கர்நாடகாவில் பா.ஜ.க. தோல்வி: தென்னிந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்திருப்பதன் மூலம் தென்னிந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களே இல்லாமல் போயிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி என்ற பெயரை மீண்டும் பெறுகிறதா பா.ஜ.க.?
நடந்து முடிந்திருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் 66 இடங்களையே அக்கட்சியால் பெற முடிந்திருக்கிறது. பா.ஜ.க. அடைந்த இந்தத் தோல்வியின் மூலம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
"திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது" என்று வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க. ஸ்டாலின். சமூக வலைதளங்களிலும் பலரும் இதே போன்ற கருத்தையே முன்வைத்துவருகின்றனர். ஆனால், இந்தத் தோல்வியால் தென்னிந்தியாவிலிருந்தே பா.ஜ.க. இல்லாமல் போய்விட்டதா என்றால், நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். கர்நாடக மாநிலத்தில் பல தசாப்தங்களாக கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும் நிலையில், இது காங்கிரசின் முறை என்றுகூட இந்த வெற்றியைப் பார்க்க முடியும். இருந்தாலும், இந்த முறை பா.ஜ.க. அடைந்திருக்கும் தோல்வி மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உள்ளதாகப் பார்க்கப்பட பல காரணங்கள் இருக்கின்றன.
2023ஆம் ஆண்டின் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் காங்கிரசிற்கு எவ்வளவு முக்கியமான தேர்தலோ, அதே அளவுக்கு பா.ஜ.கவுக்கும் முக்கியமான தேர்தல்தான்.
காங்கிரசைப் பொறுத்தவரை, 2024ஆம் ஆண்டு தேர்தலை ஊக்கத்துடன் எதிர்கொள்ள, கர்நாடக மாநிலத் தேர்தல் வெற்றி என்பது மிக அவசியமான ஒன்றாக இருந்தது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை, இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி என்ற இமேஜை உடைப்பதற்கு கர்நாடகத்தில் இருந்த ஆட்சி உதவிகரமாக இருந்தது. ஆகவே, அதைத் தக்கவைக்க அந்தக் கட்சி விரும்பியது. ஆனால், இந்தத் தோல்வியால், தென்னிந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளும் காங்கிரசும், பா.ஜ.கவை மீண்டும் ஒரு வட இந்தியக் கட்சியாக சித்தரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பா.ஜ.க. வலுவாக உள்ள ஒரே மாநிலம் கர்நாடகம்தான். மற்ற மாநிலங்களில் கட்சியின் நிலை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. கேரள மாநிலத்தில் 2016ல் ஒரு இடத்தைப் பெற்ற பா.ஜ.க. 2021ல் அதையும் இழந்தது. தமிழ்நாட்டில் இரு தசாப்தங்களுக்குப் பிறகு, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் நான்கு இடங்களைப் பெற்றுள்ளது அந்தக் கட்சி.
தெலுங்கானாவில் 2014ல் ஐந்து இடங்களைப் பெற்ற அந்தக் கட்சி, 2018ல் ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. இடைத் தேர்தல்களில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு மக்களவைத் தொகுதிகளைப் பெற்றது.
தெலுங்கானாவில் வரும் டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் நான்கு இடங்களைப் பிடித்த பா.ஜ.க., இந்த சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை வெல்ல நினைக்கிறது. ஆனால், கெட்ட செய்தி என்னவென்றால், அங்கு பா.ஜ.கவுக்கென வலுவான தலைவர்களோ, வேட்பாளர்களோ கிடையாது என்பதுதான். பா.ஜ.கவின் சார்பில் இடைத்தேர்தலில் வென்றவர்கள்கூட, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியிலிருந்து பா.ஜ.கவுக்கு வந்தவர்கள்தான்.

பட மூலாதாரம், Getty Images
ஆகவே, கர்நாடகத் தேர்தல்களில் பெரும் வெற்றி கிடைத்தால் காங்கிரசிலிருந்தும் பாரதீய ராஷ்ட்ரிய சமிதியிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள், நிர்வாகிகள் பா.ஜ.கவுக்கு வருவார்கள், காங்கிரஸ் நொறுங்கிப்போகும் என்று கணக்குப் போட்டிருந்தது அக்கட்சி. ஆளும் கட்சியாக வரமுடியாவிட்டால்கூட, இரண்டாம் இடத்திற்கு வரலாம் என நினைத்தது. ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது. அங்கு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது அக்கட்சிக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும்.
மேலும் தெலுங்கானா மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதும் பா.ஜ.கவுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும்.
ஆந்திரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, 2014ல் நான்கு இடங்களைப் பெற்ற பா.ஜ.க., 2019ல் ஒரு இடத்தையும் பெற முடியவில்லை. இந்தப் பின்னணியில்தான் தற்போது கர்நாடக மாநிலத்தில் கிடைத்திருக்கும் தோல்வியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. ஆகவே, மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.கவின் கணக்குகளில் கர்நாடகத்திற்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. ஆனால், இந்தச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்குமா என்பது தெரியாது. ஆனால், தன்னை ஒரு தோற்கடிக்க முடியாத கட்சியாக முன்னிறுத்திக்கொண்ட பா.ஜ.கவுக்கு இது ஒரு பின்னடைவுதான்.
பிஹார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணிகள் முறிந்துபோயுள்ள நிலையில், தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இடங்களைப் பெற பா.ஜ.க. விரும்பும். தென்னிந்தியாவில் உள்ள 140 நாடாளுமன்ற இடங்களில் தற்போது 28 (கர்நாடகத்தில் 24, தெலுங்கானாவில் 4) இடங்கள் அக்கட்சிக்கு உள்ளன. 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்த 28 இடங்களைத் தக்கவைப்பதே அக்கட்சிக்குப் பெரும்பாடாக இருக்கும்.
ஆனால், இவையெல்லாவற்றையும்விட பெரிய சவால் என்பது, தேசிய அளவில் பா.ஜ.க. குறித்த பார்வையில் ஏற்படவிருக்கும் தாக்கம்தான் அந்தக் கட்சியை மிகவும் வருத்தும். தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலையில், மீண்டும் அது ஒரு இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி எனப் பலர் விமர்சிக்க இந்தத் தோல்வி வழிவகுக்கும். மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் கர்நாடக மாநிலத்தில் 26 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோதி மேற்கொண்ட யாத்திரைக்குப் பலனளிக்கவில்லை என்பது, தேர்தல்களை எதிர்கொள்வதில் பா.ஜ.கவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட திறன் குறித்த கேள்விகளையும் எழுப்பும்.

பட மூலாதாரம், Getty Images
ராமர் கோவில், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, மதரீதியான கோஷங்கள் ஆகியவற்றையே முக்கியப் பிரச்னைகளாக முன்வைத்து, மோதி என்ற தலைவரை மட்டும் முன்னிறுத்தி நாடு முழுவதற்கும் தேர்தலை எதிர்கொண்டுவரும் பா.ஜ.க., இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது பாணியை மறுபரிசீலனை செய்யலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பிரச்னைகள் வெவ்வேறானவை. அந்தப் பகுதிகள் இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதங்களும் வெவ்வேறானவை. ஒரே விதமான அணுகுமுறையும் யாருடைய கோரிக்கைகளுக்கும் காது கொடுக்காத பிரம்மாண்ட பிரச்சாரங்களும் தென்னிந்தியாவில் பலனளிக்காது என்பதை அந்தக் கட்சி விரைவில் உணரக்கூடும்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, வேலை வாய்ப்பு, நலத்திட்டங்கள் போன்றவற்றுக்கு மிகுந்த ஆதரவு உண்டு. கர்நாடக மாநிலத் தேர்தலில் இதுபோல சில வாக்குறுதிகளை பா.ஜ.க. அளித்தாலும், அதன் அடிப்படை சித்தாந்தம் இவற்றுக்கு எதிர்மாறாக, பிரம்மாண்டமான வளர்ச்சியையே முன்னிறுத்தியது. இதனைச் சரியாக புரிந்துகொண்ட காங்கிரஸ் பெண்களுக்கு பேருந்து இலவசம், அரிசி இலவசம், பெண்களுக்கு உரிமைத் தொகை எனப் பல இலவசத் திட்டங்களை அறிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல தென்னிந்தியாவுக்கே உரித்தான பிராந்தியப் பெருமிதத்திலும் கையை வைத்தது பா.ஜ.க. நந்தினி பால் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சு, கன்னடப் பெருமிதத்தை சீண்டியது போலானது. இதனை காங்கிரஸ் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது.
இந்தத் தோல்விக்குப் பிறகு தென்னிந்தியா குறித்த பா.ஜ.கவின் அணுகுமுறை மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான மே 14ஆம் தேதியன்று அக்கட்சியின் தகவல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளரான அமித் மால்வியா ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கட்சி கர்நாடக மாநிலத்தில் மேற்கொண்ட மத ரீதியான நடவடிக்கைகளையும் இந்துத்துவத்தை முன்வைத்ததையும் ஆதரித்தே பேசியதைப் பார்க்கும்போது, அணுகுமுறை மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றுதான் தோன்றுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












