தமிழ்நாடு பட்ஜெட் 2022: டெல்டாவில் முன் கூட்டியே தூர் வாரும் பணிகள் - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

அணை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னதாக தூர் வாரும் பணிகள் நிறைவு பெறும். இதற்காக சிறப்பு நிதி ரூ. 80 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை இன்று(மார்ச் 18ம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையின் தொடக்கத்தில்,

''வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம். தற்போது யுக்ரேனில் நடைபெற்று வரும் போரினால் உலகளாவிய பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இது மாநில பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பண வீக்கம், வட்டி வீதம் ஆகியவை அதிகரிக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.'' என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து அறிவித்தார்.

குறிப்பாக, ''நீர் நிலைகள் மற்றும் அரசு நிலங்களை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கவும் சிறப்பு நிதியாக ரூ. 50 கோடி ஒதுக்கப்படும். சென்னை வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு, வானிலையைத் துல்லியமாக கணிக்க பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.'' என்றார்.

மேலும், ''பயிர்க் கடன் தள்ளுபடிக்காக ரூ. 2,531 கோடி, நகைக் கடன் தள்ளுபடிக்கு ரூ. 1, 000 கோடி, சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடிக்காக ரூ. 600 கோடி என மொத்தம் ரூ. 4, 131 கோடி ஒதுக்கீடு. வட்டியில்லா பயிர் கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு,'' உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

நீர்ப்பாசனத் திட்டங்கள்

தொடர்ந்து நிதியமைச்சரின் அறிவிப்பில்,

''ஏரிகள், கால்வாய்கள், நீர் நிலைகளை மறு சீரமைக்க, தடுப்பணைகள், கதவணைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 2, 787 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி வடி நிலப் பகுதிகளில், நீர் வளங்களின் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்கவும் பாசன நீரை தங்கு தடையின்றி வழங்க பாசன அமைப்புகளை நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் (இஆர்.எம்) ரூ. 3, 384 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும்.

மேட்டூர், சோலையார், சாத்தனூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி உதவியுடன் ரூ. 1, 064 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.'' என்றார்.

முன்கூட்டியே தொடங்கும் தூர் வாரும் பணி

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு கடைமடை வரை காவிரி நீர் சென்றடையும் வகையில், டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ரூ. 80 கோடி மதிப்பீட்டில் 4, 964 கி.மீ நீளத்திற்கு கால்வாய்களை தூர் வாரும் பணி நடைபெற உள்ளது என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை முன் கூட்டியே திட்டமிடுதல் மூலம், பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னதாகவே இந்த பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும். இந்த பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு மொத்தம் ரூ. 7, 338 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

இரண்டாவது ஆண்டாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் (மார்ச் 19ம் தேதி) செய்கிறது. இது குறித்த விவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டங்களில், தங்கு தடையின்றி அனைத்து பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், ஜூன் மாதத்திற்கு முன்னதாக தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், வழக்கமாக மேட்டூர் அணை திறக்கப்படும் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக தூர் வாரும் பணிகள் நிறைவு பெறும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து விவசாயிகளிடம் பேசினோம்.

நிரந்தர அரசாணை வேண்டும்

பி.ஆர்.பாண்டியன்

பட மூலாதாரம், P.R Pandian

இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னதாக தூர் வாரும் பணிகளை முடித்து விட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த ஆண்டு அதற்கு நடவடிக்கை எடுத்து, முன் கூட்டியே சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம்.'' என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், " 'தூர் வாரும் பணிகளைப் பொருத்த வரை ஆண்டுதோறும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுதான் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான நிதி விடுவிப்பு உள்ளிட்ட நடைமுறைக் காரணங்களினால், தூர் வாரும் பணிகள் தாமதமாக தொடங்கும். இதனால், பல இடங்களில் பெயரளவில் மட்டுமே தூர் வாரும் பணிகள் நடைபெறும்.

எனவே, இதைப் போக்கும் வகையில், தூர் வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும். அப்படி பிறப்பித்தால், ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு, முன் கூட்டியே பணிகளைத் தொடங்க முடியும்.'' என்றும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தூர் வாரும் பணிகளை விரிவு படுத்த கோரிக்கை

பெருமாள் -

பட மூலாதாரம், T.Perumal

பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் பெருமாள் பிபிசி தமிழிடம் கூறுகையில்,

"ஜூன் மாதத்திற்கு முன்னதாக அனைத்து நீர் நிலைகளையும் தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து, பட்ஜெட்டிலும் சிறப்பு நிதியாக ரூ. 80 கோடி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம். அதேபோல் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கவும் முயற்சி எடுத்து, சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளதும் பாராட்டத்தக்க முயற்சி," என்றார்.

அதே நேரத்தில் அறிவிப்பை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், "ஜூன் மாதத்திற்குள் தூர் வாரும் பணிகளை டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி முல்லைப்பெரியாறு பாசனம் பெறும் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கி, விரிவு படுத்த வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டால் கூடுதலாக 30 சதவீதம் தண்ணீரை நம்மால் சேமிக்க முடியும். எனவே, ஆக்கிரமிப்புகளை மீட்கும் அரசின் முயற்சிக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இல்லாமல், விரைந்து செயல்படுத்த வேண்டும்.'' என்றார்.

கரைகளில் தடுப்பு சுவர்

அயிலை சிவ சூரியன்

பட மூலாதாரம், Siva Suriyan

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அணைகளை புனரமைப்பு, தூர்வாருவது , காவிரி வடிநிலப் பகுதியில் பாசனை அமைப்புகளை நீட்டித்து, நவீனமயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நீர்வளத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பது நல்ல முயற்சி.

தூர் வாரும் பணிகளை முன் கூட்டியே தொடங்கும் அதே நேரத்தில், ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட இடங்கள், உடைப்பு ஏற்படும் ஆபத்துள்ள இடங்களைக் கண்டறிந்து, கரைகளில் தடுப்புச் சுவர்கள் கட்டி வலுப்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் தடுப்பணைகள் அதிகம் கட்டப்பட வேண்டும்.''என்றார்.

குடிமராமத்து பணிகள்

அயிலை சிவசூரியன் தொடர்ந்து கூறுகையில், ''விவசாயிகளின் பங்களிப்போடு நிறைவேற்றப்பட வேண்டிய குடிமராமத்து பணிகளை ஒப்பந்ததாரர்களைக் கொண்டு செய்கிறார்கள். இதனால், விவசாயிகளின் பங்களிப்பும் திட்டத்தின் நோக்கமும் நிறைவேறுவதில்லை. எனவே விவசாயிகள் பங்களிப்பை உறுதி செய்து, குடிமராமத்து பணிகளைதொடங்க வேண்டும்.'' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: