"போர் என் இதயத்தை ரணமாக்குகிறது" - அகதிகளாகும் யுக்ரேன் மக்களின் உண்மை நிலை

வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 1,500 மைல்கள் தொலைவில், வடக்கு ஐயர்லாந்தில் இருந்து வரும் உதவிகளுக்காகக் காத்திருக்கும் கணவன் மனைவி மற்றும் அவரது குழுவை பிபிசி வார்சாவில் சந்தித்தது.
வழக்கமாக, காலின் மற்றும் ஜோன்னா டின்ஸ்லி, அவர்களுடைய ஹோப் ஃபார் யூத் மினிஸ்ட்ரீஸ் அமைப்பு மூலம் போலந்து குழந்தைகளுக்கான முகாம்களை நடத்துகிறார்கள்.
இப்போது அவர்கள் யுக்ரேனிய அகதிகளுக்குத் தேவையான உணவு, உடைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட 31 லாரிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.
மூன்று லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் வந்துள்ளன. இன்னும் 22 லாரிகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த இடத்தை அடைய, ஓட்டுநர்கள் ஐரோப்பா முழுவதும் 72 மணிநேரம் பயணிக்க வேண்டியிருந்தது.
"இந்த உதவியின் பெரும்பகுதி யுக்ரேனுக்குச் செல்லும். அங்குதான் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும்," என்று காலின் பிபிசி செய்தியிடம் கூறினார்.
மேலும், "இந்த ஓட்டுநர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, யுக்ரேனின் மத்தியப் பகுதிக்குள் ஓட்டுகிறார்கள். நாங்கள் செய்வதெல்லாம் அவர்களுக்கு உதவுவது மட்டுமே," என்கிறார்.
போர் என் இதயத்தை ரணமாக்குகிறது
வடக்கு ஐயர்லாந்தில் இருந்து ஐரோப்பா முழுவதும் லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் உதவிக்காக வருகின்றன. இதுவொரு மாபெரும் மனிதாபிமான முயற்சி.
தான் முற்றிலும் உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டதாகக் கூறுகிறார் ஜோன்னா.

"மக்கள் தங்கள் நேரம், லாரிகள் மற்றும் போக்குவரத்து ஆகியவ அனைத்தையும் கொடுக்கிறார்கள்.
போர் என் இதயத்தை ரணமாக்குகிறது. ஆனால், அதேநேரம் நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் உதவிகளைப் பார்க்கையில் நெகிழ்ச்சியும் ஏற்படுகிறது," என்று அவர் கூறினார். ஐரோப்பா முழுக்க இருந்து உதவிகள் வருகின்றன.
லாரிகளில் ஒன்று வார்சாவை விட்டு வெளியேறுவதை நாங்கள் பார்த்தோம்.
அது யுக்ரேனுக்குள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும். இதற்கிடையே ஆயிரக்கணக்கான யுக்ரேன் மக்கள் பாதுகாப்பிற்காக அந்த லாரி செல்லும் பாதையில் அதற்கு எதிர்புறமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக, நாங்கள் வார்சாவின் புறநகரிலுள்ள ஒரு கட்டடத்திற்குச் சென்றோம்.
இது ஒரு தேவாலயமாக இருந்தது. இப்போது அது தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கான ஒரு தற்காலிக தங்குமிடமாக உள்ளது.

தேவாலயத்தின் இருக்கைகள் சுவர் ஓரமாக வைக்கப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலாக இப்போது, படுக்கைகளும் பைகளும் வரிசையாக வைக்கப்பட்டதில் அறை நிரம்பியுள்ளது.
மக்களின் முழு வாழ்க்கையும் ஒரே பைக்குள் அடைக்கப்பட்டுவிட்டது.
மேரினா ஸாய், யுக்ரேனின் மேற்குப் பகுதியிலிருந்து தன் இரண்டு குழந்தைகளோடு, தாங்கள் அணிந்திருந்த ஆடைகளோடு மட்டுமே, யுக்ரேனில் இருந்து தப்பி வந்தார்.
"என் கணவர் என்னுடன் இல்லை, யுக்ரேனில் இருக்கிறார். ஏனெனில் என் நாடு போரில் உள்ளது," என்கிறார் அவர்.

"போலந்து மக்கள் மிகப்பெரிய இதயம் கொண்டவர்கள். அவர்கள் எங்களுக்கு உணவு மற்றும் உடைகளைத் தருகிறார்கள். எதிர்காலத்தில் நாங்கள் நன்றாக இருப்போம் என்கிறார்கள்," என்ற மேரினா, தனது கணவர் யுக்ரேனில் தங்கியிருப்பதைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது உடைந்து போனார்.
"நான் அழுகிறேன். ஏனெனில் இது மிகவும் கடினமாக உள்ளது. என் மாமாவும் சகோதரனும் கூட யுக்ரேனில் இருக்கிறார்கள்," என்கிறார்.
இந்தக் கொடூரமான போரின் எதார்த்தம், மேரினா மற்றும் அவருடைய குழந்தைகளின் முகத்தில் தெளிவாகத் தெரிகிறது.
நாங்கள் அங்கிருந்து கிளம்பும்போது, குழந்தைகள் எங்களுக்காக ஒரு பாடலைப் பாடுவதற்குக் கூடினார். அதைப் பார்ப்பது கடினமாக இருந்தது.
வார்சாவுக்கு வெளியே, அகதிகள் தங்கியிருக்கும் கல்லூரிக்குச் சென்றோம்.

நாங்கள் அங்கு செல்லும்போது இளைஞர்கள் கூடைப் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் வட்டமாக குதித்து விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் டிராம்போலைனில் குதித்தப்படி, வேடிக்கை பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
போருக்கு நடுவிலும் கூட சாதாரண வாழ்க்கை ஒளிரும் என்பது அங்கு தெரிந்தது.
"அது நரகம்"
ஜூலியா க்ளுஷோ, தனது தாயுடன் கீயவில் இருந்து வந்துள்ளார். எல்லையை அடைவதற்காக இரவு முழுவதும் பயணித்தார்கள்.
"எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியவில்லை. நாட்டைவிட்டு ஓடி வந்ததை நினைத்து வருத்தமாக உள்ளது. எப்படியாவது திரும்பிச் சென்று உதவ வேண்டும். என்னால் பயனுடைய வகையில் இருக்க முடியுமா?"
எல்லையை அடைவதற்கான தனது பயணம் மிகவும் கடினமானது என்று கூறும் ஜூலியா, "அது நரகம்" என்று அந்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார்.

"எனக்கு இதயம் வலிக்கிறது. அம்மா எப்போதும் அழுது கொண்டேயிருக்கிறார்.
நாங்கள் அங்கிருந்து வந்த இரவில், அவர்கள் என் கட்டடத்தில் வெடிகுண்டு வீசத் தொடங்கினார்கள். கட்டடத்தின் மீது ராக்கெட்டுகள் தாக்குவதை நான் கண்டேன். அவை, சாதாரணமான, அமைதியான வீடுகள். அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது இறந்துவிட்டார்கள்," என்கிறார் ஜூலியா.
அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்டபோது, "என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை," என்கிறார்.
"எனக்கென ஒரு வாழ்க்கை இருந்தது. இப்போது என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கென வீடு ஒன்று இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை."
ஜூலியாவும் மேரினாவும் சந்தித்ததில்லை. ஆனால், அவர்களுடைய அனுபவங்கள் ஒரே மாதிரியானது.
இரண்டு பெண்களின் வாழ்க்கை மொத்தமாக மாறிவிட்டது. அவர்களுக்கு வீடு என்றழைப்பதற்கு எந்த இடமும் இல்லை.
யுக்ரேனில் உள்ள அவர்களுடைய வீட்டிற்குத் திரும்புவதை விட போலந்தில் இருப்பது தான் பாதுகாப்பானது.
பிற செய்திகள்:
- இந்திய ஏவுகணை சம்பவம்: "திருப்பி அடித்திருப்போம், கட்டுப்படுத்திக் கொண்டோம்" - இம்ரான் கான்
- பாலுறவு இன்பத்தை 40 வயதுக்குப் பிறகு அதிகரிப்பது எப்படி? - நிபுணரின் விளக்கம்
- குழந்தை தொழிலாளர்கள் மீண்டும் கல்வி தொடர உதவிய திருவாரூர் மாணவிக்கு குவியும் பாராட்டு
- யுக்ரேன் உள்ள வீரர்களுக்காக சீனாவிடம் ஆயுதம் கேட்டோமா? ரஷ்யா விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












