திருவள்ளூர் மாவட்டத்தில் தீண்டாமை சுவர்களா? - பிபிசி தமிழ் கள ஆய்வு

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தீண்டாமை சுவர்களை எழுப்பி பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு மாற்று சமூகத்தினர் இடையூறு செய்வதாக புகார் எழுந்துள்ளது. `அதிகாரிகளிடம் மனு கொடுத்த பிறகுதான் அது அரசாங்க நிலம்னு தெரியவந்தது. ஆனாலும் சுவர்களை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்கின்றனர் தோக்கமூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.
தோக்கமூரில் தீண்டாமை சுவர்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஆந்திர மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் என்ற கிராமம் உள்ளது. சுற்றிலும் மாம்பழ விளைச்சலை நம்பியுள்ள இந்தக் கிராமத்தில் 130 பட்டியலின குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரம், இப்பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
தோக்கமூர், எளார்மேடு, எடகண்டிகை என மூன்று ஊருக்கும் பொதுவானதாக திரௌபதியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலையொட்டியுள்ள பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். கோவிலுக்கு முன்புறம் உள்ள 2.94 ஏக்கர் நிலத்தில்தான் பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். இதையொட்டியுள்ள பாதையின் வழியாகத்தான் வி.ஏ.ஓ அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்பட பல்வேறு இடங்களுக்கு இவர்களால் செல்ல முடியும்.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் பயன்படுத்தாத வகையில் நிலத்தைச் சுற்றியும் சிமெண்ட் கல்லை நட்டு வேலி அமைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பட்டியலின மக்கள், மாற்று சமூகத்தினரிடம் கேட்டபோது வேலியை அகற்றுவதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.
பாவம் பாத்து வழிவிடறோம்னு சொன்னாங்க

இதுதொடர்பாக, தோக்கமூர் கிராமத்துக்கு பிபிசி தமிழ் சார்பில் களநிலவரத்தை அறியச் சென்றபோது பட்டியலின மக்கள் திரளாகக் கூடிவிட்டனர். அப்போது பேசிய இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்பின் ஸ்டெல்லா என்பவர், `` திரௌபதியம்மன் கோவிலுக்கு முன்னாடியிருக்கிற பாதை வழியாத்தான் போயிட்டு வருவோம். இப்ப திடீர்னு பாதையை மறிச்சு தடுப்புச் சுவர் போட்டுட்டாங்க. நாங்க எப்படிப் போறதுன்னு கேட்டதுக்கு, `காலையில எட்டு மணிக்கு வந்து கேட் திறந்து விடுவோம், மறுபடியும் சாயந்தரம் நாலு மணிக்கு வந்து திறந்துவிடுவோம்'னு சொன்னாங்க. அதுவரைக்கும் எங்க குழந்தைக காத்துட்டு இருக்கணும். அந்த இடத்துலதான் மாட்டுப் பொங்கல் அன்னைக்கு கும்பிடுவோம். அங்கதான் குழந்தைகள் விளையாடுவாங்க. கால்நடைகளும் மேயும். அதிகாரிகள் வந்துட்டு போனதுக்குப் பிறகு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் பதட்டமாவே இருக்கு'' என்கிறார்.

`` எங்களுக்குன்னு எந்த வசதியும் இங்க இல்லை. கர்ப்பிணிப் பொம்பளைக சத்துமாவு வாங்கனும்னா அந்த வழியாத்தான் போகனும். கோவில் திருவிழா வந்தாலும் அவங்க கும்பிட்டுட்டுப் போனதுக்குப் பிறகுதான் நாங்க சாமி கும்பிடணும். ரேசன் கடை, ஸ்கூல், வேலைன்னு எதுன்னாலும் அந்த வழியாகத்தான் போகணும். தடுப்புச் சுவர் போட்டதைக் கேட்டப்ப, `உங்களுக்கு பாவம் பார்த்து வழியவிடறோம். வந்தா வாங்க. இல்லைன்னா எங்க வேணாலும் போய் பார்த்துக்கங்க'ன்னு சொல்லிட்டாங்க. நாங்க 300 பேர் இருக்கோம். அவங்க 3,000 பேர் இருக்காங்க. ஒரு கல்லுக்கு 3 பேர்னு நின்னு சிமெண்ட் கல் வச்சு வேலி போட்டாங்க'' என்கிறார் தோக்கமூரை சேர்ந்த ராதிகா.
பத்து வருடத்துக்கு முன்பே தீண்டாமை சுவர்
தற்போது போடப்பட்டுள்ள தடுப்பு வேலிக்கு முன்னதாக, பட்டியலின காலனியை சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைத்துவிட்டதாகக் கூறும் சங்கர், ``எங்க ஜனங்களுக்கு உள்ள இருந்த மோதலை காரணமாக வச்சு அந்தச் சுவர் கட்டினாங்க. இதனால மழைக் காலத்துல வீடுகளுக்குள்ள தண்ணி வந்துரும். அந்தச் சுவரை கட்டினப்ப நாங்க எதிர்ப்பு காட்டலை. இப்ப கோவிலுக்கு முன்னாடி 2 ஏக்கர் நிலத்துல சுவர் போட்டு மொத்தமா எங்களை வெளியிட விடாம பண்ணப் பாக்கறாங்க. இரண்டு தரப்பிலும் மோதல் வரக்கூடாதுன்னு தாலுகா ஆபீஸ்ல அமைதிக்கூட்டம் போட்டாங்க. ஆனால், இன்னும் சிமெண்ட் கல்லுகளை எடுக்கலை. அப்படியே இருக்குது. அதிகாரிகள்தான் நல்ல தீர்வைக் கொடுக்கணும்'' என்கிறார்.

இதையடுத்து, திரௌபதியம்மன் கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது மாற்று சமூகத்தினர் சூழ்ந்து கொண்டு, `எதற்காக படம் எடுக்கிறீர்கள்?' என மிரட்டும் தொனியில் கேட்டனர். அவர்களிடம், `எதற்காக வேலி அமைக்கப்பட்டது என உங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுங்கள்' எனக் கேட்டபோது, `ஊர் பெரியவர் முனுசாமியிடம் பேசுங்கள்' எனக் கூறி அவரது வீட்டுக்குச் செல்லும் வழியை தெரிவித்தனர்.
அங்கிருந்து நேரடியாக ஊர் பெரியவர் முனுசாமியை சந்திக்கச் சென்றபோது, பிபிசியிடம் முதலில் பேசுவதற்கு சம்மதம் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் ஊர் மக்களில் சிலர் கூடியதும், `` இது மூன்று ஊர் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் அனைவரிடமும் கலந்து பேசிவிட்டுத்தான் பதில் சொல்ல முடியும்' எனக் கூறிவிட்டு விளக்கம் தர மறுத்துவிட்டார்.
பூவளை கிராமத்தில் என்ன பிரச்னை?
இதேபோல், கும்மிடிப்பூண்டியில் உள்ள பூவளை என்ற கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மற்றும் இருளர் பழங்குடியின மக்களுக்கான மயானத்தில் தனிநபர் ஒருவர் சுற்றுச்சுவர் எழுப்பியதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பூவளை கிராமத்துக்குள் சென்றபோது அங்கிருந்த இருளர் மற்றும் பட்டியலின மக்கள், தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து விளக்கினர்.

மாம்பழத் தோட்டங்கள் நிறைந்த பூவளை கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியின் முனீருதின் என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்த 4.72 ஏக்கர் நிலத்தில் பட்டியலின, இருளர் பழங்குடியின மக்களுக்கான மயானம் இருந்துள்ளது. இந்த நிலத்தை நீலகண்டன் என்பவரிடம் இருந்து முனீருதீன் வாங்கியுள்ளார். பின்னர், `இங்கு பிணத்தை அடக்கம் செய்ய வரக் கூடாது' எனக் கூறி சுற்றுச்சுவர் ஒன்றை அவர் எழுப்பியுள்ளார். இதனால் இறந்த பிணத்தை வைத்துக் கொண்டு மூன்று நாள்களாக இப்பகுதி மக்கள் போராடியுள்ளனர்.
``எங்க தாத்தா, அப்பா காலத்தில் இருந்து இங்கதான் புதைச்சுட்டு வந்தோம். நாங்க வரக்கூடாதுன்னு சுவர் கட்டிட்டாங்க. இந்த ஊரைத் தாண்டி எதுவும் எங்களுக்குத் தெரியாது. இந்தப் பிரச்னைக்காக திருவள்ளூர், பொன்னேரின்னு கவர்மெண்ட் ஆபீஸுக்கு அலைந்து திரிஞ்சோம். எங்களோட போராடின என் அண்ணன் முத்துவேலு இறந்துபோயிட்டார். அவர அடக்கம் பண்ண முடியாம மூனு நாளா வெயிலில் வச்சிருந்தாங்க. அவரை இந்த இடத்துல புதைக்க முடியல. நாங்க வரக்கூடாதுன்னு எதிர்க்கறாங்க. எங்களை புதைக்கறதுக்கு இந்த சுடுகாடு வேணும்'' என்கிறார் இதே பகுதியைச் சேர்ந்த ஜமுனா.
பொதைக்க இடம் கொடுத்தா போதும்
இதையடுத்து பிபிசி தமிழிடம் பேசிய பூவளை கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள், ``எங்க அம்மா இறந்தப்ப இங்க புதைக்க முடியலை. எத்தனை நாள் பொணத்த வச்சிட்டு இருக்கறது. ஊர்ல இருக்கற மக்களும் சப்போர்ட் பண்ணாங்க. நாங்க பொழைக்கறதுக்கு நிலம் கேட்கல. அடக்கம் பண்றதுக்கு நிலம்தான் கேட்கறோம். இந்த சுடுகாட்டை மீட்டுக் கொடுத்தால் போதும்'' என்கிறார்.
``இது பட்டா நிலம்னு சொல்லி எங்களை உள்ளே விடவில்லை. பொணத்தை புதைச்சுட்டுப் போனால் மறுநாளே புல்டோசரை விட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்திடறாங்க. பத்து தலைமுறையாக இருந்த வழி, இப்போது ஏன் இல்லைன்னு கேட்டா மிரட்டறாங்க. காம்பவுண்ட் சுவரைக் கட்டின பிறகு, வேறு இடத்துல புதைச்சுக்கங்கன்னு சொன்னாங்க. பணம் தர்றோம்ன்னு சொன்னாங்க. எங்களுக்கு மயானம்தான் வேணும்னு உறுதியா இருந்தோம். அதிகாரிகள் வந்த பிறகு சுவரை உடைச்சாலும் பாதையில்லாம அப்படியே இருக்கு'' என்கிறார், இந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா.
இந்த விவகாரம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அருள், `` விவசாயம் சார்ந்த பகுதியாக இந்த மாவட்டம் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரச்னைகள் அதிகரித்தபடியே உள்ளன. பூவளை கிராமத்தில் இருளர் மக்களின் சுடுகாட்டை தனிநபர் ஆக்ரமித்துள்ளார். இதனை எதிர்த்துப் போராடி சுடுகாட்டை மீட்டெடுத்தோம். ஆனால், மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்குக்கூட அதிகாரிகள் தயாராக இல்லை'' என்கிறார்.
நிலத்தின் உரிமையாளர் சொல்வது என்ன?

``இருளர் மக்கள் பயன்படுத்த முடியாதபடி தடுப்புச் சுவர் அமைத்தது சரியா?'' என நிலத்தின் உரிமையாளரான முனிருதீனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` அது என்னுடைய நிலத்துக்கான ஆவணம் என்பதற்கு ஏராளமான ஆவணங்கள் உள்ளன. 1923 ஆம் ஆண்டில் இருந்தே நிலம் தொடர்பான ஆவணங்கள் உள்ளன. அங்கு மயானம் இருக்கிறது எனத் தெரிந்தால், யாராவது நிலம் வாங்குவார்களா? வருவாய்த்துறை ஆவணங்களில் வாய்க்கால் என்றுதான் உள்ளது. ஆனால், இந்தப் பிரச்னையில் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் எனது பட்டாவை ரத்து செய்துவிட்டனர்'' என்கிறார்.
`` நான் இடம் வாங்கிய சில வருடங்களாக மரணம் எதுவும் ஏற்படாததால் அப்பகுதி மக்கள் யாரும் வரவில்லை. பின்னர், ஒருநாள் பிணத்தைக் கொண்டு வந்து, `அடக்கம் செய்ய வேண்டும்' என்றனர். நான் அதிர்ச்சியடைந்து கேட்டபோது, `அங்குதான் சுடுகாடு உள்ளது' என்றனர். ஆனாலும், `நாங்கள் தெரியாமல் வாங்கிவிட்டோம், எங்கள் நிலத்திலேயே அடக்கம் செய்யுங்கள்' என்றோம். இதன்பிறகு ஆர்.டி.ஓ விசாரணையில், `ஏரி ஓரமாக உள்ள இடத்தில் புதைத்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறினர். இதற்காக சாலை வசதியை செய்து தருமாறு கேட்டனர். ஆனால், அடுத்து வந்த நாள்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் என் மீது நடவடிக்கை எடுத்தனர். அங்கு இருந்த காம்பவுண்ட் சுவரையும் அகற்றிவிட்டனர். ஊர் மக்கள் திரண்டு சென்றதால் அவர்களுக்காக எனக்கு அநீதி இழைத்துவிட்டனர்'' என்கிறார் முனிருதீன்.மேலும், `` தனிப்பட்ட முறையில் என்னைப் பழிவாங்கும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். என்னுடைய நிலத்தை மீட்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்'' என்றார்.
அது தீண்டாமை சுவர் அல்ல
இதையடுத்து, இரண்டு கிராமங்களின் நிலவரம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமனை நேரில் சந்தித்து பிபிசி தமிழ் சார்பாக பேசியபோது, `நான் வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. நீங்கள் சொல்லும் தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்கிறேன்'' எனக் கூறி குறிப்பெடுத்துக் கொண்டார். அதேநேரம், தோக்கமூரில் கட்டப்பட்ட வேலியை, `தீண்டாமை சுவர்' எனச் சொல்லப்படுவதையும் அவர் அறவே மறுத்தார்.
தோக்கமூர் நிலவரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரித்து, ``தோக்கமூர் கிராமப் பிரச்னை தொடர்பாக அமைதிக் கூட்டம் போடப்பட்ட பிறகு மக்கள் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. அந்த ஊர் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தோம். முன்பு இருந்த ஆர்.டி.ஓ மாற்றலாகிப் போய்விட்டார். புதிய ஆர்.டி.ஓவிடம் பேசிவிட்டுத்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கடைசியாக ஆர்.டி.ஓ நடத்திய கூட்டத்தில், `அந்த மக்கள் வரக்கூடாது என்றெல்லாம் சொல்லக் கூடாது. கோவில் என்பது பொதுவான இடம்' என உறுதியாகக் கூறிவிட்டார். இருப்பினும், நிலவரத்தைக் கண்காணிக்கிறேன்'' என்கிறார்.
தீண்டாமை சுவர்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டாலும் ஆள் உயரத்துக்கு முளைத்திருக்கும் சிமெண்ட் கற்களும் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்களும் எம் சாண்ட் மண்ணும் பட்டியலின மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. `இரவோடு இரவாக எதாவது செய்துவிடுவார்களோ?' என்ற பதற்றத்துடனேயே நாள்களைக் கடத்தி வருகின்றனர். `மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?' என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.
பிற செய்திகள்:
- அரிசி 200, வெங்காயம் 250, முட்டை 35 ரூபாய் - இலங்கையில் உச்சத்துக்கு சென்ற பொருட்களின் விலை
- "புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன் - சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?
- ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் அனுமதி மறுப்பா? - ட்விட்டரில் குவிந்த கண்டனம்
- எங்கள் வானத்தை காப்பாற்றுங்கள் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உருக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












