தமிழ்நாட்டில் தூய்மை பணிகளை முழுவதுமாக தனியார்மயமாக்க முடிவு: அச்சத்தில் தொழிலாளர்கள் - நிலவரம் என்ன?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் தூய்மை பணியிடங்களை இனி முழுவதுமாக தனியார் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நிரந்தரப் பணி கோரி தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில் இனி நிரந்தரப் பணி என்பதே கிடையாது, பணிகள் அனைத்துமே வெளி முகமை மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்கிற முடிவுக்கு தூய்மை பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை எண் 152 ஐ வெளியிட்டிருந்தது.
அதில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், உள்ளிட்ட நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த பணியிடங்களை நிரப்பக்கூடாது. எதிர்வரும் காலங்களில் இப்பணிகளை (services) வெளிமுகமை மூலம் (Outsourcing as services) மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இதற்கு பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியிருந்தனர். 152 அரசாணையை நிறைவேற்றக்கூடாது எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இந்த அரசாணையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்குவதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவது பற்றி பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்குப் பதிலளித்த மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணிகளை முழுவதும் அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பின்னர் இந்தப் பிரச்சனைகள் இருக்காது எனப் பதிலளித்திருந்தது. ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு இது பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தூய்மை பணியை முழுவதும் அவுட்சோர்சிங் செய்வது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. தமிழ்நாடு முழுவதும் இது செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஒப்பந்தம் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாமன்ற கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் கிடைத்த பிறகு படிப்படியாக அமல்படுத்தப்படும். தற்போது பணியில் இருக்கும் நிரந்தரப் பணியாளர்கள் மாநகராட்சியிலே பள்ளி பராமரிப்பு போன்ற மாற்று பணிகளில் அமர்த்தப்படுவார்கள்,” என்றார்.
"ஒப்பந்த பணியாளர்களுக்கு விடியல் இல்லை"
தூய்மை பணியாளர்களுக்காக பணியாற்றி வரும் சமூக நீதி கட்சியின் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இந்த அரசாணை வெளியிடப்பட்டதில் இருந்தே அதை பின்வாங்க வேண்டும் எனப் போராடி வருகிறோம். இந்த அரசாணையை வெளியிடும் முன்பாக முறையான கலந்தாலோசனை மேற்கொள்ளப்படவில்லை. அரசு தரப்பில் இதற்கு முறையான காரணம் சொல்லப்படவில்லை.
கோவை மாநகராட்சியைப் பொருத்தவரை அவுட்சோர்சிங் செய்வது செலவீனங்களை உயர்த்தவே செய்யும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம், பணி நேரம், விடுமுறை என்பது கிடைப்பதில்லை. அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாகப் பெறவே பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. 10, 15 ஆண்டுகளாக இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
250 நாட்கள் பணி செய்தால் நிரந்தரப் பணி வழங்கலாம் என விதி இருந்தது. ஆனால் பல வருடங்களாக வேலை செய்து வரும் இவர்கள் யாருக்குமே நிரந்தரப் பணி வழங்கப்படவில்லை. இனி நிரந்தரப் பணி என்பதே கிடையாது என்பது இவ்வளவு ஆண்டுகளாக வேலை செய்த பணியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஒப்பந்த பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு போதிய நிவாரணமோ, கருணை அடிப்படையில் பணியோ வழங்கப்படுவது கிடையாது. எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் வேலை மட்டும் செய்ய வேண்டும் என்கிற நிலை உள்ளது. ஒப்பந்த பணியாளர்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு தற்போது வரை விடியல் இல்லை. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்,” என்றார்.

"இலக்கு வைத்து வேலை வாங்குகிறார்கள்"
கடந்த 13 ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார் உமா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், “என்னுடன் வேலைக்குச் சேர்ந்த யாருக்குமே பணி நிரந்தரம் என்பது கிடைக்கவில்லை. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகே தற்போது தான் பணி நேரம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. நிரந்தரப் பணி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் தற்போது எல்லா பணிகளும் அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றுவதாகக் கூறிவிட்டார்கள். ஒவ்வொரு பணியாளரும் ஒரு நாளைக்கு இத்தனை கிலோ குப்பை சேகரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து வேலை வாங்குகிறார்கள்.
குறிப்பிட்ட அளவு கிடைக்கவில்லை என்றால் வேறு இடங்களுக்குச் சென்று சேகரிக்க சொல்கிறார்கள். ஒரு நாளைப் போல மறுநாள் இருக்காது. இது இலக்கு நிர்ணயித்து செய்யக்கூடிய வேலையும் கிடையாது. கேள்வி கேட்டால் ஒப்பந்ததாரர் இடமிருந்து சம்பளம் கிடைக்காது, வேலை பறிபோய்விடும் என்கிற பயத்தில் பலரும் பேச தயங்குகிறார்கள். இவற்றை கண்காணிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை,” என்றார்

திருப்பூர் மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் மாரியப்பன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் 22 ஆண்டுகளாக இந்த வேலை செய்துவிட்டேன். என் பணி முடிய இன்னும் 6 ஆண்டுகள் உள்ளன. தற்போது நிரந்தர பணியாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் அவர்கள் வசிக்கும் இடங்கள் அல்லது அருகிலே வேலை செய்து வருகின்றனர். தற்போது அவுட்சோர்சிங் செய்துவிட்டு வேறு இடங்களுக்கு வேலைக்கு அனுப்பப்போவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் எதுவும் செய்யப்படவில்லை. ஓய்வு பெறும் வயதில் உள்ள பெரும்பாலான பணியாளர்களை மாற்றுப் பணி என தொலை தூரமான இடங்களுக்கு அனுப்பினால் மிகவும் சிரமமாக இருக்கும். ஓய்வு பெறும் வரை இதே வேலையைச் செய்யவே நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.
"அவுட்சோர்சிங் அதிக ஊழலுக்கே வழிவகுக்கும்"
முழுவதும் அவுட்சோர்சிங் முறைக்கு மாறுவது ஊழலுக்கே வழிவகுக்கும் என்கிறார் சமூக ஆர்வலர் ஜான் சாமுவேல். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “152 அரசாணையில் தற்போது வேலையில் உள்ள பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு தான் அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே நிரந்தரப் பணியாளர்களை மாற்றிவிட்டு முழுமையாக ஒப்பந்த பணியாளர்களை நியமிப்போம் எனக் கூறுவது அந்த அரசாணைக்கும் முரணாகவே உள்ளது.
ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் ஒப்பந்த பணியாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்குவதில்லை. ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களுக்கு சேவை கட்டணம் மாநகராட்சி தரப்பில் வழங்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த பணியாளர்களுக்கான ஊதியத்திலும் ஒரு பங்கை எடுத்துக் கொள்கின்றனர். அதில் உள்ள முறைகேடுகள் பற்றி பல்வேறு புகார்கள் இருந்தும் அவை தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. இப்போதே மாநகராட்சியால் முறைகேடுகளை தடுக்க முடியவில்லை என்கிறபோது முழுவதும் அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றினால் மாநகராட்சியால் கண்காணிக்க முடியாது. இந்த முறை அதிக ஊழலுக்கே வழிவகுக்கும்,” என்றார்.

தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமாக நடக்கும் திமுக - சி.ஐ.டி.யூ
திமுக அரசு தன்னுடைய தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமாக நடக்கிறது என்கிறார் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு 1998 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அப்போதிலிருந்து தான் அரசு பணிகளில் அவுட்சோர்சிங் முறை தொடங்கியது. அவுட்சோர்சிங் முறையே கூடாது என்று தான் தொடர்ந்து கூறி வருகிறோம்.
152 அரசாணை வந்தபோதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மாநகராட்சி, நகராட்சிகளில் ஏற்கனவே பெரும்பாலான பணியிடங்கள் அவுட்சோர்சிங் முறையில் தான் உள்ளன. தற்போது பேரூராட்சிகளையும் அவுட்சோர்சிங் முறைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது தவறானது. எந்த மாநகராட்சியிலும் ஒப்பந்ததாரர்கள் முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
திமுக ஆட்சியில் தொழிலாளர் விரோத போக்கு அதிகரிப்பது துர்திருஷ்டவசமானது. திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் ஊதியம், வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் அரசின் செயல்பாடுகள் அதற்கு முரணாக உள்ளது.

பட மூலாதாரம், DMK official website
திருமுருகன்பூண்டி நகராட்சியில் இது தொடர்பான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அரசின் கொள்கை முடிவை மீண்டும் தீர்மானமாக முன்மொழிந்தால் நிறைவேற்றி தான் ஆக வேண்டும் என்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் அவற்றை பலவீனப்படுத்தவே செய்யும். பிற மாநிலங்களில் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தம் செய்யப்படுகிறார்கள். சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தனியார்மயம் வியாபித்திருக்கிறது,” என்றார்.
இது தொடர்பாக கருத்து பெற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை தொடர்பு கொண்டபோது அவரின் இணைப்பை பெற முடியவில்லை. அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் அவரின் கருத்தை இந்தக் கட்டுரையை பதிவேற்றும் தருணம் வரை பெற முடியவில்லை. அமைச்சரின் கருத்து கிடைக்கப்பெற்ற உடன் இந்தக் கட்டுரையில் இணைக்கப்படும் .
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் எனத் தெரிவித்து பிபிசி தமிழிடம் பேசினார், “அவுட்சோர்சிங் என்பது நீண்ட காலமாக அமலில் உள்ள ஒன்று தான். அது தற்போது ஒழுங்குபடுத்தப்படுகிறது. 152 அரசாணையால் யாருடைய பணியும் பாதிக்காது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று கூறி முடித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












