யுக்ரேன் - ரஷ்யா மோதல்: இதுவரை உண்மையில் எத்தனை ரஷ்ய படையினர் கொல்லப்பட்டனர்?

இன்று யுக்ரேன் - ரஷ்யா மோதல் தொடர்பாக நடந்த முக்கிய செய்திகளை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்கிறோம்.
இதுவரை 7,000 ரஷ்ய படையினர் உயிரிழந்ததாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது; ஆனால், 500க்கும் குறைவான ரஷ்ய படையினரே உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அலெக்ஸாண்ட்ரா மற்றும் அண்டோனினா தேவாலயத்தில் ஒரு சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில், ரஷ்ய மூவர்ண தேசியக் கொடி சுற்றப்பட்டிருக்கிறது. உயிரிழந்த ராணுவ வீரரின் தொப்பி மற்றும் புகைப்படம் ஆகியவை சவப்பெட்டி மீது வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் பொருத்தப்பட்ட ரைபிள் படையணியின் துணை கமாண்டராக இருந்தவர் மிக்கைல் ஓர்சிகோவ். அவர் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
கருப்பு துணியை தன் தலையில் போர்த்தியுள்ள இறந்த வீரரின் மனைவியை, அவருடைய உறவினர்கள் தேற்றினர்.
யுக்ரேனில் எத்தனை ரஷ்ய படையினர் கொல்லப்பட்டனர்?
அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை தவிர்த்து வேறு எந்த எண்ணிக்கையையும் வெளியிடுவது ரஷ்யாவில் குற்றமாகும்.
யுக்ரேனுக்கு எதிரான "சிறப்பு ராணுவ நடவடிக்கை" என ரஷ்ய அதிபர் மாளிகை கூறிவரும் இத்தாக்குதலில், 498 ரஷ்ய படையினர் உயிரிழந்ததாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2ஆம் தேதி வெளியான சமீபத்திய எண்ணிக்கை இது. கடந்த இரு வாரங்களாக இதுகுறித்து எந்த மேலதிக தகவல்களும் வெளியாகவில்லை.
யுக்ரேனில் உள்ள ரஷ்ய படையினர் அனைவரும் கதாநாயகர்கள் என்று மக்கள் நம்ப வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸெலன்ஸ்கி
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரை ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று கைதட்டி வரவேற்றனர். 10 நிமிடங்கள் மட்டுமே அவர் உரையாற்றினாலும், கூர்மையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
தனது உரையில், யுக்ரேனில் ரஷ்ய போரை நிறுத்த உதவ வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். அப்போது, இரண்டாம் உலகப் போர் மற்றும் கம்யூனிசத்தின் வீழ்ச்சி என, போர் தொடர்பான ஜெர்மனியின் சொந்த அனுபவங்களை அவர் எடுத்துரைத்தார்.
யுக்ரேனில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து 108 யுக்ரேனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதை கூறிய அவர், ஒவ்வொரு ஆண்டும் ஹோலோகாஸ்ட் நிகழ்வை (ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு) அரசியல் தலைவர்கள் நினைவில் கொண்டுள்ளனர் என்றும், "இது மீண்டும் நிகழக்கூடாது" என்கின்றனர், ஆனால், "இந்த வார்த்தைகள் தற்போது அர்த்தமற்றதாகிவிட்டது" என அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுடனான பொருளாதார உறவை கட்டுப்படுத்த வேண்டும் என, போருக்கு முன்னதாகவே ஜெர்மனியை யுக்ரேன் வலியுறுத்தி வந்தது. ஆனால், "சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்திற்கு இடையில் ஒரு சுவரை எழுப்ப" ரஷ்யாவுக்கு ஜெர்மனி உதவியது என தெரிவித்த ஸெலென்ஸ்கி, "அந்த சுவரை தகர்த்திடுங்கள்" என தெரிவித்தார்.
ஸெலென்ஸ்கியின் உரை நிறைவுற்ற பின்னர், கட்டாய கொரோனா தடுப்பூசி குறித்து ஜெர்மன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் செப் முல்லர், யுக்ரேனில் குழந்தைகள் உள்ளிட்டோர் தஞ்சம் புகுந்த அரங்கத்தில் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், இதுகுறித்து முறையான விவாதத்தை நடத்தாமல், ஜெர்மன் அரசு "வழக்கமான பணிகளுக்குத்" திரும்பியுள்ளதாக புகார் தெரிவித்தார்.

யுக்ரேனில் இதுவரை 107 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் - அதிகாரிகள் தகவல்
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து குறைந்தது 107 குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும், 120 குழந்தைகள் காயமடைந்தனர் என்றும், யுக்ரேனிய விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உயிரிழப்புகளில் கீயவ், கார்கீவ், டொனியட்ஸ்க், செரீனிஹிவ், சுமி, கேர்சன், மிக்கோலைவ், ஸிட்டோமிர் ஆகிய பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவானதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷெல் தாக்குதலில் சுமார் 410 கல்வி நிறுவனங்கள் சேதமடைந்ததாகவும், அவற்றுள் 63 நிறுவனங்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்தது 11 மருத்துவமனைகளில் ஷெல் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

யுக்ரேன் தரப்பு தாக்குதலில் மேலும் ஒரு ரஷ்ய ராணுவ தளபதி பலி

பட மூலாதாரம், TELEGRAM/@PRAVDA_GERASHCHENKO
ரஷ்ய ராணுவத்தின் தளபதி ஒருவர் தங்களது நாட்டின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் தரப்பு நடத்திய தாக்குதலில் இறக்கும் நான்காவது ரஷ்ய ராணுவ தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இறந்ததாக கூறும் ராணுவத் தளபதியின் பெயரை ஸெலென்ஸ்கி தெரிவிக்கவில்லை. ஆனால் யுக்ரேனின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஒருவர், மேஜர் ஜெனரல் ஓலெக் மித்யேவ் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:
- அரிசி 200, வெங்காயம் 250, முட்டை 35 ரூபாய் - இலங்கையில் உச்சத்துக்கு சென்ற பொருட்களின் விலை
- "புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன் - சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?
- ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் அனுமதி மறுப்பா? - ட்விட்டரில் குவிந்த கண்டனம்
- எங்கள் வானத்தை காப்பாற்றுங்கள் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உருக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












