நெடுவாசல் போராட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகும்: அச்சம் தொடர்வதாக கிராம மக்கள் சொல்வது ஏன் ?- கள நிலவரத்தை சொல்லும் விரிவான கட்டுரை

நெடுவாசல் போராட்டம் - 2017

பட மூலாதாரம், Neduvasal protest committee

படக்குறிப்பு, 2017ம் ஆண்டு நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டாலும், அச்சம் தொடர்கிறது. அறிவித்தபடி, நெடுவாசலைச் சுற்றியுள்ள எண்ணெய் கிணறுகளை இன்னும் அகற்றவில்ல என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஏற்கனவே அமைக்கப்பட்ட எண்ணெய் கிணறுகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவிக்கிறார்.

இந்தியா முழுவதும் 31 இடங்களில் நீர்ம கரிம எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) இருப்பதாக கடந்த 2017ம் ஆண்டு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் பகுதியை மையப்படுத்தி, ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகத்தின் ஜெம் நிறுவனத்திற்கு இந்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி அனுமதி அளித்தது.

இதை அறிந்ததும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2017 பிப்ரவரி 16ம் தேதியில் இருந்து நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அப்பகுதி பெரியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைக் கொண்ட போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக 22 நாட்களும், 2வது கட்டமாக 174 நாட்களும் நெடுவாசல் போராட்டம் நடைபெற்றது.

கவனம் ஈர்த்த போராட்டம்

நெடுவாசல் போராட்டம்

பட மூலாதாரம், Neduvasal protest committee

படக்குறிப்பு, 2017ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மக்கள்

நெடுவாசல் மட்டுமின்றி ஏற்கனவே ஓ.என்.ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டிருந்த, வடகாடு, நல்லாண்டார் கொல்லை, வானக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமத்தினரும் போராட்டம் நடத்தினர்.

இதில், டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், நாட்டுப்புறக் கலைஞர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நெடுவாசலுக்கு வருகை தந்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தொடர்ச்சியாகவும் தன்னெழுச்சியாகவும் நடத்தப்பட்ட நெடுவாசல் போராட்டம் இந்திய அளவில் உற்று நோக்கப்பட்டது. குறிப்பாக, மெழுகுவர்த்தி ஏந்துதல், ஏர்க் கலப்பைகளுடன் போராட்டம், குளத்தில் இறங்குதல் என பல்வேறு வடிவத்தில் போராட்டம் நடைபெற்றது.

திருமண நிகழ்வுகளுக்கு வரவேற்பது போல், போராட்டக் களத்திற்கு வந்தவர்களை, கிராம மக்கள் வெற்றிலைப் பாக்கு, பழங்கள், சந்தனம் கொடுத்து வரவேற்றனர். போராட்ட களத்திற்கு அருகில் உணவு சமைக்கப்பட்டு, கிராம மக்களால் பரிமாறப்பட்டது. ஒவ்வொரு நாளும் போராட்டத்திற்கு ஆதரவளிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவாதம்

தொடர் போராட்டத்தால், மாவட்ட ஆட்சியர், ''2017 டிசம்பருக்குள், நெடுவாசலைச் சுற்றி ஓ.என்.ஜி.சி அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறுகளும் அகற்றப்படும். விவசாயிகளிடம் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.'' இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

அப்போது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து எண்ணெய் எடுப்பு பணிகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் போராட்டக்குழுவினரால் நிறைவேற்றப்பட்டன.

ஆனாலும், ஹைட் ரோ கார்பன் எடுப்பு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டிற்கு மேலாகியும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியதால், நெடுவாசலை சுற்றியுள்ள விவசாயிகள், கிராம மக்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகினர்.

மக்களின் தொடர் எதிர்ப்பால், நெடுவாசல் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்தது. மாற்று இடம் வழங்கக்கோரி மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு ஜெம் நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

திட்டம் கைவிடப்பட்டது - அச்சம் தொடர்கிறது

நெடுவாசல் போராட்டம் - 2017

பட மூலாதாரம், M Duraimurugan

இந்நிலையில், தற்போது நெடுவாசல் நிலை குறித்து கள நிலவரத்தை அறிய முயன்றோம். நெடுவாசலில் ''ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டம் கைவிடப்பட்டாலும், அச்சம் தொடர்கிறது. அரசு அறிவித்தபடி, நெடுவாசலைச் சுற்றியுள்ள எண்ணெய் கிணறுகளை மூடவில்லை'' என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இது குறித்து நெடுவாசல் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ராம்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''காவிரி டெல்டா பகுதியாக இருந்தாலும், காவிரி ஆற்றின் நேரடிப் பாசனம் என்பது இந்த பகுதியில் குறைவு. கிராம மக்களின் பல்லாண்டு கால, தொடர் உழைப்பால், செழுமையான ஒரு பகுதியாக வைத்துள்ளனர்.

நெடுவாசலைச் சுற்றியுள்ள கிராமங்களில் 7 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டன. நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்ட இடத்தில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டன.

எங்கள் கிராமத்து இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் எண்ணெய் எடுப்பு நிறுவனங்களில் பணியாற்றுவதால், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை மக்களுக்கு உணர்த்தினர்.

ஆகையால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தாலும் அதை எடுக்கும் முறையாலும் பெரும் பாதிப்பு ஏற்படும். இதைத் தடுத்து, முன்னோர்கள் உருவாக்கிய வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினோம். அனைத்து தரப்பும் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்தனர்.

ஒப்பந்தம் செய்த, தனியார் நிறுவனம் திட்டத்தை கைவிட்டது. ஆனால், அப்போது உறுதியளித்தபடி, சுற்றியுள்ள எண்ணெய் கிணறுகள் தற்போது வரை மூடப்படவில்லை. இதனால், எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை தொடங்கி விடுவார்களோ என்கிற அச்சமாக இருக்கிறது.''என்கிறார்.

நிலம் தர மறுத்த விவசாயி

நெடுவாசல் போராட்டம் - 2017

பட மூலாதாரம், M Duraimurugan

படக்குறிப்பு, ஓ.என்.சி.ஜி எண்ணெய் கிணறு

ஓ.என்.சி.ஜி எண்ணெய் எடுப்பு பணிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க நெடுவாசல் கிராமத்து விவசாயி சுப்பிரமணியம் நிலத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நிலத்தை கொடுக்க விவசாயி சுப்பிரமணியன் மற்றும் குடும்பத்தினர் கடைசி வரை மறுத்து விட்டனர். விவசாயி சுப்பிரமணியன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

அவரது மகன் இளையராஜா பிபிசி தமிழிடம் கூறுகையில், ''ஹைட்ரோ கார்பன் எடுப்பு பணிக்காக எங்களது அனுமதி இல்லாமலேயே நிலத்தை அளந்து, மார்க் செய்தனர். தொடர்ந்து நிலத்தை கொடுக்கச் சொல்லி பல்வேறு வகையிலும் அழுத்தம் கொடுத்தனர்.

இந்த மண்ணையும் மக்களையும் பாதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற நிலத்தை தர மாட்டோம். எங்களது குடும்பத்தில் உள்ள 11 பேரை கொன்று விட்டு, நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அப்பா உறுதியாக இருந்து விட்டார்.

நெடுவாசலில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று , திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் தான் நிம்மதியாக பெருமூச்சு விட்டோம். ஆனாலும், ஏற்கனவே கையகப்படுத்திய மற்றவர்களின் நிலங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருக்கின்றன.'' என்கிறார் இளையராஜா.

அகற்றப்படாத எண்ணெய் கிணறுகள்

நெடுவாசல் போராட்டம் - 2017

பட மூலாதாரம், M Duraimurugan

படக்குறிப்பு, எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதி

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள எண்ணெய் எடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள, அனைத்து கிணறுகளையும் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சேந்தங்குடி தங்க கண்ணன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''நெடுவாசலைச் சுற்றி, வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, வானக்கன் காடு,கோட்டைக்காடு, கறம்பக்குடி, முள்ளங்குறிச்சி ஆகிய 7 இடங்களில் இப்போதும் ஓ.என்.சி.ஜி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. நெடுவாசல் போராட்டத்தைத் தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இது விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ஆனால், வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்து விடக் கூடாது. நெடுவாசலை சுற்றி மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து எண்ணெய் எடுப்பு பணிகளையும் நிறுத்த வேண்டும். இந்த பகுதியின் வளத்தை பாதுகாக்க வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில், அனைத்து எண்ணெய் கிணறுகளையும் மூட வேண்டும்.'' என்கிறார்.

அனைத்து கிணறுகளும் மூடப்படும் - அமைச்சர் உறுதி

நெடுவாசல் போராட்டம் - 2017

பட மூலாதாரம், Siva.Vee.Meyyanathan

படக்குறிப்பு, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

நெடுவாசலைச் சுற்றியுள்ள அனைத்து எண்ணெய் கிணறுகளும் மூடப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை அமைச்சரும் நெடுவாசல் போராட்ட களத்தில் பங்கேற்றவருமான சிவ.வீ.மெய்யநாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நெடுவாசல் மக்களோடு நானும் போராட்ட்டத்தில் பங்கேற்றிருந்தேன். ஆகையால், மக்களின் கோரிக்கைகளை முழுமையாக அறிந்துள்ளேன். இங்கு ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டத்தை ஓ.என்.சி.ஜி நிறுவனம் கைவிட்டு விட்டது. இப்பகுதியில், ஓ.என்.சி.ஜி ஏற்கனவே நிலம் கையகப்படுத்தி, அமைத்த எண்ணெய் கிணறுகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கோட்டைக்காடு, முள்ளங்குறிச்சி பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பில்லாத வகையில், எண்ணெய் கிணறுகளை அகற்ற தேவைப்பட்டால், ஓ.என்.சி.ஜியின் தொழில்நுட்ப உதவியும் கோரப்படும். ஆகையால், அறிவிக்கப்பட்டபடி, அனைத்து எண்ணெய் கிணறுகளும் அகற்றப்படும். மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

நிபுணர் குழு ஆய்வும் அறிக்கையும்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் இந்துமதி எம்.நம்பி, வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் மகேஸ்வரி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் செல்வம், பொதுப்பணித்துறை மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, நீர்வள ஆதார அமைப்பின் நிர்வாக பொறியாளர் ராஜா உள்ளிட்டோர் குழு உறுப்பினர்களாகவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் குழு ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்ட்னர்.

இந்த குழு பல்வேறு காவிரி டெல்டா மாவட்டங்களில், பல்வேறு கட்டமாக கள ஆய்வு செய்தது. குறிப்பாக, ஹைட்ரோ கார்பன் எடுக்க உத்தேசிக்கப்பட்ட இடங்களின் மண், நீர் வளம், திட்டம் வந்தால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினர். ஆய்வு அறிக்கையை கடந்த மாதம் தமிழ்நாடு அரசிடம் அளித்தனர்.

ஆய்வுக்குழு தலைவர் இஸ்மாயில் கூறுகையில், ''நான்கு மாத கள ஆய்வின் 106 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர், காற்றில் ஏற்படும் பாதிப்புகள். மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து அறிவியல் ரீதியிலான ஆதாரங்களுடன் அறிக்கை அளித்துள்ளோம்'' என்றார்.

2017ல் நடைபெற்ற முக்கிய போராட்டங்கள்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி 2017ம் ஆண்டு ஜனவரி மாதம், சென்னை மெரினா கடற்கரை , திருச்சி, மதுரை, கோவை என பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போதும் மீத்தேன் எதிர்ப்பு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டத்தை ரத்துச் செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசலில் கிராம மக்கள், விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்தனர். இதையடுத்து இந்த திட்டமும் கைவிடப்பட்டது. தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

கதிராமங்கலத்திலும் பெண்கள் பெருமளவு பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் கடந்த 2017ம் ஆண்டு கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டு மே 19ம் தேதி முதல் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கதிராமங்கலம் அய்யனார் கோயில் வளாகத்தில் , சற்றேக்குறைய ஓராண்டு காலம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். குறிப்பாக பெண்கள் பெருமளவு பங்கேற்றனர்.

இப்பகுதியில் அமைக்கப்பட்ட ஓ.என்.சி.ஜி எண்ணெய்க் கிணறுகளால், நிலத்தடி நீர் மட்டம் குறைவு, விளை நிலம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக பொது மக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டினர். நெடுவாசல் போலவே அனைத்து கட்சியினர், மாணவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

இதே ஆண்டு தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை முன் வைத்து, பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: