அனல் மின் நிலைய விரிவாக்கத்தை எண்ணூர் மக்கள் எதிர்ப்பது ஏன்? “சென்னைக்கு மின்சாரம், வடசென்னைக்கு நஞ்சா?”

எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்கத் திட்டம்

பட மூலாதாரம், Raju K, CCAG

    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

"என் அம்மாவுடைய உடலில் முன்பு இந்தப் பிரச்னைகள் இருக்கவில்லை. நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது தான் இது தொடங்கியது. அதற்குக் காரணம் வட சென்னையிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசடைந்த காற்று தான்," என்கிறார் எம்.எஸ்.டபுள்யூ முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் சந்தியா.

அவருடைய அம்மா நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால் அவதியுற்று வருகிறார். எண்ணூரில் வரவிருக்கும் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை எதிர்ப்பவர்களில் மாணவி சந்தியாவும் ஒருவர்.

"ஏற்கெனவே சிவப்புப் பட்டியலிலுள்ள 34 தொழிற்சாலைகள் எங்கள் பகுதியில் செயல்படுகின்றன. அவையே கழிவுகளை வெளியேற்றுவதையும் கட்டுபாடின்றி மாசு ஏற்படுத்தும் வாயுக்களை வெளியேற்றுவதையும் தான் செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பகுதியில் இன்னோர் அனல் மின் நிலையத்தை எதற்காக அமைக்கவேண்டும்?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

சந்தியாவைப் போலவே வட சென்னைக்குள் அடுத்தடுத்து நுழைந்த தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பின்விளைவுகளால் தங்கள் வளங்களை இழந்துவிட்டதாகக் கூறும் மீனவர்களும் இதை எதிர்க்கிறார்கள்.

ஆனால், மக்களின் கருத்து பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு மத்திய அரசு அனுமதியும் கிடைத்தால், மக்களின் கருத்துக்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று தமிழ்நாடு அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"1970-களில் இங்கு ஓர் அனல்மின் நிலையம் வந்தது. அது கொட்டிய சாம்பல் கழிவுகளால் காற்று மாசுபாடு ஏற்பட்டது. ஆனால், அப்போதிருந்த அதிக மரங்களால் அதுவொரு பிரச்னையாகத் தெரியவில்லை. பிறகு 1990-களுக்குப் பிறகு, அதிகரித்த தொழிற்சாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்களால், இருந்த மரங்களை, வளங்களை நாங்கள் இழந்தோம். அதனால் காற்று மாசடைந்தது மட்டுமின்றி கொற்றலை ஆறும் சீரழியத் தொடங்கியது.

கழிவு நீர் அதிகமாக ஆற்றில் திறந்துவிடப்படுவது, காற்றில் மாசுபாடு அதிகரிப்பது, திறந்தவெளிகளில் கொட்டிக் கிடக்கும் சாம்பல் கழிவுகள் என்று எண்ணூர் பகுதியே தலைகீழாக மாறிவிட்டது.

இப்படியிருக்கும்போது, இன்னோர் அனல் மின் நிலையத்தைக் கொண்டுவர அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது," என்கிறார் எண்ணூர்-காட்டுக்குப்பம் மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எல்.சீனிவாசன்.

வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம்

பட மூலாதாரம், CCAG

ஒரு நிலம் தன் ஆரோக்கியமான அமைப்பை இழக்கும்போது, அதைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வியலும் வரலாறாகி விடுகிறது. அப்படி வரலாறாகிப் போன நினைவுகளைச் சுமந்திருக்கும் எண்ணூர் மக்கள், "ஏற்கெனவே அன்றாடப் போராட்டத்தில் சிக்கியிருக்கும் தங்களுடைய வாழ்வை மேலும் மோசமாக்குவதாகவே," தற்போதைய அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்

40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த 450 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் நிலையம் 2017-ஆம் ஆண்டில் மூடப்பட்டது. பிறகு அதே பகுதியில், 600 மெகாவாட் திறனுடைய அனல் மின் நிலையத்தின் 2 உற்பத்தி மையங்களை அமைக்கத் திட்டமிட்டது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO).

2009-ஆம் ஆண்டில் இதற்காகத் திட்டமிடப்பட்டு, 10 ஆண்டு காலகட்டத்திற்கான அனுமதியை இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியது. ஆனால், அந்த 10 ஆண்டுகளில் வெறும் 17% பணிகளே முடிவடைந்திருந்தன. அதனால், கூடுதலாக நான்கு ஆண்டுகள் அனுமதியை நீட்டிக்குமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோரியது. அதற்கு, மக்களின் கருத்துகளைக் கேட்காமேலேயே, 2019 டிசம்பர் மாதத்தில் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தான் வழங்கிய சூழலியல் அனுமதியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

வடசென்னை அனல் மின் நிலையம்

பட மூலாதாரம், Subagunam Kannan

படக்குறிப்பு, தற்போது செயல்பாட்டில் இருக்கும் வடசென்னை அனல் மின் நிலையம்

இந்நிலையில், அதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீட்டிக்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்ததோடு, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தத் திட்டம் வரவுள்ள பகுதிக்கு மிகவும் அருகிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 6,877 வீடுகள் கட்டப்படவுள்ளன. ஒரு குடும்பத்திற்கு ஐந்து பேர் என்ற கணக்கின் அடிப்படையில் இந்த மாற்று குடியிருப்புகளைக் கட்டமைப்பதாக, இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால், சுமார் 34,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கான மாற்று குடியிருப்புகளாக இது அமையும். அதற்கான பணிகளும் ஓரளவுக்கு முடிந்துவிட்டன.

அந்தக் குடியிருப்புகளின் கட்டுமானம் முடிந்து, அங்கு மக்கள் வாழத் தொடங்கும் நேரத்தில் அதற்கு வெகு அருகிலேயே வரப்போகும் இந்த அனல் மின் நிலைய விரிவாக்கத்தால், அங்குக் குடியேறும் மக்களுடைய உடல்நிலைக்குத் தீங்கு ஏற்படும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் எச்சரித்தது.

2018-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதியன்று, தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத்தினுடைய தொழில்நுட்ப கமிட்டி கூடியபோது, அதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு கட்டுமானம்
படக்குறிப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமான திட்டத்தின் வரைபடம்

அப்போது, "எண்ணூர் - திருவொற்றியூர் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளை அமைக்க உள்ளது. அந்த இடத்திற்கு மறுபுறத்தில் எண்ணூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. அதற்கான விரிவாக்கத் திட்டம் ஒன்றும் செயலாக்கத்தில் இருப்பதை தொழில்நுட்ப கமிட்டி தெரிந்துகொண்டது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மின் வாரியத்தின் மத்திய அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் விரிவாக்கத் திட்டத்திற்கான நிலப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன," என்று கமிட்டி உறுப்பினர்கள் கூறினர்.

அதோடு, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதியன்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள் இந்த அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தால் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அதே ஆண்டின் மே மாதம் 7-ஆம் தேதியன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மாசுக் கட்டுபாடு வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்காக நில வகைப்பாட்டை மாற்றுவது மற்றும் பெரியளவிலான மக்களை அங்குக் குடியேற்றுவது, அனல் மின் நிலைய திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதில் பிரச்னைகளைக் கொண்டு வரும் என்று குறிப்பிட்டதோடு, இதைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, நில வகைப்பாட்டை மாற்றுவது குறித்த முடிவை எடுக்குமாறு கூறியுள்ளார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்
படக்குறிப்பு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் எச்சரிக்கை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனுப்பிய கடிதம் ஆகியவற்றின் விவரங்கள் மாசுக்கட்டுப்பாடு வாரிய தொழில்நுட்ப கமிட்டியின் கூட்ட விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்திற்கான நிலத்தின் வகைப்பாட்டை அபாயகரமான மண்டலம் என்பதிலிருந்து குடியிருப்புகளுக்கான மண்டலம் என மாற்றி வகைப்படுத்துவதற்கான கூட்டம் 2018-ஆம் ஆண்டு நவம்பர் 14-அம் தேதியன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிர்வாக இயக்குநருடைய கடிதம் மற்றும் மேற்கூறிய தொழில்நுட்ப கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைந்திருக்கும் எர்ணாவூர் என்ற பகுதியில், 660 மெகாவாட் உற்பத்திக்கான நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

"சென்னைக்கு மின்சாரம்... வடசென்னைக்கு நஞ்சா?"

நாளொன்றுக்கு 5479.45 டன் நிலக்கரியை எரித்து, 17 கோடி லிட்டர் கடல் நீரை உறிஞ்சி, 660 மெகாவாட் மின்சாரம் இந்தப் புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும். இந்தச் செயல்பாட்டின்போது, 1972 டன் சாம்பல் கழிவு உற்பத்தியாகும்.

ஏற்கெனவே எண்ணூரில் 3300 மெகாவாட் அளவிலான 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வரும்போது, மேலும் புதிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள் எதற்காக அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வடசென்னை அனல் மின் நிலையம்

பட மூலாதாரம், Subagunam Kannan

படக்குறிப்பு, செயல்பாட்டில் இருக்கும் வடசென்னை அனல் மின் நிலையம்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இப்போதுள்ள அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி மையங்கள் 50 சதவிகிதத்திற்கும் மேலான நாட்களில் வடசென்னையின் காற்று மாசுபாட்டிற்குக் காரணமாக அமைந்தன. அதுவே இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், கூடுதலாக அனல் மின் நிலையங்களை இங்குக் கொண்டு வருவது எந்தவிதத்தில் சரி என்ற கேள்வியை எண்ணூர் மக்கள் எழுப்புகின்றனர்.

நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலைய புகைப்போக்கியில் கந்தக டையாக்சைட், கரியமில மோனாக்சைட், நைட்ரஜன் டையாக்சைட், பாதரசம், ஈயம் போன்ற வாயுக்கள் வெளியாகும் என்று அமெரிக்காவை சேர்ந்த யூனியன் ஆஃப் கன்சர்ன்ட் சயின்டின்ஸ்ட் (Union of Concerned Scientist) என்ற விஞ்ஞானிகள் அமைப்பு கூறியுள்ளது.

மேலும் காற்று மாசுபாட்டிற்கான மருத்துவர்கள் (Doctors for Air Pollution) என்ற அமைப்பைச் சேர்ந்த விஸ்வஜா சம்பத் இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்னைகள் பற்றிப் பேசியபோது, "நிலக்கரி அனல் மின் நிலையத்திலிருந்து வெளியாகும் சாம்பல் தூசுகளில் இருந்து காற்றில் கலக்கும் நுண்துகள்கள், நுரையீரலின் உட்பகுதி வரை சென்று ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.

அதோடு, குழந்தைகள் எடை குறைபாட்டோடு பிறப்பது, குறைப் பிரசவம் நிகழ்வது, குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் தடைகள் ஏற்படுவது எனப் பல பாதிப்புகளை இந்த விஷ வாயுக்கள் ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கிறார்.

வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம்

பட மூலாதாரம், CCAG

"சாம்பல் கழிவுகளின் வழியாகவும் புகைப்போக்கி வழியாகவும், நிலக்கரியை எரிக்கும்போது அதிலிருந்து வாயுக்களாக வெளியாகும். பாதரசம், ஈயம், ஆர்சனிக், காட்மியம் போன்ற விஷ உலோகங்கள், சிறுநீரகம், மூளை, நுரையீரல், கண்கள், தோல், இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்," என்று எச்சரிக்கிறார்.

மேலும், "வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் சூடான நீரை அப்படியே கழிமுகப் பகுதியில் திறந்துவிடுவதால், மீன் வளம் பெருமளவில் குறைகிறது. இனப்பெருக்கத்திற்காக உள்ளே வரக்கூடிய மீன்கள் அந்த வெப்பநீரில் உயிரிழந்துவிடுகின்றன. அவற்றுக்குத் தேவையான தாவர வளம் அங்கு இருப்பதில்லை.

இதனால், கழிமுகப் பகுதியிலும் கடலோர அலையாத்திக் காடுகளிலும் இறால், நண்டு சேகரிக்கச் செல்லும் மீனவப் பெண்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் வெந்நீர், கடல்வாழ் உயிரினங்களையும் அவற்றையே நம்பியிருக்கக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் மோசமாகப் பாதிக்கின்றது.

ஆற்றில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, வெந்நீர் வெளியேற்றத்தால் மீனவர்களுக்குப் பலமுறை வெந்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. எங்களையும் எங்கள் நிலத்தின் வளங்களையும் அழிக்கும் திட்டத்தால், என்ன நன்மையை நாங்கள் கண்டுவிட முடியும்?" என்று கேள்வியெழுப்புகிறார் சீனிவாசன்.

கொற்றலை ஆற்றின் வெள்ள வடிகால் பகுதி

பட மூலாதாரம், Subagunam Kannan

படக்குறிப்பு, அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் படர்ந்திருக்கும் கொற்றலை ஆற்றின் வெள்ள வடிகால் பகுதி

மேலும், வடசென்னை அனல் மின் நிலையத்திற்குச் சொந்தமான சாம்பல் கிடங்குக்கு அருகிலுள்ள செப்பாக்கம் கிராமத்தில் வாழும் மக்கள், சென்னைக்கு மின்சாரம் வழங்க, நாங்கள் விஷத்தை சுவாசிக்க வேண்டுமா என்று கேள்வியெழுப்புகிறார்கள். இதற்கு எதிராக எண்ணூர் மக்கள் வெளியிட்ட அறிக்கையில், "எங்களுடைய தாய் பூமியின் மண்ணில் சாம்பலைக் கொட்டித்தான் எங்களை அடக்கம் செய்வார்கள்," என்று செப்பாக்கம் கிராமவாசிகள் தங்களுடைய நிலையைக் குறிப்பிட்டுள்ளனர்.

அனல் மின் நிலையத்தினுள் புதைந்துபோகும் 'பட்டறை ஏரி'

எண்ணூரில் அருகருகே இரண்டு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளன. 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த அனல் மின் நிலையம் இருந்த இடத்தில் அதற்கு மாற்றாக 660 மெகாவாட் உற்பத்தி அளவில் ஒன்று அமைக்கப்படும். அதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒளிப்படத்தில் அது திட்டமிடப்பட்டுள்ள பகுதி மஞ்சள் நிறத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

அதுபோக, தற்போது தமிழ்நாடு மின் வாரியம் நிறுவுவதற்கு முயன்று கொண்டிருக்கும் 660 மெகாவாட் உற்பத்திக்கான அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், அதற்கு அருகிலேயே, சிவப்பு நிறத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்கத் திட்டம்
படக்குறிப்பு, "பட்டறை ஏரி" வெள்ளை நிறத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது

இந்த இரண்டு திட்டங்களுக்குமான நிலப்பகுதிக்கு அருகிலேயே இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் பகுதியில் தான், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 6,800 கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இவைபோக, வெள்ளை நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் 'பட்டறை ஏரி' என்ற பெயரில் ஓர் ஏரி அமைந்துள்ளதாக வருவாய்த்துறையின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

வருவாய்த்துறையின் நில அளவை மற்றும் பதிவேடுகள் பிரிவிலுள்ள, அம்பத்தூர் தாலுகாவின் நில அளவை ஆவணங்களின் படி, எர்ணாவூர் கிராமத்தில் இந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதியின் சர்வே எண்ணில் (20, 57)'பட்டறை ஏரி' அமைந்துள்ளது.

பட்டறை ஏரி
படக்குறிப்பு, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டப் பணிகள் நடைபெறும் பகுதியில் பட்டறை ஏரி அமைந்திருப்பதைக் காட்டும் வருவாய்த் துறை பதிவேடு

ஆனால், அனல் மின் நிலையத் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் அருகிலுள்ள நீர்நிலையாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, திட்ட நிலப்பரப்பிலிருந்து மேற்கே 575 மீட்டர் தொலைவிலுள்ள கொற்றலையாறு மட்டுமே.

"புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வரும்போது அனல் மின் நிலையங்கள் குறையும்"

சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்த துர்கா, "மூன்று துறைமுகங்கள், இரண்டு அனல் மின் நிலையங்கள், ஒரு பெரிய குப்பைக் கிடங்கு உட்பட இன்னும் பல அபாயகரமான தொழிற்சாலைகள் வடசென்னையில் இருக்கின்றன. ஏற்கெனவே இந்தப் பகுதி விஷத்தன்மை மிகுந்துள்ளது.

PM2.5 அளவிலான நுண்துகள்கள், சாம்பல் தூசி, இன்னும் பல நச்சு வாயுக்கள் ஆகியவற்றை ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனல் மின் நிலையங்கள் வெளியேற்றி வருகின்றன. ஆற்றில் சாம்பல் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு, ஆற்று நீர் முழுக்கச் சாம்பலாக இருக்கிறது.

எங்களுடைய ஆற்றை, நிலத்தை, காற்றை சுத்தம் செய்யுங்கள் என்று நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்து வரும் சூழல் தான் நிலவுகிறது. இருப்பினும், அதைச் செய்யாமல் மீண்டும் அதே போன்றதோர் ஆபத்தான திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்," என்று கூறினார்.

அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ள பகுதிக்கு அருகிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பு கட்டுமானம் நடைபெறுவது மற்றும் வருவாய்த்துறையின் நில பதிவேடுகளின்படி அனல் மின் நிலையத் திட்டம் வரவுள்ள பகுதியில் அமைந்துள்ள பட்டறை ஏரி குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கேட்டோம்.

அவர், "எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டம் மட்டுமே நடைபெறுகிறது. ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் காணொளியாகவும் கூட்ட நிரலாகவும் பதிவு செய்யப்பட்டு இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்தால் மட்டுமே, மக்களுடைய கருத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்
படக்குறிப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்துதான் எந்த முடிவையும் தமிழ்நாடு அரசால் எடுக்கமுடியும். அதுவரை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் எந்த முடிவையும் எடுக்கமுடியாது," என்று கூறினார்.

மேலும், தொடர்ச்சியாக அனல் மின் நிலையங்களைக் கைவிடுவது குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் சூழலில், அனல் மின் நிலையத் திட்டத்திற்கான வேலைகள் அடுத்தடுத்து நடைபெறுகின்றனவே என்று கேட்டபோது, "இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதற்காக, 1,32,500 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு முதல்வரும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரும் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.

இந்த ஆண்டிலேயே 4,500 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்கள். அதன் அடிப்படையில், இப்போதைக்கு ஏற்படக்கூடிய மின்சாரப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான நடவடிக்கையாகத் தான் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

அனல் மின் நிலையங்கள், நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முழுவீச்சில் கொண்டுவரப்படும்போது, இவற்றின் செயல்பாடு குறையத் தொடங்கும்," என்று கூறினார்.

"நாங்கள் சொல்வது அவர்கள் காதில் விழாது"

எர்ணாவூரில், தற்போது 17% பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள 660 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய அனல் மின் நிலையத்தின் விரிவாக்கத் திட்டம் போக, முன்பு செயல்பாட்டில் இருந்து, 2017-ஆம் ஆண்டு மூடப்பட்ட அனல் மின் நிலையம் இருந்த இடத்தில் அதற்கு மாற்றாக 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நிலையம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம்

பட மூலாதாரம், Sriram, Vettiver Collective

படக்குறிப்பு, குடியிருப்பு கட்டுமானங்களுக்குப் பின்னணியில், வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புகைப்போக்கி

இதில், விரிவாக்கத் திட்டம் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வந்தால், அந்த ஒரு நிலையத்திலிருந்து மட்டுமே, தினசரி எரிக்கப்படும் 5479.45 டன் நிலக்கரி உட்பட இன்னும் பல்வேறு செயல்முறைகளில் இருந்து, ஓராண்டுக்கு மொத்தமாக 4.435 மில்லியன் மெட்ரிக் டன் கரிம வாயு வெளியேற்றப்படும்.

இந்நிலையில், நீண்டகால புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களைச் செயல்படுத்தும் வரை தற்காலிக தீர்வாக, "காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்துவதில் முதன்மைப் பங்கு வகிக்கும் அனல் மின் நிலையங்களை" முன்னிறுத்தி, அவற்றை மேன்மேலும் அமைப்பது நடைமுறையில் பலனளிக்கக்கூடிய முயற்சியாகத் தெரியவில்லை.

தொடர்ந்து வடசென்னை இதுபோன்ற "தொழில் வளர்ச்சி" திட்டங்களால் பாதிப்பிற்கு உள்ளாவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதுகலை மாணவி சந்தியா, "நாங்கள் சொல்வதெல்லாம் அவர்களுடைய காதில் விழாது. அப்படிக் கேட்பதாக இருந்தால், எதற்காக வடசென்னையில் இவ்வளவு அபாயகரமான தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து வைக்கவேண்டும்?

சென்னையின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவருவார்களா? அதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?" என்று கேட்கிறார்.

மேலும், "தமிழ்நாடு அரசு சமூக நீதிக்குத் தலை வணங்குகிறது என்றால், எண்ணூர் அனல் மின் நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும். இப்போதுள்ள ஆலைகள் மாசுக் கட்டுப்பாடு விதிகளுக்குக் கட்டுப்படுவதை உறுதி செய்யவேண்டும்," என்று கூறினார்.

காணொளிக் குறிப்பு, “சென்னைக்கு மின்சாரம், வடசென்னைக்கு நஞ்சா?” - கொந்தளிக்கும் தமிழ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: