மமதா பானர்ஜி: "பெகாசஸ் உளவு மென்பொருளை மேற்கு வங்கத்துக்கு விற்க ரூ. 25 கோடி கேட்டனர்"

பட மூலாதாரம், Getty Images
(இன்றைய (மார்ச் 18) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
மேற்கு வங்க மாநிலத்திற்கு நான்கு - ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சைக்குரிய பெகாசஸ் உளவு மென்பொருளை விற்பனை செய்ய என்எஸ்ஒ நிறுவனம் முன்வந்ததாகவும், அதனை தான் மறுத்துவிட்டதாகவும் அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருப்பதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது பெகாசஸ் மென்பொருளை அவர் வாங்கியதாகவும் மமதா பானர்ஜி தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை கூறியதாவது:
"பெகாசஸ் மென்பொருளை விற்பனை செய்யும் நோக்கில் அனைவரையும் என்எஸ்ஓ நிறுவனம் அணுகியது. எங்கள் காவல் துறையையும் அந்நிறுவனம் நான்கு-ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அணுகி, ரூ.25 கோடிக்கு மென்பொருளை விற்பனை செய்ய முன்வந்தது. இந்தத் தகவல் எனக்கு தெரியவந்ததும் அதை உடனடியாக நிராகரித்துவிட்டேன்.
பெகாசஸ் மென்பொருள் நாட்டின் நலனுக்காகவோ அல்லது பாதுகாப்புக்காகவோ பயன்படுத்தப்பட்டிருந்தால், அது வேறு விஷயம். ஆனால், அது அரசியல் நோக்கில், நீதிபதிகள், அதிகாரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் அவர்.
முன்னதாக, இந்த விவகாரத்தை புதன்கிழமை சட்டப்பேரவையில் வெளியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, தனிநபர்களின் தன்மறைப்பு உரிமையில் பெகாசஸ் மென்பொருள் அத்துமீறுவதால், அதனை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன், ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி வகித்தபோது, பெகாசஸ் மென்பொருள் வாங்கப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
இந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெகாசஸ் மென்பொருளை எங்களிடம் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் முன்வந்தது உண்மைதான். ஆனால், அதை நாங்கள் நிராகரித்துவிட்டோம். எந்தவொரு மென்பொருளையும் நாங்கள் வாங்கவில்லை. சட்டவிரோதமாக யாருடைய தொலைபேசியையும் ஒட்டுக்கேட்கவில்லை. அரசு அந்த மென்பொருளை வாங்கியிருந்தால் அதற்கான பதிவு இருக்கும்" என கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கி முனையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் கஞ்சன்பூர் கிராமத்தை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். வனப்பகுதி வழியாக வீடு திரும்பியபோது அவர்கள் 3 பேரையும் அதே கிராமத்தை சேர்ந்த சில ஆண்கள் வழிமறித்தனர்.
மேலும், அந்த கும்பல் அந்த பெண்ணையும், அவரின் கணவரையும் சரமாரியாக தாக்கினர். தாக்குதலை தடுக்க முயற்சித்தபோது அந்த பெண்ணின் கணவரை அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயமடைந்த அந்த நபர் உதவிகோரி கிராமத்திற்குள் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணை குழந்தையின் கண்முன்னே அந்த கும்பல் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய அதேகிராமத்தை சேர்ந்த லாலு, தன்சிங், விபின், மொகித், சச்சின், லேகேந்திர சிங் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை நான் 20,000 புத்தகங்கள் வரை படித்துள்ளேன்: அண்ணாமலை

செல்போன், சமூக வலைதளங்கள் மீதான மோகங்களை விட்டுவிட்டு, இளைஞர்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மதுரையில் தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "இந்தியா எப்போதும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு. இந்தியப் பெண்கள் உலக மகளிருக்கு முன்னுதாரணமாக உள்ளனர். இந்தியாவின் கலாச்சாரம் உலகுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் வாழ்வதற்கு கற்பித்த நூல் திருக்குறள்.
இந்தியாவில் வாழ்வது மிகப்பெரிய பாக்கியமாகும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயரத்தை தொடலாம். சில விஷயங்களை சரியாக செய்யும்போது மட்டுமே அனைத்து இடத்திற்கும் செல்ல முடியும்.
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை இளைய சமூகத்தினர் வழக்கமாக வைத்திருக்க வேண்டும். இதுநாள்வரை நான் 20,000 புத்தகங்கள் வரை படித்துள்ளேன். என் அலுவலகம், வீடு என எந்த இடத்தில் இருந்தாலும் குறைந்தது இரு புத்தகங்களை வைத்திருப்பேன். உலகம் முதல் உள்ளுர் வரை உள்ள அனைத்து புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். புத்தகங்களில் வாழ்க்கைத் தத்துவங்கள் நிரம்ப உள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும் காலத்தில் தெரியாததை தெரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் வேண்டும். இன்றைய இளம் வயதினர் செல்போன், சமூக வலைதளங்கள் மீதான மோகத்தை விட்டுவிட்டு புத்தகங்களை படிக்க வேண்டும்" என்று அவர் கூறியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை படிப்பு படிக்காமல் நேரடியாக பிஹெச்டி படிக்கும் புதிய திட்டம்

பட மூலாதாரம், Getty Images
இனி முதுநிலை படிப்பு படிக்காமல் நேரடியாக பிஹெச்டி படிப்பில் சேரும் வகையில், 4 ஆண்டுகால இளநிலைப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேவேளையில், இப்படிப்பில் சேர நுழைவுத்தேர்வை கட்டாயமாக்கவும் யுஜிசி முடிவெடுத்துள்ளதாக, 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில், "பட்டங்களை வழங்கும் ஒவ்வொரு தன்னாட்சிக் கல்லூரியும் பிற கல்லூரிகளும் பிஹெச்டி படிப்புகளை வழங்கலாம். 4 ஆண்டுகால இளநிலைப் படிப்பை முடித்து ஓராண்டு அல்லது இரண்டு பருவங்கள் முதுநிலைப் படிப்பை முடித்தவர்கள் பிஹெச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் படிப்பை முடித்து 2 ஆண்டுகள் அல்லது 4 பருவங்கள் கொண்ட முதுநிலைப் படிப்பை முடித்தவர்களும் பிஹெச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆராய்ச்சியுடன் கூடிய 4 ஆண்டுகள் அல்லது 8 பருவங்கள் கொண்ட இளநிலைப் படிப்பை முடித்தவர்களும் பிஹெச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் 10-க்குக் குறைந்தது 7.5 சிஜிபிஏவைக் கொண்டிருக்க வேண்டும்.
இதில், எஸ்சி, எஸ்டி, கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் 5 சதவீதம் தளர்வு உண்டு. அதாவது, மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது.
நான்கு ஆண்டுகால இளநிலைப் படிப்பை முடித்து, பிஹெச்டி படிக்க விரும்பும் எஸ்சி, எஸ்டி, கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் 0.5 சிஜிபிஏ தளர்வு உண்டு. அதாவது, மேற்குறிப்பிட்டவர்கள் 10-க்குக் குறைந்தது 7.0 சிஜிபிஏவைக் கொண்டிருக்க வேண்டும்.
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேசிய தகுதித்தேர்வு (நெட்) அல்லது பல்கலைக்கழகங்களே நடத்தும் நுழைவுத்தேர்வின் மூலம் பிஹெச்டி மாணவர்களை அனுமதிக்க வேண்டும். இதில், 60 சதவீத காலியிடங்கள் நெட் / ஜேஆர்எப் நுழைவுத்தேர்வு மூலமாகவும் 40 சதவீத காலியிடங்கள் பல்கலைக்கழகத் தேர்வுகள் மூலமும் நிரப்பப்படும்.
பிஹெச்டி படிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தங்கலுக்கான இடங்களின் எண்ணிக்கையில் ஆராய்ச்சி மாணவர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு கேள்விகள் ஆராய்ச்சி, பகுத்தறியும் திறன், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறக் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில், எஸ்சி/எஸ்டி/கிரீமிலேயர் அல்லாத ஓபிசி வகுப்பினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 5 சதவீத விலக்கு உண்டு" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துகளை, பரிந்துரைகளைப் பொதுமக்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் யுஜிசி தளத்தில் தெரிவிக்கலாம் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- யுக்ரேன் போர்: போர்தந்திர அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமா?
- கணவர் பெட்ரோல் நிலைய வரிசையில், மனைவி மண்ணெண்ணை வரிசையில் – இலங்கையிலிருந்து கள நிலவரம்
- யுக்ரேனில் எத்தனை ரஷ்ய படையினர் கொல்லப்பட்டனர்?
- இஸ்லாத்தில் ஹிஜாப் - நீதிமன்றங்கள் இதை தீர்மானிக்க வேண்டுமா?
- சீனாவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு; வர்த்தகத்தை நிறுத்தும் பெரு நிறுவனங்கள்
- இலங்கை பொருளாதார நெருக்கடி: 7500 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் இந்தியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












