சர்வதேச மகளிர் தினத்தில் 10ம் வகுப்பு படித்தவருக்கு பல்கலைக்கழக விருது: குழந்தை தொழிலாளர்களை படிக்க வைத்த ஆசிரியருக்கு அங்கீகாரம்

பெண்கள் விருது

பட மூலாதாரம், B Mariammal

    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த பெண்மணிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர். இதன்படி நடப்பாண்டிற்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் இருவர் குறித்து இப்போது பார்க்கலாம்.

அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு, குழந்தை தொழிலாளர் மீட்பு, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் சந்திரா மேரி. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் நடப்பாண்டிற்கான சாதனைப் பெண்கள் விருதிற்கு இவர் தேர்வாகியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ச.சந்திரா மேரி. கடந்த 28 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

குழந்தை திருமணங்களை தடுத்து, அவர்களுக்கு கல்வியைத் தொடரச் செய்வது. உலக கல்வி குழுமம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைப்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்கள் 44 பேர் மீட்கப்பட்டதை முக்கியமானதாக சந்திரா மேரி சொல்கிறார்.

தாக்குதல், மிரட்டல்களின் போது துணையாக மக்கள்

ஆசிரியை ச.சந்திராமேரி

பட மூலாதாரம், S Chandra mary

படக்குறிப்பு, வகுப்பில் ஆசிரியை சந்திராமேரி

இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் கூறுகையில், ``படிக்கும் மாணவிகளை பாதியில் நிறுத்தி, திருமணம் செய்து வைப்பதால், அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். நான் பணி புரியும் பள்ளி உள்ள பகுதியில் 8ம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகளை படிக்க வைக்காமல் திருமணம் செய்து வைத்தனர்.

குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தது, அவர்களின் பெற்றோர்களிடம் நேரடியாக பேசுவேன். பலர் புரிந்து கொண்டு, அவர்களாகவே திருமணத்தை நிறுத்தி விடுவார்கள். பேசியும் உடன்படாதவர்கள் குறித்து 1098 என்கிற குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொள்வேன். தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டன. அப்போது பொது மக்களே என்னைப் பாதுகாத்தனர் .``என்கிறார்,

மேலும் அவர் கூறுகையில், ``முறைசாரா கல்வி மூலம் தற்போது வரை 62 பேருக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுத்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கே சென்று கற்றுக் கொடுத்தேன்.

ஆசிரியை ச.சந்திராமேரி

பட மூலாதாரம், S Chandra mary

படக்குறிப்பு, குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பில் சந்திரா மேரி

குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் போது, பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேகரித்தேன். பெற்றோர்கள், அவர்கள் வேலை செய்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி பள்ளியில் சேர்த்தோம்.

இந்த பணிகளை தனி நபராக செய்ய நான் முனைப்பு காட்டினாலும் அரசுத் துறை அதிகாரிகள், தனியார் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பால்தான் இந்த பணிகளைத் தொடர முடிகிறது," என்கிறார் ஆசிரியை சந்திரா மேரி.

பத்தாம் வகுப்பு படித்து பலருக்கு வழிகாட்டும் பெண்

பெண்கள் விருது - மாரியம்மாள்

பட மூலாதாரம், B Mariammal

படக்குறிப்பு, பா.மாரியம்மாள்

இதேபோல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த பா.மாரியம்மாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விருது பெறுகிறார். விருது பெறும் மாரியம்மாள் 10ம் வகுப்பு படித்துள்ளார்.

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சித்துறையின் மூலம் தையல் கலை, அழகுக் கலை பயிற்சிகளைப் பெற்று, பயிற்சி பெற்ற மையத்திலேயே மற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பகுதி நேர ஆசிரியையாக உள்ளார். நேரு யுவ கேந்திராவிலும் பகுதி நேர ஆசிரியராக உள்ளார்.

சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு தையல் கலைப் பயிற்சி, செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல், மென் பொம்மை தயாரித்தல், எம்ப்பிடாய்ரி பயிற்சி உள்ளிட்டவற்றை அளித்து, அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கு வழிகாட்டி வருவதாக மாரியம்மாள் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில்,

பெண்கள் விருது - மாரியம்மாள்

பட மூலாதாரம், B Mariammal

படக்குறிப்பு, தொழில் பயிற்சி பெறும் பெண்கள்

''கிராமப்புற பெண்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கி, தன்னம்பிக்கையுடன் தொழில் முனைவோராக வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த பணிகளை செய்து வருகிறேன். என்னிடத்தில் பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்டோர் சுயமாக தையல் கடை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 720 பேர் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களில் பணியாற்றி வருவாய் ஈட்டி வருகின்றனர்.

அழகுக்கலை பயிற்சி பெற்ற 400 பேர், எம்ப்ராய்டரி பயிற்சி பெற்ற 200 பேர் என பலரும் தொழில் வாய்ப்பை பெற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். பயிற்சி பெறும் பெண்களில் 80 சதவீதத்திற்கு மேல் சுய தொழில் செய்து வருவாய் ஈட்டி வருவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.'' என்கிறார்.

சிவகாசி மாவட்ட ஆட்சியர் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 14 பேருக்கு தொழில் பயிற்சி அளித்தது நெகிழ்வான ஒன்றாக இருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் சென்னை மகளிர் மேம்பாட்டு முனையம் மூலம் ஜூம் மீட்டிங் மூலம் 40 பெண்களுக்கு காளான் வளர்ப்பு உள்ளிட்ட தொழில் பயிற்சிகளை அளித்தது உள்ளிட்டவை மறக்க முடியாத அனுபவங்கள்.

என்னுடைய தன்னம்பிக்கை, சமூக சேவைகளைப் பாராட்டி மத்திய அரசின் கவுசலாச்சார்யா - 2020 விருது உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 10ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை தொடர முடியாத எனக்கு, பாரதிதாசன் பல்கலைக்கழகம் விருது வழங்குவது ரொம்ப மகிழ்வாக இருக்கிறது. இன்னும் வேகமாக பயணிக்க வேண்டும் என்கிற ஊக்கம் வருகிறது.'' என்கிறார்.

விருதிற்கு தேர்வானது எப்படி ?

பேராசிரியர் மணிமேகலை

பட மூலாதாரம், Prof Manimegalai

படக்குறிப்பு, பேராசிரியர் மணிமேகலை

இருவரும் விருதிற்கு தேர்வாகியுள்ளது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியர் மணிமேகலை பிபிசி தமிழிடம் கூறுகையில்,

``சமூகமேம்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் 10 பேருக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், இந்த ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. விருதிற்கான தேர்வுக் குழுவின், பல்வேறு கட்ட பரிசீலனைக்கு பின்னர் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே இடைநின்ற மாணவர்கள் படிக்க வைத்த வகையில் சந்திரா மேரியும் பெண்கள் மேம்பாட்டுப் பணிகளுக்காக மாரியம்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருவரின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அளிக்கப்படுகிறது.`` என்கிறார் மணிமேகலை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: