கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? டெல்லியில் சித்தராமையா, பயணத்தை தள்ளிப்போட்ட டி.கே. சிவக்குமார் - என்ன நடக்கிறது?

கர்நாடகாவில் புதிய முதல்வர் யார்?

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உடல்நலக் குறைவால் பெங்களூருவிலேயே தங்கியிருப்பதால், கர்நாடக சட்டப்பேரவை குழு தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் முடிவை காங்கிரஸ் மேலிடம் திங்கட்கிழமை இரவு எடுக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க தகுதி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அதன் முதல்வர் யார் என்பதை இன்னும் தேர்வு செய்யவில்லை.

இது தொடர்பாக கட்சியின் மேலிட தலைமை தீர்மானிக்கும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், கட்சியின் முக்கிய தலைவர்களான சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேலிட தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டி.கே. சிவக்குமார் நீங்கலாக சித்தராமையா மட்டுமே தற்போது டெல்லி வந்துள்ளார்.

சிவக்குமாரின் ரத்தக்கொதிப்பு அளவு இன்று மாலை 180/100 ஆக உயர்ந்துள்ளதால், அவர் விமான பயணத்தை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

"டி.கே. சிவக்குமார் நலம் அடைந்தால் அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்வார்," என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையிலான 3 பேர் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் குழு இன்று காலையில் டெல்லி வந்தனர். இதைத்தொடர்ந்து சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாரும் தலைநகருக்கு வரும்படி அழைக்கப்பட்டனர்.

மேலிட பார்வையாளர்கள் குழு, பெங்களூருவில் கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பதிவான வாக்குகள் இடம்பெற்ற பெட்டியை கட்சி மேலிடத்திடம் அளிக்க உள்ளது.

டி.கே. சிவக்குமாரின் மனமாற்றம்

சித்தராமையா

பட மூலாதாரம், Getty Images

தமது டெல்லி பயணத்தை கடைசி நேரத்தில் தள்ளிப்போட்ட டி.கே. சிவக்குமார் திங்கட்கிழமை காலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் போர்க்கொடி தூக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள்," என்று தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும் முதல்வர் பதவிக்குரிய போட்டியாளர்களாகவும் சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாருமே கருதப்படுகின்றனர். இதில் சித்தராமையா ஏற்கெனவே முதல்வராக இருந்துள்ளார். டி.கே. சிவக்குமாரும் துணை முதல்வராக இருந்துள்ளார்.

இந்நிலையில், சிவக்குமாரே சித்தராமையாவுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டதால், கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவின் பெயரையே காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) கூட்டத்திற்காக கூடினர். மதியம் 1:30 மணி வரை நடந்த கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் போன்ற தலைவர்களும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, கட்சித் தலைவர்கள் ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோர் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற குழு கூட்டத்தில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே அளிப்பதாகக் கூறும் ஒரு வரி தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.

"எங்கள் அனைவருக்கும் துண்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டு, நாங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயரை சட்டமன்ற குழு தலைவராக எழுதி பெட்டியில் போடச் சொன்னார்கள். அந்த செயல்முறை முடிவதற்கு நேரம் அதிமானதால் மிகவும் தாமதமாகி விட்டது,'' என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

"என் பலம் 135" - டி.கே.சிவக்குமார்

கர்நாடகா தேர்தல் 2023

பட மூலாதாரம், Getty Images

அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நிமிடங்களில், 'எனது பலம் 135' என சிவக்குமார் அறிவித்தார்.

கர்நாடக முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்ய பரிந்துரைக்கலாம் என்று காங்கிரஸ் மேலிடம் பரிசீலிக்கத் தொடங்கிய வேளையில் டி.கே. சிவக்குமாரின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சித்தராமையாவுடன் டெல்லிக்கு வருமாறு டி.கே.சிவக்குமார் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், கடைசி நேரத்தில், தனிப்பட்ட விஷயம் காரணமாக தாமதமாக டெல்லி செல்லப்போவதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.

ஆனால், இரவு 7 மணிவரை அவர் டெல்லிக்கு செல்லவில்லை. அவரது அலுவலகம் பின்னர் மருத்துவ காரணங்களுக்காக சிவக்குமார் டெல்லி செல்லவில்லை என்று தெரிவித்தது.

விமான பயணத்தை தவிர்க்க சிவக்குமார் எடுத்த முடிவு குறித்து ஊடகத்தின் ஒரு பிரிவில் பல்வேறு ஊகங்கள் வெளிவந்தன.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளதாக சித்தராமையா கூறியது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சிவக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், உரிய எண்கள் இருக்குமானால், சித்தராமையாவுக்கு எனது வாழ்த்துகள்,'' என்று கூறினார்.

மருத்துவர் அனுமதி கொடுத்தால் சிவகுமார் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்வார் என்று அவரது அலுவலகம் பிபிசி இந்தியிடம் தெரிவித்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இந்த நிலையில், அடுத்த முதல்வர் தேர்வு குறித்த அறிக்கையை கட்சியின் மேலிட பார்வையாளர்கள், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் அளித்தவுடன் புதிய முதல்வர் யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும் எம்பியுமான ரந்தீப் சூர்ஜேவாலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலை சுமூகமாக தொடர்ந்தால், கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு வரும் 18ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: