தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக தொடர்வாரா?

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசியல் களத்தில் இப்போதைய விவாதப் பொருளாக இருப்பது அமைச்சரவை மாற்றம்தான். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் நடக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் யார் மாற்றப்படுவார், யாருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்படும் என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு விடையளிக்கும் விதமாக தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கி, புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இதுவரை 3 முறை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இப்போது மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஒதுக்கப்படும் துறை தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பதவியேற்பு விழா வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்க இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அரசு அதிகாரி மீது கல்லெடுத்து வீசியதையடுத்து விமர்சனத்திற்குள்ளான நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, பதவியேற்புக்கு பிறகு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என சென்னை தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம், கே.என்.நேரு - திருச்சி சிவா சர்ச்சை, பொதுக்கூட்ட மேடைகளில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் பதிவு செய்யும் சர்ச்சை பேச்சு என பல விவகாரங்களில் திமுக அமைச்சர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.
அதனால் எந்தெந்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
அமைச்சரவை மாற்றம் - சொல்லும் செய்தி என்ன?

தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது முதலமைச்சர் உட்பட 35 அமைச்சர்கள் இருக்கிறார்கள். சட்டப்படி தமிழ்நாட்டு அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும். அதாவது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 15% பேர் மட்டுமே அமைச்சராக இருக்க முடியும் என்ற விதி உள்ளது.
அதன் அடிப்படையில் நாசருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சரவையில் இப்போது இடமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், சில அமைச்சர்கள் மீது எழுந்த விமர்சனத்திற்கான முதலமைச்சரின் பதிலாக இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என தெரிவித்தார்.
"தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் மீது துறை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தடம் மாறக்கூடிய அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம். அதில் ஒரு சிலருக்கு சிறிய துறைகள் ஒதுக்கப்படலாம். இப்படிச் செய்வதன் மூலம் கட்சியினர் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியில் முதலமைச்சரின் ஆளுமை வெளிப்படும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தான் பலவீனமான முதலமைச்சர் இல்லை என்பதை உணர்த்தும் செயலாக இருக்கும்," என்று குபேந்திரன் தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் என்பது எதிர்கட்சிகளுக்கான செய்தியாக இருக்காது, மாறாக ஆட்சியின் நலனுக்காகவே செய்யப்படுகிறது என்று பிபிசியிடம் மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
"நிதியமைச்சர் ஆடியோ விவகாரம், பொதுவெளியில் சில மூத்த அமைச்சர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட விவகாரம் என கடந்த சில மாதங்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக விமர்சனத்தை முன்வைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தன. இதற்கான நடவடிக்கையாகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும்," என அவர் கூறினார்.
நிதியமைச்சர் மாற்றப்படுவாரா?

பட மூலாதாரம், Twitter/ptrmadurai
தமிழ்நாடு அமைச்சரவையில் துறை ரீதியாக மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படும் நிலையில், மிக முக்கியமான மாற்றமாக கருதப்படுவது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மாற்றம் என தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் தொடர்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "பிடிஆரின் ஆடியோ விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. பிடிஆர் ஃபைல்ஸ் தொடர்பான சர்ச்சையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை நிச்சயம் இருக்கும்," என கூறினார்.
"அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தால், நிச்சயமாக பழனிவேல் தியாகராஜனிடம் தற்போது இருக்கும் நிதித்துறை மாற்றப்படும். அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஆடியோ விவகாரம் தொடர்பாக அவர் மறுப்பு கூறியிருந்தாலும், கட்சிக்குள் இருக்கும் சில சீனியர் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மீது மக்கள் நலத்திட்டங்களுக்கு முழுமையாக பணம் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முதலமைச்சரிடம் முன்வைத்து இருக்கின்றனர். அதனால் இந்த இரண்டு விவகாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவரின் துறை மாற்றப்படும்," என்று பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்தார்.
அரசியல் அழுத்தத்தின் காரணமாக நிதியமைச்சர் பொறுப்பில் மாற்றம் நிகழலாம் என்று அவதானிக்கிறார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.
"நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை அவரின் நிர்வாக செயல்பாடுகளில் எந்த குறையும் முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லவில்லை. ஆனால் மக்கள் நலத்திட்டங்கள், சில இலவச திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவதில் அவருக்கு சில மாற்றுக்கருத்து இருக்கிறது. இதன் காரணமாக சில அமைச்சர்களுடன் அவருக்கு முரண்பாடு உள்ளது. ஆனால் ஆடியோ விவகாரம் தொடர்பாக எழுந்த அரசியல் விமர்சனங்களுக்கான எதிர்வினையாக அவரின் துறை மாற்றப்பட்டு வேறு துறை அவருக்கு வழங்கப்படலாம்."
ஜெயலலிதா vs மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/MKSTALIN
2021ஆம் ஆண்டு மே மாதம், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இதுவரை 3 முறை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவருக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
அடுத்ததாக 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. இம்முறை பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டது. கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது.
தற்போது நாசருக்கு பதிலாக புதிதாக ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடிக்கடி அமைச்சரவையில் மாற்றங்கள் நடப்பது ஆட்சிக்கு நல்லதா என்ற கேள்விக்கு பதிலளித்த குபேந்திரன், நல்லது, கெட்டது என்று இதை பார்க்கக்கூடாது. தவறு செய்யும் அல்லது சரியாக வேலை செய்யாத அமைச்சர்களை மாற்றுவது ஒர் ஆட்சிக்கு தேவையானது என்று கூறினார்.
"கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் போது அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் திமுக தலைவராக இருந்த கருணாநிதி ஆட்சியின் போது அமைச்சரவை மாற்றங்கள் பெரிதாக நடந்ததில்லை. துறையுடன் ஒரு நீண்டகால தொடர்பும், நிபுணத்துவமும் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வளவு சீக்கிரம் யாரையும் கருணாநிதி மாற்றியதில்லை," என்றார் ஷ்யாம்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடக்கும் அமைச்சரவை மாற்றங்களைப் போல திமுக ஆட்சியில் நடக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த குபேந்திரன், "ஜெயலலிதா ஆட்சியையும், மு.க.ஸ்டாலின் ஆட்சியையும் ஒப்பிட முடியாது. ஜெயலலிதா ஆட்சியில் பல முறை அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது. அதில் சில மாற்றங்களுக்கு சரியான காரணத்தை நம்மால் விளக்கமுடியாது. ஆனால் திமுக ஆட்சியில் அப்படி காரணம் ஏதுமின்றி மாற்றங்கள் நடக்கவில்லை," என்றார்.
ஆட்சிக்கு பலனளிக்குமா அமைச்சரவை மாற்றம்?

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாடு அமைச்சரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறை உள்பட சில முக்கிய அமைச்சர்களின் துறை மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு டி.ஆர்.பி. ராஜாவுக்கு என்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது, எந்தெந்த அமைச்சர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும்.
இந்நிலையில் இந்த அதிரடி மாற்றங்கள் திமுக அரசின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலாக இருக்குமா அல்லது விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த மாற்றங்கள் மூலம், முதலமைச்சருக்கு நெருக்கமானவராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி அமைச்சர்கள், அதிகாரிகள் வட்டாரங்களில் சென்று சேர்ந்து இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.
முன்னாள் அமைச்சர் நாசர், பல ஆண்டுகளாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நண்பராக இருப்பவர். தனிப்பட்ட முறையிலும், கட்சி ரீதியாகவும் முதலமைச்சருடன் நெருக்கமாக இருந்தவர். ஆனாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்பட்டால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என்பதையே இந்த அமைச்சரவை மாற்றம் காட்டுகிறது, என்றார்.
அதேபோல நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் குடும்பம் முதலமைச்சரின் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறது.
நிதியமைச்சரின் நிதி மேலாண்மைக் கொள்கைகளால் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டதை தனது பல சாதனைகளில் ஒன்றாக திமுக கூறிவந்தாலும், ஆடியோ விவகாரத்தால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடியாக பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.
ஆனால் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றினால் அது நிச்சயம் திமுக அரசுக்கு எதிரான விமர்சனமாக எழுப்பப்படும் என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












