டிலனாய்: திருவிதாங்கூர் மன்னரிடம் போர்க்கைதியாக பிடிபட்டு படைத்தளபதியாக உயர்ந்த டச்சு வீரனின் கதை

டச்சு வீரன் டிலனாய்
    • எழுதியவர், மகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வலுவான ஐரோப்பிய படையை வீழ்த்திய முதல் இந்திய ராஜ்ஜியமான திருவிதாங்கூரின் ராணுவ தளபதியாக ஒரு டச்சு போர்க் கைதி இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா...

ஆம். வரலாற்றில் இடம் பிடித்த குளச்சல் யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்ட டச்சு வீரர் டிலனாய் தான் பின்னாளில் மன்னரின் நம்பிக்கையை பெற்று திருவிதாங்கூர் ராணுவத்தின் தலைமை தளபதியாக உயர்ந்தார்.

தற்போதைய கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புலியூர் குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது உதயகிரி கோட்டை. தமிழ்நாடு வனத்துறை பராமரிப்பில் உள்ள இக்கோட்டை தற்போது உதயகிரி பல்லுயிரின பூங்காவாக செயல்படுகிறது.

அடர்ந்த வனம் போல காட்சியளிக்கும் இங்கு உலா வரும் புள்ளி மான்கள், கிளி, மைனா, மயில் போன்றவற்றை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோருக்கு, அதே வளாகத்தில்தான் திருவிதாங்கூர் ராணுவ தளபதி டிலனாயின் கல்லறையும் இருக்கிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

போர் கைதியாக பிடிபட்ட டிலனாய், திருவிதாங்கூர் ராணுவ தளபதியாக உயர்ந்த வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

குளச்சல் கடற்கரையில் 1741 ஜூலை 31ம் தேதி நடந்த போரில் திருவிதாங்கூர் ராணுவத்தால் டச்சு கிழக்கிந்திய கம்பெனி (Dutch East India Company) படை தோற்கடிக்கப்பட்டது. இஸ்தேசியஸ் பெனடிட் டிலனாய் (Eustachius De Lannoy), டுனாடி (Donadi) உட்பட 24 டச்சு வீரர்கள் போர் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர் என்று திருவிதாங்கூர் ஸ்டேட் மேனுவல் (The Travancore State Manual, Vol 1by V Nagam Aiya) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டச்சு வீரன் டிலனாய்

முதல் பார்வையிலேயே மன்னரை ஈர்த்த டிலனாய்

திவானும் வரலாற்று ஆசிரியருமான சங்குன்னி மேனன் எழுதியுள்ள ’முந்தைய கால திருவிதாங்கூர் வரலாறு’ (A History of Travancore from The Earliest Times- P. Shungoonny Menon) என்ற நூலில், "போர் கைதிகளில் டிலனாய், டுனாடி ஆகிய இருவரும் திருவிதாங்கூர் படை தளபதி ராம ஐய்யன் தளவாயின் கவனத்தை ஈர்த்தனர். அவர்கள் இருவரும் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா முன் ஆஜர்படுத்தப்பட்டனர்." என்று கூறப்பட்டுள்ளது.

"தோற்றத்தை பார்த்தே ஒருவரை மதிப்பிடும் ஆற்றல் பெற்ற மன்னர், டச்சு வீரர் டிலனாயை பார்த்த உடனேயே அவர் துணிச்சல்மிக்க சிறந்த போர் வீரன் என்பதை உணர்ந்தார். அவர்கள் இருவரையும் சிறப்பாக கவனித்துக் கொள்ளவும் கண்ணியமாக நடத்தவும் தளபதி ராம ஐய்யன் தளவாய்க்கு மன்னர் உத்தரவிட்டார். மன்னரின் உபசரிப்பில் அகமகிழ்ந்த இருவரும் மன்னரின் கீழ் பணிபுரிய தயாராயினர். அவர்களுக்கு திருவிதாங்கூர் ராணுவத்தில் பணி வழங்கப்பட்டது."

'ஜெனரல் டிலனாய்' ஆனது எப்படி?

முதலில் மன்னரின் மெய்காப்பாளர்கள் படைப்பிரிவுக்கு பயிற்சியளிக்கும் முக்கிய பொறுப்பு டிலனாயிடம் வழங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே அப்பிரிவுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து மன்னரின் கவனத்தை அவர் ஈர்த்தார்.

டிலனாயின் ராணுவ அறிவையும், தனித்திறனையும் கண்ட மன்னர் அவரை தனது மெய்காப்பாளர்கள் படைப்பிரிவின் தலைவராக நியமித்தார். தொடர்ந்து பத்மநாபபுரத்தில் உள்ள படைப்பிரிவை நிர்வகிக்கும் பொறுப்பையும் அவருக்கு வழங்கினார்.

தொடர்ந்து தளபதி ராம ஐய்யன் தளவாயின் கள முதன்மை உதவி கட்டளை தளபதியாக (Chief Assistant in Command of the Filed Force) டிலனாய் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து நடந்த பல போர்களில் காயங்குளம், அம்பலபுழை உள்ளிட்ட பல பகுதிகளைக் கைப்பற்ற டிலனாய் உறுதுணையாக இருந்தார். அவரது வீர, தீர செயல்களால் அகமகிழ்ந்த திருவிதாங்கூர் மன்னர் அவருக்கு ராணுவ தலைமை தளபதியாக (Commander-in-Chief) பதவி உயர்வு அளித்தார். கேப்டன் டிலனாய் ’ஜெனரல் டிலனாய்’ ஆனார்.

டிலனாய் திருவிதாங்கூர் மக்களால் ’வலிய கப்பித்தான்’ (Great Captain) என்று அழைக்கப்பட்டார்.

டச்சு வீரன் டிலனாய்

உதயகிரி கோட்டை நிர்மாணம்

நாட்டுக்கு வலுவான திறன்மிக்க பாதுகாப்பு அரண் தேவை என்பதை உணர்ந்த மன்னர், ஜெனரல் டிலனாய் மேற்பார்வையில் நாட்டின் பல பகுதிகளில் கோட்டைகள் கட்ட உத்தரவிட்டார்.

அதன்படி, பத்மநாபபுரத்தில் உள்ள மன்னரின் அரண்மனையை சுற்றியும், உதயகிரியிலும், கன்னியாகுமரியிலும் உறுதியான கற்கோட்டைகளை கட்டிய டிலனாய் அவற்றை விரைவாகவும் குறைந்த செலவிலும் கட்டி முடித்தார் என்று அந்த நூல் கூறுகிறது.

ஐரோப்பாவில் இன்றைய பெல்ஜியத்தில் பிறந்தவரான டிலனாய் ஒரு கத்தோலிக்கர். டச்சு படையில் பயிற்சி பெற்ற அவர் திருவிதாங்கூர் படைகளிடம் சரணடையும் போது அவருக்கு 27 வயது தான் என்கிறார், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் அ.கா.பெருமாள்.

அவர் மேலும் கூறுகையில், "திருவிதாங்கூர் படை வீரர்களுக்கு ஐரோப்பிய பாணியில் போர் பயிற்சியளித்து, படையை நெறிப்படுத்தும் பொறுப்பு டிலனாயிடம் தரப்பட்டது. அதை அவர் நம்பகத்தன்மையோடு மன்னருக்கு நன்மை ஏற்படும் விதத்தில் செய்தார். வீரர்களுக்கு பீரங்கி குண்டு தயாரிக்கவும், துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கையாளவும் பயிற்சி கொடுத்தார். உதயகிரி கோட்டையில் ஒரு நிலையான படையை வைத்ததுடன் வெடிமருந்து தயாரிக்கும் ஆலையையும் அவர் எழுப்பினார். மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் அவர் திகழ்ந்தார்." என்றார்.

டச்சு வீரன் டிலனாய்

குளச்சல் போர் நினைவுத்தூண்

டச்சு படைகளை மன்னர் மார்த்தாண்ட வர்மா தோற்கடித்ததன் நினைவாக குளச்சலில் திருவிதாங்கூர் அரசால் போர் நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை 31 ம் தேதி இந்திய ராணுவத்தினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

குளச்சல் போரில் டச்சுப்படைகளை திருவிதாங்கூர் ராணுவம் வெற்றி கொள்ள குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்களும் உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது.

டச்சு வீரன் டிலனாய்

உதயகிரி கோட்டையில் டிலனாய் கல்லறை

புலியூர் குறிச்சியில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை வேணாடு மன்னரான வீர ரவிவர்மா (கி.பி., 1595-1607) காலகட்டத்தில் மண் கோட்டையாக இருந்து பின்னர் மன்னர் மார்த்தாண்ட வர்மா ( 1729-1758) காலகட்டத்தில் கற்கோட்டையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையில்தான் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சியும், டிலனாய் மேற்பார்வையில் போர் தளவாடங்களும் பீரங்கி குண்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. போர் தளவாடங்களை சேமிக்கும் கிடங்காகவும், சிறைக்கூடமாகவும் இந்தக் கோட்டை பயன்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள தேவாலயம் டச்சு தளபதி டிலனாயால் கி.பி. 17 ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டச்சு படை வீரரான டிலனாய், மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்திலும் அதன் பின்னர் வந்த தர்ம ராஜா காலத்திலும் திருவிதாங்கூர் படை தளபதியாக பணியாற்றி கி.பி. 1777ல் மரணமடைந்தார். உதயகிரி கோட்டை வளாகத்திலேயே அவருக்கு கல்லறை எழுப்பப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையில் தமிழ் மற்றும் லத்தின் மொழிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு அதில் டச்சு அரசு சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.

டச்சு வீரன் டிலனாய்

டிலனாயின் வாரிசுகள் என்ன ஆனார்கள்?

டிலனாய் கல்லறைக்கு அருகில் அவரது மனைவி மார்கரெட்டா டிலனாய், அவரது மகன் வான் இஸ்தாக்கியோ மற்றும் அவருடன் பணியாற்றிய அவரது அடுத்த நிலை ராணுவ அதிகாரி பீட்டர் ப்ளோரிக் ஆகியோரின் கல்லறைகளும் இருக்கின்றன.

தளபதி டிலனாயின் மகன் வான் இஸ்தாக்கியோ அவரது 19ம் வயதில் தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நடந்த ஒரு போரில் காயமடைந்து ஓராண்டு சிகிச்சைக்கு பிறகு 1766-ம் ஆண்டு இறந்ததாகவும் அவர்களது கல்லறையில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிலனாயின் வாரிசுகள் பிற்காலத்தில் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்து விட்டதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் அ.கா.பெருமாள் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: