இந்திய அரசியலில் காங்கிரசுக்கு மாற்றான சக்தியாக உருவெடுக்கிறாரா மமதா பானர்ஜி?

பட மூலாதாரம், MAMATA BANERJEE
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சமீப காலமாக மேற்கொண்டுவரும் பல நடவடிக்கைகள், அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அவரது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம்?
கடந்த வாரம் மேகாலயாவில் நடந்த ஒரு நிகழ்வு, இந்திய அளவில் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உள்பட பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியைவிட்டு விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். வழக்கமாக இதுபோன்ற மாபெரும் கட்சித் தாவல்களை பா.ஜ.கவே நிகழ்த்திவந்த நிலையில், இந்த சம்பவம் முக்கிய அரசியல் நிகழ்வாக இந்தியா முழுவதுமே விவாதிக்கப்பட்டது.
இந்த சூடு ஆறுவதற்குள் கடந்த புதன்கிழமையன்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்துவிட்டுவந்த மம்தாவிடம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சரத் பவார் தலைமையேற்க வேண்டுமென நினைக்கிறீர்களா? எனக் கேட்டபோது, "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா, அப்படியேதும் இல்லை. நாட்டில் தற்போது உள்ள நிலையைப் பார்க்கும்போது ஃபாசிசத்திற்கு எதிராக வலுவான ஒரு மாற்றுக் கூட்டணியை உருவாக்க வேண்டும். யாரும் அதை தனியாகச் செய்ய முடியாது. வலிமையானவர்களுடன் சேர்ந்து அதனை ஒன்றிணைக்க வேண்டும்" என்றார் மமதா.
2021ல் கிடைத்த சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, காங்கிரசுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பல சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சிகள் கூட்டம் ஒன்றை நடத்தியபோது அந்தக் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.
2021ஆம் ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் வெற்றிபெற்றுக் காட்ட பாரதிய ஜனதா கட்சி பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இருந்தபோதும், மமதா பானர்ஜி பெரும் வெற்றியைப் பெற்றார். அவருக்குக் கிடைத்த இந்த வெற்றியே, மேற்கு வங்காளத்தின் தலைவர் என்ற அடையாளத்தைத் தாண்டி, இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர் என்கிற அடையாளத்தை நோக்கி நகர வைத்தது.
இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகே, திரிணாமூல் காங்கிரசை மேற்கு வங்கத்திற்கு மட்டுமான கட்சி என்பதிலிருந்து மாறி, தேசியக் கட்சியாக நிலை நிறுத்தவது, தன்னை மேற்கு வங்கத்திற்கான தலைவர் என்பதிலிருந்து தேசியத் தலைவராக முன்னிறுத்துவது ஆகியவற்றை மனதில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆகவே, 2024ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு வெளியில் ஒரு மிகப் பெரிய தேசிய தலைவராக தான் இருக்க வேண்டுமெனக் கருதுகிறார் மமதா.
பா.ஜ.கவைத் தோற்கடிக்க முடியவில்லையென சோர்ந்து போயிருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியைத் தோற்கடிக்கக்கூடிய சக்தியாகக் காட்டி, அதன் தொண்டர்களை ஈர்த்துவிடலாம் என்பது அவரது கணக்காக இருக்கக்கூடும்.
ஆனால், பா.ஜ.கவுக்கு அடுத்த இடத்தில் உள்ள காங்கிரசை வீழ்த்திவிட்டு, அந்த இடத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிரப்புவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
2019ல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி காங்கிரஸின் வாக்கு விகிதம் சுமார் 20 சதவீதம். திரிணாமூல் காங்கிரஸின் வாக்கு விகிதம் வெறும் 4 சதவீதம் மட்டுமே. காங்கிரஸ் 52 இடங்களைப் பிடித்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் வெறும் 22 இடங்களை மட்டுமே பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் 30 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற முடியும்.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸின் செல்வாக்கு என்னதான் வீழ்ச்சியடைந்திருந்தாலும் அதற்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உண்டு. ஆனால், திரிணாமூல் காங்கிரசைப் பொறுத்தவரை, வடகிழக்கு மாநிலங்களைவிட்டுவிட்டால், பிற மாநிலங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கிடையாது.
இவையெல்லாம் தவிர, மேற்கு வங்கத்திற்கு வெளியில் உள்ள வாக்காளர்களைக் கவர பொதுவான சமூக அடையாாளம் என்று மம்தா பானர்ஜியிடம் ஏதுமில்லை. அவருடைய மாநிலத்தில் சிறுபான்மையினரைப் பாதுகாத்திருக்கிறார் என்றாலும் பிற மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினர் தத்தம் மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளையே தேர்வு செய்வார்களே தவிர, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரசைத் தேர்வுசெய்வதற்கான வாய்ப்பு குறைவு.
சித்தாந்த ரீதியில் பார்த்தால்கூட, இடதுசாரிகள், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இருப்பதைப் போன்ற தேசம் தழுவிய சித்தாந்தம் ஏதும் திரிணாமூல் காங்கிரசிடம் கிடையாது. கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சியும் சில மாநிலக் கட்சிகளும் முன்வைக்கும் மதச்சார்பற்ற, லேசான இடதுசாரிச் சாய்வுள்ள சித்தாந்தத்தையே அவரும் முன்வைப்பார். அதனை காங்கிரசே முன்வைக்கும்போது, தம் மாநிலத்திற்கு புதிதாக வரும் ஒரு கட்சியைத் தேர்வுசெய்ய வேண்டிய தேவை வாக்காளர்களுக்கு இல்லை.
அல்லது ஆம் ஆத்மி கட்சியைப் போல சிறந்த அரசைத் தருவதாக வாக்களித்து தேசிய அரசியலில் கவனத்தை ஈர்க்கலாம். ஆனால், அதற்குப் பெரிய வாய்ப்பில்லை. காரணம், மேற்கு வங்கத்தில் சிற்சில மக்கள் நல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்தாலும் அவை தேசிய அளவில் கவனத்தைக் கவரும் வகையில் இல்லை.
"மமதா பானர்ஜியைப் பொறுத்தவரை கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார். தன்னுடைய மாநிலத்தில் பா.ஜ.க.வை ஜெயித்துவிட்டதால், தானே நாடு முழுவதும் பா.ஜ.கவைத் தோற்கடிக்கவல்லவர் என கருதுகிறார்.
ஆனால், அவர் நிதர்சனத்தை மறந்துவிடுகிறார். மேற்கு வங்கத்தில் உள்ள 42 இடங்கள், திரிபுராவில் உள்ள 2 இடங்கள், அசாம் மாநிலத்தின் சமவெளிப் பகுதிகளில் உள்ள ஆறு இடங்கள் ஆகியவற்றில் மட்டும்தான் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் ஐம்பது இடங்கள்.

பட மூலாதாரம், Mail Today / Getty
ஆகவே, மற்ற மாநிலங்களில் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற நினைக்கிறார். இது தவிர, இந்தியாவில் மாநிலக் கட்சிகள் போட்டியிடாமல் பா.ஜ.கவும் காங்கிரசும் போட்டியிடும் இடங்களில் களமிறங்கி, காங்கரசின் இடத்தை பிடிக்க நினைக்கிறார் மம்தா. ஆகவே, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அவருக்கு இடமே கிடையாது.
2024ல் வரும் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத பிராந்தியக் கட்சிகள் கூடுதல் இடங்களைப் பிடித்தால் அந்தக் கூட்டணியின் பிரதமராக வரலாம் என்றுகூட அவர் கருதலாம். ஆனால், அப்படிப் பார்த்தாலும் அந்த பிராந்தியக் கட்சிகளால் 125 இடங்களுக்கு மேல் பிடிப்பது கடினம். அப்போது பா.ஜ.க. அல்லது காங்கிரசின் ஆதரவு அந்தக் கூட்டணிக்குத் தேவைப்படும்.
சரத் பவாரைத் தன்பக்கம் இழுப்பதன் மூலம், உண்மையான காங்கிரஸ் தானே என்று காட்ட நினைக்கிறார் மமதா. அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. 1982ல் பாரதிய ஜனதா கட்சி துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க அந்தக் கட்சிக்கு 17 ஆண்டுகள் தேவைப்பட்டன. பாபர் மசூதி - ராமர் கோவில் பிரச்சனை, அத்வானியின் ரத யாத்திரை போன்றவை அதற்கு வெகுவாக உதவின. இதுபோன்ற ஏதும் இல்லாமல் வெறும் 4 ஆண்டுகளில் தான் பிரதமராகிவிடலாம் என நினைக்கிறார் மமதா. ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இது நடக்காது என்பது அவருக்குப் புரிந்துவிடும் என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலர்களில் ஒருவரான எஸ்.வி.ரமணி.
ரமணி சொல்வதைப் போல சரத் பவாரின் பாணியில் தங்களுடையதே உண்மையான காங்கிரஸ் என்றும், தானே உண்மையான காங்கிரஸ் தலைவர் என்றும் அவர் முன்னிறுத்திக் கொள்ளலாம். சோனியா காந்தி வேற்று நாட்டவர் என்ற முழக்கத்தை முன்வைத்து, தானே உண்மையான காங்கிரஸ் என்றார் சரத்பவார். மமதாவைப் பொறுத்தவரை, பா.ஜ.கவை எதிர்ப்பதில் ராகுல் காந்தியிடம் போதுமான தீவிரம் வெளிப்படவில்லையெனக் கூறி, தீவிரத்துடன் அக்கட்சியை எதிர்க்கும் ஒரே தலைவர் என தன்னை அவர் முன்னிறுத்திக் கொள்ளலாம்.
ஆனால், திரிணாமூல் காங்கிரசைப் பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் அக்கட்சி வலுவில்லாத பா.ஜ.க, நொறுங்கிப் போயிருந்த இடதுசாரிகளை எதிர்த்துப் பெற்ற வெற்றி. இதே போன்ற வெற்றியை அக்கட்சியால் எல்லா மாநிலங்களிலும் பெற முடியாது. திரிணாமூல் காங்கிரசுக்கு இருப்பதைப் போன்ற லட்சியங்கள் மற்ற பிராந்தியக் கட்சிகளுக்கும் இருக்கக்கூடும்.
2024ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்படும்போது ஒவ்வொரு பிராந்தியத் தலைவரும் பிரதமர் பதவியில் தன்னைப் பொறுத்திப் பார்க்கவே விரும்புவார். அந்தத் தருணத்தில் மேற்கு வங்கம், திரிபுராவில் பெற்ற வெற்றிகள் மட்டும் மம்தாவுக்கு உதவுமா என்பது கேள்விக்குறிதான்.
பிற செய்திகள்:
- உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
- அணைப் பாதுகாப்பு சட்டம் - அணைகள் மீதான உரிமையை தமிழ்நாடு அரசு இழக்கிறதா?
- அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்?
- ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி: அரிய ரத்தம் உறைதலுக்கு காரணம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
- 'கொரோனா தடுப்பூசியால் எய்ட்ஸ்' என்று கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரேசில் அதிபர்
- இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்: நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












