தெற்கு ரயில்வே - ரயில் நிலையங்களில் இனி 'க்யூ. ஆர்' கோடு மூலம் பயணச்சீட்டு, 0.5 சதவீதம் சலுகை

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
ரயில் நிலையங்களில் இனி 'க்யூ ஆர்' கோடு மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது என்று, தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே வைத்துள்ளதாகவும், இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், மேலும் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம்.
மேலும் இந்த ''க்யூ. ஆர்'' கோடு வசதி மூலம் மாத பயணச்சீட்டை புதுப்பித்தால் பயணிகளுக்கு 0.5 சதவீதம் சலுகை கொடுக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
5 முதல் 15 வயது உடையவர்களுக்கு தடுப்பூசிஎப்போது ?

பட மூலாதாரம், Getty Images
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மன்சூர் மாண்டாவியா, 5 முதல் 15 வயது உடையவர்களுக்கு எப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்பது சம்பந்தமாக பதில் அளித்துள்ளதை தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் , "மருத்துவ நிபுணர் குழுவிடம் இருந்து பரிந்துரை வந்த பிறகே 5 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்", என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறினார். குஜராத் மாநிலம், காந்திநகரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசுகையில், "5 முதல் 15 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவிடம் இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை. இது அரசியல் ரீதியில் எடுக்கப்படும் முடிவல்ல. அறிவியல்பூர்வமாக எடுக்கப்படும் முடிவு. மருத்துவர்கள் பரிந்துரைத்த பிறகே 5 முதல் 15 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்", என்று அவர் தெரிவித்தார்
"கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி 67 சதவீத குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புப் பொருள் உருவாகியிருந்தது தெரியவந்தது. குழந்தைகளிடம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்கு முன்பு சர்வதேச வழிகாட்டுதல்களை பின்பற்றி வந்தோம். தற்போது நம் நாட்டு நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவற்றை பின்பற்றி வருகிறோம்.
நாடு முழுவதும் 96 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 77 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனால் கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடிந்தது. 15-18 வயதுக்கு உட்பட்டவர்களில், 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்", என குறிப்பிட்டிருந்தார் என்று அதில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
குஜராத் கடலோரத்தில் 2,000 கோடி ரூபாய் போதைப்பொருள் கைப்பற்றல்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதற்கு ஐந்து மாதங்களுக்கு உள்ளாகவே சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 750 கிலோ போதைப்பொருளை குஜராத் கடலோரத்தில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நார்காடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவும் இந்திய கப்பற்படையும் கைப்பற்றியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.போர்பந்தர் - ஜாம்நகர் அருகே உள்ள கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல் ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 529 கிலோ உயர்தர ஹேஷிஷ், 234 கிலோ க்ரிஸ்டல் மெத்தாம்பென்டமைன் மற்றும் சிறிய அளவிலான ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று நார்காடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ தெரிவித்துள்ளது. அந்தக் கப்பலில் இருந்து எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அவர்கள் எந்த நாட்டினர், கடத்தப்பட்ட போதைப் பொருள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













