சுங்கச்சாவடி கட்டண வசூலில் விதிமீறலா? சென்னை புறநகரில் கொதித்து எழும் உள்ளூர்வாசிகள்

சுங்கச்சாவடி
    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஒரு வாகனம் சுங்கச்சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல் ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் என்ற வகையில் பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை கட்டண நிர்ணய விதிகள் 2008இன் படி மாநகராட்சி அல்லது நகராட்சி வரம்புகளுக்குள் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் சுங்கச்சாவடி அமைக்கப்படக்கூடாது. இந்த விதிமுறைகளுக்கு மாறாக தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் இயங்கி இயங்கி வருவதாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் புகார் தெரிவித்துள்ளார்.

ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல் ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வைத்துள்ள வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு தேவையில்லாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. சொந்த வேலைக்காக வெளியில் சென்று வரும் வாகனங்களுக்குக் கூட கட்டணம் வசூலிக்கப்படுவதால் உள்ளூர் குடியிருப்பு வாசிகளுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக மோதல் நிலவுகிறது குறிப்பாக சென்னையை அடுத்த செங்குன்றம் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் பலமுறை ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டு உள்ளது சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

10 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதி 2008இன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை சுற்றி 10 கிலோ மீட்டருக்குள் எந்த ஒரு சுங்கச்சாவடியும் இருக்கக்கூடாது. இருப்பினும் சுங்கச்சாவடி அருகே உள்ள உள்ளூர் மக்கள் இந்த கட்டணத்தை செலுத்த சில நேரங்களில் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் சுங்கச்சாவடி கட்டண வசூல் கவுன்ட்டர்களில் பல நேரங்களில் மோதல்கள் ஏற்பட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி

பட மூலாதாரம், Getty Images

சென்னை புறநகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே வசித்து வரும் உள்ளூர் மக்கள் பெரும்பாலானோர் வைத்திருக்கும் கார்கள், வெளியூர் பதிவு எண்களைக் கொண்டவை. இந்த காரணத்தைக் கூறி சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என்று தாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாதா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சுங்க கட்டணம் சிறு தொகைதானே கட்டிவிட்டுச் செல்ல வேண்டியதுதானே? என்று ஊழியர்கள் சொல்கிறார்கள் என ஆதங்கப்படும் பகுதி மக்கள், நியாயமற்ற கட்டணத்தை எதற்காக கொடுக்க வேண்டும் என்றும் கேட்கிறார்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் மக்களவையில் பேசினார்.

அப்போது அவர், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதி 2008இன்படி இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில் 60 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. அதேபோல் மாநகராட்சி நகராட்சி எல்லைகளை சுற்றி 10 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகளுக்கு மாறாக தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன அவற்றை எல்லாம் மூடுவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் எல்லைக்குள்ளேயே சுங்கச்சாவடிகள் பல இடங்களில் அமைந்திருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை குறுக்கே கடந்து செல்வதால் இந்த சாலை வேறு மாநில சாலை வேறு என பிரித்துப் பார்க்கிறார்கள். இதனால் உள்ளூர்வாசிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்கிறார் வழக்கறிஞர் ச. ரா. காட்வின் சாத்ராக். இவர் பிபிசி தமிழிடம் பேசும்போது இந்த விவகாரத்தை விரிவாகவே விளக்கினார்.

சுங்கச்சாவடி கட்டணம்

பட மூலாதாரம், Reuters

புகார் என்ன?

ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல் ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உள்ளூர் மக்கள் தங்களுடைய சொந்த தேவைக்காக இலவசமாக பயணிக்க கூடிய சாலைக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சாலை மேம்பாட்டிற்காக ஒவ்வொருவரும் வாகனம் வாங்கும் பொழுது சாலை வரியை முறையாக செலுத்துகிறார்கள். சாலை சமைப்பதற்கு செலவு செய்த தொகையை விட பன்மடங்கு சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்த பிறகும் சுங்கச்சாவடிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

சுங்கச்சாவடிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே தான் செயல்படும் என்று கூறமுடியாது.இதுவரை ஒரு சுங்கச்சாவடியை மூடியதாக தெரியவில்லை. சாலை பராமரிப்பு என்கிற பெயரில் சுங்க கட்டணம் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. சுங்கச் சாவடிகளில் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் லோக்கல் அட்ஜஸ்ட்மெண்ட் முறையில் வழி விடுகிறார்கள் பொதுமக்கள் மட்டுமேதான் இதில் பலியாகிறார்கள், என்றார் காட்வின்.

சுங்கச்சாவடி கட்டணம்

பட மூலாதாரம், Getty Images

செங்குன்றம் பகுதியில் சுங்கச் சாவடி அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த சுங்கச்சாவடியின் முழு விவரங்கள் இதுவரை எதுவும் தெரியவில்லை; இது குறித்த விவரங்களை கூறுவதற்கும் யாரும் இல்லை என்கிறார் செங்குன்றம் பகுதியைச் சார்ந்த நடேசன்.

மேலும் அவர் கூறுகையில், "சுங்கச்சாவடி மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வசூல் ஆகி கொண்டிருக்கிறது வசூலாகும் பணம் நேரடியாக அரசாங்கத்திற்கு சென்று சேரவில்லை முற்றிலும் தனியார் நிறுவனங்களுக்கு தான் சென்று சேருகிறது.

சுங்கச்சாவடியில் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் ரவுடிகளை போல் சில நேரங்களில் செயல்படுகிறார்கள் இதனால் பொது மக்களுக்கு மட்டுமல்லாது மக்கள் பிரதிநிதிகளுக்கும் பலமுறை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. செங்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட இந்த சுங்கச்சாவடியில் வட்டத்துக்கு உட்பட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இலவசமாக சென்று வரலாம் என கூறப்பட்டது. ஆனால் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மக்கள் கோரிக்கை என்ன?

மேலும் சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களிடம் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் காவல்துறையினர் சுங்கச்சாவடி நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுகிறார்கள். தற்போது பாஸ் டாக் நடைமுறைக்கு வந்த பிறகு உள்ளூர் மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைக்கு சுங்கச் சாவடியை கடந்து செல்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது.

சில நேரங்களில் உள்ளூர் வாசிகளை இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கிறார்கள் பல நேரங்களில் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கக் கூடிய சுங்கச்சாவடிகள் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைய வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம் இதை அரசு கவனத்தில் கொண்டு இதுபோல் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கையாகவும் என்றார்.

இது குறித்து சென்னை மண்டல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "புதிதாக எந்த ஒரு சுங்கச்சாவடிக்கும் அனுமதி என்பது வழங்கப்படவில்லை தற்போது இயங்கி வரும் அனைத்து சுங்கச் சுங்கச்சாவடி களும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி பெற்று இயங்கி வருகின்றன," என்றனர்.

குறிப்பாக செங்குன்றம் சுங்கச்சாவடி மீது மக்கள் அளிக்கும் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் ஆதார் அட்டை வைத்திருக்கும் உள்ளூர் மக்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும் என்று மக்களவையில் இந்திய சாலை, நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 60 கிலோ மீட்டருக்குள் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் என்றும், 2வது சுங்கச்சாவடி இருந்தால், அடுத்த 3 மாதங்களில் அது மூடப்படும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: