ஜவஹர் நேசன் vs உதயசந்திரன்: தேசிய கல்விக்கொள்கையை மறைமுகமாக பின்பற்றுகிறதா தமிழ்நாடு அரசு? உண்மை என்ன?

- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி செய்தியாளர்
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர் நேசன், முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
மேலும், தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்துள்ளார். எனினும் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டை மாநில கல்விக் கொள்கை குழு மறுத்துள்ளது. இதேபோல் பிபிசியிடம் பேசிய உதயசந்திரன் ஐஏஎஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், "புதிய கல்விக் கொள்கை வேத கலாசாரத்தை திணிப்பதாக இருக்கிறது. சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கை திணிக்கப்படுகிறது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப்பார்க்கிறார்கள் என்று திமுக அமைத்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த கல்வியாளர்கள் கூறியுள்ளனர். புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எனினும், மத்திய அரசு அந்த கொள்கையை அமல்படுத்திவிட்டது. மாணவர்களின் நலனுக்கு எதிராக புதியக் கல்வி உள்ளது," என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது, 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநில கல்விக் கொள்கை
இந்தக் குழு, தமிழ்நாட்டிற்கென புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இக் குழுவில் இருந்து விலகுவதாக அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர்நேசன் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், "ரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிகார எல்லைமீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும், உயர்நிலைக் கல்விக் குழு சரியாகச் செயல்பட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தேசியக் கொள்கை 2020-ன் அடியைப்பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது" என்று தெரிவித்திருந்ததோடு, உயர்மட்டக் குழுவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும், ஐஏஎஸ் அதிகாரி த.உதயச்சந்திரன் தகாத வார்த்தைகளைக் கூறி தன்னை அச்சுறுத்தியதாகவும் அழுத்தம் தந்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜவஹர் நேசன், "தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாகவோ, நேரடியாகவோ எங்களிடம் திணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாநிலக் கல்விக்கொள்கை வர வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதனை நான் எதிர்த்தேன். இது தொடர்பாக எங்கள் குழுத் தலைவரிடம் 10க்கும் மேற்பட்ட கடிதங்களை ஆதாரப்பூர்வமாக சமர்பித்தும் எனக்கு பதில் வரவில்லை," என்று கூறியிருந்தார்.
"தேசிய கல்விக்கொள்கையை பரிசீலனை செய்து அதில் உள்ள அம்சங்கள் மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற வேண்டும் என்று கூட்டம் நடத்தப்பட்டது. அதை அதிகாரிகளை வைத்து நடத்தவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இதனை நான் எதிர்த்தேன். இந்த விவகாரத்தில், 'நான் சொல்வதை கேட்க வேண்டும்' என்று ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் மிரட்டினார், 'இல்லையென்றால் குழுவை கலைத்துவிடுவோம்' என்று கூட ஒருமையில் பேசினார்," என்று தெரிவித்திருந்தார்.
மேலும் பெரும்பாலான குழு உறுப்பினர்கள் சரியாக பங்களிக்கவில்லை என்றும் கூட்டத்திற்கே வரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில கல்விக் கொள்கை குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநில கல்வி கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற பாதையில், கடந்த ஓராண்டில் இக்குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 38 மாவட்டங்களையும் 8 மண்டலங்களாக பிரித்து செப்டம்பர் 2022 முதல் நவம்பர் 2022 வரை பல்வேறு கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இதேபோல், கல்வி நிலையங்கள் ஏதாவது இன்னல்களை எதிர்கொள்கின்றனவா என்பதை அறிந்துகொள்ள பல்வேறு முறை நேரில் சென்றும் குழு பார்வையிட்டது," என்று கடந்த ஓராண்டில் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் பட்டியலிட்டுள்ளார்.
ஜவஹர் நேசன் குற்றச்சாட்டு தொடர்பாக குழு அளித்துள்ள விளக்கத்தில், "தலைவர் மீதும் குழுவின் உறுப்பினர்கள் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஜவஹர் நேசன் கடந்த மே 10ஆம் தேதி இ மெயில் அனுப்பினார். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. ஜனநாயகமற்ற முறையில் குழு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இதேபோல், தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றியே மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது என்பது அடிபடை ஆதாரமற்றது. இதேபோல் ஜவஹரின் பரிந்துரைகளை குழு பரிசீலனை செய்யவில்லை என்பது தவறானது. அவர் குறித்த நேரத்தில் தனது உள்ளீடுகளை தராமல் காலதாமதம் செய்தார் என்றும் குழு கூறியுள்ளது. இதேபோல் அதிகாரிகள் தலையீடு இருப்பதாக அவர் கூறுவதும் தவறானது," என்று த. முருகேசன் விளக்கமளித்துள்ளார்.

பட மூலாதாரம், Justice Murugesan
குழுவில் உள்ள பலர் சரியாக பங்களிக்கவில்லை என்று ஜவஹர் நேசன் வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக மாநில கல்விக் கொள்கை குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசனை பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேட்ட போது, "குழுவில் உள்ள அனைவரும் சரியான முறையிலேயே பணியாற்றி வருகின்றனர்," என்றார். உதயசந்திரன் விவகாரம் தொடர்பாக அவரிடம் கேட்டப்போது, "உதயசந்திரன் தொடர்பாக அவர் என்னிடம் புகார் அளித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரினார். நான் எப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? எனவே, அவர்கள் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விவகாரமாகவே நான் இதை பார்க்கிறேன்," என்றார்.
கல்வியாளர்கள் கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலக் கல்விக்கான பொது மேடையைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம் பேசுகையில், இந்த விவகாரத்தை ஜவஹரின் தனிப்பட்ட கோணத்தில் நாம் அணுகுவதை விட தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் பின்பற்றுகிறதா என்ற கோணத்தில் பார்ப்பதே சரியாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், "குழு எப்படி செயல்படுகிறது என்பது குறித்து எனக்கு தெரியாது. எங்களிடம் அவர்கள் ஆலோசனை எதையும் நடத்தவில்லை. தனிப்பட்ட முறையில், ஒருசில உறுப்பினர்கள் அவர்களின் கீழ் துணைக் குழுவை அமைத்து செயலாற்றி வருகின்றனர். அவர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துகளை கேட்டனர். வேறு எதுவும் நடக்கவில்லை. குழு சார்பில் பல இடங்களில் மண்டலக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதனை கருத்துக்கேட்புக் கூட்டம் என்று அவர்கள் அழைத்தனர். ஆனால், இவை கருத்துக்கேட்பு கூட்டமாக நடைபெறாமல், குறைதீர்ப்பு கூட்டமாகவே நடைபெற்றுள்ளன. கொள்கை சார்ந்து அவர்கள் ஆலோசனை நடத்தவில்லை. "
ஒருபக்கம், மாநிலத்திற்காக தனித்துவமான கல்வி கொள்கையை உருவாக்க குழுவை அமைத்துவிட்டு, மற்றொரு பக்கம், யுஜிசி, என்சிஇஆர்டி ஆகியவை கொடுக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 2020ல் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் முடியப்போகிற நிலையில், புதிய கல்விக் கொள்கையின் பல கூறுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதை அரசும், குழுவும் கருத்தில் எடுத்துகொண்டனவா என்று தெரியவில்லை," என்றார்.
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்திவிடுகிறோம் என்று மத்திய அரசையும், இது நமது திட்டம் என்று கூறி மாநில அரசையும் அதிகாரிகள் நம்ப வைக்கின்றனர் என்ற விமர்சனத்தை வைக்கும் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "டெல்லியில் உள்ள மாடல் பள்ளிகளை மாதிரியாக வைத்து தமிழ் நாடு மாடல் பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் கெஜ்ரிவால் தொடங்கி வைத்து சென்றார். அரசு பள்ளிகளில் சில பள்ளிகளை மாடல் பள்ளிகள் என்றும் மற்றவற்றை சாதாரண பள்ளிகள் என்றும் கூறுவது, மாடல் பள்ளி மாணவர்கள் சிறந்தவர்கள் என்றும் கூறுவது எப்படி சரியாக இருக்கும்? இது பிரிவினைப்படுத்தும் செயல்தானே?" என்றார்.

பட மூலாதாரம், FACEBOOK
"நான் முதல்வன் திட்டம் ஆகட்டும், இல்லம் தேடி கல்வி ஆகட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், இல்லை என்று சொல்லி அதிகாரிகள் அமைச்சரையும் அமைச்சரவையையும் நம்ப வைக்கின்றனர். எனவே, உடனடியாக அமைச்சரவை இது குறித்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான், அமைச்சர்களுக்கு தெரிந்து இது நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவரும். அடுத்ததாக, தேசிய கல்விக் கொள்கையின் கூறுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டன என்ற குற்றச்சாட்டை வைப்பவர்களை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும். இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வதாக கூறுகின்றனர். அந்த நல்ல விஷயங்கள் என்ன என்பதையாவது தெரிவிக்க வேண்டும்," என்றார்.
உதயசந்திரன் ஐஏஎஸ் கூறுவது என்ன?
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உதயசந்திரன் ஐஏஎஸ்-இடம் பிபிசி விளக்கம் கோரியது. அதற்கு அவர், "குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் அவர்(ஜவஹர் நேசன்) இணைந்து பணியாற்றவில்லை என்று என் கவனத்துக்கு வந்தது. எனவே, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றும்படி நான் கூறினேன். மற்றப்படி நான் வேறு எதுவும் கூறவில்லை," என்றார். "தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றி வருவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது," என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












