"கலவரத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் திருமாவளவன் பேசுகிறார்" - எல்.முருகன்

புதுச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
"பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர்" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அந்தக் கருத்தரங்கில் விமர்சித்திருந்தார்.
30 மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் கைவினை கண்காட்சியை தொடங்கி வைக்க மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்திருந்தார். அதற்கு முன்னதாக புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடத்தில், இலங்கையில் தமிழக மீனவர்களின் பிடிபட்ட படகுகள் ஏலமிடப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "இலங்கை அரசால் மீனவர்கள் ஒவ்வொரு முறை பிடிபடும் போதும், மத்திய அரசு தலையிட்டு அவர்களை கொண்டு வருவதில் மிகுந்த முனைப்போடு இருக்கிறது. 2014-ஆம் ஆண்டிற்கு முன்பாக எவ்வளவு மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். துப்பாக்கிச் சூடு தினம்தோறும் நடைபெற்றது. 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடைபெறவில்லை. அந்தளவுக்கு நம்முடைய மீனவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கிறது," என்றார்.
சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் சுதந்திரத்தை ராமாயண, மகாபாரத இதிகாசங்கள் சிதைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, "ராமாயணமும், மகாபாரதமும் இந்திய தேசத்தின் இதிகாசங்கள். நம்முடைய முன்னோர்கள் அதனை நல்நெறி இதிகாசங்களாக போற்றியுள்ளனர். நம் முன்னோர்கள் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஊட்டி வளர்த்துள்ளார்கள்," என்றார் எல்.முருகன்.
''யார் சுயநலவாதி? திருமாவளவன் தன்னை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்''

பட மூலாதாரம், @Murugan_MoS twitter
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் ஒருவர் பாஜகவில் இருந்தால் அவர் சுயநலவாதி என்று திருமாவளவன் கூறியதற்கு, "இதனைச் சொல்பவர் எந்த சுயநலமும் இல்லாமல் இருக்கிறாரா என்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவருடைய நோக்கம் என்ன? சுயநலம் இல்லாமல் இருக்கிறாரா? என்பதை மக்கள்தான் சொல்லவேண்டும்."
" இந்திய நாடு ஒரு ஜனநாயக நாடு. அதில் எந்த கட்சியில் இருப்பதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது. ஒடுக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட கட்சியில்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. இன்று இந்தியாவிலேயே அதிகமானநாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்கள்.
நம் மாநிலத்திற்கு அருகே உள்ள கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அதில் பட்டியலின அமைச்சர் எந்த இடத்தில் இருக்கிறார்? தமிழ்நாட்டில் பட்டியலின அமைச்சர் எங்கு இருக்கிறார்? எங்க போனாது சமூக நீதி ," என்று கேள்வி எழுப்பினார்.
"இவர் அந்த கூட்டணியில் இருக்கும்போது அதுகுறித்து கேட்கலாமே? பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர்கள் கடைசி இடத்தில் இருப்பது நியாயமா என்று கேட்கலாமே? ஏன் கேட்காமல் இருக்கிறார். இது சுயநலமில்லையா?
பட்டியலின மக்களுக்கு உள்துறை கொடுத்தால் அவர்கள் நிர்வகிக்க மாட்டார்களா? பட்டியலின மக்களுக்கு எப்போதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மட்டும் கொடுக்கப்பட வேண்டுமா? தமிழ்நாட்டில் மூன்று பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சர் பதவிகொடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் பட்டியலின அமைச்சர் நிதித்துறை அமைச்சராக இருக்கிறார். அடுத்தவருக்கு அறிவுரை வழங்குவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு கட்சியிலிருந்தால் சுயநலவாதியாக இருக்க முடியுமா? சிறு வயது முதலே அந்த கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நான் எந்த விதத்திலும் தீண்டாமையை கையில் எடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்தவர்கள் தான் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்கள். ஆகவே பாரதிய ஜனதா கட்சிக்கு யாரும் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது," என்றார் முருகன்.

திருமாவளவனுக்கு பய உணர்வு ஏற்பட்டுள்ளது
"திருமாவளவன் மிகவும் பயத்தில் இருக்கிறார். ஏனென்றால் பட்டியலின மக்கள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகமாக வந்துள்ளனர். இன்று எந்த கிராமத்திற்கு சென்றாலும் அங்கே பாஜகவின் கிளை இருக்கிறது, அதன் கொடி இருக்கிறது, அதற்கென சகோதரர்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் சில விஷயங்கள் பேசுகின்றனர். அதை நாம் கடந்து போக வேண்டும்.
திருமாவளவன் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று தோன்றுகிறது. இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும், சுமுக சூழல் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார். இத்தனை நாட்களாக பட்டியலின மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள் என்று பய உணர்வில் இவ்வாறு பேசுகிறார்," என்று தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தை தன்னுடைய புனித நூலாக பார்க்கிறார் பிரதமர்
அம்பேத்கரின் இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுதாக திருமாவளவன் கூறியதற்கு, "இந்திய அரசமைப்பு சட்டத்தை தன்னுடைய பகவத்கீதை என்று சொல்லி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை வணங்கிவிட்டு இந்திய பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றவர். இந்திய அரசமைப்பு சட்டம் ஒவ்வொருவருடைய தேசிய நூல். அம்பேத்கர் அவர்கள் மிக தெளிவாக இந்திய அரசமைப்பு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார். அதை என்னுடைய புனித நூல் என்று பிரதமர் நரேந்திர மோதி சொல்லியிருக்கிறார்," என்றார் அவர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மிக பெரிய வெற்றி பெரும்
இறுதியாக 5 மாநில தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் குறித்து பேசிய அவர், "உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் நகர உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் போகும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். நிச்சயம் பாஜக வெற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்," என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













