யுக்ரேன் போர்: போர்தந்திர அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கோர்டன் கொரேரா
- பதவி, பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி நியூஸ்
ரஷ்யா யுக்ரேன் மீது ராணுவ நடவடிக்கைகளை துவக்கிய உடனேயே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தனது "அணு ஆயுத தடுப்புப் படைகளை" அதாவது அணு ஆயுதங்களை "போர் தயார்" நிலையில் இருக்க உத்தரவிட்டார்.
இது "போர்தந்திர" அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியது. இது ஒரு முழுமையான அணு ஆயுதப் போர் அல்ல, ஆனாலும் யாரும் எதிர்பாராத சூழல் இது.
போர் தந்திர அணு ஆயுதங்கள் என்றால் என்ன?
போர் தந்திர அணு ஆயுதங்கள் ஒப்பீட்டளவில் குறுகிய தூரத்தில் பயன்படுத்தக்கூடியவை.
இது "மூலோபாய" அணு ஆயுதங்களிலிருந்து வேறுபட்டது. பனிப்போரில், இரண்டு வல்லரசுகளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஒருவர் மற்றவர் மீது ஏவக்கூடிய நீண்ட தூரம் சென்று தாக்கவல்ல குண்டுகளாக இவை இருந்தன.
இருப்பினும், "போர் தந்திரம்" என்ற சொல், "போர்க்கள" ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் சிறிய குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் உட்பட பல வகையான ஆயுதங்களை உள்ளடக்கியது.
ரஷ்யாவிடம் எவ்வளவு போர் தந்திர அணு ஆயுதங்கள் உள்ளன?
ரஷ்யாவிடம் சுமார் 2,000 போர் தந்திர அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. இவை பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் செலுத்தப்படலாம். இந்த ஏவுகணைகள் பொதுவாக பழைய முறையிலான வெடிகுண்டுகளை கொண்டு செல்லக்கூடியது.
போர்க்களத்தில் பீரங்கி குண்டுகளாகக் கூட இவற்றை சுடமுடியும்.
அவை விமானம் மற்றும் கப்பல்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக டார்பிடோக்கள் அதாவது கடற்கணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை குறிவைக்கும் ஆழ்கடல் குண்டுகள்.
இந்த ஆயுதங்கள் வரிசைப்படுத்தப்பட்டு சுடுவதற்கு தயாராக வைக்கப்படவில்லை. சேமிப்பு வசதிகளில் இவை வைக்கப்படிருப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால் ஒரு கவலை என்னவென்றால், பெரிய மூலோபாய ஏவுகணைகளை விட சிறிய போர் தந்திர ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா விரும்பும்.
"அவர்கள் அதை அணுசக்தி வரம்பைக்கடப்பதாக பார்க்க மாட்டார்கள். தங்களின் வழக்கமான படைகளின் ஒரு பகுதியாக இதை அவர்கள் பார்க்கக்கூடும்," என்கிறார் சேதம் ஹவுஸ் ஆய்வு கழகத்தின் சர்வதேச பாதுகாப்புத் திட்டத்தின் தலைவரான பாட்ரிசியா லூயிஸ்.
அவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை?
போர் தந்திர அணு ஆயுதங்கள் அளவு மற்றும் சக்தியில் பெரிதும் வேறுபடுகின்றன.
சிறிய அளவிலான போர் தந்திர அணு ஆயுதம் ஒரு கிலோடன் அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம் (ஆயிரம் டன் வெடிக்கும் TNT க்கு சமம்) . பெரியவை 100 கிலோ டன்கள் வரை இருக்கலாம். ஆயுதத்தின் அளவைப்பொறுத்து அதன் விளைவுகள் இருக்கும். அது தரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் வெடிக்கிறது மற்றும் உள்ளூர் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து இது இருக்கும்.
ஆனால் ஒப்பீட்டளவில் கூறுகையில், இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமாவில் சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேரைக் கொன்ற குண்டு 15 கிலோடன் எடை கொண்டதாகும்.
ரஷ்யாவின் மிகப்பெரிய மூலோபாய ஆயுதங்கள் குறைந்தது 800 கிலோடன்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
அணு ஆயுதங்கள் பற்றிய புதினின் பேச்சு கவலைக்குரியதா?
ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அச்ச உணர்வை உருவாக்க அவர் முயற்சிப்பதாக கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
புதினின் அந்த பேச்சுக்கள் மேற்கு நாடுகள் யுக்ரேனில் அதிகம் தலையிட வேண்டாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகப் பார்க்கிறார்கள்.
அவர் அணு ஆயுதப் போரைத் திட்டமிடுகிறார் என்பதற்கான அறிகுறியாக அவர்கள் இதைக் கருதவில்லை.
வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், யுக்ரேனில் சிறிய போர்தந்திர ஆயுதத்தைப் பயன்படுத்த ரஷ்யா தூண்டப்படலாம் என்று மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள்.
போர்க்களத்தில் ஒரு போர்தந்திர ஆயுதத்தைப் பயன்படுத்துதல் அல்லது செய்துகாட்டுவதற்காக வேறு எங்காவது அதை பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்துவது போன்ற யுக்தியை ரஷ்யா பயன்படுத்தும்.
எதிரியை பயமுறுத்தி பின்வாங்கச் செய்வதே இந்த யுக்தியின் முக்கிய நோக்கம்.
யுக்ரேனில் வேறு வழி இல்லாமல் மாட்டிக்கொண்ட உணர்வு புதினுக்கு ஏற்பட்டு, தனது உத்தி தோல்வியுற்றதாக அவர் உணர்ந்தால், முட்டுக்கட்டையை உடைக்க அல்லது தோல்வியை தவிர்க்க, போர்தந்திர அணு ஆயுதங்களை ஒரு "கேம் சேஞ்சராக" அவர் பயன்படுத்தக்கூடும் என்ற கவலை நிலவுகிறது.
ஆனால் அவர் இதுபோன்ற ஒன்றை செய்வதற்கு , யுக்ரேன் அல்லது ரஷ்யாவில் நிலைமை மோசமாக வேண்டும்.
வாஷிங்டன் டிசியில் உள்ள கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் அணுசக்தி நிபுணரான ஜேம்ஸ் ஆக்டன், "அந்தச் சூழ்நிலையில் புதின் அனைவரையும் பயமுறுத்தி தனது வழிக்கு கொண்டுவருவதற்காக யுக்ரேனில் அணுவாயுதத்தைப் பயன்படுத்தக்கூடும். என்று நான் கவலைப்படுகிறேன். ஆயினும் நாம் இன்னும் அந்த கட்டத்தை எட்டவில்லை,"என்றார்.
"ஒரு பிரச்சனை என்னவென்றால், யுக்ரேனில் "வெற்றி" என்பது புதினுக்கு எப்படி இருக்கும் என்பது தெளிவாக இல்லை. இது ரஷ்யாவை அணு ஆயுதத்தை பயன்படுத்த தூண்டக்கூடும்," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் அணுசக்தி நிபுணரான டாக்டர் ஹீதர் வில்லியம்ஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அவற்றின் பயன்பாடு ரஷ்யாவுக்கு எதிராக அமையுமா?
யுக்ரேன் ரஷ்யாவின் ஒரு பகுதி என்று புதின் கூறுகிறார். எனவே அதன் பிரதேசத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது வினோதமாகத் தெரிகிறது.
"ரஷ்யா, யுக்ரேனுக்கு மிக அருகில் உள்ளது. அணுவாற்றல் எச்சங்கள் எல்லையை கடக்கக்கூடும்" என்கின்றனர் நிபுணர்கள்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா ஜப்பானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியது. இந்த நவீன உலகில் தடையை உடைத்து அவற்றைப் பயன்படுத்தும் முதல் தலைவராக ஆவதற்கு புதின் விரும்புவாரா?
ஆனால் யுக்ரேன் மீது படையெடுப்பு என்பதே மற்றவர்கள் எதிர்ப்பார்க்காத ஒன்றுதான்.
ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாததற்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் சீனா என்கிறார் வில்லியம்ஸ்.
"ரஷ்யா சீனாவின் ஆதரவை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் சீனாவுக்கு 'முதலில் பயன்படுத்துவதில்லை' என்ற அணுசக்தி கோட்பாடு உள்ளது. எனவே புதின் அவற்றைப் பயன்படுத்தினால், சீனா அவருக்கு ஆதரவாக நிற்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர் அணுஆயுதங்களை பயன்படுத்தினால், சீனாவின் நட்பை இழக்க நேரிடும். "
இது அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்குமா?
போர்தந்திர அணு ஆயுதங்களின் பயன்பாடு எங்கு கொண்டு செல்லும் என்று யாருக்கும் தெரியாது. இது தீவிரமடையலாம். ஆனால் புதின் அணுஆயுதப்போரை விரும்பாமல் இருக்கலாம். ஆனால் தவறான கணக்கீடு எப்போதுமே ஆபத்தானது.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்ய அணுசக்தி நடவடிக்கைகளைக் கண்காணிக்க , விரிவான நுண்ணறிவு சேகரிக்கும் செயல்முறை அமெரிக்காவிடம் உள்ளது. உதாரணமாக, போர்தந்திர ஆயுதங்கள் சேமிப்பகத்திலிருந்து நகர்த்தப்படுகிறதா அல்லது ஏவுதளங்களில் ஏதேனும் மாற்றங்கள் காணப்படுகிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. இதுவரை, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது.
எந்தவொரு அணுசக்தி பயன்பாட்டிற்கும் அமெரிக்காவும் நேட்டோவும் எவ்வாறு பதிலளிக்கும் என்பதை கணிப்பது கடினம். அவர்கள் நிலைமையை மேலும் பதற்றமாக்கி, அணுஆயுத போரை உருவாக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு உச்சவரம்பை நிர்ணயிக்க விரும்பலாம்.
இது அணுசக்தி பதிலடியாக இல்லாமல், மிகக்கடினமான வழக்கமான போர்முறையாக இருக்கலாம். ரஷ்யா அப்போது என்ன செய்யும்?
"நீங்கள் அணுசக்தி போர்முறையில் இறங்கிவிட்டால், அது நிற்கும் சாத்தியமே இல்லை," என்று ஜேம்ஸ் ஆக்டன் கூறுகிறார்.
"அந்த உலகம் எப்படி இருக்கும் என்று சொல்லும் தைரியம் யாருக்கும் இருக்காது என நான் நினைக்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- காஷ்மீர் ஃபைல்ஸ்: இவ்வளவு சர்ச்சை ஏன்? படத்தை பாஜக ஆதரிப்பதன் காரணம் என்ன?
- சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்-2’ நிச்சயம் இருக்காது- இயக்குநர் பாண்டிராஜ்
- கர்நாடகா ஹிஜாப்: கல்வித்துறை அரசாணை செல்லும் என தீர்ப்பு
- சூரியன் கருந்துளையாக மாறி பூமியை விழுங்கி விடுமா? - அறிவியல் சொல்வது என்ன?
- "இங்கு நடப்பது காட்டாட்சியா? உடனே ஆளுநரை மாற்றுங்கள்" - மக்களவையில் டி.ஆர். பாலு
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












