டோக்யோ ஒலிம்பிக்: தடைகளை உடைத்த 3 தமிழ்நாட்டுப் பெண்கள் - ஊக்கமளிக்கும் கதை

ஒலிம்பிக்

பட மூலாதாரம், SUBHA VENKATESAN

படக்குறிப்பு, ஒலிம்பிக் செல்லும் தமிழக தடகளக் குழு

தமிழ்நாட்டின் கிராமங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.

சவால்களைக் கடந்து சாதனையை நோக்கிய அவர்களது பயணம் மற்றவர்களை ஊக்குவிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் தடகள அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள். இதுவரை இல்லாத சாதனை இது.

ஒலிம்பிக்கில் முதல்முறையாக நடைபெற இருக்கும் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று பெண்களும் டோக்யோ செல்ல இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி, திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா, மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி ஆகிய மூன்று பெண்களும் ஒலிம்பிக்கில் பதக்க வேட்டை நடத்தப் போகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியில் வளர்ந்தவர்கள்

இந்த மூன்று பேருமே மிகவும் பின்தங்கிய சூழலில் வளர்ந்தவர்கள். பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே கனவுகளைத் துரத்திக் கொண்டிருப்பவர்கள்.

ரேவதி

பட மூலாதாரம், REVATHY

படக்குறிப்பு, ரேவதி

இளம் வயதில் பெற்றோரை இழந்த ரேவதிக்கு அவரது பாட்டிதான் அரவணைப்பாகவும் தூண்டுகோலாகவும் இருந்திருக்கிறார். பல நேரங்களில் கால்களுக்கு ஷூ கூட இல்லாமல் அவர் பயிற்சி எடுக்க நேர்ந்திருக்கிறது.

"எனக்கு அம்மா, அப்பா இல்லை. இளம் வயதிலேயே இறந்துவிட்டார்கள். பாட்டிதான் வளர்த்தார்கள். ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தேன்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் ரேவதி.

பொருளாதார நெருக்கடிகள் இந்த மூன்று பெண்களின் ஓட்டத்துக்கு தடையாக இருந்தாலும், அதை அவர்கள் உடைத்திருக்கிறார்கள்.

"ஷூ வாங்குவதற்கு அம்மா தனது நகையை அடமானம் வைத்து பணம் தருவார்" என்று தனது நெகிழ்ச்சியான தருணத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் தனலட்சுமி.

தனலட்சுமியின் தந்தை இறந்துவிட்டார். வேலைக்குச் செல்லும் அக்காவின் வருமானம், வீட்டில் இருக்கும் மாடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவை தனலட்சுமியின் ஓட்டப் பயிற்சிக்குப் பயன்பட்டிருக்கிறது.

தனலட்சுமி

பட மூலாதாரம், DHANALAKSHMI

படக்குறிப்பு, தனலட்சுமி

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் தடகளப் போட்டியில், 100 மீ ஓட்டத்தில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான டூட்டி சந்தை விட வேகமாக ஓடி கவனத்தை ஈர்த்தவர் தனலட்சுமி.

"பள்ளியில் படிக்கும் வரை எனக்கு ஷூ கிடையாது. கல்லூரிக்குச் சென்ற பிறகுதான் ஷூ போட்டு பயிற்சி மேற்கொண்டேன்" என்றார் ரேவதி.

ஊக்கமளித்த தாத்தாவும் பாட்டியும்

ரேவதிக்குப் பாட்டி என்றால், தொடர் ஓட்டப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் மற்றொரு தமிழ்நாட்டு வீராங்கனையான சுபா வெங்கடேசனுக்கு தாத்தா.

"என்னுடைய தாத்தா காவல்துறையில் இருந்தார். அவர்தான் எனக்கு ஊக்கமளித்தவர். அவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளி விளையாட்டுகளில் நான் ஓடியதைப் பார்த்த அவர் என்னை சாதிக்கவைக்க வேண்டும் என்று விரும்பினார். பல போட்டிகளில் பங்கேற்க வைத்தார். அவரால்தான் நான் இந்த நிலைக்கு வர முடிந்தது" என்று நினைவுகூர்கிறார் சுபா.

தேசிய அளவில் 20 பதங்கங்களைப் பெற்றுள்ள சுபா 8 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவற்றில் 3 பதங்கங்களைப் பெற்றுள்ளார்.

சுபா

பட மூலாதாரம், SUBHA VENKATESAN

படக்குறிப்பு, சுபா வெங்கடேசன்

தனலட்சுமியைப் பொறுத்தவரை பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் அவருக்கு வீட்டிலும் கல்லூரியிலும் நிறைய ஊக்கம் கிடைத்திருக்கிறது.

"வீட்டிலும், படித்த பள்ளி கல்லூரிகளிலும் ஓட்டப் பயிற்சிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. பயிற்சிக்கும் போட்டிகளுக்கும் சென்றுவிட்டு மீதி நேரங்களில்தான் வகுப்பறைக்கு வருவேன். ஆயினும் எனது நிலைமையைப் புரிந்து கொண்டு ஆசிரியர்கள் எனக்கு உதவினார்கள்" என்கிறார் தனலட்சுமி.

"பள்ளியில் படிக்கும்போது மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்று பயிற்சியாளர் எனக்கு உதவி செய்தார். பஸ்ஸில் சென்று வர பணமில்லை என்று கூறியதால், மதுரையிலேயே கல்லூரியில் இலவசமாகப் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்."

காணொளிக் குறிப்பு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை நோக்கி ஓடும் தமிழ்நாட்டின் சுபா வெங்கடேசன்

ஆதரவு அவசியம்

ஒப்பீட்டளவில் விளையாட்டுகளிலேயே மிகக் குறைந்த செலவில் பயிற்சி மேற்கொள்ளக்கூடியவை ஓட்டப் போட்டிகள்தான். தரமான காலணிகள், சத்தான உணவுகள் ஆகியவற்றுடன் ஓரு மைதானமும் கிடைத்துவிட்டால் போதுமானது.

ஆனால் அவைகூட தமிழ்நாட்டில் இருந்து டோக்யோ செல்ல இருக்கும் பெண்களுக்கு இயல்பாகக் கிடைத்துவிடவில்லை என்பதை அவர்களின் பேட்டிகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது..

"ஒரு போட்டிக்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தது இருபதாயிரம் ரூபாய் செலவாகும். ஷூ கிழிந்துவிட்டால் மாற்ற வேண்டும். எனக்கு இப்போது எந்த வேலையும் இல்லை. ஸ்பான்சரும் கிடையாது" என்கிறார் தனலட்சுமி.

தனலட்சுமி

பட மூலாதாரம், DHANALAKSHMI

படக்குறிப்பு, தனலட்சுமி

நாள்தோறும் காலை 6.30 மணி முதல் 9 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் 7 மணி வரை கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறார் தனலட்சுமி.

சுபாவுக்கும் ஸ்பான்ஸர் யாருமில்லை. அரசு உதவியும் இல்லை. முழுக்க முழுக்க குடும்பத்தின் வருமானத்தை நம்பியே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போட்டிகளுக்குச் செல்ல வேண்டும். பல முறை முயற்சி செய்தும் அரசு வேலை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படும் சுபா, அரசு வேலை கிடைத்தால் பயிற்சிகளை மேற்கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.

சவால்கள்

பல தருணங்களில் காயங்கள் தமக்கு கடுமையான சவாலாக அமைந்ததாகவும், அதில் இருந்து மீண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறும்போது சுபாவின் நா தழுதழுத்தது. பயிற்சி மையங்களுக்கு வெளியே இருந்து தமக்கு தொந்தரவுகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப் புறங்களில் இருந்து வரும் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு பல்வேறு தடைகள் இருப்பதாகவுவும் சுபா கூறினார்.

சுபா

பட மூலாதாரம், SUBHA VENKATESAN

படக்குறிப்பு, சுபா வெங்கடேசன்

"ஓட்டப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, பெண்களை ஏன் ஓட விடுகிறீர்கள். பதக்கங்களை வாங்கி என்ன சாதிக்கப் போகிறார்கள். கல்யாணம் முடித்து விடுங்கள் என்று உறவினர்கள் பலரும் பேசினார்கள். ஆனால் பாட்டி அவற்றைப் பொருட்படுத்தவில்லை" என தனது தொடக்க காலச் சவால்களை ரேவதி நினைவு கூர்ந்தார்.

"பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து தடங்கல் வரும். பிறகு பொருளாதாரத் தடை. அதன் காரணமாகவே பலர் பயிற்சி பெறுவதில்லை. போட்டிகளில் பங்கேற்பதில்லை. ஒரு கட்டத்தில் வெளியேறி விடுகின்றனர்" என்கிறார் சுபா.

"உங்கள் வீட்டில் ஒரு குழந்தை விளையாட்டில் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டினால் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். நிச்சயமாக அவர்களைச் சாதனையாளராக்க முடியும்" என்கிறார்.

சர்வதேச அரங்கத்தில் என்ன சவால்?

தடகளப் போட்டிகளுக்கான சர்வதேச தரத்திலான ஓடுபாதைகள் இந்தியாவில் இல்லை. இதுவரை இந்தியாவில் மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்ட சில தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில்தான் முதல்முறையாக சர்வதேச ஓடுபாதைகளில் ஓட இருக்கிறார்கள்.

ரேவதி

பட மூலாதாரம், REVATHY

படக்குறிப்பு, பாட்டியுடன் ரேவதி

"ஓடுபாதையைப் பார்த்து மாத்திரமல்ல, வெளிநாட்டு வீரர்களைக் கண்டும் அஞ்சாமல் ஓட வேண்டும். அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்" என்கிறார் தனலட்சுமி.

"வெளிநாட்டு வீரர்களுடன் இதுவரை நேரடியாக போட்டியிட்டுப் பயிற்சி மேற்கொள்ளவில்லை. அதனால் மற்றவர்களின் திறமையை நேரடியாக மதிப்பிட முடியவில்லை. ஆனாலும் அவர்கள் ஓடும் நேரத்தைக் கணித்து வைத்திருக்கிறோம்" என்கிறார் ரேவதி

சவால்கள் இருந்தாலும் நிச்சயமாக பதக்கத்துடன் திரும்புவோம் என்று உறுதியளிக்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள்.

"எனக்குப் பிடித்த வீரர் உசேன் போல்ட்" என்கிறார் தனலட்சுமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :