கோலியின் கணிப்பை தவறாக்கிய 'சால்ட்': லக்னோவைப் போல டெல்லியிலும் சலசலப்பு

DC vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை, ஃபில் சால்ட் அதிரடியால் 20 பந்துகள் மீதமிருக்கையிலேயே எட்டி டெல்லி கேபிடல்ஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் சீசனில் மிகப்பெரிய வெற்றியை டெல்லி கேபிடல்ஸ் அணி பெற்றது. லக்னோவில் ஆர்.சி.பி. அணி ஆடிய போட்டியில் கோலி - நவீன் உல்ஹக் மோதல் வெடித்ததைப் போன்றதொரு களேபரம் டெல்லியிலும் களத்தில் நடந்தேறியது.

டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனில் முதல் 5 ஆட்டங்கள் அனைத்திலும் தோல்விக்கு மேல் தோல்வி, ஆனால், அடுத்த 5 ஆட்டங்களில் ஒரு தோல்வி 4 வெற்றி எனத் தொடங்கியுள்ளது. இந்த சீசனின் 2வது பகுதியில்தான் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கிற்கு உயிர் வந்துள்ளது.

இந்த வெற்றியால் இரு அணிகளின் புள்ளிவிவரங்களும் பெரிதாக மாறவில்லை. இருப்பினும் இரு அணிகளுக்கும் அடுத்ததாகக் கிடைக்கும் வெற்றி பல வாய்ப்புக் கதவுகளைத் திறந்துவிடும்.

டெல்லி கேபிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல 8 வெற்றிகள் தேவை என்பதால், அடுத்துவரும் ஆட்டங்கள் அனைத்திலும் சிறந்த ரன்ரேட்டில் வெற்றி பெறுவது அவசியம். அதேசமயம், ஆர்சிபி அணி அடுத்துவரும் 5 போட்டிகளில் 3 ஆட்டங்களில் நல்ல ரன் ரேட்டில் வென்றால்தான் ப்ளே ஆஃப் கதவுகள் திறக்கும்

ஆர்சிபி அணி 10 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் நீடிக்கிறது.

சால்ட்டின் ஸ்வீட் விருந்து

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஃபில் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள்(6 சிக்ஸர், 8 பவுண்டரி) சேர்த்து ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார், ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

டெல்லி விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் இந்த சீசனில் தனது 5 இன்னிங்ஸில் 3 முறை டக்அவுட் ஆகியிருந்தார், ஒரு ஆட்டத்தில் 10 ரன்களுக்கும் குறைவாகச் சேர்த்திருந்தார். ஆனால், வார்னர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றிய சால்ட் அடித்த ஷாட்கள் ஒவ்வொன்றும் ஆர்சிபி அணிக்கு இடிபோல் இறங்கியது.

டெல்லியின் சிறிய மைதானத்தில் ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகள், சிக்ஸர்களாகப் சால்ட் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

டெல்லி கேபிடல்ஸ் ரசிகர்கள் நிச்சயமாக இதுபோன்ற ஆட்டத்தை நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள், அவர்கள் அனைவருக்கும் இனிப்பான விருந்தை சால்ட் அளித்துவிட்டார்.

RCB vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

3 ஆண்டுகளுக்குப் பின்...

இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க ஜோடி, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததும் முதல்முறையாக இந்தப் போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பவர் ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் சேர்த்ததும் இந்த சீசனில் முதல்முறையாகும்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு எதிராக ஒரு வெற்றியைக்கூட பெறாமல் டெல்லி கேபிடல்ஸ் தவித்த நிலையில் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

“சிராஜைக் குறிவைத்தோம்”

டெல்லி அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் “ எங்கள் வெற்றி பிரமிப்பாக இருக்கிறது, 180 ரன்களையும் சேஸிங் செய்ய முடியும். தொடக்கத்திலிருந்தே பந்து பேட்ஸ்மேனை நோக்கி வந்தது அடித்து ஆடவசதியாக இருந்தது. சிராஜ் பந்துவீச்சு எங்களுக்கு நெருக்கடியாக இருக்கும் என்பதால், தொடக்கத்திலேயே அவரின் பந்துவீச்சை அடித்து விளாச திட்டமிட்டோம், அவரின் பந்துவீச்சை குலைத்துவிட்டால் ஆர்சிபிஅணி வீர்ரகள் நம்பிக்கையிழந்துவிடுவார்கள் என திட்டமிட்டு செயல்பட்டோம். கலீல், இசாந்த் சர்மா சிறப்பாகப் பந்துவீசுகிறார்கள், இந்தியப் பந்துவீச்சாளர்களால்தான் இதற்கு முன் குறைந்த ஸ்கோரையும் டிபெண்ட் செய்ய முடிந்தது. நல்ல அணியாக உருவெடுக்கிறோம் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்

விராட்டின் மிரட்டல் சாதனைகள்

இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றாலும், ஆர்சிபியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சில சாதனைகளும் மறக்கமுடியாதவை, மைல்கல் எட்டியவை.

இந்த சீசனில் விராட் கோலி தனது 6-வது அரைசதத்தையும், ஐபிஎல் தொடரில் 50-வது அரைசதத்தையும் நேற்றைய ஆட்டத்தில் பதிவு செய்து, 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த 2022ம் ஆண்டு சீசன் கோலிக்கு மோசமானதாக இருந்தநிலையில் சிறப்பான “கம்-பேக்” அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சீசனில் 400க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்தவர்கள் வரிசையில் தவண், ரெய்னா ஆகியோரோடு 9வது முறையாக கோலியும் இணைந்துவிட்டார். கோலி இந்த ஆட்டத்தில் 12 ரன்களை எட்டியபோது, ஐபிஎல் போட்டிகளில் 7ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார், மேலும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை கோலி எட்டியுள்ளார்.

ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் நேற்றைய ஆட்டத்தில் 45 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, ஐபிஎல் சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

RCB vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

தினேஷ் கார்த்திக் செயலுக்கு ஆர்சிபி விலை

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு அச்சாணியாக, அடித்தளமாக இருந்தவர் ஃபில் சால்ட் என்பதில் மிகையில்லை. சால்ட்டின் பேட்டிங் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை கேப்டன் வார்னர் வழங்கியதற்கு கைமாறு செய்துவிட்டார்.

ஹசரங்கா வீசிய 4-வது ஓவரில் சால்ட் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க தினேஷ் கார்த்திக் தவறிவிட்டார். தினேஷ் கார்த்திக்கின் கேட்ச் மிஸ்ஸிங்கிற்கு ஆர்சிபி அணி மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணி 181 ரன்களை எளிதாக சேஸிங் செய்வதற்கு சால்டின் அதிரடியான பேட்டிங் முக்கியக் காரணம். டெல்லி அணி 100 ரன்களை எட்டியபோது, சால்ட் 28 பந்துகளில் அரைசதம் அடித்து தனது அதிரடியை வெளிப்படுத்தி இருந்தார்.

சிராஜ் - சால்ட் வாக்குவாதம்

சிராஜ் வீசிய ஓவரில் சால்ட் இரு சிக்ஸர்களையும், பவுண்டரியையும் விளாசி டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரன்ரேட்டை சீராக உயர்த்தினார். அப்போது, சிராஜ் வீசிய பவுன்சருக்கு நடுவரிடம் சால்ட் வைடு கேட்டார். இதற்கு சிராஜ், திடீரென சால்ட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக டெல்லி கேப்டன் வார்னர், டூப்பிளசிஸ் இருவரும் தலையிட்டு, இருவரையும் பிரித்துவிட்டனர். சிராஜ் கோபமாகவும், கைநீட்டியும் வாக்குவாத்தில் ஈடுபட்டபோதிலும், சால்ட் தனது கவனத்தை சிதறவிடாமல் அமைதியாகச் சென்றார்.

ஒரு வீரர் சிறப்பாக பேட் செய்துவிட்டால், எதிரணி வீரர்கள் இதுபோன்று மைண்ட் கேமில் ஈடுபட்டு, கவனத்தை குலைப்பார்கள். அதை சிராஜும் நேற்று சால்ட்டிடம் செய்து பார்த்து அது எடுபடாமல் போனது.

RCB vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

முதல் முறையாக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்

வார்னர், சால்ட் இருவரும் இந்த சீசனில் முதல்முறையாக சிறந்த தொடக்கத்தை அளித்தனர். முதல்முறையாக தொடக்க ஜோடி 50 ரன்களைக் கடந்தது. வார்னர், சால்ட் இருவரும் சேர்ந்து ஆர்சிபி வீரர்களின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசியதால் ரன்ரேட் 10 ரன்கள் வீதத்தில் உயர்ந்தது.

ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் யாருடைய பந்துவீச்சையும் விட்டுவைக்காமல் சால்ட் அடித்து துவம்சம் செய்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய சால்ட் 15 ஓவர்கள் வரை ஆர்சிபி அணிக்கு பெரிய குடைச்சலாக இருந்தார்.

வார்னர் 22 ரன்கள் சேர்த்தநிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு சால்ட்-வார்னர் இருவரும் 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

RCB vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

சரவெடி சால்ட்

மார்ஷ்-சால்ட் கூட்டணி ஏறக்குறைய டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றது. 2வதுவிக்கெட்டுக்கு இந்த ஜோடி 59 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. மார்ஷ் நிதானமாக பேட் செய்து சால்ட்டுக்கு ஒத்துழைத்தார், சால்ட் அதிரடியில் இறங்கி ஆர்சிபி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

இருவரையும் பிரிக்க, டூப்பிளசிஸ் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் நீண்டநேரமாக நடக்கவில்லை. மார்ஷ் சிறிய கேமியோ ஆடி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ரிலீ ரூஸோவும், சால்ட்டுக்கு ஒத்துழைத்து ஆடினார். அவ்வப்போது ரூஸோவும் சில பெரிய ஷாட்களை ஆடி, சிக்ஸர் அடித்து ரன்ரேட் பிரஷரைக் குறைத்தார். ஹர்சல் படேல் வீசிய 13வது ஓவரில் சால்ட் ஒரு சிக்ஸரையும், ரூஸோ 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்களைச் சேர்த்தனர்.

இந்த ஓவருக்கு முன்புவரை டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற 48 பந்துகளுக்கு 56 ரன்கள் தேவை என்றநிலை இருந்தது. ஆனால், அதன்பின் 36 பந்துகளில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவை என்று தலைகீழாக மாறியது.

அதிரடியாக ஆடிய சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள்(6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) சேர்த்து கரன் சர்மா பந்துவீச்சில் போல்டாகினார்.

அதன்பின் வந்த அக்ஸர் படேல், ரூஸோவுடன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அக்ஸர் படேல் களமிறங்கி சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். 4 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. மேக்ஸ்வெல் வீசிய 17-வது ஓவரில் ரூஸோ ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ரூஸோ 35 ரன்களிலும், அக்ஸர் படேல் 8 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

RCB vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

லாம்ரோர், கோலி போராட்டம் வீண்

ஆர்சிபி அணியைப் பொருத்தவரை டூப்பிளசிஸ், விராட் கோலி இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் அதிரடிக்கு மாறினர். முகேஷ் வீசிய 5வது ஓவரில் டூப்பிளசிஸ் 3 பவுண்டரிகளையும், கலீல் அகமது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்தபின் ஆர்சிபி ரன்ரேட் எகிறியது. பவர்ப்ளேயில் 51 ரன்களை ஆர்சிபி சேர்த்தது. டூப்பிளசிஸ், கோலி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மார்ஷ் வீசிய 11வது ஓவரில் டூப்பிளசிஸ் 45 ரன்னில் அக்ஸர் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மேக்ஸ்வெல் டக்அவுட்டில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்துவெளியேறினார். அடுத்தடுத்த பந்தில் ஆர்சிபி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்துவந்த லாம்ரோர், கோலியுடன் இணைந்தார். நிதானமாக பேட் செய்து அதன்பின் லாம்ரோர் ஆட்டம் டாப் கியருக்கு எகிறியது. குல்தீப் யாதவ் ஓவரில் சிக்ஸர், பவுண்டரியும், மார்ஷ் ஓவரில் ஒரு சிக்ஸரையும் லாம்ரோர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

விராட் கோலி 42 பந்துகளில் அரைசதம் அடித்து, 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியாக ஆடிய லாம்ரோர் 26 பந்துகளில் முதல் அரைசதத்தை நிறைவு செய்தார். கடைசி நேரத்தில் லாம்ரோருக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமையாதது ரன்ரேட்டை வெகுவாகக் குறைத்தது.

இந்த சீசனில் சொதப்பலாக ஆடிவரும் தினேஷ் கார்த்திக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி இரு ஓவர்களில் ஆர்சிபி அணியால் 15 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. லாம்ரோர் 29 பந்துகளில் 54 ரன்களுடன் (3 சிக்ஸர், 6 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

RCB vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

கோலியின் தவறான கணிப்பு

விராட் கோலி எப்போதுமே அதீத உணர்ச்சியுடனே களத்தில் செயல்படுவார், பேசுவார். அது சில நேரங்களில் அவருக்கு “பேக்பயர்” ஆவதும் உண்டு. இந்த ஆட்டத்தில்கூட கோலியின் பேச்சு அதீத நம்பிக்கையுடன்தான் இருந்தது.

ஆனால், இரவு நேரப் பனிப்பொழிவு, பந்துவீச்சின் தரம், எதிரணி பேட்ஸ்மேன்களின் வலிமையை தவறாகக் கணித்து கோலி பேசிவிட்டார்.

“ஆர்சிபி அணி 181 ரன்களைச் சேர்த்துள்ளதே வலுவான ஸ்கோர். நானும் டூப்பிளசிஸும் 160 ரன்கள் போதும் எனக் கணித்தோம். கூடுதலாக 15 ரன்கள் கிடைத்துள்ளது” என்று விராட் கோலி பேசியது தவறான கணிப்பு.

கோலியின் கணிப்பை உடைக்கும் வகையில் சால்ட் நொறுக்கி அள்ளினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு நேற்று அமைந்த 3 பார்ட்னர்ஷிப்புகளுமே 50 ரன்களுக்கு மேல் சேர்த்தன. ஆனால் இதில் எந்த பேட்ஸ்மேன்களையும் செட்டில் ஆகவிடாத வகையில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்துவீசாதது தோல்விக்கு முக்கியக் காரணம்.

டெல்லி பேட்ஸ்மேன்கள் சால்ட், வார்னர், மார்ஷ், ரூஸோ ஆகியோருக்கு தொந்தரவு தரும் வகையில் பந்துவீசியிருந்தால், ஆட்டம் நெருக்கடியாக மாறியிருக்கும். ஆனால், துல்லியமில்லாத, நெருக்கடியில்லாத ஆர்சிபி பந்துவீச்சால்தான் 181 ரன்கள் எனும் ஸ்கோரை 20 பந்துகள் மீதமிருக்கையில் டெல்லி அணியால் சேஸிங் செய்ய முடிந்தது.

அது மட்டுமல்லாமல் விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறையும், ஆர்சிபி அணியின் பேட்டிங் அணுகுமுறையும் மந்தமாகவே இருக்கிறது. விக்கெட்டுகளுக்கு இடையே ரன்களை ஓடி எடுப்பதில் ஆர்சிபி வீரர்கள் மந்தமாகவே இருக்கிறார்கள்.

பவுண்டரி, சிக்ஸர் மட்டுமே முயற்சி செய்வோம், ஒரு ரன், 2 ரன்களை ஓடி எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டுமா என்ற மனநிலையில்தான் உள்ளனர். அதனால்தான் கடைசி 6 ஓவர்களில் ஆர்சிபி அணி 42 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

மார்ஷ் வீசிய 15-வது ஓவரில் லாம்ரோர் லாங்கான் திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார், கோலி ஓடிவரும்போது, லாம்ரோர் நடந்துதான் சென்றார். சிங்கில் ரன், 2 ரன்களை எடுப்பதற்கு ஆர்சிபி வீரர்கள் காட்டும் சோம்பேறித்தனம்தான் ரன்ரேட்டை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. ரன்களை ஓடிச் சேர்ப்பதில் வேகம் காட்டியிருந்தால் ஸ்கோர் 200 ரன்களை எட்டியிருக்கும்.

RCB vs DC

பட மூலாதாரம், BCCI/IPL

3 வீரர்களை நம்பி பயணம்

அது மட்டுமல்லாமல் ஆர்சிபி அணியில் டூப்பிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை நம்பியே இன்னும் பயணிப்பது எப்போதும் அணிக்கு ஆபத்தானதாகும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 5 ஆட்டங்களில் வென்றுள்ளது, இதில் 5 வெற்றிகளில் 4 வெற்றிகள் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்து கிடைத்ததாகும். ஒரு போட்டியில் மட்டும் 212 ரன்கள் சேர்த்தும் ஆர்சிபி தோல்வி அடைந்தது.

ஆர்சிபி அணிக்கு கிடைத்த இந்த தோல்வி, புள்ளிப்பட்டியிலில் 3வது இடத்துக்குச் செல்வதை தவறவிட வைத்துள்ளது. இன்னும் 6வது இடத்தில் நீடித்தாலும் இது எந்த அளவுக்கு அந்த அணிக்கு கைகொடுக்கும் எனக் கூற இயலாது.

அடுத்துவரும் போட்டிகளில் வெற்றியும், இரவு நேரத்தில் விழும் பனிப்பொழிவை சமாளித்து பந்துவீசும் திறமையும் அதிகமாகத் தேவை. பேட்டிங்கில் 3 வீரர்களை மட்டுமே நம்பியிருக்கும் சூழலும் அணிக்குள் மாறினால்தான் ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்

டூப்பிளசி என்ன சொல்கிறார்?

ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “185 ரன்கள் நல்லஸ்கோர், வென்றுவிடலாம் என நினைத்தோம். ஆனால், 2வது இன்னிங்ஸில் சிறிது பனிப்பொழிவு இருந்ததால் பந்துவீச முடியவில்லை. டெல்லி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட் செய்தனர். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் செய்த தவறுகளை டெல்லி பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தினர். எங்கள் பேட்டிங்கில் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால் போட்டி நெருக்கடியாக சென்றிருக்கும். பவர்ப்ளே ஓவருக்குப் பின் எங்கள் பந்துவீச்சில் சற்று பின்னடைவு காணப்பட்டது உண்மைதான். லாம்ரோர் பேட்டிங் அருமையாக இருந்தது” எனத் தெரிவித்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: