தமிழ்நாடு பட்ஜெட் 2022: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதிநிலை அறிக்கை - சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு பட்ஜெட் 2022

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, கோப்புப்படம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் பகுதி பட்ஜெட்டைத் தொடர்ந்து பிந்தைய பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

இதையடுத்து இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை அதன் சபாநாயகர் அப்பாவு தலைமையில் பேரவை கூடியதும் பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கோரினார்.

அதிமுக அமளி, வெளிநடப்பு

ஆனால், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு அது குறித்து பரிசீலிப்பதாக பேரவை சபாநாயகர் கூறினார். இதையடுத்து அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக கூச்சலிட்டனர்.

இந்த அமளிக்கு மத்தியில் நிதிநிலை அறிக்கை அம்சங்களை விளக்கி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசத் தொடங்கினார். காகிதம் இல்லா பட்ஜெட் ஆக இன்றைய நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழர் மரபு, பண்பாட்டைக் கருத்தில் கொண்டு, முன்னோர்களை, திராவிடத் தலைவர்களை வணங்கி தொடங்குகிறேன் என்று நிதி அமைச்சர் பேசத் தொடங்கினார்.

அவர் பேசத் தொடங்கியதும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பேச அனுமதிக்குமாறு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குரல் எழுப்பினர்.

இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் உரையைத் தொடங்கிய 5 நிமிடங்களிலேயே தமது உரையை 2 நிமிடங்களுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிறுத்தி வைத்து காத்திருந்தார். பின்னர் அவர் தமது உரையை மீண்டும் தொடர்ந்தார். அதிமுக உறுப்பினர்கள் சபை மரபை மீறி செயல்படுவதாகவும் முதலமைச்சராக இருந்த இருவரும் (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்) இப்படி செயல்படக் கூடாது என்று சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

'யுக்ரேன் போரால் பொருளாதார தாக்கம் ஏற்படும்'

இந்தியா 'மாநிலங்களின் ஒன்றியம்' என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும். மாநில சுயாட்சியை சீர்குலைக்கும் முயற்சிகள் வருத்தம் அளிக்கிறது. மாநில சுயாட்சி, மாநிலங்களின் உரிமைக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். 'யுக்ரேன் போரால் பொருளாதார தாக்கம் ஏற்படும். பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும்' என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பொருளாதார மீட்பு பணிகள் பாதிக்கப்படும். அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு முன்னுரிமையில் மாற்றம் இருக்கும்.

வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண்மை, சமூக நீதித் திட்டங்கள், கல்வி, மகளிர் முன்னேற்றம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் பிடிஆர் பழனிவேல்ராஜன்.

21 மொழிகளில் பெரியார் சிந்தனை நூல்கள் - ரூ. 5 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட் காவிரி டெல்டா
படக்குறிப்பு, காவிரி வடிநிலப் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 3, 384 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நாட்டில் மக்கள் தொகையில் தமிழ்நாடு மக்கள் தொகை 6.1 சதவீதம் ஆகும். நாட்டின் வளர்ச்சியில் 10 சதவீத பங்களிப்பு உள்ளது. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி மாநிலத்திற்கு ஒதுக்கப்படவில்லை. தமிழ் மொழி வளார்ச்சிக்கு அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். தமிழ் மொழிக்க்கும் இந்தோ ஐரோப்பிய குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு.

தமிழ் தொல்லியல் மரபு குறித்து மாணவர்களுக்கு சொல்லவும், பாதுகாக்கவும் ரூ. 10 கோடியில் புதிய அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள அருங்காட்சியகங்கள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். சமூ நீதியை நிலைநாட்ட கடைசி வரை போராடிய பெரியாரின் சிந்தனைகள் கொண்ட நூல்களின் தொகுப்பு 21 இந்திய, மொழிகளில் அச்சு மற்றும் மின்னணு வழியாக வெளியிடப்படும்.இதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு ஒதுக்கப்படும்.

புதிய திட்டங்கள் - எந்த துறைக்கு எவ்வளவு நிதி?

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம், TNDIPR

சமூக ஊடக குற்றங்களைத் தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும். கூட்டுறவு, பொது விநியோகம், உணவுத் துறைக்கு ரூ. 13, 176 கோடி.

சுய உதவிக் குழுக்கள், வேளாண் கடன்களுக்கு ரூ. 4, 130 கோடி. நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 2, 787 கோடி.

காவிரி வடிநிலப் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 3, 384 கோடி.

காவிரி டெல்டாவின் 10 மாவட்டங்களில் முன் கூட்டியே தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 4, 964 கி.மீ தூரத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு. ரூ. 20 கோடியில் வள்ளலார் கால்நடைப் பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும்.தமிழ்நாட்டின் தேசிய விலங்கான வரையாடுகளைப் பாதுகாக்க ரூ. 10 கோடியில் திட்டம்.

பள்ளிக் கல்வித்துறை

தமிழக பட்ஜெட் பள்ளிக்கல்வி
படக்குறிப்பு, பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 36, 895 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்படும்

இல்லம் தேடி கல்வி 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் நடப்பாண்டும் தொடர்கிறது. இதற்காக ரூ. 200 கோடி ஒதுக்கீடு. ஏற்கெனவே 10 மாவட்டங்களில் உள்ள அரசு முன்மாதிரி பள்ளிகள் மேலும் 15 மாவட்டங்களில் தொடங்கப்படும். இதற்காக ரூ. 125 கோடி ஒதுக்கீடு.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டம் அறிமுகம். இத்திட்டத்தின் மூலம், கூடுதலாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். இத்திட்டத்தின் பல்வேறு பணிகளை 5 ஆண்டுகளில் ரூ. 7 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும். இதன்படி வரும் நிதியாண்டில் 1, 500 கோடியில் பணிகள் தொடங்கப்படும்.

புத்தக வாசிப்பு மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும். இதற்காக மாவட்டங்களில் புத்தக காட்சிகள். ஆண்டுதோறும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ. 5.60 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 36, 895 கோடிகள் ஒதுக்கீடு. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு.

விளையாட்டுத்துறை

தமிழக பட்ஜெட்
படக்குறிப்பு, இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு 293 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு 293 கோடி ஒதுக்கீடு . யுக்ரேன் போரால் தமிழ்நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்வி தடைபடாமல், எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். மருத்துவ துறைக்கு மொத்தம் ரூ. 17, 901 கோடு ஒதுக்கீடு.

நிதிப்பற்றாக்குறை குறையும்

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு, ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது.

அரசு பேருந்து சலுகை, புதிய தொழிற்பூங்காக்கள் திட்டம்

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச அனுமதித் திட்டத்தால் பெண்கள் வருகை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்திற்கு 1,520 கோடி ஒதுக்கீடு.தரைப்பாலங்களை மேம்பாலங்களாக கட்ட ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு.பயிர் உற்பத்தி துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை பிரபலப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ. 5 கோடி. கோவை, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும். சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ. 75 கோடியில் புத்தொழில் உருவாக்க (ஸ்டார்ட் அப்) மையம் அமைக்கப்படும்.

மனித வள சீர்திருத்தக் குழு அமைக்கப்படும். பழமையான, சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு. இந்து சமய அறநிலையத்துறைக்கு மொத்தம் ரூ. 340 கோடி ஒதுக்கீடு.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ. 19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயர்கல்விச் சேர்க்கை குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் 6 -12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்ட, பட்டய, தொழிற் கல்வி படிப்புகளை முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பிற கல்வி உதவித் தொகைகளைப் பெற்று வந்தாலும், இந்த திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் முன்முயற்சியாக ரூ. 698 கோடி நிதி ஒதுக்கீடு.

மகளிர் உரிமைத் தொகை

நிதிப் பற்றாக்குறை காரணமாக மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படும் திட்டத்தை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்தின் தகுதியான பயனாளிகளைக் கண்டறியும் வகையில் தரவுகளைத் திரட்டி, திட்டத்தை செயல்படுத்த வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், AIADMK

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி, தமிழக முன்னாள் முதல்வர்

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

''அதிமுக ஆட்சியில் மூலதன செலவினங்களுக்காக கடன் பெறப்பட்டது. கொரோனா தாக்கத்தினால், வருவாய் குறைந்து விட்டது. தற்போது வருவாய் அதிகரித்துள்ளது. வருவாய் அதிகரித்தால் கடன் குறைய வேண்டும். ஆனால், கடனும் அதிகரித்துள்ளது. செலவினமும் அதிகரித்துள்ளது. எனவே இந்த அரசு முறையாக நிர்வகிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. கல்விக் கடன் தள்ளுபடி, மகளிர் உரிமத் தொகை உள்ளிட்ட தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிதிப்பற்றாக்குறை என்று சாக்கு போக்கு சொல்லியுள்ளனர். கட்டுமானப் பொருட்களை அத்தியவாசியப் பொருட்கள் பட்டியலில் சேர்ப்போம் என்று தெரிவித்தனர். ஆனால், இன்றைக்கு கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது'' என்று தெரிவித்தார்.

இன்றைய பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை, மார்ச் 19ஆம் தேதி சனிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: