பொற்கோயில் சம்பவத்தையடுத்து, நிசாம்பூரில் நடந்த கொலை - பஞ்சாப்பில் தொடரும் பதற்றம்

பட மூலாதாரம், Pradeep/BBC
பஞ்சாப் கபுர்தலா மாவட்டத்தின் நிசாம்பூர் கிராமத்தில் உள்ள குருத்வாராவை அவமதிக்கும் படியான செயலில் ஈடுபட்டதாக கூறி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்துவிட்டதாக புஷ்டி சிவில் மருத்துவமனையின் எஸ். எம். ஒ சந்தீப் தாவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கபுர்தலாவின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஹர்கவல்ப்ரீத் சிங், நிசாம்பூர் கிராமத்தில் அவமதிக்கும் செயலில் ஈடுபட்டவர் திருடுவதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார்.
பிபிசிக்காக பிரதீப் பண்டித்துடன் தொலைபேசியில் பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர், "அவர் கோயிலை அவமதிக்கும் செயலில் ஈடுபடவில்லை; நேற்று பொற்கோயிலில் நடந்த சம்பவம் காரணமாக இவ்வாறு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.
முன்னதாக, குருத்வாராவை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட ஒருவரை பிடித்து வைத்துள்ளோம் எனத் தெரிவித்து குருத்வாராவின் புனித நூல் போதகர் அமர்ஜித் சிங் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.
அந்த நபரை அதிகாலை நான்கு மணியளவில் குருத்வாராவில் பார்த்தாக புனித நூல் போதகர் கூறியுள்ளார். அவரை பிடிக்க முயன்றபோது தப்பி ஒட முயன்றார் என்று அவர் கூறியுள்ளார். பின்னர், சிலர் அவரை துரத்தி பிடித்து விசாரித்த போது, அவர் தில்லியில் வசிப்பவர் என்று கூறியுள்ளார்.
கபுர்தலா சம்பவத்தில் காவல்துறை என்ன கூறுகிறது?
இந்த சம்பவம் குறித்து பிபிசி பஞ்சாபி சேவையிடம் பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஹர்கவல்ப்ரீத் சிங், புனித நூல் போதகர் சமூக ஊடகத்தில் வீடியோ பதிவிட்ட பின்னர், அங்கு மக்கள் பலரும் திரண்டனர். பிடிக்கப்பட்ட நபர் குருத்வாராவிலுள்ள அறையில் பூட்டி வைக்கப்பட்டார். அவரை தங்களிடம் ஒப்படைக்க கோரி மக்கள் கேட்டனர். அவர்களை சமாதானப்படுத்த காவல்துறை முயற்சி செய்தது. ஆனால், அவர்கள் சமாதானமடைய வில்லை. அங்குள்ள மக்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து, அவரை அடித்தனர். காவல்துறை அவரை மீட்ட போது அவர் நினைவிழந்திருந்தார். அவரை சிவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் இங்கு அழைத்து வருவதற்கு முன்பே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர்," என்றார்
நிசாம்பூர் சம்பவத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Pradeep/BBC
நிசாம்பூரிலுள்ள குருத்வாராவை அவமதிக்கும் படியான செயலில் ஈடுபட்டதாகவும், அவரை பிடித்துவைத்துள்ளோம் என்றும் குருத்வாராவின் புனித நூல் போதகர் அமர்ஜித் சிங் சமூக ஊடகத்தில் வீடியோ பதிவிட்டார்.
சமூக ஊடகத்தில் வைரலான இந்த வீடியோ பதிவில், தரையில் கிடக்கும் ஒருவரை சிலர் தடியில் அடிக்கின்றனர். அருகில் சிலர் நின்று கொண்டிருக்கின்றனர்.
மேலும் அந்த போதகர், பொற்கோயிலில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, இப்படியான சிலர் வெளியில் விடப்பட்டுள்ளதாகவும், அக்கிராமத்தில் குருத்வாராவை அவமதிக்க முயன்ற ஒருவரை பிடித்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த சம்பவம் குறித்து மக்கள் பலருக்கும் தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் அவரை அதிகாரிகளிடம் ஒப்படைத்தால், அவரை மனநலப் பாதிக்கப்பட்டவர் என்று கூறி விட்டுவிடுவார்கள்", என்று தெரிவித்துள்ளார் புனித நூல் போதகர் அமர்ஜித் சிங்.
ஆனால் காவல்துறை அந்த நபர் திருடுவதற்காக கோயிலில் நுழைந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
"திருட்டுச் செயல்" என கூறும் காவல்துறை

பட மூலாதாரம், Pradeep/BBC
எரிவாயு சிலிண்டரை திருடுவதற்காகவே, அந்த நபர் குருத்வாராவுக்கு வந்ததாக ஹர்கவல்ப்ரீத் சிங் தெரிவித்தார்.
"அந்த குருத்வாராவில் பிடிக்கப்பட்ட நபர், சிலிண்டர் திருட வந்திருக்கிறார். அவரை கோயிலை அவமதிக்கும் செயலில் சம்பந்தப்படுத்தி விட்டனர்", என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொற்கோயிலில் நடந்த சம்பவம்
நேற்று பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்களின் புனித நூல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்து புனித நூலை சேதப்படுத்த முயன்றார்; பின் அவர் கூட்டத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், குறிப்பிட்ட அந்த நபர் மற்ற நபர்களுடன் வரிசையில் காத்திருந்ததாகவும், அவரின் முறை வரும்போது, சீக்கியர்கள் புனிதமாக கருதும் நூலுக்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த வாளை எடுக்க முயன்றார் என்றும் தெரிவித்தனர்.
உடனடியாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பொற்கோயிலின் பாதுகாவலர்கள் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
"இன்று 24 - 25 வயது மதிப்புமிக்க இளைஞர் ஒருவர் சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந்த் சாஹிப்பை வாளால் சேதப்படுத்த முயன்றார்; அவர் பக்தர்களால் வெளியே கொண்டு செல்லப்பட்டார். பின் கூட்டத்தினரால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இளைஞரின் உடல் சிவில் மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது." என இதுகுறித்து அமிர்தசரஸ் டிசிபி பர்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்திருந்தது.
இதுவரை நடந்த சம்பவங்கள்
2015ம் ஆண்டு ஃபரித்கோட் (Faridkot) மாவட்டத்தில் உள்ள பஹபல் கலான் என்ற இடத்தில் சீக்கிய மதத்தின் புனித நூல் போதகரை தாக்கிய வழக்கில் பெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
2017ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஷிரோமணி அகாலி தளம் கட்சி-பாஜக கூட்டணி மோசமாக தோல்வியடைந்ததற்கு, இந்த சம்பவம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை போலவே தற்போது, மீண்டும் தேர்தலுக்கு முன்னதாக, பஞ்சாப்பின் பொற்கோயிலில் சனிக்கிழமை மாலை அத்துமீறி ஒருவர் நுழைந்த சம்பவம் நடந்துள்ளது. அக்கோயில்லை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்டார்.
முன்னதாக, அக்டோபர் மாதம், சிந்து எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தின் போது, நிகாங் பிரிவை சேர்ந்தவர்கள் ஒரு நபரைக் கொன்று, அவரது உடலை கூடாரத்திற்கு வெளியே தொங்கவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் குருத்வாராவின் போதகரை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பிற செய்திகள்:
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
- திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
- வேலூர் நகைக்கடையில் 16.5 கிலோ நகை கொள்ளை: திருச்சி கொள்ளை போலவே நடந்ததா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












