வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சுற்றி குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய வன உயிரின காப்பாளர் கடிதம்

- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தை ஒட்டி 15 கி.மீ. சுற்றளவில் இயங்கும் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வன உயிரின காப்பாளர் கனிமவள துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போதைய சூழலில் சரணாலயத்திற்கு வலசை வரக்கூடிய பறவைகள் 'மனிதர்களைப் பார்த்தாலே மிகவும் ஆபத்தானவர்கள்' என்கின்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்கிறார்கள் வன உயிரியலாளர்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. கனடா, சைபீரியா, வங்கதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து வரும் பறவைகள் இதில் அடக்கம்.
வேடந்தாங்கல் சரணாலயத்தின் பாரிங்டியோனியா காடுகள் பல்வேறு வகையான பறவைகளுக்கு ஒரு மிதக்கும் வசிப்பிடமாக உள்ளது. ஓய்வு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காக பறவைகள் இங்கு வலசை வருகின்றன.
ஒவ்வொரு வருடமும் புலம்பெயர் பருவத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 40,000 க்கும் அதிகமான பறவைகள் (இதில் உலகில் வேறு எங்கும் காண முடியாத அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய ஐந்து வகையான பறவைகள், 30 அரிய வகை பறவைகளும் அடங்கும்) சரணாலயத்துக்கு வருகை தருகின்றன. பாம்புத் தாரா, மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா போன்ற பறவைகள் வருகை தருகின்றன
இந்நிலையில் காஞ்சிபுரம்--செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களைச் சுற்றிய கல் குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய வன உயிரின காப்பாளர் எழுதிய கடிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வனவிலங்கு உயிரியலாளர்கள் கருதுகின்றனர்.
இக்கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு கனிம வளத் துறையினர் சரணாலயத்தை சுற்றி 15 கிலோமீட்டர் வட்டத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள்.
அங்கு இயங்கும் கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய அறிவுறுத்தி சென்னை வன உயிரின கோட்டத்தின் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் காஞ்சிபுரம் கனிம வளத்துறை துணை இயக்குனர் லட்சுமிபிரியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது
மதுராந்தகம் தாலுகா, வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி ஏரியை சுற்றி, 5 கி.மீ., சுற்றளவு பகுதி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை 332ன்படி, பறவைகள் சரணாலயப் பகுதிகளில் எந்தவொரு கல் குவாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற செயல்கள் அமைக்க தடை உள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வழிகாட்டுதல்படி, 'சூழல் கூருணர்வு மண்டலம்' என அறிவிக்கை செய்யப்படும். வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி சரணாலய எல்லையில் இருந்து 5 கி.மீ., சுற்றளவு பகுதியிலிருந்து, 10 கி.மீ., சுற்றளவு வரை இயல்புநிலை சூழல் கூருணர்வு மண்டலமாக உள்ளது. எனவே, வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972ன்படி, சரணாலயப்பகுதி மற்றும் 10 கி.மீ. என மொத்தம் 15 கி.மீ., சுற்றளவு பகுதியில், எவ்விதமான கல்குவாரி மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை.
தற்போது, சூழல் கூருணர்வு மண்டலப் பகுதியில், பல்வேறு கல் குவாரிகள் வனத்துறையின் எந்தவித அனுமதியும் இன்றி இயங்கி வருகின்றன. எனவே, வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தை சுற்றி 15 கி.மீ., சுற்றளவில் இயங்கும் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யுமாறு, இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

சூழல் கூருணர்வு மண்டலமாக 10 கி.மீ., சுற்றளவு பகுதியில் குவாரிகள் அமைக்க வேண்டியிருப்பின், www.forestclearence.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக கருத்துருக்கள் விண்ணப்பித்து, தேசிய வன வாரிய நிலைக்குழுவின் பரிந்துரை பெற்றதன் அடிப்படையின்படி பணிகள் மேற்கொள்ளலாம்.
தேசிய வன உயிரின வாரியத்திடம் அனுமதி பெறாமல் இயங்கும் குவாரிகள் மீது, வனத்துறை சட்டம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பறவைகள் கூடு கட்டும் முறை, வாழ்வியல் முறை மாறியுள்ளதாகவும் காய்ந்த குச்சிகள் இலை தழைகள் மற்றும் தாவரங்களை கூடுகட்ட பயன்படுத்திய பறவைகள் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் பாலத்தீன் பைகள் ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
பறவைகளின் இந்த மாற்றம் இயற்கைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என்றும் இதே நிலை நீடித்தால் பறவைகள் அழியும் வாய்ப்பு உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
ஒரு நூற்றாண்டு பழைமையானது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், இங்கு வலசை வரும் பறவைகளுக்கும் விவசாயிகளுக்கும் நெருங்கிய நட்பு உணர்வு உண்டு. விவசாய நிலங்களில் காணப்படும் தீமை தரக்கூடிய பூச்சி மற்றும் புழுக்களை இறையாகி அந்த பறவைகளின் எச்சம் மிகப்பெரிய உரமாக விவசாயிகளுக்கு அமைகிறது.
கடவுளால் அனுப்பிவைக்கப்பட்ட வரப்பிரசாதம் இந்த பறவைகள் என விவசாயிகள் எண்ணுகிறார்கள் இப்படியாக பல தகவல்களை சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் தற்போதைய சூழலில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரக்கூடிய பறவைகள் மனிதர்களைப் பார்த்தாலே மிகவும் ஆபத்தானவர்கள் என்கின்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்கிறார் மூத்த வனவிலங்கு உயிரியலாளர் டாக்டர் பூபேஷ் குப்தா.

இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது:
உலகில் வேறு எங்கும் பார்த்திட முடியாத அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய ஐந்து வகையான பறவைகள் மட்டுமின்றி 30 அரிய வகை பறவை இனங்களும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் சரணாலயத்தை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்புகள் படிப்படியாக பெருகி உள்ளன. மேலும் கல்குவாரிகள், தனியார் தொழிற்சாலைகளும் பெருகிவிட்டன.
சரணாலயத்தை சுற்றி நிர்ணயிக்கப்பட்ட இயல்புநிலை சூழல் கூருணர்வு மண்டலத்துக்குள் அனுமதி இன்றி இயங்கி வரும் பல கல் குவாரிகளால் வலசை வரும் பறவைகள் வரத்து குறைந்து சரணாலயத்தை விட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசடைந்து அதன் விளைவாக நீர் நிலைகள் முற்றிலும் மாசடைந்து வருகின்றன. குறிப்பாக கல் குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. பறவைகள் நிலத்தடி நீரின் தரத்தை நன்கு அறியக் கூடியவை என்பதனால் தூய நிலத்தடி நீர் இருக்கும் பகுதிக்கு பறவைகள் இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
மேலும் சரணாலயத்தில் கூடு கட்டுவதற்கு ஏற்ற வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. தொடர் வெடிச் சத்தத்தினால் பறவைகளின் இனப்பெருக்கம் பாதிப்பு அடைவதோடு குஞ்சு பொறிக்கும் திறனும் குறைந்து போயிருக்கிறது. எனவே சூழியல் உணர்வு திறன் மண்டலத்துக்குள் இயங்கிவரும் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கல்குவாரி களையும் தொழிற்சாலைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இது அரசாங்கத்தின் மிகப்பெரிய கடமை என தெரிவித்தார்
காலம் தொட்டு பறவைகளின் வரத்து அப்படியேதான் உள்ளது. 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்கத்திற்கு பிறகு நீர்க்காகம் வகையைச் சார்ந்த பறவை இனம் மட்டுமே சரணாலயத்திற்கு வருவதில்லை என்கிறார் வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம்
மேலும் அவர் கூறுகையில் கல் குவாரிகளால் வலசை வரும் பறவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறதா என்பது குறித்து ஆதார பூர்வமாக எங்களுக்கு தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு நீர்வரத்து குறைந்து போன காரணத்தினால் வலசை வரும் பறவைகள் இங்கு இருந்து இடம் பெயர்ந்து வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றது உண்மைதான்.

இது சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்தை பிபிசி தமிழுக்காக தொடர்புகொண்டு கேட்டபோது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் அனுமதியின்றி ஏதேனும் கல்குவாரிகள் இயங்கி வருகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது செயல்பட்டு வரும் கல்குவாரிகள் அனைத்துமே நீண்ட வருடங்களுக்கு முன்பு அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இருப்பினும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கொடுக்கும் ஆய்வறிக்கை மீது உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












