விழுப்புரத்தில் விவசாயி தற்கொலை - கடன் வசூலின் போது அத்துமீறுகின்றனவா நிதி நிறுவனங்கள் ?

விவசாயிகள் தற்கொலை விதிகள் நிதி வசூல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் விவசாயிகள் கடன் நெருக்கடி பிரச்னையால் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக உள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனத்தினர் கடனை வசூலிக்கும் நடவடிக்கையாக, கடன் வாங்கியவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் அவதூறாக பேசுவதும் குண்டர்களை கொண்டு‌ மிரட்டுவதும் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

விழுப்புரம் மாவட்டம், தேவனுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன். இவருக்கு சுரேஷ், பாஸ்கரன், சின்னதுரை என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே விவசாயம் செய்து வருகின்றனர். 2018ஆம் ஆண்டு இவர்கள், செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, டிராக்டர் மற்றும் சரக்கு வண்டியை தவணை முறையில் வாங்கியுள்ளனர்.

தொடர்ந்து கடனை செலுத்தி வந்த சூழலில், கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட நிதி பிரச்சினையால் கடைசி இரண்டு தவணைகளை செலுத்த தாமதம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த லட்சுமணனின் மூன்றாவது மகன் சின்னதுரை(வயது 23) என்பவரிடம் இருந்த டிராக்டரை நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சின்னதுரை தற்கொலை செய்து கொண்டார் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், சின்னதுரை உடலுடன், தேவனுார் பிரதான சாலை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட இளம் விவசாயி சின்னதுரை
படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட இளம் விவசாயி சின்னதுரை - கோப்புப்படம்

இதுதொடர்பாக விழுப்புரம் வளத்தி காவல் நிலையத்தில், சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்கள் 4 பேர் மீது 294 B, 341, 306 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாய கடனுக்காக விவசாயிகளின் உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவதும், கடனை செலுத்த முடியாத விவசாயிகள் நிதி நிறுவன குண்டர்களால் தாக்கப்பட்டு, ஆபாச வசைச் சொற்கள் மூலம் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

இதனால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம், பாமகவினர், கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடரும்‌ விவசாயிகள் தற்கொலை

இது குறித்து உயிரிழந்த சின்னதுரை உறவினர் ராமுவிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது நடந்த சம்பவம் குறித்து தெரிவித்த அவர், "தனியார் நிதி நிறுவனத்தில் மாத தவணை முறையில் 5 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய்க்கு டிராக்டரை எடுத்தோம். இதற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை 31 ஆயிரத்து சில்லறை செலுத்தினோம். இதுமட்டுமல்லாமல் மாதம் தோறும் 5 ஆயிரம் செலுத்த வேண்டியிருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக முறையாக தவணை செலுத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு தவணைகளை அதாவது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்ட வேண்டிய இரண்டு தவணைகளை கட்ட முடியவில்லை. இதற்கு, கொரோனா மற்றும் பருவமழை பாதிப்புகளால், அதிக அளவில் நெற்பயிர்கள் நாசமாகி பெரிய இழப்பு ஏற்பட்டதே காரணம். இழப்பு ஏற்படவில்லை என்றால் தவணையைக் கட்டியிருப்போம்" என்றார் அவர்.

மேலும், "கடந்த மார்ச் 1ஆம் தேதி தவணை செலுத்த வேண்டிய நாள் என்பதால், அதற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே நிதி நிறுவனத்திலிருந்து‌ தவணைத் தொகையை கேட்டனர். அப்போது பணத்தை தயார்‌ செய்துவிட்டோம் மார்ச் 1ஆம் தேதியன்று செலுத்துகிறோம் என்று தெரிவித்தோம். அதற்கேற்ப மார்ச் 1ஆம் தேதி அடுத்து பணத்தை செலுத்த தாமதம் என்று கூறி டிராக்டரை பறிமுதல் செய்ய நிலத்திற்கு நிதி நிறுவன ஊழியர்கள் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களிடம் கையிருப்பில் பணம் உள்ளது. அதை வங்கியில் செலுத்த வேண்டும் என்று கூறியபோது, அதனை ஏற்க மறுத்து தம்பி சின்னதுரையிடம் இருந்த வண்டியை பறிமுதல் செய்ய முயற்சித்தனர். தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை

பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு வருகின்றனர். ஒரு மணி நேரம் அவகாசம் கொடுங்கள் என்று சின்னதுரை அவர்களிடம் கெஞ்சி வலியுறுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்த நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரை சாவி இல்லாமலே மோட்டாரில் ஸ்கூரு டிரைவர் மூலமாக வண்டியை இயக்கி எடுத்துச் செய்தனர். இதனால் மனமுடைந்த சின்னதுரை, அன்று பிற்பகல் நிலத்தில் குழந்தைக்கு தொட்டில் கட்டி பயன்படுத்தி வந்த புடைவையை எடுத்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்," என்று ராமு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இதே காரணத்திற்காக கடந்த 2018ல் கடலூர் மற்றும் நாகப்பட்டினம், 2019ல் நெல்லையிலும், 2021ல் கரூர், காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?

இதுகுறித்து சட்ட நிபுணர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் கூறுகையில், "விவசாயிகள் கடனாக பெற்ற வண்டியை தன்னிச்சையாக பறிமுதல் செய்யும் உரிமை எந்த நிதி நிறுவனத்திற்கும் கிடையாது. கடன் பெற்ற நபர்‌ முறையாக கடனை செலுத்தி முடியாத போது அதனை பெற்ற நடுவர் மன்றம் மூலமாக அணுகுவோம் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருக்கும். Arbitaration என்று அழைக்கப்படும் நடுவர் மன்றம் சட்டப்படி இயங்கக்கூடிய ஒரு அமைப்பாகும்.

அதன்படி நடுவர் மன்றம் மூலமாக மட்டுமே தனியார் நிதி நிறுவனம் கடன் வாங்கிய நபரை அணுக வேண்டும். அப்படி நடுவர் மன்றத்தை அணுகும் போது, கடன் பெற்ற நபரை அழைத்து விசாரணை செய்வார்கள். அப்போது அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடுவார்கள். இந்த முறையை மட்டுமே பின்பற்ற‌ வேண்டும்," என்றார் அவர்.

"தனியார் நிதி நிறுவனம் நடுவர்‌ மன்றத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபருக்கு நீங்கள் உரிய பணம் செலுத்தாத காரணத்தினால் உங்களுடைய கடனை ரத்து செய்து அனைத்து தொகையையும் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தும்படி வலியுறுத்தி கடிதம் கொடுத்திருக்க வேண்டும். கடிதம் கொடுக்காமல் நடுவர் மன்றத்திற்கு செல்ல முடியாது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடன் வழங்கும் போது, அதை சட்ட ரீதியாக மட்டுமே அணுக வேண்டும். இவ்வாறு செய்யாமல் வாகனத்தை எடுத்து செல்வது சட்டத்திற்கு புறம்பானது."

"இப்படி சட்டத்திற்கு புறம்பாக அடியாட்களை வைத்து மிரட்டி, தரக்குறைவாக பேசும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் விவசாயி மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப் படுகின்றனர். இப்படி தன்னிச்சையாக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்," என வழக்கறிஞர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாயிகள் தற்கொலை

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரா.கலியமூர்த்தியிடம் பிபிசி பேசியது. அப்போது அவர் கூறுகையில், "ஆரம்பத்தில் வறட்சி காலம் மற்றும் கொரோனா சூழல் காரணமாக கடனை தள்ளி வைக்க அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம். அந்த சமயத்தில் பயிரின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு விலைவாசி உயர்ந்தாலும், விவசாயத்தின்‌ விளை பொருட்களின் விலை‌ உயரவில்லை. இதற்காக விளை பொருட்களின் விலையை இரண்டு மடங்காக உயர்த்த வலியுறுத்தினோம்.‌

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுவாகவே விவசாயிகளுக்கு விவசாயத்தில் லாபம் இருப்பதில்லை. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்துள்ளனர். இப்படி லாபம் இல்லாமல் கடன் கட்ட முடியாமல் போகிறது. இந்த சூழலில் குண்டர்களை கொண்டு விவசாயிகளை மிரட்டும் போது அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை ஆளாகின்றனர். அப்படித்தான் இந்த விவகாரத்திலும் நடைபெற்றுள்ளது," என்கிறார் அவர்.

"இது முதல் சம்பவமில்லை, தமிழகத்தில் விவசாயிகள் தொடர்ச்சியாக இப்படி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் தடுப்பதற்கு முதலில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசாங்கம் நிதி நிறுவனத்திடம் கடுமையான நடவடிக்கைளை பின்பற்றக்கூடாது என்று அறிவித்துள்ளனர்.‌ ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள் அவதூறாக பேசுவது, குண்டர்களை வைத்து மிரட்டுவது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையை முழுமையாக நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாய‌ சங்கத்தின் கோரிக்கை," என்று ரா.கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: