ய அரசாங்கத்திற்கு அந்த நேரத்தில் வெவ்வேறு முன்னுரிமைகள் மற்றும் கவலைகள் இருந்தன.

இதற்குப் பிறகு, 25 அக்டோபர் 1991 அன்று, கஜகஸ்தான் தனது இறையாண்மையை அறிவித்தது, இதனால் கிரிகாலேவின் இடத்திற்கு அனுப்பப்படவிருந்த காஸ்மோட்ரோம் ரஷ்ய கட்டுப்பாட்டில் இல்லை.

இதற்குப் பிறகு, டிசம்பர் 25, 1991 இல், சோவியத் யூனியன் முற்றிலும் சிதைந்தது.

அதே நாளில், கோர்பசொஃப் உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி ராஜிநாமா செய்தார், இது சோவியத் ஒன்றியத்தின் முடிவைக் குறித்தது.

சோவியத் யூனியன் 15 நாடுகளாகச் சிதைந்து க்ரிகல்யொஃபை விண்வெளிக்கு அனுப்பிய நாடு சோவியத் யூனியனில் இருந்து ரஷ்யா ஆனது. கிரிகாலேவ் பிறந்த மற்றும் அவர் படித்த நகரமும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்று மறுபெயரிடப்பட்டது.

Mikhail Gorbachev, the last president of the Soviet Union

பட மூலாதாரம், Getty Images

பூமிக்குத் திரும்பிய கிரிகாலேவ்

பூமியில் இந்த நிகழ்வுகள் நிகழ்ந்த காலத்தில், க்ரிகல்யொஃப் பூமியைப் பார்த்துக் கொண்டே, தனது தோழர்கள் இசைக்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டும் வானொலியில் மக்களுடன் பேசிக்கொண்டும் இருந்தார்.

இதற்குப் பிறகு, மார்ச் 25, 1992 இல், க்ரிகல்யொஃப் மற்றும் வோல்கோவ் பூமிக்குத் திரும்பினர். இப்படியாக, கிரிகாலேவ் 312 நாட்கள் விண்வெளியில் தங்கி பூமியை 5000 முறை சுற்றி வந்தார்.

அவர் கூறுகிறார், "திரும்பி வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, புவியீர்ப்பு விசையால் நாங்கள் சிரமப்பட்டாலும், நாங்கள் மனச் சுமையிலிருந்து விடுபட்டோம். இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று நான் கூறமாட்டேன், ஆனால் இது மிகவும் நல்ல தருணம்."

ஆனால் இந்த நீண்ட பயணத்திற்குப் பிறகும், க்ரிகல்யொஃப் தனது இரண்டாவது சாகசத்திற்குத் தயாராக இருந்தார். 2000 ஆம் ஆண்டில், அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் குழுவில் உறுப்பினரானார்.

பழைய மோதல்களை விட்டுவிட்டு, பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்வதற்காக நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மாதிரியாக புதிய விண்வெளி யுகத்தை சர்வதேச விண்வெளி மையம், ஐ.எஸ்.எஸ் குறிக்கிறது.

காணொளிக் குறிப்பு, பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவான ரகசியத்தை வெளிப்படுத்துமா இந்த ரூ. 70,000 கோடி எந்திரம்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: