தோலாவிரா: ஆரியர் படையெடுப்பால் அழிந்து போனதா இந்த சிந்து சமவெளி நகரம்?

- எழுதியவர், அனகா பதக்
- பதவி, பிபிசி மராத்தி
சிந்து நதியை ஒட்டிய ஹரப்பா நாகரிகம் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது.
செழுமையான இந்தப் பண்பாட்டின் எச்சங்கள் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் முதல் இந்தியாவின் உத்தர பிரதேசம் வரையிலும், ஆப்கானிஸ்தான் முதல் இந்தியாவின் குஜராத் மாநிலம் வரையிலும் கண்டறியப்பட்டுள்ளன.
ஹரப்பா அல்லது சிந்து நாகரிகம் பண்டைய காலங்களில் மிகவும் முன்னேறிய நாகரிங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி மூலமாக கண்டறியப்பட்ட ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆகிய இரண்டு பெரிய நகரங்கள் இந்த பண்பாட்டு அடையாளத்தின் சாட்சியாக திகழ்கின்றன.
தற்போது அந்த இரண்டு பழங்கால நகரங்களும் பாகிஸ்தானில் இருப்பதால், இந்திய சுற்றுலா பயணிகள் அங்கு செல்வது சற்றுக் கடினமாக உள்ளது.
ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்த நகரங்களுக்கு செல்ல முடியவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. சிந்து நாகரிகத்தின் அடையாளமாக இந்தியாவிலும் ஒரு நகரம் அமைந்துள்ளது.
குஜராத்தின் வெள்ளை பாலைவனமான கட்ச் பகுதியின் விளிம்பில் அமைந்துள்ள இந்த நகரத்தின் பெயர் தோலாவிரா.
ரான் ஆஃப் கட்ச் என்றும் அழைக்கப்படும் கட்ச்சின் வெள்ளை பாலைவனம் ஒரு பெரிய உப்பளமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இங்கு ஒரு கடல் இருந்தது.
சிந்து நாகரிகத்தின் போது தோலாவிரா ஒரு முக்கியமான துறைமுகமாக இருந்துள்ளது. காலப்போக்கில் ஒரு நாள் அங்கிருந்த கடல் திடீரென மறைந்து, அதன் ஊரின் பண்பாட்டையும் தன்னுடன் எடுத்துக்கொண்டது. அந்த கடலின் எச்சங்கள் தான் உப்பு நிரம்பிய ரான் ஆஃப் கட்ச்.
இங்குள்ள மக்களுக்கு என்ன நடந்தது, இவர்கள் திடீரென்று எப்படி ஊரை விட்டு வெளியேறினார்கள், இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதியான பதில்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு முன்னேறிய நகரத்தை உருவாக்க தேவையான ஞானமும், அறிவியலும், கலையும் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது?
பாலைவனத்திற்கும் கடலுக்கும் நடுவில் அமைந்துள்ள நகரம்

கட்ச்சின் கடைசி முக்கிய நகரமான காந்திதாமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் காதிர்பெட் என்ற இடம் உள்ளது. இந்த தீவில் தோலாவிரா என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த இடத்தில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நாகரிகத்தின் ஒரு பகுதியாக பரபரப்பான துறைமுகம் இருந்தது.
இந்தக் கலாசாரம் அக்காலத்தில் மிகவும் முன்னேறிய ஒன்றாக இருந்தது. புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் வசந்த் ஷிண்டே, தோலாவிரா குறித்து சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
"தோலாவிரா அன்றைய ஹரப்பா நாகரிகத்தின் முக்கியமான வர்த்தக துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக சிந்துவிலிருந்து சௌராஷ்டிரா செல்லும் வழியில் வணிகர்கள் தங்குவதற்கும் பாதுகாப்பிற்காகவும் இந்த நகரம் கட்டப்பட்டிருக்க வேண்டும்," என்கிறார் வசந்த் ஷிண்டே.
அப்போது இங்கு கடலும், பக்கத்தில் பாலைவனமும் இருந்தது. இந்த நகரம் கடலுக்கும் பாலைவனத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
தனித்துவமான நீர் வழங்கல் அமைப்பு

பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் இந்நகரம் அக்காலத்தில் தண்ணீர்ப் பிரச்னையைச் சந்தித்திருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது நாங்கள் அந்தப் பகுதிக்குச் சென்றபோது கூட, தண்ணீர்தான் இங்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.
இந்த இடம் ராபர் தாலுகாவிலிருந்து 105 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பகுதியில் நீங்கள் ஒருசில சிறிய கிராமங்களை மட்டுமே பார்க்கமுடியும். மற்ற அனைத்தும் வெறிச்சோடி உள்ளன.
இங்கு காவலராகப் பணிபுரியும் நாக்ஜி பர்மாரைச் சந்தித்தோம். அவர் கூறுகையில், "என், பெற்றோரின் உயிர்கள் இங்கு தொலைந்துவிட்டன. நாங்கள் தண்ணீருக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம். அது கிடைக்காததால், எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, வாழ்க்கையை நடத்துவது சவாலாக மாறிவிட்டது."
மேம்பட்ட தொழில்நுட்பத்தால் இன்று சாத்தியமில்லாதது, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி சாத்தியமானது?
முதல் முக்கியமான விஷயம் அக்கால தயாரிப்பாளர்களின் மனவுறுதி.
அடுத்தது அப்போது பயன்படுத்தப்பட்ட தொலைநோக்கு பார்வையுள்ள நவீன தொழில்நுட்பம்.
பிபிசி மராத்தி சேவையிடம் பேசிய டாக்டர் ஷிண்டே, "தோலாவிரா என்ற பழங்கால நகரம் உண்மையில் இரண்டு நதிகளுக்கு இடையில் அமைந்திருந்தது. அதன் அமைப்பைப் புரிந்து கொள்ள, நீங்கள் முதலில் பாலைவனத்தில் பருவமழையை புரிந்து கொள்ள வேண்டும்."
பாலைவனத்தில் பொதுவாக மழை பெய்வதில்லை. மேகவெடிப்பு போன்ற காரணங்களால் மட்டுமே எப்போதாவது மழை பெய்யும், எனவே, சிந்து நாகரிகத்தை நிறுவியவர்கள் இங்கு பாயும் மன்சார், மன்ஹர் ஆகிய இரு நதிகளுக்கு இடையே தோலாவிரா நகரத்தை உருவாக்கினர்.
இங்கு ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இப்பகுதியில் பாசனம் மற்றும் நீர் வழங்கல் போன்ற அதிநவீன வசதிகளைக் கண்டறிந்துள்ளனர்.

நகரைச் சுற்றிலும் பெரிய குளம், குட்டை, கிணறு போன்ற நீர்நிலைகள் இருந்தன. அதேபோல இந்த நகரம் கழிவுநீர் மேலாண்மைக்கு ஒரு நல்ல உதாரணமாக இருந்தது.
பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தின் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க, நகரைச் சுற்றி நீர் ஓடும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை சேமிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
“பாலைவனத்தில் பலத்த மழை பெய்யும்போது, இந்த இரண்டு ஆறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளநீரை வீணாக்காமல் பல தடுப்பணைகளைக் கட்டி அந்த நீரை நகரத்திற்குத் திருப்பினர். இந்த தண்ணீர் மேய்ச்சல் நிலங்கள் வழியாக நகரில் உள்ள குட்டைகளுக்கு வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. தாழ்வான குட்டைகள் முதலில் நிரம்பி, அதிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் அடுத்தடுத்த குட்டைகளை நிரப்பும் வகையில் இங்கு நீர் வழங்கல் அமைப்பு இருந்தது,“ என டாக்டர் ஷிண்டே கூறுகிறார்.
தோலாவிராவின் மற்றொரு ஆச்சரியமான அமைப்பு நிலத்தடி நீரை சேமிக்கும் முறையாகும். வெள்ளத்தின் போது நீரோட்டத்தை பாசன நிலங்களின் வழியாக திருப்பி, நிலத்தடியில் சேமிக்கும் பழக்கம் இங்கிருந்துள்ளது.
இதனால் இந்த நகரத்திலுள்ள நீர்த்தேக்கம், அணைகளில் நீர் இருப்பு குறைந்தால், கிணறுகளில் தேங்கியிருக்கும் நீரை பயன்படுத்தும் வகையில் இங்கு நீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டது.
“திடீர் வெள்ளம் ஏற்பட்டால் மக்களின் குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என்பதே இந்த நீர்பாசன அமைப்புகளின் நோக்கமாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் உலகில் வேறு எங்கும் இதுபோன்ற நவீன நீர் வழங்கல் வசதிகள் இருந்ததற்கான குறிப்பிடத்தக்க சான்றுகள் இல்லை,“ என்று டாக்டர் ஷிண்டே கூறினார்.
நகர அமைப்பு

பட மூலாதாரம், Getty Images
பண்டைய நகரமான தோலாவிராவின் மூன்று பகுதிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது மேல் நகரம், மத்திய நகரம் மற்றும் கீழ் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இம்மூன்று பகுதிகளுக்கு பல பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அனைத்து கட்டுமானங்களும் இந்த பகுதியில் பரவலாக கிடைத்த கல்லை பயன்படுத்தி கட்டப்பட்டவை. இவை இன்றும் நீடித்து நிற்கின்றன.
இந்தக் கோட்டையின் அனைத்துப் பக்கங்களிலும் நுழைவுவாயில்கள் உள்ளன. மேலும் இந்த கோட்டையினுல் வந்து செல்பவர்கள் பற்றி விசாரணை செய்ய நுழைவுவாயில்களுக்கு அருகில் காவலர்களுக்கான அறைகள் உள்ளது.
தோலாவிராவின் சாலைகள் நன்கு அகலமாக அமைக்கப்பட்டிருந்தன. வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு என நான்கு திசைகளையும் இணைக்கும் வகையில் அந்த சாலைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
சாலையின் இருபுறமும் வீடுகளும், பிற கட்டிடங்களும் உள்ளன.
இந்த நகரம் மேல் நகரம், மத்திய நகரம் மற்றும் கீழ் நகரம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“மேல் பகுதிகளில், பெரிய வீடுகளைக் காணலாம். அன்றைய சமூக அமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் அங்கு வாழ்ந்திருக்க வேண்டும். நிர்வாக அதிகாரிகள் அங்கு தங்கியிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் அலுவலகங்களை மத்தியப்பகுதியில் வைத்திருக்கலாம். வணிக வர்க்கம், முக்கிய கலைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் அங்கு வாழ்ந்திருக்கலாம். கீழ் நகரத்தில் எளிய மக்கள், தொழிலாளி வர்க்கம் வாழ்ந்தனர்,“ என்று டாக்டர் ஷிண்டே தெரிவித்தார்.
சுனாமி பாதுகாப்பு

உலகில் வேறு எங்கும் இல்லாத தோலாவிராவின் மற்றொரு முக்கிய அம்சம், நகரத்தின் கோட்டைகள் ஆகும்.
“கோட்டையைச் சுற்றி கிட்டத்தட்ட 18 மீட்டர் உயரத்திற்கு கரை அமைக்கப்பட்டிருந்தது. இது கீழ் நகரத்தின் சில பகுதிகளில் 25 மீட்டர் வரை இருந்துள்ளது. ஒரு கோட்டைக்கு இவ்வளவு வலுவான பாதுகாப்பு அரண் தேவையா? எதிலிருந்து தப்பிக்க இந்த அமைப்பு செய்யப்பட்டிருந்தது," என்று டாக்டர் ஷிண்டே கேள்வி எழுப்புகிறார்.
சிந்து சமவெளி நாகரிக மக்கள் மீது படையெடுக்கும் அளவுக்கு உலகம் முழுவதும் ஒரு சில மேம்பட்ட நாகரிகங்கள் மட்டுமே அன்றைய காலகட்டத்தில் இருந்தன. அதன்மூலம் படையெடுப்பை தடுக்க இவை கட்டப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பிறகு வேறென்ன காரணமாக இருக்க முடியும்?
அறிஞர்களின் கூற்றுப்படி, இந்த பண்டைய நகரம் கடலுக்கு அருகாமையில் இருப்பதால் சுனாமி அபாயத்தில் இருந்திருக்க வேண்டும்.
“பெரிய சுனாமி அலைகள் வரும்போது நகரத்தைப் பாதுகாக்க மூன்று பக்கமும் சுவர்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த நாகரிகம் எவ்வளவு மேம்பட்டது என்றும் நவீனமானது என்பதற்கு மிக முக்கியமான ஆதாரம் கோட்டையை சுனாமியிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் ஆகும். இதுபோன்ற சான்றுகள் உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை, ”என்று டாக்டர் ஷிண்டே விவரிக்கிறார்.
ஒரு சிறப்பு மைதானம்

பட மூலாதாரம், Getty Images
பழங்கால நகரமான தோலாவிராவின், மற்றொரு சிறப்புகளில் ஒன்று இங்குள்ள மைதானம் ஆகும்.
இந்த நகரம் வர்த்தக மையமாக மட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் இங்கு நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன.
மேல் நகரம் மற்றும் மத்திய நகரம் இடையே ஒரு பரந்த திறந்தவெளி மைதானம் இருப்பதாகவும் அதில் சில படிக்கட்டுகள் இருப்பதாகவும் டாக்டர் ஷிண்டே கூறுகிறார்.
"இது அந்தக் காலகட்டத்தின் பெரிய விளையாட்டு மைதானமாக இருந்திருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விளையாட்டோடு மற்ற விழாக்கள், யாத்திரைகள் இங்கு நடந்திருக்கலாம். இங்குள்ள சான்றுகள் மூலமாக உலகின் முதல் மைதானமாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது,” என்கிறார் டாக்டர் ஷிண்டே.
2021 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ இந்த இடத்தை உலக பாரம்பரிய தளமாக அங்கீகரித்தது. உலகில் எஞ்சியிருக்கும் பண்டைய சிந்து நாகரிகத்தின் சுவடுகளில், உலக பாரம்பரிய தள அந்தஸ்தைப் பெற்ற இந்தியாவில் இருக்கும் ஒரே இடம் இதுதான்.
இந்த இடம் 1968 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலுள்ள தோலாவிரா கிராமத்தின் பெயரிலிருந்து இந்த பகுதிக்கு தோலாவிரா என்ற பெயர் வந்தது. இந்த நகரத்தை கண்டுபிடித்த பெருமைக்குரியவர் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ஜகத்பதி ஜோஷி ஆவார். தோலாவிராவில் சுமார் 1500 ஆண்டுகள் வரை மக்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இங்கு காணப்படும் எச்சங்கள் கிமு 3000 முதல் 1500 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. இங்கு 1989 முதல் 2005 வரை அகழாய்வு பணிகள் நடந்தன.
இந்த துறைமுகத்திலிருந்து ஓமன் தீபகற்பம், மெசபடோமியாவிற்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நகரம் எப்படி அழிந்தது?

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
சிந்து நாகரிகத்தின் அழிவுக்கு ஆரியர்களே காரணம் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இன்றைய கஜகஸ்தானில் இருந்து குதிரை சவாரி மற்றும் மாடு மேய்க்கும் பழங்குடியினராக ஆரியர்கள் வந்தனர்.
ஆரியர்களின் சிறப்பான போர் உத்திக்கு எதிராக சிந்து சமவெளி நாகரிகத்தால் வாழ முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆரியர்கள்தான் பிற்காலத்தில் இந்தியாவில் வேதிக் மதத்திற்கு அடித்தளமிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியும் தொல்பொருள் ஆய்வாளருமான சர் ராபர்ட் எரிக் மார்டிமர் வீலர், "ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்து நதிக்கரையிலிருந்த ஹரப்பன் நாகரீகத்தை அழித்தார்கள்," என்று எழுதினார்.
சிந்து நாகரிகம் அழிந்து கொண்டிருக்கும் போது, இந்தப் பண்பாட்டில் முக்கியமான நகராக விளங்கிய தோலாவிரா எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?
தோலாவிரா கலாசாரம் தண்ணீரால் அழிந்தது, அதற்கு சுனாமி தான் காரணம் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
இந்த கடலோர நகரத்தின் முடிவு சுனாமியால் ஏற்பட்டது என்று தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் டாக்டர் ஷிண்டே இதிலிருந்து வேறுபடுகிறார்.
இந்த நகரம் மற்றும் ஒட்டுமொத்த சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு 'காலநிலை மாற்றம்' தான் காரணம் என்கிறார் ஷிண்டே.
“பண்டைய காலநிலை எப்படி இருந்தது என்று எல்லா இடங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது. சிந்து நாகரிகம் மட்டும் காலநிலை மாற்றத்திற்கு ஆளாகவில்லை என்பதை இது காட்டுகிறது. தட்பவெப்ப நிலை தொடர்ந்து மாறி வருகிறது, மேலும் இது மனித நாகரிகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், கிமு 2000 இல், எகிப்தின் கலாசாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. மெசபடோமிய நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கிது. அடுத்து சிந்து நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கியதாகத் தெரிகிறது.“
என்ன காரணத்திற்காக இந்த நகரம் காணாமல் போனதோ, அதே காரணத்தினால் இந்த நகரை ஒட்டியிருந்த கடலும் வற்றி இப்போது உப்பு பாலைவனமாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












