இரவில் சாலை விபத்தைத் தடுக்க ஓட்டுநர்களுக்கு தேநீர் - மாற்றி யோசித்த விழுப்புரம் காவல்துறை

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நள்ளிரவு நேரங்களில் நடக்கும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு டீ, குடிநீர் பாட்டில் உள்ளிட்டவற்றை அளித்து சோர்வைப் போக்கி புத்துணர்ச்சி கொடுக்கும் பணியில் விழுப்புரம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து சென்னை, திருச்சி, புதுச்சேரி பகுதிகளில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் ஓட்டுநர்களின் சோர்வு காரணமாக தொடர் விபத்து ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் விதத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், விழுப்புரம் காவல் துறையினர், போக்குவரத்து மற்றும் இரவு ரோந்து காவல் துறையினர் இணைந்து விழுப்புரத்தில் இருந்து சென்னை, திருச்சி, புதுச்சேரி பகுதிகளுக்கு செல்லும் நான்கு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு நேரங்களில் கடக்கும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு டீ மற்றும் குடிநீர் வழங்கி போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை அதிகமாக இருப்பதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுகிறது. இந்த சாலை விபத்துகளை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர், இந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விபத்துகளை குறைக்க அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஓட்டுநர்களுக்கு காவல் துறையினர் செய்யும் சேவை

"விழுப்புரம் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் 2 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை அதிகமான விபத்து நடக்கிறது.
இதற்கு காரணம் அந்நேரத்தில் ஓட்டுநர்கள் தூங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக அதிகம் அனுபவமில்லாத வாகன ஓட்டுநர்களால் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. ஆனால் அனுபவமுள்ள பஸ், லாரி உள்ளிட்டவற்றின் ஓட்டுநர்கள் ஓரளவு சரியாக இருக்கின்றனர்.
எப்போதாவது வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் இரவில் தூங்க அதிக வாய்ப்பு இருப்பதனால், இதனைத் தடுக்க ஆலோசித்தோம். அதன் பேரில் இரவு நேரத்தில் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர்களை நிறுத்தி, அவர்களை புத்துணர்வு அடையச் செய்து குறிப்பாக முகம் கழுவ வைப்பது, குடிநீர் குடிக்க வைப்பது உள்ளிட்டவற்றை முதலில் செய்து, பிறகு அவர்களுக்கு டீ கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்," என்று ஸ்ரீநாதா கூறினார்.
அந்த வகையில் வாகனங்கள் சுரங்கச்சாவடியை கடக்கும் போது, அவர்களை நிறுத்தி டீ சாப்பிட வைத்து, முகம் கழுவ காவல் துறையினர் அறிவுறுத்துவர். இது மட்டுமல்லாது அவர்களுக்கு சுமார் 5 நிமிடங்கள் விழிப்புணர்வு ஆலோசனை வழங்கி அனுப்பி வைப்பதாக தெரிவித்தார் அவர்.
"இப்படி செய்தால் அடுத்து ஒரு இரண்டு மணி நேரத்திற்கு ஓட்டுநர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். இதனால் தூக்குவதற்கு வாய்ப்புகள் குறைவு இதனால் விபத்து ஏற்படுவது தடுக்கப்படுகிறது," எனக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டுநர்கள் நெகிழ்ச்சி

இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி, டீ, குடிநீர் பாட்டீல் வழங்குவது குறித்து வாகன ஓட்டுநர்கள் நெகிழ்ச்சி அடைகின்றனர்.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் நடராஜன் கூறும்போது, "திருச்சியிலிருந்து சென்னைக்கு அடிக்கடி லாரியில் சென்று வருகிறேன். விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரக்கச் சாவடிக்கு வந்தபோது காவல் துறையினர் அழைத்து சாலை விபத்துகள் குறித்து சொன்னார்கள்.
எங்களை அழைத்து டீ வாங்கிக்கொடுத்து, அவர்கள் சொன்ன விதம் நன்றாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக வாகனம் ஓட்டி வருகிறேன். இதுவரை இதுபோன்ற நட்பு உணர்வோடு எங்களிடம் யாரும் பேசியதில்லை. அவர்கள் சொல்லியது அனைத்து விதத்திலும் நன்மையானது," எனத் தெரிவித்துள்ளார்.

காவலர்களுக்கு மனத் திருப்தி
நள்ளிரவு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் குமரராஜா கூறுகையில், "நாங்கள் இவ்வாறு செய்வதைக் கண்டு ஒருசில ஓட்டுநர்கள் ஆச்சரியப் படுகின்றனர். இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கு இந்த ஊக்கம் போதும், இதன் மூலம் நாங்கள் செல்லும் இடங்களுக்கு பத்திரமாக செல்வோம் என்கின்றனர் ஓட்டுநர்கள். அதேபோன்று சாலை பாதுகாப்பு தொடர்பாக ஓட்டுநர் சீருடை தொடங்கி, வாகனத்தில் எவ்வளவு சுமை ஏற்றிச் செல்வது, சாலை விதிகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கிறோம். இவ்வாறு வேலை செய்வதில் எங்களுக்கு மனத் திருப்தி அளிக்கிறது," எனத் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- அரிசி 200, வெங்காயம் 250, முட்டை 35 ரூபாய் - இலங்கையில் உச்சத்துக்கு சென்ற பொருட்களின் விலை
- "புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன் - சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?
- ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் அனுமதி மறுப்பா? - ட்விட்டரில் குவிந்த கண்டனம்
- எங்கள் வானத்தை காப்பாற்றுங்கள் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உருக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












