'கோயம்புத்தூர் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி' - எதிர்ப்பும் பின்னணியும்

பட மூலாதாரம், RSS TWITTER
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மாவட்ட கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெறுவதாக, பல்வேறு அமைப்புகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் உள்ள தனியார் தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெற்று வருவதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் பல்வேறு அமைப்புகள் கடந்த 30.12.2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து போராடியவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியதால் சுற்றியுள்ள கடைகள் அடைக்கப்பட்டு காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கோவை, விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்மசாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய அண்ணன் கு.ராமகிருட்டிணன் தலைமையிலான இயக்கத்தினர் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது! வெட்கக்கேடானது!''
''கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் அவதூறாகப் பேசியும்கூட அவர் மீது வழக்குத் தொடுக்கத் துப்பற்ற திமுக அரசு. அண்ணன் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது யாருக்கான ஆட்சியென்பதை நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்!'' என்று கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவருமான வானதி ஸ்ரீனிவாசன், ''கோவையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு காட்டுவது, மிரட்டுவது சட்ட விரோதமானது. இந்த இயக்கங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் செய்யும் இம்முயற்சிகள் என்றும் வெற்றி பெறாது,'' என்றுள்ளார்.
இந்த நிலையில் 31.12.2021 அன்று கோவை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த கு.இராமகிருட்டிணன், ''கல்வி நிலையங்களில் மத அமைப்புகள் செயல்படுவது தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதை மீறி தொடர்ந்து பல்வேறு பள்ளி, கல்லூரி வளாகங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகள் செயல்படுவதை அனுமதித்தால் அமைதியற்ற சூழல் உருவாகும். அதற்கு முன்பாக அதிகாரிகள் தலையிட்டு இதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெற அனுமதித்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட தர்மசாஸ்தா பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது பிபிசி தமிழிடம் பேசிய அப்பள்ளியின் செயலாளர் சந்தோஷ், ''எங்கள் பள்ளி மீதான குற்றம்சாட்டடில் உண்மையில்லை. ஆர்.எஸ்.எஸ் பயிற்சி எதுவும் எங்கள் பள்ளி வளாகத்தில் நடைபெறவில்லை. விவேகானந்தா சேவா கேந்திரா என்கிற அமைப்பின் சார்பில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவைதான் கற்பிக்கப்பட்டு வந்தன. அதைத்தான் திரித்து கூறியுள்ளார்கள்,'' என்றார்.
ஆனால் டிசம்பர் 24-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை தர்மசாஸ்தா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நடைபெற்றதாக காவல்துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், ''இது முழுக்க தேச விரோத, சமூக விரோத, இந்து விரோத சக்திகளால் எழுப்பப்படுகிறது. இந்தப் பயிற்சியின் பாடத்திட்டத்தை எடுத்துப் பார்த்தால் தனிமனித ஒழுக்கம், நெறி தொடர்பான விஷயங்கள் தான் உள்ளன. யார் வேண்டுமானாலும் இதை எடுத்துப் பார்க்கலாம். மதவாதமாகவோ, மாற்று மதங்களுக்கு விரோதமாகவோ இதில் எதுவுமில்லை,'' என்றார்.

பட மூலாதாரம், AFP / getty images
கல்வி நிலையங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது தொடர்பான கேள்வியை முன்வைத்தபோது, ''கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடப்பதில் என்ன தவறு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி பல காலங்களாக கல்வி வளாகங்களில் நடைபெற்று வருகின்றன. 2011லிருந்து 2021 வரை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுகவோ அதற்கு ஆதரவான அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே. இப்போது ஆட்சிக்கு வந்ததால்தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்,'' என்றார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கல்வித் துறை அதிகாரி ஒருவர், ''இரண்டு தரப்பிலிருந்தும் எங்களிடம் புகார் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மதவாத நிகழ்ச்சிகள் நடப்பதாக ஒரு தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்தரப்பில் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியில் தேச ஒருமைப்பாடு தொடர்பாக விஷயங்களே உள்ளன, இதில் மதவாதமாக எதுவும் இல்லை என்றுள்ளனர். இரண்டு தரப்பு விவகாரத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துச் சென்றுவிட்டோம். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தியுள்ளோம்,'' என்று முடித்தார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டபோது அவருடைய இணைப்பை பெற முடியவில்லை.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ''ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் கோவையில் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் விடுமுறை நாட்களில் பள்ளி வளாகங்களை அவர்கள் பயன்படுத்துவது வழக்கம். கேரளாவில் அடுத்தடுத்து நடைபெற்ற சில அரசியல் கொலைகளைக் கண்டித்து கோவையில் சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது,'' என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








