தமிழக பட்ஜெட் 2022-2023: கல்வியில் பின் தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் - 15 சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்தார். காலை 10 மணியளவில் தன் உரையைத் தொடங்கிய அவர், சுமார் 11:50 மணியளவில் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். முன்னதாக, பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த பட்ஜெட்டில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, மாதந்தோறும் மின்கட்டணத்தைக் கணக்கிடுதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லை. இந்த பட்ஜெட்டில் தமிழ்மொழி வளர்ச்சி, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின்கீழ், 120 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தமிழக பட்ஜெட்டின் 15 சிறப்பம்சங்களை இங்கே வழங்குகிறோம்:
தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக, இந்த ஆண்டு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
- பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
- இடைச் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினை கண்டறிவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
- விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தருமபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தவிர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.
- பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறான பிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத் தடுத்திட, "சமூக ஊடக சிறப்பு மையம்" அமைக்கப்படும்.
- பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் என, இம்மதிப்பீட்டில் மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
- டெல்டா பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,964 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் சிறப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்த அரசு அளித்துள்ளது. இவ்வாண்டு முன்கூட்டியே திட்டமிடுதல் மூலம், பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னரே இந்தப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும்.
- "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலாரின் 200 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் "வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை" அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரசுப்பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில், STEAM, அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின் தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- உலகளாவிய பங்களிப்புடன் "அறிவுசார் நகரம்" ஒன்று உருவாக்கப்படும். இந்நகரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும்.

பட மூலாதாரம், VIKRAMRAGHUVANSHI
- யுக்ரேனில் போரினால் மீண்டும் இந்தியா திரும்பிய தமிழக மாணவர்கள் இந்தியாவிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும்.
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன்மூலம், அரசுப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு/ தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
பிற செய்திகள்:
- திருவள்ளூர் மாவட்டத்தில் தீண்டாமை சுவர்களா? - பிபிசி தமிழ் கள ஆய்வு
- "பெகாசஸ் உளவு மென்பொருளை விற்க ரூ. 25 கோடி கேட்டனர்" - மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
- சிந்து மாகாண வான்பரப்பில் பறந்த மர்ம பொருள்? இந்திய எதிர்ப்பை கடுமையாக்கும் பாகிஸ்தான் தலைவர்கள்
- பெட்ரோல், மண்ணெண்ணெய்க்கு காத்திருக்கும் கணவன் மனைவி – இலங்கை கள நிலவரம்
- யுக்ரேன் போர்: போர்தந்திர அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமா?
- இஸ்லாத்தில் ஹிஜாப் - நீதிமன்றங்கள் இதை தீர்மானிக்க வேண்டுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








