குழந்தை தொழிலாளர்கள் பள்ளி செல்ல உதவும் திருவாரூர் மாணவிக்கு குவியும் பாராட்டு

மாணவி ப்ரியதர்ஷினி

பட மூலாதாரம், PRO - Thiruvarur

படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியரின் பாராட்டில் ப்ரியதர்ஷினி
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

குழந்தை தொழிலாளர்களாக இருந்த 20 பேர் மீண்டும் பள்ளி செல்ல அரசுப் பள்ளி மாணவி ஒருவர் முயற்சி எடுத்துள்ளார். அவரை ஆசிரியர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியதர்ஷினி. இவர்தான் இந்த பாராட்டுகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பள்ளிக்கு வராமல் பல்வேறு பணிகளுக்கு சென்றவர்களை அடையாளம் கண்டுள்ளார். அவர்களின் பெற்றோர்கள், பணியமர்த்தியர்களிடம் பேசி, மீண்டும் பள்ளி செல்ல வழிகாட்டியுள்ளார்.

மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும் கவனித்து வருவதாக கூறும் ப்ரியதர்ஷினியை பள்ளி ஆசிரியர்கள் தொடங்கி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை உயரதிகாரிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மாணவி

இது குறித்து வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை வணிகவியல் ஆசிரியையும் வழிகாட்டி ஆசிரியையுமான புவனேஸ்வரி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''எங்கள் பள்ளி தலைமை ஆசிரியையின் அனுமதியுடன் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பள்ளி மாணவிகள் குழுவினர் பங்கேற்றனர்.

குறிப்பாக, மாணவி தேவதர்ஷினி குழுவினர் டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரை மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இதே போல் மற்றொரு மாணவியான பிரியதர்ஷினி குழுவினர் குழந்தை தொழிலாளர்கள் குறித்த ஆய்வுத் திட்டத்தை கொடுத்துள்ளனர். இதில், குழந்தை தொழிலாளர்களாக இருந்த 17 பேரை அடையாளம் கண்டுள்ளார்.

மாணவி ப்ரியதர்ஷினி

பட மூலாதாரம், Puvaneswari

படக்குறிப்பு, மாணவியுடன் ஆசிரியை புவனேஸ்வரி

அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பணியமர்த்தியவர்களிடம் பேசி, மீண்டும் பள்ளி செல்ல வைத்துள்ளார். இதற்கு பிறகு தற்போது வரை மேலும் இருவர், தற்போது ஒருவர் என மொத்தம் 20 பேரை அடையாளம் கண்டு, மீண்டும் பள்ளி செல்ல காரணமாக இருக்கிறார்.

படிப்பிலும் சமூகப் பணியிலும் மற்ற மாணவிகளுக்கு முன்மாதிரியாக இவர் விளங்குகிறார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியும் மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் எங்கள் மாணவியை பாராட்டி வருகின்றனர். எங்கள் பள்ளிக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். ப்ரியதர்ஷினி எங்கள் மாணவி என்பதில் பெருமையாக இருக்கிறது.'' என்கிறார்.

குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு சென்ற மாணவர்கள்

மாணவி ப்ரியதர்ஷினி

பட மூலாதாரம், Priyadharshini

படக்குறிப்பு, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் மாணவி

மாணவி பிரியதர்ஷினி பிபிசி தமிழிடம் கூறுகையில், "குடும்ப பொருளாதார சூழ்நிலையால், நானும் 7ம் வகுப்பு படிக்கையில் வேலைக்கு சென்றேன். அப்போது வேலை செய்வதை விட, விளையாட்டில்தான் ஆர்வம் இருக்கும்.

வேலை செய்து கொண்டே படிப்பதும் சிரமமாக இருக்கும். ஆனால், பெரியம்மாவின் அறிவுரையால், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டு, படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறேன்.

கொரோனா பொது முடக்கத்திற்கும் பிறகு செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. நான் தொடர்ந்து பள்ளிக்கு சென்றாலும், எங்க பகுதியில் பூக்கடை, வெடிக்கடை, மெக்கானிக் ஷாப் உள்ளிட்ட இடங்களில் பள்ளி செல்ல வேண்டிய மாணவர்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்தேன்.

அவர்களிடம் கேட்டதற்கு, குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்வதாக கூறினர். அவர்களும் என்னைப்போல் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன்.

அப்போதுதான் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்த அறிவிப்பு வந்தது. இதற்கான ஆய்வுத் திட்டத்தில் இதையே ஆய்வாக செய்யலாமா ? என்று வழிகாட்டி ஆசிரியை புவனேஸ்வரியிடன் கேட்டேன். அவர்கள் சம்மதம் சொல்லி ஊக்கப்படுத்தினார்.

வேலைக்கு சென்ற மாணவர்களிடமும் தொடர்ந்து பெற்றோர் மற்றும் பணியமர்த்தியவர்களிடமும் கல்வியின் முக்கியத்துவம், பள்ளிக்கு செல்லும் வயதில் வேலைக்கு சென்றால் அவர்களின் எதிர்காலம் எப்படி பாதிக்கப்படும் என்பது குறித்து விளக்கினோம். முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

படிக்க பல்வேறு வாய்ப்புகள்

மாணவி ப்ரியதர்ஷினி
படக்குறிப்பு, ஆசிரியைகளுடன் சாதனை மாணவிகள்

ஆனால், தொடர்ந்து அவர்களிடம் எடுத்து சொன்னதும் ஏற்றுக் கொண்டனர். முதலில் 17 பேரிடம் பேசினேன். அவர்களில் 15 பேர் பள்ளிக்கு திரும்பினர். இரண்டு பேர் குறித்து 1098 என்கிற உதவி எண்ணிற்கு அழைத்துச் சொன்னேன். நேற்று இரவு ஒரு மாணவன் எங்க வீட்டுக்கு வந்து அழுதான். எனக்கு படிக்க வேண்டும் என்று ஆசையா இருக்கு. ஆனா வேலைக்கு போக வேண்டியுள்ளது. வீட்டில் வந்து பேசுங்கக்கா என்று அழுதான். அந்த மாணவனின் வீட்டிற்கு சென்றே, பெற்றோரிடம் பேசி, இன்று பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதையடுத்து அவர்களும் பள்ளிக்கு சென்றனர். இவர்களைத் தொடர்ந்து இன்றுடன் (மார்ச் 14ம் தேதி) மொத்தம் 20 பேர் மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளனர். நான் முயற்சி எடுத்தாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து அவர்களை தொடர்பு கொண்டனர். இதையடுத்து, அவர்கள் வேலைக்கு செல்லாமல் பள்ளிக்கு மட்டும் செல்கின்றனர். படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துகின்றனர்.

குழந்தை தொழிலாளர்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு, இலவசக் கல்வி, உதவித்தொகை, பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அரசு செய்கிறது. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையில்லை. எனவே அனைத்து குழந்தைகளும் இடைநில்லாமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். இதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்கிறார் ப்ரியதர்ஷினி.

மேலும், எங்க டீச்சர், கலெக்டர், அதிகாரிங்க அழைத்து பாராட்டி, ஊக்கப்படுத்தினர். குறிப்பாக இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத், எஸ்.எஸ்.ஏ திட்ட இயக்குநர் சுதன் இருவரும் பாராட்டினர். கல்வித்துறை அதிகாரியாக வரவேண்டும் என்று ஊக்கப்படுத்தினர் என்கிறார்.

பெற்றோர் சொல்லும் நன்றி

மாணவி ப்ரியதர்ஷினியின் முயற்சியால் மீண்டும் மகனை பள்ளிக்கு அனுப்பிய பானுமதி என்பவர் கூறுகையில், ''எனது மகன் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தான். இதனால் குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு சென்று கொண்டிருந்தான். ஆனால், ப்ரியதர்ஷினி பலமுறை என்னிடமும் என் மகனிடமும் படிப்பின் அவசியத்தை எடுத்துச் சொனார்.

தொடர்ந்து அவர் சொன்னதால், எனது மகன் இப்போது மீண்டும் பள்ளிக்கு செல்கிறார். என் மகனும் படிப்பின் அருமை உணர்ந்து, ஆர்வத்துடன் படிக்கிறார். எக்காரணத்தை கொண்டும் நிறுத்தி விடாமல், தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவோம். இதற்கு காரணமாக இருந்த ப்ரியதர்ஷினிக்கு ரொம்ப நன்றி.'' என்கிறார் பானுமதி.

ஆசிரியர் தொடங்கி அதிகாரிகள் வரை பாராட்டு

மாணவி ப்ரியதர்ஷினி

பட மூலாதாரம், Priyadharshini

படக்குறிப்பு, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு

திருவாரூ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், கல்வி திட்ட இயக்குநர் சுதன், இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத் உள்ளிட்ட பலரும் மாணவி ப்ரியதர்ஷினியை பாராட்டியுள்ளனர்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம் பகவத் பிபிசி தமிழிடம் கூறுகையில், "பள்ளி மாணவியாக இருந்து கொண்டு, படிக்க முடியாமல் வேலைக்கு செல்லும் மாணவர்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளி செல்ல வழி வகுத்த ப்ரியதர்ஷினியின் பணி பாராட்டத் தக்கது. முன்மாதிரி மாணவியாக உள்ள அவரை பாராட்டி, ஊக்கப்படுத்தினோம்.'' என்றார்.

காணொளிக் குறிப்பு, திருவாரூர் மாவட்ட கிராமத்து சிறுவர்களின் குறும்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிற செய்திகள்: