கர்நாடக தேர்தல்: தமிழர்கள் அதிகமுள்ள KGF தொகுதியில் தமிழ் வேட்பாளர்கள் வெல்ல முடியாதது ஏன்?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்
படக்குறிப்பு, கோலார் தங்க வயல் தொகுதியில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் 2004க்குப் பிறகு இந்தத் தொகுதியில் தமிழர்கள் யாரும் வெல்ல முடியவில்லை.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள கோலார் தங்க வயல் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் தமிழர் சட்டமன்ற உறுப்பினராக முடியுமா என்ற கேள்விக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் விடையளிக்கவிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலேயே, மிகவும் வித்தியாசமான தொகுதி, கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) தொகுதி. இது ஒரு சுரங்க நகரம் என்பதால் மற்ற பகுதிகளில் இருந்து மாறுபட்ட நிலப்பரப்பைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கும் தொகுதியாகவும் இருக்கிறது இந்த கேஜிஎஃப்.

பழமையான தங்கச் சுரங்கம், ஐந்து ரயில் நிலையங்கள், சினிமா படப்பிடிப்புகள் என வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் கேஜிஎஃப், நிஜத்தில் பல பிரச்சனைகளோடு தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

நீண்ட காலமாகவே இந்தப் பகுதியில் தங்கம் எடுக்கப்பட்டுவந்தாலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் நிறுவனம் இங்குள்ள சுரங்கங்களை வாங்கியது. 1956வரை அந்த நிறுவனமே சுரங்கங்களை நடத்திவந்த நிலையில், அந்த ஆண்டு இந்த சுரங்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்குப் பிறகு பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிட்டட் (பிஜிஎம்எல்) இந்த சுரங்கங்களை நடத்த ஆரம்பித்தது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தச் சுரங்கத்தில் பணியாற்றுவதற்காக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் இருந்து ஆட்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் இங்கு குடியேறியதும் கேஜிஎஃப் நகரியம் உருவாக்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் இங்கு தங்கம் எடுப்பதற்கான செலவு அதிகரித்துக்கொண்டே வந்ததால், பிஜிஎம்எல்லின் கடன் அதிகரித்துக்கொண்டே போனது. இதையடுத்து 2001ஆம் ஆண்டில் இந்தச் சுரங்கங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அப்போது இந்தச் சுரங்கத்தில் அதிகாரபூர்வமாக சுமார் 3,100 பேர் பணியாற்றிவந்தனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்

சுரங்கம் மூடப்பட்ட பிறகு, சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமல்லால் அதைச் சார்ந்திருந்த பிற தொழில்கள் மூடப்பட்டது, பணப் புழக்கம் குறைந்தது ஆகியவற்றால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இங்கிருந்து வெளியேறி பெங்களூர் மற்றும் பிற நகரங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். தற்போதும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தினமும் சுமார் 95 கி.மீ. பயணம் செய்து, பெங்களூர் வரை சென்று வேலை பார்த்துத் திரும்புகின்றனர்.

இந்தியாவிலேயே முதன் முதலில் மின்சாரம் பெற்ற வெகு சில பகுதிகளில் ஒன்றான கேஜிஎஃப் தற்போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் இரண்டு விஷயங்களையே முக்கியப் பிரச்சனைகளாக முன்வைக்கிறார்கள்.

"ஒன்று, வேலைவாய்ப்பின்மை. சுரங்கம் மூடப்பட்ட பிறகு இந்தப் பகுதியில் வேலை வாய்ப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி, வேலை வாய்ப்புகளை இங்கு உருவாக்க வேண்டும். அடுத்ததாக, சுரங்கத்தில் வேலைபார்த்த தொழிலாளர்கள் தாங்கள் வசித்த இடங்களில் வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளனர். அந்த இடத்தை அவர்கள் பெயருக்கே மாற்றித்தர வேண்டும். இது ஒரு நீண்ட காலக் கோரிக்கை" என்கிறார் கோலார் தங்க வயல் தமிழ் சங்கத்தின் தலைவரான கலையரசன்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்
படக்குறிப்பு, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் எஸ். ராஜேந்திரன் இந்த முறை தமிழரான தனக்கு வெற்றி நிச்சயம் என்கிறார்.

கேஜிஎஃப் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, பாரம்பரியமாகவே பட்டியலின மக்களின் செல்வாக்கும் இடதுசாரி சிந்தனையின் ஆதிக்கமும் கொண்ட பகுதியாகத்தான் இருந்துவந்தது. தனித் தொகுதியான கே.ஜி.எஃப் தொகுதியில் அகில இந்திய பட்டியலின சம்மேளனம் இரண்டு முறையும் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா மூன்று முறையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் நான்கு முறை வெற்றிபெற்றுள்ளது. அ.தி.மு.கவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதால், அக்கட்சி மூன்று முறை இங்கு வெற்றிபெற்றுள்ளது. பா.ஜ.க. இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளது.

2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தொகுதியில் இந்த முறை பா.ஜ.கவின் சார்பில் அஸ்வினி சம்பங்கியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம். ரூபகலாவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் ரமேஷ் பாபுவும் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் எஸ். ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர். சி.பி.எம்., சி.பி.ஐ., ஆகியவையும் களத்தில் உள்ளன. இதில் கடும் போட்டி காங்கிரஸ் - பா.ஜ.க. - ஆர்.பி.ஐ. ஆகிய கட்சிகளிடையேதான் நிலவுகிறது.

ஏற்கனவே இரண்டு முறை ரிபப்ளிகன் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ். ராஜேந்திரன் இந்த முறையும் களத்தில் இறங்கியிருக்கிறார். "தொகுதி மறுசீரமைப்பால் கடந்த சில தேர்தல்களில் என்னால் வெற்றிபெற முடியலவில்லை. எனக்குப் பின்னால் இந்தத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எதையும் செய்யவில்லை. நான் எவ்வளவோ இந்தத் தொகுதிக்குச் செய்திருக்கிறேன். அதனால், அதையெல்லாம் மக்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். இந்த முறை எனக்கு வெற்றி நிச்சயம்." என்கிறார் ராஜேந்திரன். பொது மக்கள் மத்தியில் அவர் பேசும் இயல்பான பேச்சுக்கு நல்ல வரவேற்பும் காணப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்
படக்குறிப்பு, பெரும் வேலைவாய்ப்பை உருவாக்கப்போவதாகச் சொல்லி வாக்குகளைச் சேகரித்துவருகிறார் தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான எம். ரூபகலா.

2018ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபகலா வெற்றிபெற்றார். அவரது வெற்றியின் மூலம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தத் தொகுதியைக் கைப்பற்றியது காங்கிரஸ். இந்த முறையும் தானே வெற்றிபெறுவோம் என்று நம்புகிறார் அவர். தன்னுடைய முயற்சியால் விரைவில் தொழிற்சாலைகள் வரும் என்கிறார் அவர்.

"தங்க வயலில் மக்களுக்கு இருக்கும் வேலை இன்மை பிரச்சனை குறித்து அரசிடம் விளக்கியதால் BEML நிறுவனத்தின் வசமிருந்த 1,000 ஏக்கர் நிலம் புதிய நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் எங்களுடைய அரசுதான் வெல்லும் எனக் கருதுகிறேன். புதிய அரசு அமைந்த பிறகு அரசைச் சேர்ந்தவர்களை இங்கு அழைத்துவந்து, பார்க்கச் சொல்லி, தொழிற்சாலைகளை அமைத்து 50,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தர முடியுமென நினைக்கிறேன்" என்கிறார் அவர்.

பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஒய். சம்பங்கியின் மகள் அஸ்வினி சம்பங்கிதான் இந்த முறை அந்தக் கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கிறார். தான் எம்எல்ஏவாக இருந்தபோது செய்த சாதனைகளைச் சொல்லி தன் மகளுக்கு வாக்கு சேகரிக்கிறார் சம்பங்கி.

கோலார் தங்க வயல் தொகுதியில் உள்ள ஒரு கோவிலில், பட்டியலினத்தவருக்கு தேர் திருவிழா நடத்த ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. ஆனால், தேர் செய்யப்படாமலேயே இருந்ததால், அந்தத் திருவிழா நடத்தப்படவேயில்லை. சம்பங்கி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்தத் தேரைச் செய்துகொடுத்தார். அதனைத் தனது சாதனையின் முக்கிய அம்சமாக முன்வைத்து, மகளுக்காக வாக்கு சேகரிக்கிறார் சம்பங்கி.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்
படக்குறிப்பு, பா.ஜ.கவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அஸ்வினி சம்பங்கி, தந்தையின் பணிகளை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்கிறார்

மதச்சார்பற்ற ஜனதா தளம் டாக்டர் ரமேஷ் பாபு என்பவரைக் களமிறக்கியிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜோதி பாசு போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தங்கராஜ் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் போட்டியிடுபவர்களில் எஸ். ராஜேந்திரன், ஜோதிபாசு, தங்கராஜ் ஆகிய மூன்றுபேரும் தமிழர்கள்.

2004ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர்கள் யாரும் இந்தத் தொகுதியில் இருந்து வெற்றிபெறவில்லை. கடந்த முறை போட்டியிட்ட 16 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். ஆனால், முதல் இரண்டு இடங்களை தமிழரல்லாதவர்களே பிடித்தனர். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

2001ல் கோலார் தங்க வயல் மூடப்பட்ட பிறகு, அந்த தொகுதியில் வசித்த தமிழர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி பெங்களூரிலும் அதைச் சுற்றிலும் குடியேற ஆரம்பித்தனர். இது அந்தத் தொகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. பிறகு, 2008ல் தொகுதி சீரமைப்பின்போது அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் பல அந்தத் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால், தமிழரல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

மத்திய அரசின் 'பெமல்' நிறுவனம் துவங்கப்பட்டதும் அங்கு கன்னடம் பேசுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது. இது போன்ற காரணங்களால், காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் எதுவும் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் கவனம் செலுத்தவில்லை.

கே.ஜி.எஃப் தொகுதியைச் சுற்றிவந்தால், சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. சுவரோட்டிகளோ, வாக்குசேகரிக்கும் வாகனங்களோ கண்ணில் படவில்லை. ஆனால், தேர்தல் களம் மிக விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: