18 ஆண்டுகால போலீஸ் பணியில் 41 முறை பணி மாறுதல்கள் - 'அசராத' ரூபா மொட்கில்
பெங்களூருவின் பிரபல வணிக சாலையான எம் ஜி சாலையில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா புர்கா அணிந்து கொண்டு உலாவியதாக தமக்கு தகவல் வந்தது என கர்நாடக சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி ரூபா மொட்கில் பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலையில் தெரிவித்துள்ளார்.

“சசிகலாவும், இளவரசியும் வெளியே சென்றதை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அதனையும் தெரிவித்திருப்பேன்” என்று ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மொட்கில் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது தொடர்பாக முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா, சசிகலா விவகாரத்திற்கு பிறகு, தமிழர்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும், தன்னை பெரிதும் அவர்கள் மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.
பிபிசி தமிழிடம் பேசிய ரூபா, சிறை தண்டனை பெற்றவர் அரசியல்வாதியாக இருப்பதால் மட்டுமே அவர் "அரசியல் கைதியாகி விடமாட்டார்" என்றும், சிறை ஆணைப்படியும், சிறை நிர்வாகத்தின் படியும் சசிகலா சிறப்பு சலுகைகள் எதையும் பெற முடியாது என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"அரசியல் கைதிகளுக்கு சில சலுகைகள் உண்டு. ஆனால், சிறப்பு சலுகைகள் பெறுவதாக நான் அறிக்கை கொடுத்த பெண் (சசிகலா) ஓர் அரசியல் கைதியல்ல. அவர் அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால், அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றவர். சாதாரண சிறை கைதியை போலத்தான் அவரும்" என்று ரூபா குறிப்பிட்டார்.
சிறையில் சாதாரண உடையில் சசிகலா: சமூக ஊடகங்களில் பரவிய காணொளி
சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து, தாம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமாரும் தம் அறிக்கைகளை தாக்கல் செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சசிகலா சிறையை விட்டு வெளியே சென்றது பற்றி கேட்டபோது, "சசிகலா வெளியே சென்றது பற்றி எந்த தடயமும் என்னிடம் இல்லை." ஆனால், தன்னிடம் கிடைத்த தகவல்களை விசாரணைக்காக சமர்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனக்கு கிடைத்த காணொளி பதிவு ஒன்றில், சசிகலாவும், இளவரசியும் 'பட்டுப் புடவைகள்' உடுத்திக்கொண்டு, பொருட்கள் வாங்கிய பையோடு சிறைக்கு வருவது தெரிகிறது.
எனவே, அவர்கள் வெளியே சென்றார்களா என்பது விசாரிக்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறேன்.

பட மூலாதாரம், FACEBOOK
தொழிலாளர் சங்க தலைவர் முத்துமாணிக்கம் என்பவர் தன்னிடம் வந்து, சசிகலா, இளவரசி இருவரையும் புர்காவோடு எம்.ஜி. சாலையில் பார்த்ததாகவும், அதனை அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தததால் தான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் ரூபா குறிப்பிட்டார்.
ஆனால், இருவரும் வெளியே சென்றதை தான் நேரில் பார்க்கவில்லை என்று கூறும் ரூபா அப்படி பார்த்திருந்தால் அதனையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பேன் என்றார்.
சிறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு பாகுபாடு இல்லாத சமத்துவம் பேணப்பட்டு, ஊழல் முற்றிலும் களையப்பட வேண்டும். எனவே, சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய அறிக்கையே, சிறை சீர்திருத்தத்திற்கு தொடக்கப்புள்ளி என்று அவர் குறிப்பிட்டார்.
கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா மொட்கிலுடன் பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலை முழுமையாக பார்க்க:
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
இதற்காக பெருமளவு ரிஸ்க் எடுத்துள்ளதாக தெரிவித்த ரூபா, பணியிட மாற்றம், விசாரணை, மெமோ, மூத்த அதிகாரி தன் மீது போட்டுள்ள வழக்கு என்று பல விடயங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.
"மன்னார்குடி மாஃபியா உன்னை சும்மா விடமாட்டார்கள்" என்று சிலர் கூறியதை தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார் அவர்.
"ஆனால், நான் அரசை விமர்சிக்கவில்லை. நிர்வாக பிழையை வெளிக்கொண்டு வருவது அனுமதிக்கப்பட்டதே என்பதால், இதில் நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு இருப்பதாக" தெரிவித்தார்.
கடந்த 18 வருடத்தில் 41 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ரூபா, சசிகலா விவகாரத்துக்கு பின், போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு தற்போது ஹோம் கார்ட்ஸில் ஐ.ஜி.பியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













