கர்நாடக தேர்தல்: மத ரீதியிலான பிரசாரங்கள் எடுபடவில்லையா? பாஜகவின் தோல்வி எதை காட்டுகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் 66 இடங்களையே பாஜகவால் பெற முடிந்திருக்கிறது.
ஆட்சியமைப்பதற்குத் தேவையானதைவிட கூடுதல் இடங்களை காங்கிரஸ் வென்றுள்ளது.
தென்னிந்தியாவின் அயோத்தி என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய கோவில் கட்டப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்த ராமதேவரப்பேட்டா கோவிலை உள்ளடக்கிய ராம நகரம் சட்டமன்ற தொகுதியில் இஸ்லாமியரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான இக்பால் ஹுசைன் 87,690 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி 76,975 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளார். பாஜக 12,912 வாக்குகளையே பெற்றுள்ளது.
பிதார், சாம்ராஜ்பேட், குல்பரா உத்தர், சிவாஜி நகர் ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கர்நாடக தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, "கர்நாடகாவில் வெறுப்புணர்வுக்கான வாசல் அடைக்கப்பட்டுள்ளது. அன்பின் வாசல் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெரு முதலாளித்துவத்தை ஏழைகள் தோற்கடித்துள்ளார்கள். நாங்கள் இந்த யுத்தத்தில் வெறுப்புணர்வைப் பயன்படுத்தவில்லை," என்றார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைத் தங்களது தேர்தல் அறிவிப்பில் வெளியிட்டிருந்தன.
காங்கிரஸ் சார்பில் பஜ்ரங்தளம் அமைப்பு, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆகியவை தடை செய்யப்படும் என்ற அறிவிப்பும் பாஜக சார்பில் ` பொது சிவில் சட்டம்` கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம் தடை அறிவிப்பு
பஜ்ரங் தளத்துக்குத் தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு இந்துக்களுக்கு எதிரான அறிவிப்பு என்று பாஜக பிரசாரம் மேற்கொண்டது. பிரதமர் மோதி பிரசாரம் மேற்கொண்டபோது, ஜெய் பஜ்ரங் பலி என்ற முழக்கத்தைத் தொடர்ந்து எழுப்பினார்.
பஜ்ரங் தளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் இது பகவான் அனுமாருக்கு செய்யப்பட்ட அவமதிப்பு என்று மீண்டும் மீண்டும் கூறினார். மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது ஜெய் பஜ்ரங் பலி என்ற முழக்கத்தை எழுப்பி வாக்களிக்க வேண்டும் என்று நரேந்திர மோதி கூறினார்.
எனினும் பாஜகவின் இந்த எதிர்ப்பு பிரசாரத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தனது விளக்கம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் எப்போதும் ஹனுமனின் பக்தர்கள்தான். ஆனால் கடவுளின் பெயரால் ஓர் அமைப்பை உருவாக்கி சட்டத்தைக் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம், அத்தகைய சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். எங்களின் தேர்தல் அறிக்கையில், அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் பாஜக அதை உணர்ச்சிகரமான பிரச்னையாக்க முயல்கிறது' என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கர்நாடகா முழுவதும் ஆஞ்சநேயருக்கு கோவில்கள் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், 2014இல் அப்போதைய கோவா முதலமைச்சரான பாஜகவின் மனோகர் பாரிக்கர், ’ஸ்ரீராம் சேனா அமைப்பை’ தடை செய்ததை ஒப்பிட்டு காங்கிரஸ் இதற்குப் பதிலளித்தது.
'கோவாவில் ஸ்ரீராம் சேனாவுக்கு தடை விதிக்கப்பட்டபோது, பிரதமர் அதை ராமரை அவமதித்ததாகக் கூறினாரா?' என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், பஜ்ரங் தளத்தை பஜ்ரங் பலி(ஹனுமன்) உடன் ஒப்பிட்டு பிரதமர் மோதி அவமானப்படுத்திவிட்டார் என்றும் இதற்காக ஹனுமனின் கோடிக்கணக்கான பக்தர்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறியது.
இதன் மூலம், தாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை வாக்காளர்களின் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டது. அதில், அக்கட்சிக்கு வெற்றியும் கிட்டியுள்ளது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பஜ்ரங் தளத்தையும் ஆஞ்சநேயரை இணைத்து பிரதமர் பேசியது மக்களைப் பெரிதாக கவரவில்லை என்று கூறுகிறார் மூத்த ஊடகவியலாளர் விஜய் குரோவர்.
"கடலோர கர்நாடகாவில் பஜ்ரங் தளம் சட்டவிரோத நடவடிக்கைகள், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது போன்றவற்றில் ஈடுபட்டனர். ஷிவமோகாவில் அண்மையில் உயிரிழந்த பஜ்ரங் தளம் உறுப்பினர் மீதும்கூட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மக்களில் சிலரும் பஜ்ரங் தளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது பிரதமரின் பேச்சை அவர்கள் ரசிக்கவில்லை," என்றார்.

பட மூலாதாரம், @IKSESHWARAPPA
இஸ்லாமிய வெறுப்பு பிரசாரம்
ஷிவமோகா நகரில் உள்ள விநோபா நகரில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இல்லம் அருகே கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி வீர சைவ- லிங்காயத் சமூகத்தினர் கூட்டத்தில் உரையாற்றிய கே.எஸ். ஈஸ்வரப்பா, "பாஜக ஆட்சியில் என்ன பலன்களைப் பெற்று வருகின்றனர் என்று அனைத்து சமூக மக்களிடமும் நாம் கேட்டறிய வேண்டும். இப்பகுதியில் 60 ஆயிரம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.
அவர்களின் வாக்குகள் எங்களுக்குத் தேவையில்லை. நிச்சயமாக இஸ்லாமியர்களும் தேவைப்படும் போதெல்லாம் நமது உதவியைப் பெற்றுள்ளனர். அவர்கள் நமக்கு வாக்களிப்பார்கள்," என்று பேசியதாக தி இந்து ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
"பாஜக ஆட்சியில் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். பாஜக ஆட்சியில் யாருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தைரியம் கிடையாது" என்றும் அவர் பேசியிருந்தார்.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவதற்குக் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது இஸ்லாமிய சமூகத்தினரிடம் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஒரு சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக, இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக பாசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அறிவித்தது.
அதற்குப் பதிலாக அந்த சமூகத்தினர் பொருளாதாரரீதியாக நலிவுற்ற பிரிவு இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள் என்றும் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டைப் பிரித்து லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்துக்குப் பகிர்ந்து அளிப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தங்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே இஸ்லாமியர்களால் பார்க்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாகப் பேசியிருந்தனர்.
இதற்கு உச்ச நீதிமன்றமும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. `உச்ச நீதிமன்றத்தில் ஒரு விவகாரம் நிலுவையில் இருக்கும்போது அது குறித்து அரசியல் கருத்துகளை வெளியிடக்கூடாது` என்றும் தெரிவித்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பாஜக தரப்பில் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டது.
அது என்ன பொது சிவில் சட்டம்?
`குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியா முழுக்க அனைவருக்கும் ஒன்றுதான். அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் ஒரே தண்டனை தான்.
ஆனால், சிவில் சட்டங்களைப் பொறுத்தவரை, அப்படியில்லை. திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு பல்வேறு மதங்களுக்கு பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. அதாவது, தனிநபர்களுக்கான சிவில் சட்டம் மதங்களுக்கு மதம் மாறுபடும். இப்படி இந்தியாவில் உள்ள, பல்வேறு சிவில் சட்டங்களை நீக்கி, அனைத்து தரப்பினருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது என்பதுதான் பொது சிவில் சட்டம்"
இட ஒதுக்கீடு ரத்து, பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு போன்றவை சிறுபான்மையினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே, அவர்களின் வாக்குகள் காங்கிரஸுக்கு ஆதரவாக மாறியது என்று கூறுகிறார் விஜய் குரோவர்.
கர்நாடகாவை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் சித்தய்யா நம்மிடம் பேசும்போது, "கர்நாடகா மதநல்லினம் மிகுந்த மாநிலம், இங்கு பாஜகவின் மதரீதியிலான பிரசாரம் எடுபடவில்லை` என்றார். ஆளுங்கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டு, காங்கிரஸில் தேர்தல் அறிவிப்புகள் ஆகியவையும் தேர்தலில் முக்கியப் பங்கு வகித்ததாக அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், India.gov.in
`கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோதி பிரசாரம் மேற்கொண்டதைத் தொடர்ந்து பாஜகவின் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டன. உண்மையில் பாஜக 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. மோதியின் பிரசாரத்தால் குறைந்துவிட்டது.
அவரது வெறுப்புப் பேச்சு மக்களிடம் எடுபடவில்லை" என்று கிருஷ்ணகிரி எம்.பி.செல்லக்குமார் குறிப்பிடுகிறார். இவர் மைசூர் போன்ற பகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
"மத பிரசாரம் மூலம் நீண்ட காலத்துக்கு வெற்றி பெற முடியாது என்பதையே கர்நாடக தேர்தல் காட்டியுள்ளது. பிரதமரில் இருந்து சாதாரண பாஜக நிர்வாகி வரை வெறுப்புப் பேச்சு, மத ரீதியிலான பிரசாரம் போன்றவற்றிலேயே ஈடுபட்டனர்.
இந்துத்துவ வாக்குகள் மூலம்தான் பாஜக வெற்றிபெற்று வந்தது. இதை மோதியின் மூலம் கிடைக்கும் வாக்குகள் என்று பொய் கூறி வந்தனர். இந்தத் தேர்தலில் மோதி அதிகமாக பிரசாரம் செய்தார் இருந்தும் பாஜக தோற்றுவிட்டது. மதம் என்பதைத் தாண்டி மக்கள் அனைவரும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஆட்சியை அகற்றவே விரும்புவார்கள்` என்று செல்லக்குமார் எம்.பி தெரிவித்தார்.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்
அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித் தொகை,
மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம்,
டிகிரி படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் 2 ஆண்டுகளுக்கும் டிப்ளமோ படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும்,
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் மக்களிடையே அக்கட்சிக்கு ஆதரவை அதிகரிக்கச் செய்திருப்பதாகவும் விஜய் குரோவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Twitter/Karnataka Congress
ஆளுங்கட்சிக்கு பாதகமான `40% கமிஷன்` குற்றச்சாட்டு
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி பாஜகவின் தோல்விக்கு முக்கியக் காரணம். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்கு பிரதான காரணமாகப் பார்க்கப்படுவது, ஆட்சி மீதான ஊழல் புகார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பெலகவி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் என்பவரின் இறப்பிற்குப் பிறகு, 40 சதவீதம் கமிஷன் என்ற குற்றச்சாட்டு வலுபெறத் தொடங்கியது. பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா, அரசு ஒப்பந்தங்களுக்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு ஒப்பந்ததாரர்களும் முன்வந்து , இதேபோன்ற குற்றச்சாட்டை அரசுக்கு எதிராகத் தெரிவித்தனர்.
தனது தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட காங்கிரஸ் `40 சதவீதம் கமிஷன்` என்ற அரசுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டது.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில்,` நமது மாநிலத்தில் ஊழல் உச்சமடைந்துள்ளது. ஏற்கெனவே, 40 சதவீதம் கமிஷன் பல ஒப்பந்ததாரர்களின் உயிர்களைப் பறித்துள்ளது. பொதுமக்களும் குறைபாடுகளுடன் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த வாழ்க்கையை வாழும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும்` என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. இதுவும் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
"காங்கிரஸ் தொகுதிவாரியாகப் பிரித்து, தொகுதியில் என்ன பிரச்னையோ அதை முன்னிலைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், பாஜகவில் இவ்வாறு ஆக்டிவாக பிரசாரம் செய்யவில்லை. பிரதமர் மோதி உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டது, வட இந்திய பிரசாரம் போல் அமைந்ததே தவிர, உள்ளூர் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்யவில்லை` என்று விஜய் குரோவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், FACEBOOK/NARAYANAN THIRUPATHY
காங்கிரஸ்க்கு கிடைத்த சிறு வெற்றி
ஒரு தேர்தலில் தோல்வியடைந்திருப்பது கட்சிக்கு பின்னடைவு என்று சொன்னால், காங்கிரஸ் கட்சி இந்நேரம் அழிந்துபோயிருக்கும்.
60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து பரிதவித்துக்கொண்டிருக்கும் சூழலில் அக்கட்சிக்குக் கிடைத்த சிறு வெற்றி இது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் கூறினார்.
மதரீதியிலான பிரசாரம் மக்களிடையே எடுபடவில்லை என்பதையே கர்நாடக தேர்தல் முடிவுகள் காட்டுகின்றனவா என்று அவரிடம் கேட்டபோது, `காங்கிரஸ் எப்போதுமே சிறுபான்மையினரை தாஜா செய்து போலி மதச்சார்பின்மை பேசும் கட்சி.
மதவாதத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள் என்று கூறினால், அப்போது உபியில், குஜராத், மத்திய பிரதேசத்தில் இருப்பவர்கள் எல்லாம் மதவாதிகளா? கர்நாடகத்தில் இத்தனை நாட்களாக மதவாதிகள்தான் இருந்தார்களா? தற்போது ஒரே நாளில் அவர்கள் மாறிவிட்டார்களா? இது தவறான கருத்து` என்று பதிலளித்தார்.

பட மூலாதாரம், TWITTER/ KS ALAGIRI
காந்தியின் கொள்கையை ராகுல் காந்தி மீட்டெடுத்தார்
இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், "நான் ஒரு இந்து என்று வெளிப்படையாக அறிவித்தவர் மகாத்மா காந்தி, அதே நேரத்தில் நான் அந்த இந்து என்ற கொள்கையை பக்கத்து வீட்டாரிடம் திணிக்க மாட்டேன் என்று காந்தி கூறியிருக்கிறார்.
அவரவருக்கு அவரவர் மதம், தெய்வம். இதுதான் மதச்சார்பின்மை. ஆர்.எஸ்.எஸ் மூலம் காந்தியை வீழ்த்த முடிந்ததே தவிர அவரின் சித்தாந்தத்தை வீழ்த்த முடியவில்லை. இன்றைக்கு காந்தியின் சித்தாந்தத்துக்கு ராகுல் காந்தி உயிர் கொடுத்துள்ளார்.
இந்துத்துவம் என்பதற்கு உள்ளேயே நாம் போகவேண்டாம். ஜெய்ப்பூர் மாநாட்டில் ராகுல் காந்தி பேசும்போது, காந்தி ஒரு இந்து; கோட்சே இந்துத்துவவாதி. காந்தி இந்து மதத்தை பாதுகாத்தவர்; இந்து மதத்தின் பெயரால் அதற்கு இழிவைத் தேடி தந்தவர் கோட்சே என்றார்.
வெறும் மத உணர்வு மூலம் மட்டுமே வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆரம்ப காலத்தில் அப்படி சில வெற்றிகளை அவர்கள் பெற்றிருக்கலாம். ஆனால் அது நீடிக்காது. வெறுப்புப் பேச்சை வைத்து நீண்ட காலம் வெற்றிபெற முடியாது என்பதற்கு பாஜக ஒரு உதாரணம்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












