தேர்தல்: மத்தியில் ஆட்சியைப் பிடிக்க உத்தர பிரதேச முடிவுகள் நுழைவாயிலா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி நிருபர்
உத்தர பிரதேசத்தில் பெரியளவில் தொழில் வளர்ச்சியோ வேலை வாய்ப்புகளோ இல்லாததால் அரசியல் மிகப்பெரிய தொழிலாக உருவெடுத்துவிட்டது என்று ஒரு கருத்து கூறப்படுகிறது.
ஒரே ஒரு நாள் ஆட்சியில் இருந்த ஒரு முதல்வர் நள்ளிரவில் பதவியேற்ற வரலாறு கொண்ட அதே உத்தரப்பிரதேசத்தில் தான் சட்டப்பேரவையில் மைக்கைக் கல்லாகப் பயன்படுத்திய எம்எல்ஏக்கள் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் இரண்டு தசாப்தங்களாகவே தேசிய கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு வந்தன.
இந்தியாவில் கூட்டணி அரசியலின் முதல் சோதனையும் உத்தரபிரதேச மண்ணில் தான் செய்யப்பட்டது.
ரெய்ஸ்னா ஹில் என்றழைக்கப்படும் இந்திய ஆட்சிப் பீடத்துக்கான நுழைவாயில் லக்னெள என்று கூறப்படுகிறது. அங்குள்ள செளத் பிளாக்கில் பிரதமர் பதவி வகித்த 14 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரில் 8 பேர் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் நரேந்திர மோதியையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 9 ஆகிவிடும். அவர் வாரணாசி தொகுதியில் வென்று பதவிக்கு வந்தார் என்ற அடிப்படையில், இந்த பட்டியலில் நரேந்திர மோதியைச் சேர்க்கலாம்.
குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவர் இன்னும் எளிதாக மக்களவையை அடைந்திருக்க முடியும். ஆனால் இந்தியாவின் அரசியலில் உத்தர பிரதேசத்தின் அடையாள முக்கியத்துவம் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லை என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம்.

பட மூலாதாரம், UPLEGISASSEMBLY.GOV.IN
நாட்டின் மிகப்பெரிய சட்டப்பேரவையுடன், நாடாளுமன்றத்திற்கு 80 உறுப்பினர்களையும் அனுப்பும் மாநிலம்
இந்தியாவின் மக்கள்தொகையில் ஏழில் ஒரு பகுதியினரை இந்த மாநிலம் உள்ளடக்கியுள்ளதுடன் இது ஒரு சுதந்திர நாடாக இருந்திருந்தால், சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனீசியா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் ஆறாவது இடத்தில் இருந்திருக்கும்.
ஆனால் இங்குள்ள அரசியல், மக்கள்தொகையைப் பற்றிய விஷயம் மட்டுமன்று.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் பிரபல கட்டுரையாளரும் முன்னாள் ஆசிரியருமான சயீத் நக்வி, "திரிவேணி, காசி, மதுரா, அயோத்தி, கங்கை, யமுனை என முகலாய ஆட்சிக்கு முன்னிருந்த கலாசாரக் கோட்டையாக உத்தர பிரதேசம் விளங்குகிறது.
இங்கிருந்து 80 உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வது பெரிய விஷயமில்லை. இந்த மாநிலம், பாரத நாட்டின் 5,000 வருட 'நாகரிகத்தின்' ஆணி வேராக விளங்குவது தான் முக்கியம்," என்கிறார்.
அண்டை மாநில அரசியலையும் நிர்ணயிக்கும் மாநிலம்
ஹிந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியின் மையப்புள்ளியாக இது இருப்பதால், இதன் தேர்தல் முடிவு, அருகில் உள்ள பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேசத்தின் அடையாள முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி, கோவிந்த் பல்லப் பந்த் சமூக சன்ஸ்தானின் பேராசிரியர் பத்ரி நாராயண் கூறுகிறார்.
"ஒன்று ஜனநாயகத்தில் 'எண்ணிக்கை' முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாவதாக, இங்கிருந்து தொடர்ந்து பல பிரதமர்கள் வந்ததால், அதற்கும் 'குறியீட்டு முக்கியத்துவம்' உள்ளது. 80 இடங்கள் மட்டுமின்றி, பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற சுற்றுவட்டார பகுதிகளின் அரசியலையும் இது பாதிக்கிறது. உ.பி.யில் உள்ள பிராந்திய கட்சிகளின் பெரிய தலைவர்களான முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் எதிர்ப்பு அரசியலாலும் இந்த மாநில அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது," என்கிறார் பத்ரி நாராயண்.
பாஜகவின் மிகப்பெரிய சக்தி மையம்
1989 வரை உத்தர பிரதேசத்தில் அதிகபட்ச இடங்களைப் பெற்ற கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைத்து வந்தது.
இந்தப் போக்கை 1991ல் மாற்றியவர் நரசிம்ம ராவ். உத்தர பிரதேசத்தில் உள்ள 84 இடங்களில் 5 இடங்களை மட்டுமே வென்றபோதும் அவரால் நாட்டின் பிரதமராக முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜனதா கட்சியின் அரசியலில் உத்தர பிரதேசம் எப்போதும் ஒரு மையமாக இருந்து வருகிறது.
ராமர் கோயில் இயக்கத்தின் போது உத்தரப்பிரதேச அரசியலில் அது ஆதிக்கம் செலுத்தியது. 1991, 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று மக்களவை தேர்தல்களில், அக்கட்சி உத்தர பிரதேசத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.
அதன் விளைவாக 1996 மற்றும் 1998ல் மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தது. 1998 தேர்தலில், உத்தர பிரதேசத்தில் பாஜக 29 இடங்களை மட்டுமே வென்றது, ஆனால் அதன் கூட்டணி கட்சிகளின் சிறந்த செயல்பாட்டின் காரணமாக, மத்தியில் ஆட்சி அமைத்து, முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்தது.
2004 மற்றும் 2009 தேர்தல்களில் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் மிதமான செயல்பாட்டின் விளைவாக, காங்கிரஸை விட பின்தங்கியிருந்தது. 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜகவின் அபார வெற்றி உத்தர பிரதேசத்தில் மீண்டும் தடம் பதிக்க உதவியது.
2007 தொடங்கி அறுதிப் பெரும்பான்மை ஆட்சி
உத்தர பிரதேசத்தின் சட்டமன்றம் 403 உறுப்பினர்களுடன் நாட்டின் மிகப்பெரிய சட்டமன்றமாகத் திகழ்கிறது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக தொங்கு சட்டசபை அமைந்த நிலையில், 2007 இல் மாநில மக்கள் முதன்முதலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை வழங்கியபோது இந்தப் போக்கு மாறியது.
பின்னர் 2012 சட்டமன்ற தேர்தலில், ஆட்சி அதிகாரம் சமாஜ்வாதி கட்சிக்கு மாறியது. 2017-ல் பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் நான்கில் மூன்று பெரும்பான்மையைப் பெற்றது.
பாரதிய ஜனதாவின் இந்த வெற்றியின் விளைவாகப் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் எதிர்த்து வந்த சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் 2019 மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட முடிவு செய்தன. இந்தப் பிரசாரத்தில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.
சுவாரஸ்யமான தேர்தல் கோஷங்கள்
பல தேர்தல் கோஷங்கள் உத்தர பிரதேச மண்ணில் இருந்து உருவாகியுள்ளன.
90களில், உத்தர பிரதேசத்தின் தேர்தல் பிரசாரங்களில் 'ரோட்டி கப்டா ஔர் மக்கான்' அதாவது 'உணவு, உடை, உறைவிடம்' என்ற மூன்று வார்த்தை முழக்கம் ஆதிக்கம் செலுத்தியது. 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், இந்த முழக்கம் 'பிஜிலி, சடக், பானி' அதாவது 'மின்சாரம், சாலை, தண்ணீர்' என மாறியது.
அடுத்த தசாப்தத்தின் முழக்கம் 'கல்வி, அறிவியல், வளர்ச்சி.'
2014 மக்களவை தேர்தலின் போது, நரேந்திர மோதி பிரசாரம் செய்யத் தொடங்கியபோது, 'கல்வி, வருவாய், மருத்துவம்' என்ற புதிய முழக்கத்தை முன்னெடுத்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி உருவாக்கிய கோஷம் மிகவும் சுவாரஸ்யமானது - மாயாவதி பிராமணர்களைத் தன் தரப்பில் ஈர்க்க முயன்ற காலத்தில், 'ஹாதி நஹி கணேஷ் ஹை, ப்ரஹ்மா, விஷ்ணு, மகேஷ் ஹை' என்று தன் கட்சியின் யானை சின்னத்தை விநாயகரின் குறியீடாக அடையாளப்படுத்தினார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சமாஜ்வாதி கட்சி, 'அகிலேஷ் கா ஜல்வா காயம் ஹை, உஸ்கா பாப் முலாயம் ஹை' அதாவது தந்தை முலாயமின் மிதமான போக்குக்குப் பதில் துடிப்பான அரசியலை அகிலேஷ் எடுப்பார்' என்ற கோஷத்தை முன்னெடுத்தது.
1967-ல் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சி
1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் உத்தர பிரதேச சட்டப் பேரவையில் மொத்தம் 347 இடங்களே இருந்தன. இதில் இரண்டு எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 83 இடங்களும் அடங்கும்.
உத்தர பிரதேசத்தின் முதல் முதல்வர் கோவிந்த் வல்லப பந்த். அதன் பிறகு சம்பூர்ணானந்த், சந்திரபானு குப்தா மற்றும் சுசேதா கிரிப்லானி ஆகியோர் மாநில ஆட்சியைக் கைப்பற்றினர்.
1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்தான் முதல் முறையாக காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் 199 இடங்களை மட்டுமே பெற்ற முதல் தேர்தல்.
சரண் சிங் காங்கிரஸில் இருந்து ராஜிநாமா செய்து பாரதிய கிராந்தி தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கி சோசலிஸ்டுகள் மற்றும் பாரதிய ஜனசங்கத்தின் உதவியுடன் உத்தர பிரதேசத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வரானார்.
காங்கிரஸ் தலைவர்களிடையே முதல்வர் வேட்பாளர் போட்டி
இதைத் தொடர்ந்து மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை குறைந்து குழப்பம் நிலவியது.
முதலில் சி பி குப்தா முதல்வரானார். அதன் பிறகு சரண் சிங் மீண்டும் ஆட்சி அமைத்தார். காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு, கமலாபதி திரிபாதி ஆட்சிக்கு வந்தார், ஆனால் மாநிலத்தில் பிஏசியின் கிளர்ச்சி காரணமாக, அவரும் ராஜிநாமா செய்ய வேண்டியிருந்தது.
1974 ஆம் ஆண்டில், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறவில்லை, ஹேமவதிநந்தன் பகுகுணா மாநிலத்தின் முதலமைச்சரானார், ஆனால் இந்திரா காந்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் ராஜிநாமா செய்ய வேண்டியிருந்தது. நாராயண் தத் திவாரி மாநிலத்தின் அடுத்த முதலமைச்சரானார்.
1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், காங்கிரஸ் அரசை பிரதமர் மொரார்ஜி தேசாய் டிஸ்மிஸ் செய்தார். முதலில் ராம் நரேஷ் யாதவும், பின்னர் பனாரசி தாஸும் உத்தர பிரதேசத்தின் முதல்வரானார்கள்.
1984-க்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெறவில்லை
1978 ஆம் ஆண்டு ஆசம்கர் மக்களவை இடைத்தேர்தல், முதலில் இந்திராகாந்தி சிக்மகளூரிலிருந்தும், பின்னர் 1980 மக்களவைத் தேர்தலிலும் இந்திராகாந்தி மீண்டும் ஆட்சி அமைக்க வழி செய்தன.
விஸ்வநாத் பிரதாப் சிங், 1980ல் உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றார். கொள்ளைக்காரர்கள் அவரது சகோதரர் நீதிபதி சந்திரசேகர் பிரதாப் சிங்கைப் படுகொலை செய்ததையடுத்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பிறகு சட்டசபை சபாநாயகர் ஸ்ரீபதி மிஸ்ராவும் பிறகு நாராயண் தத் திவாரியும் முதல்வர் இருக்கையில் அமர்ந்தனர்.
அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையிலும், ராஜீவ் காந்தி 1985ல் வீர் பகதூர் சிங்கை மாநில முதல்வராக்கினார். இதற்குப் பிறகு, கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக, உத்தரப் பிரதேச அரசியலில் காங்கிரஸ் ஓரங்கட்டப்பட்டது.
கடைசியாக 1984ல் உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மண்டல் மற்றும் மந்திர் அதாவது இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் மற்றும் ராமர் கோயில் போராட்டம் ஆகிய இரண்டும் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை இடம் தெரியாமல் செய்துவிட்டன.
கான்ஷி ராமுடன் கை கோர்த்த முலாயம் சிங் யாதவ்
முலாயம் சிங் யாதவின் காலம் 1989 முதல் தொடங்கியது. பாஜக வெளியிலிருந்து ஆதரவளிக்க, அவர் அரசாங்கத்தை அமைத்தார், ஆனால் ரத யாத்திரையின் போது லால் கிருஷ்ண அத்வானியை லாலு யாதவ் கைது செய்தபோது, மத்தியத்தில் விபி சிங் அரசாங்கத்திற்கும் முலாயம் சிங் அரசாங்கத்திற்கும் பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸின் உதவியுடன் தனது அரசை அவர் காப்பாற்றிக் கொண்டார். ஆனால் மத்தியில் சந்திரசேகர் அரசுக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் அரசாங்கம் திரும்பப் பெற்றபோது, அவரது அரசாங்கமும் வீழ்ச்சியடைந்தது.
ராமர் கோயில் இயக்கம் தொடங்கிய பிறகு பாஜகவின் கல்யாண் சிங் 221 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அவரது அரசு கலைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த தேர்தலில் முலாயம் சிங், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கைகோர்த்து பாஜகவைத் தோற்கடித்தார்.
இதைத் தொடர்ந்து மாயாவதிக்கு பாஜக ஆதரவு அளித்து அவர் முதல்வராவதற்கு வழிவகை செய்தது.
1996ஆம் ஆண்டு பாஜக மீண்டும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியது. அது மாயாவதியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் கீழ் மாயாவதி முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார், ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் முறை வந்ததும், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.
மீண்டும் 2017-ல் ஆட்சியில் பாஜக
2007ல் மாயாவதியும், 2012ல் சமாஜ்வாதியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றனர். 2017 தேர்தலில் பாஜக மீண்டும் ஒரு முறை 312 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இந்த வெற்றி 2019 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வழி வகுத்தது.
அடுத்த மாதம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், உத்தரபிரதேசத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் தவிர, 2024ல் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் டெல்லியில் நரேந்திர மோதியால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா இல்லையா என்பதையும் இந்த தேர்தல் காட்டும்.
இது மட்டுமின்றி, அடுத்த சில நாட்களில் மாநிலங்களவையில் நிலைமை எப்படி இருக்கும் என்பதையும், 2022 ஜூலையில் நடக்க உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் நரேந்திர மோதி விரும்பிய வேட்பாளரை குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்ப முடியுமா என்பதையும் இந்தத் தேர்தலே தீர்மானிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












