வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமத்தை இழக்கும் 12,000 இந்திய என்.ஜி.ஓ-க்கள்

மத்திய உள்துறை அமைச்சகம்

பட மூலாதாரம், MHA

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்குரிய உரிமம் சனிக்கிழமையுடன் காலாவதியாகிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள சுமார் 6,000 நிறுவனங்களில் ஐஐடி டெல்லி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், இந்திய மருத்துவச் சங்கம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ஆகியவையும் அடக்கம் என, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் வெளிநாட்டிலிருந்து நன்கொடைகள் பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின்படி உரிமம் பெறுவது கட்டாயமாகும்.

இந்நிலையில், சுமார் 6,000 நிறுவனங்கள் அந்த உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் அவற்றின் விண்ணப்பங்களை நிராகரித்திருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"உரிமத்தைப் புதுப்பிக்க என்ஜிஓக்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறிவிட்டனர். உரிமத்தைப் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும், அவர்கள் விண்ணப்பிக்காமல் இருந்தனர்," என உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்ததாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்துடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ இணையதள தகவலின் அடிப்படையில், இந்திரா காந்தி தேசிய கலை மையம், இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், லால் பஹதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி, டெல்லி பொறியியல் கல்லூரி, ஆக்ஸ்பாம் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் உரிமத்தை இழந்தன அல்லது அவற்றின் உரிமம் காலாதியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்வது சனிக்கிழமையுடன் (ஜனவரி 1) நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா: கோப்புப்படம்

இச்சட்டத்தின்கீழ், வெள்ளிக்கிழமை வரை 22,762 உரிமம் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் இருந்தன. இந்தஎண்ணிக்கை இன்று சனிக்கிழமை 16,829 ஆக குறைந்தது. ஏனெனில், 5,933 அரசு சாரா நிறுவனங்கள் தங்களின் உரிமங்களை இழந்தன. முன்னதாக, 6,587 அரசு சாரா நிறுவனங்களின் உரிமம் நிறுத்தப்பட்டது. எனவே, சுமார் 12,000-க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் உரிமம் காலாவதியாகியுள்ளன.

இந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில், இந்திய மருத்துவச் சங்கம், இந்தியா முழுதும் 12-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நடத்திவரும் இமானுவேல் மருத்துவமனை சங்கம், இந்திய காசநோய் சங்கம், விஷ்வ தர்மயத்தன், மகரிஷி ஆயுர்வேத பிரதிஷ்தன், தேசிய மீனவ கூட்டுறவு கூட்டமைப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.

ஹம்தர்ட் எஜூகேஷன் சொசைட்டி, டெல்லி ஸ்கூல் ஆப் சோஷியல் வர்க் சொசைட்டி, பாரதிய சான்ஸ்க்ரிதி பரிஷத், டிஏவி காலேஜ் டிரஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் சொசைட்டி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம், காத்ரேஜ் நினைவு அறக்கட்டளை, டெல்லி பப்ளிக் ஸ்கூல் சொசைட்டி, ஜேன்யூ அணு அறிவியல் மையம், இந்தியா ஹேபிடட் சென்டர், லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரி, டெல்லி பொறியியல் கல்லூரி, அனைத்து இந்திய மார்வாரி யுவ மஞ்ச் ஆகியவையும் அடங்கும்.

இதனிடையே, செப்டம்பர் 29, 2020 மற்றும் செப்டம்பர் 30, 2021-க்கு இடையில் காலாவதியாகும் சில என்ஜிஓக்களின் உரிமம் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: