தமிழ்நாடு - கர்நாடகா: காவிரிப் பிரச்னை தொடர்வது ஏன் ? தீர்வு என்ன ?

மேட்டூர் ஆணை
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு - கர்நாடகம் இடையிலான காவிரி நதி நீர்ப் பிரச்னை கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புடன் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேகேதாட்டு அணை என்கிற பெயரில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்கிற இடத்தில் ரூ. 9 ஆயிரம் கோடியில் அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசு எந்தவித அனுமதியும் அளிக்க கூடாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக மார்ச் 21ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தை முன்மொழிந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகம் பார்க்கப்படுகிறது.'' என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து முன்னாள் அரசு அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் கருத்துக்களை பார்க்கலாம்.

படிப்படியாக குறைந்த காவிரி நீர்

மேகேதாட்டுவில் தற்போது கட்ட முயற்சிக்கும் அணை மட்டுமல்ல ஏற்கனவே கட்டியுள்ள 5 அணைகளும் முறைகேடானவை என்கிறார்கள் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர். இது குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரும் மூத்த பொறியாளர்கள் சங்க தலைவருமான அ.வீரப்பன் பிபிசி தமிழிடம் கூறுகையில்,

"கடந்த 1970ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு 350 டி.எம்.சி தண்ணீர் வந்தது. கடந்த 1990ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் 205 டிஎம்சியாக இது குறைந்தது. கடந்த 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சியாக குறைந்தது.

தொடர்ந்து 2018ம் ஆண்டு உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் 177.25 டிஎம்சி என்று மேலும் 14.75 டிஎம்சி குறைந்தது. இதையும் கர்நாடக அரசு முறையாக வழங்குவதில்லை.

வெள்ள காலத்திற்கான வடிகாலாக தமிழ்நாட்டை பயன்படுத்தி வருகிறது. இது குறித்து மத்திய அரசோ, காவிரி மேலாண்மை ஆணையமோ கண்டுகொள்வதில்லை.'' என்கிறார்.

முறைப்படுத்தப்படாத முறைகேடுகள்

மூத்த பொறியாளர் அ.வீரப்பன்

பட மூலாதாரம், A.Veerappan

மேலும், ''தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது என்கிற நோக்கத்தில். கடந்த 1973 -80 ஆண்டுகளில் கபிணி, ஹேரங்கி, ஹேமாவதி, யாகாச்சி, ஸ்வர்ணாவதி ஆகிய 5 அணைகளை காவிரி மற்றும் துணை நதிகளில் கர்நாடக அரசு கட்டியது. இதன் மூலம் 70 டிஎம்சி தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி, திட்டக்குழு நிதி, மாநில அரசுகளின் அனுமதி எதையும் கர்நாடகம் பெறவில்லை. இவை முறைப்படுத்தப்படாத முறைகேடுகளாகவே தொடர்கின்றன.

இவை மட்டுமின்றி மேலும் சில மறைமுகத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறி, பாசனப் பரப்பை 11.20 லட்சம் ஏக்கரில் இருந்து, 21.71 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளனர். இதன்படியே தற்போது மேகேதாட்டு அணை கட்டவும் முயற்சிக்கிறார்கள்.

எனவே, அரசிலமைப்புச் சட்ட அமைப்புகளான உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு மீது அரசிலமைப்புச் சட்டத்தின் 365வது பிரிவைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்கிறார் மூத்த பொறியாளர் வீரப்பன்.

ஆணையத்திற்கு அதிகாரம் வேண்டும்

வக்கீல் பானுமதி

பட மூலாதாரம், T.Bhanumathi

மூத்த வழக்குரைஞர் பானுமதி பிபிசி தமிழிடம் கூறுகையில், "பல்வேறு அம்சங்களையும் ஆராய்ந்துதான் இறுதியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே கீழ்பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல் உறுதியாக அணை கட்ட முடியாது என்பது மட்டுமல்ல. அப்படி முயற்சிப்பதும் அரசியலமைப்புச் சட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது." என்கிறார்.

மேலும், மத்திய அரசு அனுமதி, மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெற்றும் கட்ட முடியாது. அப்படி அவர்கள் அனுமதி கொடுக்கவும் முடியாது. அப்படி அனுமதி கொடுத்தாலும் அது அரசமைப்புக்கு எதிரானது. ஆனாலும், அரசியல் காரணங்களினால் அழுத்தம் தரப்படுகிறது. சட்டப்படி உறுதியாக அணை கட்ட முடியாது.'' என்கிறார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது பெயரளவே உள்ளது. அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.''என்கிறார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசியல்

பாஜக கே.பி.ராமலிங்கம்

பட மூலாதாரம், K.P.Ramalingam

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கீழமை பாசன உரிமை உள்ள எந்த ஒரு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது.

மேகேதாட்டு அணைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆகையால், சட்டப்படி அணை கட்ட முடியாது. இதுவே எங்களது நிலைப்பாடும்.'' என்றார்.

தமிழ்நாட்டுக்கான 177.25 டிஎம்சி தண்ணீருக்கு மேல் உள்ள தண்ணீரை பயன்படுத்த அணை கட்டுகிறோம் என்று கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ளது குறித்து கே.பி.ராமலிங்கத்திடம் கேட்டதற்கு, "அப்படி அவர் சொல்வதும் தவறானது. அப்படி ஒரு ஷரத்தே உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இப்போது அரசியலுக்காக, மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தலில் வாக்கு பெறும் நோக்கத்தில், சொல்கிறார்கள். கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.'' என்கிறார்.

கர்நாடக காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் ஒன்றுதான்

காங்கிரஸ் ஜி.கே.முரளிதரன்

பட மூலாதாரம், G.K.Muralidharan

காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் கடைமடைப் பகுதிகள் தண்ணீர் சென்று சேராத நிலையில், காவிரி ஆற்றில் அணை கட்டி, தண்ணீரைத் தடுத்து, தண்ணீர் கொடுக்க மறுப்பது தாயைக் கொல்லும் பாவத்தைப் போன்றது.

மத்தியில் ஆட்சியில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியலுக்காக அணை கட்ட கர்நாடக பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை அரசியலாக்கி அங்கு நிரந்தரமாக ஆட்சியமைக்க வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள்'' என்று குற்றம்சாட்டுகிறார்.

மேலும், ''இந்த விவகாரத்தில், கர்நாடக மாநில காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் போக்கை கண்டிக்கிறோம். இதில், தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம்.'' என்கிறார்.

இருமாநிலப் பிரச்னையில் மத்திய அரசு பொறுப்புடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

தீர்வு என்ன ?

கே.தனவேல்

பட மூலாதாரம், Dr K Dhanavel

இது குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.தனவேல் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''காவிரி நதி நீர் விவகாரத்தில் சர்வதேச சட்ட விதிகளின் படியும், கீழமை பாசன உரிமை விதி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது.

ஆனால், இதை மீறி கர்நாடக அரசு மேக்கே தாட்டு அணை கட்டுவது என்பது சரியானதல்ல. இதில், மத்திய அரசு தனது பொறுப்பையும் கடமையையும் செய்யாமல் ஒதுங்கி இருக்கிறது.

இதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, அங்குள்ள கட்சிகள் அரசியலாக்கி, இருமாநில மக்களிடம் பகைமை வளர்த்து வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு, அரசியலமைப்புற்கு எதிரானது.'' என்கிறார்.

மத்திய அரசின் பொறுப்பு

தொடர்ந்து அவர் கூறுகையில், ''இப்பிரச்சினைக்கு தீர்வு மத்திய அரசின் கையில்தான் உள்ளது. வாக்குவங்கி அரசியல் போக்கை கைவிட்டு, அரசமைப்புச் சட்டத்தை நிலைநாட்ட மத்திய அரசு பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.''

சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மாநில அரசை கலைக்கலாம் என்று சட்டத்தில் இடம் இருந்தாலும், ஆட்சியைக் கலைக்க வேண்டாம். உறுதியாக அறிவுறுத்தி, நெறிப்படுத்த வேண்டும். மத்திய அரசு முன்னுதாரணமாக செயல்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

முடிந்த போன விவகாரத்தை தொடராமல், முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே, மத்திய அரசு கடமை தவறி விட்டது என்கிற நிலையை போக்கி, மத்திய அரசின் பொறுப்பான செயல்பாட்டில்தான் தீர்வு இருக்கிறது.''என்கிறார் தனவேல்.

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கருத்து

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹர்த்தாலை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று (மார்ச் 22ம் தேதி) சந்தித்து, ''மேக்கே தாட்டு அணை கட்ட கர்நாடக அரசு ரூ 1000ம் கோடி ஒதுக்கியுள்ளது சட்டவிரோதமானது என ஆணையம் அறிவித்திட வேண்டும்.இது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆணையம் முறையிட வேண்டும்.தமிழக பகுதிகளை ஆணையத் தலைவர் நேரில் பார்வையிட வேண்டும். ஆணைய கூட்டம் மாதம்தோறும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்,

காவிலி மேலாண்மை ஆணையத் தலைவருன் பி.ஆர்.பாண்டியன்

பட மூலாதாரம், P.R.Pandian

''மேகேதாட்டு அணை திட்டத்தை கர்நாடக அரசு ஜல்சக்தி துறை மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. அதனை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்டுள்ளோம். தொடர்ந்து ஆணையக் கூட்டத்தில் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கர்நாடகம் வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆணையக் கூட்டத்தில் விவாதித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்துமே ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் புதிய அணை கட்டுவதற்கு காவிரி ஆணையம் மத்திய அரசுக்கு தடையில்லா சான்று கொடுக்க முடியும். ஒரு மாநிலம் எதிர்த்தாலும்கூட ஆணையம் அனுமதிக்காது என்று ஆணையர் உறுதியளித்துள்ளார்.'' என்றார்.

மேலும், ''கர்நாடக அரசு ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. பத்திரிக்கை ஊடகங்கள் வந்த செய்திகளை தான் நாங்களும் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

எனவே பத்திரிக்கை ஊடகங்களில் வரும் செய்திகளை காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிடும் தேவை ஏற்படவில்லை'' என்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் கூறியதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, சுனாமியில் பெற்றோரை இழந்த மாணவிகள், இன்று இந்திய கால்பந்து அணியில் சேர்ந்தது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: