சாதி பாகுபாடு: திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வேலை ஒதுக்குவதில் பாரபட்சமா?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருப்பூர் மாநகராட்சியின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்குவதில் சாதி பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் நான்கு மண்டலங்களாக 60 வார்டுகள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சிக்கு மொத்தம் 661 நிரந்தர தூய்மை பணியாளர்களும் சுமார் 1,100 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் உள்ளனர். இதில் நிரந்தர தூய்மை பணியாளர்களில் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குப்பை அள்ளுவது, சாக்கடை அடைப்பை சுத்தம் செய்வது, கொசு மருந்து அடிப்பது போன்ற களப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்து குற்றம்சாட்டுகிறார் திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜான் சாமுவேல்.
ஆர்.டி.ஐ-யில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

திருப்பூரைச் சேர்ந்த ஜான் சாமுவேல் திருப்பூர் மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதற்கு மாநகர சுகாதார அதிகாரி தரவுகளுடன் பதில் அளித்தார். அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி திருப்பூர் மாநகராட்சியில் 661 நிரந்தர தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இதில் தூய்மை பணியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 140 பேர் தூய்மை களப்பணிகளில் அல்லாமல் அலுவலக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 661 நிரந்தர பணியாளர்களில் 40 பேர் பிற்படுத்தப்பட்ட (பி.சி), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் (எம்.பி.சி) சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் பட்டியல் சமூகம் (எஸ்.சி) மற்றும் அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த 40 பேரில் ஒருவர் கூட தூய்மை களப் பணியில் இல்லை, எஸ்.சி மற்றும் அருந்ததியர் சமூக மக்கள் மட்டுமே களப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ஜான் சாமுவேல்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “661 பேரும் தூய்மை பணியாளர்கள் என்கிற கணக்கில் தான் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுவாகவே தூய்மை பணிகளில் எஸ்.சி, அருந்ததியர் சமூக மக்கள் தான் ஈடுபடுவார்கள் அல்லது ஈடுபடுத்தப்படுவார்கள் என்கிற பார்வை உண்டு. ஆனால் இங்கு பி.சி, எம்.பி.சி சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தூய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் குப்பை அள்ளுவது போன்ற களப்பணிகளில் ஈடுபடவில்லை. அலுவலக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 140 பேரில் எஸ்.சி, அருந்ததியர் சமூக மக்களும் உள்ளனர், பி.சி, எம்.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த 40 பேரும் உள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்கான அவ்வாறு மாற்று பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும் களப் பணிகளில் எவ்வாறு ஒரு பி.சி, எம்.பி.சி சமூகத்தைச் சேர்ந்தவரும் இல்லை. கல்வி தகுதியை அடிப்படையாக வைத்து வழங்கினார்கள் என்றும் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஆர்.டி.ஐ-யில் பெற்ற தகவல்களில் பணியாளர்களின் கல்வி விவரங்களும் உள்ளன.
பள்ளி படிப்பை முடிக்காத பி.சி, எம்.பி.சி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அலுவலக வேலைகளில் உள்ளனர். பட்டப் படிப்பு முடித்த எஸ்.சி, அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொசு மருந்து அடிப்பது, சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்து வருகின்றனர். கல்வி தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது என்றால் பட்டதாரிகள் ஏன் கொசு மருந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பாகுபாடு இருப்பதாகவே உணர முடிகிறது. பட்டப்படிப்பை முடித்த எஸ்.சி, அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மூன்று பேர் தூய்மை களப்பணியில் உள்ளனர்.

கருணை அடிப்படை வேலையிலும் பாகுபாடா?
பதவி அடிப்படையில் அனைவரும் தூய்மை பணியாளர்கள் தான். ஆனால் வழங்கப்படும் வேலைகளில் பாகுபாடு காட்டப்படுகிறது. முதல்வர் தனிப் பிரிவு, மாநகராட்சி ஆணையர் மற்றும் எஸ்.சி/எஸ்/டி ஆணையத்தில் புகார் அளித்தும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே போல் பணியில் இருக்கின்றபோது ஒருவர் உயிரிழந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும். அப்போது அவர்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி வரை வழங்கப்படலாம். ஆனால் தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு அதே வேலைகளை தான் வழங்குகின்றனர்,” என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற காலாண்டு எஸ்.சி/எஸ்.டி ஆய்வு கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது மாநகராட்சி ஆணையர் இதற்கு விளக்கம் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.
மாநகராட்சி தூய்மை களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் பேசியது. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இங்கே கொடுக்கப்படுகிறது. (பெயர்களைக் குறிப்பிட்டால் நாளை தாங்கள் அச்சுறுத்தப்படலாம் என அவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்படுகிறது)
எவ்வாறு வேலை வழங்கப்படுகிறது?

தூய்மை பணியாளராக ஒருவர் சேர்ந்து குறிப்பிட்ட வருடம் வேலை செய்த பிறகு நிரந்தரப் பணியாளராக நியமிக்கப்படுகிறார்கள். பெண்கள் சாலைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது, இலைகளை வெட்டுவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர். ஆண்கள் மாநகராட்சி வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரிப்பது, சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்வது, கொசு மருந்து அடிப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்.
ஒவ்வொரு வார்டுக்கும் தூய்மை பணியாளர்களிலிருந்து ஒருவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகிறார். உள்ளூர் அளவில் இவர் 'மேஸ்திரி' என அழைக்கப்படுகிறார். மேற்பார்வை என்பது கூடுதல் பணி தான் என்றாலும் பதவியிலோ, ஊதியத்திலோ எந்த மாற்றமும் இருக்காது.
தூய்மை பணியில் உள்ள பெண் பணியாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டவை, “திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 26 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். ஆனால் எங்களுடன் வேலை செய்யாமல் ஆபிஸ் வேலையில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என இப்போது தான் தெரிகிறது. பல நேரங்களில் கூடுதல் வேலை செய்ய வேண்டிய நிலையில்தான் உள்ளோம். பெண்கள் பலரும் 50 வயதைக் கடந்தவர்கள். புல் பிடுங்குவது போன்ற கடினமான வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது.
ஆட்கள் பாற்றாக்குறையை நிவர்த்தி செய்து எங்கள் பணிச்சுமையை குறைக்க வேண்டும். நீண்ட காலம் களப்பணி செய்தவர்களுக்கு கடினம் குறைவான வேலைகளை வழங்க வேண்டும். இப்போது வீட்டிற்கு அருகே வேலை செய்து வருகிறோம். இந்த கோரிக்கைகளை எல்லாம் கேட்டால் தூரத்தில் உள்ள வேறு வார்டுக்கு அனுப்பிவிடுவார்களோ என அச்சமாக உள்ளது. அதனால் எந்த விஷயங்களையும் எழுப்பாமல் வேலை செய்து வருகிறோம்,” என்றார்.

தூய்மை மேற்பார்வையாளராக உள்ள ஒருவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டவை, “எனக்கு மேற்பார்வையாளர் எனப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தாலும் ஆட்கள் பாற்றாக்குறை ஏற்பட்டால் நானும் களத்தில் இறங்கி வேலை செய்து தான் ஆக வேண்டும். எங்கள் பணி நிலையில் உள்ள 140 பேர் களத்தில் வேலை செய்யாமல் அலுவலக பணியில் உள்ளார்கள் என்பது எங்களுக்கு இப்போது வரை தெரியவில்லை. பள்ளிப் படிப்பை பகுதி அளவு கூட நிறைவு செய்யாத பி.சி, எம்.பி.சி பிரிவைச் சேர்ந்த ஒருவர் அலுவலக பணியாற்ற முடிகிறது.
ஆனால் பட்டப்படிப்பை முடித்த ஒரு எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர் களத்தில் வேலை செய்கிறார். எனக்கு ஒப்பிட்டு பேச விருப்பமில்லை. ஆனால் பணியமர்த்துதல் என்பது நியாயமாக உள்ளதா என்கிற சந்தேகம் எழாமலும் இல்லை. இதை கேள்வி எழுப்பினால் மீண்டும் தூய்மை பணிக்கு அனுப்பிவிடுவார்களோ அல்லது வீட்டிலிருந்து தொலைவான இடத்திற்கு அனுப்பி விடுவார்களோ என அஞ்சி பலரும் பேசத் தயங்குகின்றனர்,” என்றார்.
பட்டப்படிப்பை முடித்த ஒருவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டவை, “என் பெற்றோர்களில் ஒருவர் பணிக்காலத்தில் இறந்ததால் கருணை அடிப்படையில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் என் கல்வி தகுதிக்கு உண்டான வேலை கிடைக்கவில்லை. முதலில் இந்த வேலை பார்த்தால் பின்னர் பதவி உயர்வு பெற்று மாறிக் கொள்ளலாம் என நான் பணியில் சேர்ந்தபோது கூறினார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதாக தெரியவில்லை,” என்றார்.
திருப்பூர் மாநகராட்சியில் மட்டுமில்லை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சியிலும் இந்த நிலை உள்ளது என்கிறார் சமூக நீதி கட்சியின் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கோவை மாநகராட்சியிலும் சுமார் 300 பேர் இவ்வாறு மாற்று வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள் எனத் தெரிந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் எந்த பலனும் இல்லை. சமூக அடிப்படையில் வேலை வழங்கும் சாதிய அணுகுமுறை புரையோடிப்போய் உள்ளது தான் இதற்கு காரணம். ஆதாரப்பூர்வமாக இதை அம்பலப்படுத்தினாலும் பெரிய அளவில் நடவடிக்கைகள் இருப்பதில்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சி நகராட்சிகளிலும் முறையாக ஆய்வு செய்தால் மாநிலம் தழுவிய அளவில் இந்தப் பிரச்சனை இருப்பது தெரியவரும்,” என்றார்.
'தகுதியைப் பொறுத்தது'

ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “அரசு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குகின்றபோது கல்வி தகுதியின் அடிப்படையில்தான் அவை வழங்கப்பட வேண்டும். இளநிலை உதவியாளர் பணி வரை வழங்குவதற்கு தளர்வு உள்ளது. உயர்நிலைகளில் பணிபுரியும் அரசு அதிகாரிகளின் குடும்பங்கள் இதை பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. ஒரு உதவி ஆட்சியரின் குடும்பத்தினர் உதவியாளர் நிலை பணிக்குச் செல்ல விரும்பமாட்டார்கள்.
கீழ் நிலைகளில் பணி புரியும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தான் இவை அதிகம் தேவைப்படுகின்றபோது. அந்த சூழ்நிலைகளில் அப்பா/அம்மா செய்த வேலையை தான் மகன்/மகள் செய்ய வேண்டும் எனக் கூற முடியாது. என் பணிக்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளேன். இதற்கு சாதகமாக பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் கிடைக்கும். அதே போல் பணியமர்த்துவதில் பாகுபாடு என்பது முறையாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று,” என்றார்.
'நிரந்தர பணி இனி இல்லை'

இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் விளக்கம் அளித்தார். பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசு சமீபத்தில் 152 என்கிற அரசாணை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தூய்மை பணி என்பது இனி முழுவதுமாக அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றப்படுகிறது. ஒரு சிலர் அலுவல் தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டிருக்கலாம். கூடிய விரைவில் இந்த நிரந்தரப் பணியாளர்கள் அனைவருமே மாற்றுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள். அதற்கான பணிகள் தொடங்கி முடிவடையும் தருவாயில் உள்ளன. அதன் பின்னர் இந்தப் பிரச்சனை இருக்காது. இதனால் பாகுபாடு என்பது கிடையாது. அதே சமயம் யாராவது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு எந்த நேரமும் தயாராக உள்ளோம்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












