ராஜஸ்தானில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கழுதைகளை காணவில்லை - ராஜஸ்தான் போலீஸ் தேடுதல் வேட்டை

பட மூலாதாரம், Getty Images
(இன்று 01.01.2022 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
ராஜஸ்தானில் கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை. இதுகுறித்து கழுதையின் உரிமையாளர்கள் சிலர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹனுமன்கர் மாவட்டத்தில் கால்வாய் பகுதிகளில் மண் மற்றும் பொருள்களை சுமக்க கழுதைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மெகா கழுதை கண்காட்சியை நடத்தும் 500 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட ராஜஸ்தானில் 23,000 கழுதைகள் உள்ளன, அவை பெரும்பாலும் செங்கல் சூளைகளில் செங்கல் கொண்டு செல்லவும் சக்கர வண்டிகளை இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் ஹனுமன்கர் மாவட்டத்தில் பொதி சுமக்க பயன்படுத்திய கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை. இதுகுறித்து கழுதையின் உரிமையாளர்கள் சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். வெவ்வேறு இடங்களில் ரூ 14 லட்சம் மதிப்புள்ள 70-க்கும் மேற்பட்ட கழுதைகளைக் காணவில்லை . ஒவ்வொரு கழுதையின் மதிப்பு சுமார் ரூ. 20 ஆயிரம் என்று கூறி குய்யன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், போலீசார் முதலில் இந்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கழுதை உரிமையாளர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து போலீஸ் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை கழுதைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டது. 15 கழுதைகளைக் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க கழுதைகளை நிறுத்தி அடையாள அணிவகுப்பு நடத்தி உள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கும்போது ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உரிமையாளர்கள் தங்களுடைய கழுதைகளை பிங்கு, பபுலு என்று பெயர் சொல்லி அழைத்திருக்கின்றனர். அதற்கு எந்தக் கழுதைகளும் மறுமொழி தெரிவிக்கவில்லை. இதையடுத்து, 'இவை எங்களுடைய கழுதைகள் அல்ல' என்று கூறி கழுதை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனால் காணாமல் போன கழுதைகளைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
உரிமையாளர்களின் அலட்சியத்தாலேயே கழுதைகள் காணாமல் போயுள்ளதாகவும், கழுதைகள் ஒரேமாதிரி இருப்பதால் அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், கழுதைகள் காணாமல் போனதால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கழுதைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'தங்களுடைய கழுதைகள்தான் வேண்டும், வேறு கழுதைகள் வேண்டாம்' என்றும் 'கழுதைகள் கிடைக்கவில்லை என்றால் பெரும் போராட்டம் நடக்கும்' என்றும் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளது காவல்துறைக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேச நகரங்களுக்கு சீனா பெயா்சூட்டல்: 'பிரதமா் மெளனம்' - காங்கிரஸ் தாக்கு

பட மூலாதாரம், Getty Images
அருணாசல பிரதேசத்தின் 15 நகரங்களுக்கு சீனா பெயா்சூட்டிய விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோதி மெளனம் காத்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தைத் தங்கள் நாட்டின் ஒருபகுதி எனத் தெரிவித்து வரும் சீனா, அந்த மாநிலத்தின் 15 பகுதிகளுக்குப் பெயா் சூட்டியது. அதற்கு வெளியுறவு அமைச்சகம் சாா்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் சீனா அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. கிழக்கு லடாக் பகுதிகளில் சீனா ஏற்கெனவே ஊடுருவியுள்ளது; அருணாசலில் கிராமத்தை அமைத்துள்ளது. ஆனால், இது தொடா்பாக பிரதமா் மோதி எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு வலுவிழந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளாா்.
'நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறும் சொற்கள் மட்டுமே போதாது' எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, வலிமையான திறன்மிக்க முடிவுகளே அவசியம் எனவும் கூறியுள்ளாா்.
சீனாவின் செயல்களுக்கு எதிராக மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், அந்நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவளிக்குமென்றும் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் வல்லப் தெரிவித்துள்ளாாதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து கோயில்களை விடுவிக்க கர்நாடகாவில் விரைவில் தனி சட்டம்

பட மூலாதாரம், Getty Images
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க விரைவில் தனி சட்டம் இயற்றவிருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளதாகச் இந்து தமிழ்த்திசையில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று ஹுப்ளியில் "கர்நாடகாவில் இந்து கோயில்கள் அரசு மற்றும் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளன. அந்த கோயில்களில் இருந்து வரும் பணத்தை கோயில் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியவில்லை. சில இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். எனவே விரைவில் அரசின் பிடியில் இருந்து இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என நீண்ட காலமாக சங்பரிவார் அமைப்புகள் கோரி வருகின்றன.
பிற மதங்களின் கோயில்கள் அந்த மதத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்து மதத்தின் கோயில்களும் அவ்வாறு உள்ளூர் நிர்வாகிகள், மடங்கள் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே, தனி சட்டம் கொண்டு வரப்படும்.
அதன் மூலம் கர்நாடகாவில் இந்து கோயில்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படும் நிலை ஏற்படும். இது பாஜகவின் கொள்கை முடிவு. இதனை விரைவில் நிறைவேற்றுவது உறுதி.
புதிய சட்டத்தின்படி கோயில் நிர்வாகம் அனைத்தும் கோயில் சம்பந்தப்பட்டவர்களிடமே இருக்கும். இதனால் கோயில்கள் நல்ல வளர்ச்சி அடையும்" என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், '' கர்நாடக அரசு மிகப்பெரிய தவறை இழைக்கிறது. கோயில்கள் அரசின் சொத்துகள். அதன் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. புதிய சட்டத்தின் மூலம் கோயில்களை தனியார் சொத்தாக மாற்ற பசவராஜ் பொம்மை முயல்கிறார். அவ்வாறு கோயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் அதில் உள்ள கோடிக்கணக்கான சொத்துகளை அபகரித்து விடுவார்கள். இந்த சட்டத்தை கொண்டுவர காங்கிரஸ் அனுமதிக்காது'' என்று கூறியதாக அதே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கோவை உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுகவின் வியூகம் என்ன?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி இலக்கை இந்தியா தவறவிட்டது ஏன்?
- தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரானை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் - அறிய வேண்டிய 15 தகவல்கள்
- 2022 புத்தாண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்கள் எவை?
- "2022இல் வெற்றி நிச்சயம்" ஒலிம்பிக் வரை தடம் பதித்த தமிழக வீராங்கனைகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












