கர்நாடக தேர்தலில் அண்ணாமலையின் பிரசாரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா?

பட மூலாதாரம், @annamalai_k/Twitter
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்திருக்கும் நிலையில், அங்கு 86 தொகுதிகளுக்கு இணை பொறுப்பாளராக இருந்த தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பங்கு குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அண்ணாமலையின் பிரசாரத்திற்கு அங்கு என்ன தாக்கம் இருந்தது?
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், ஆட்சியில் இருந்த பா.ஜ.க. தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை 86 தொகுதிகளுக்குப் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பா.ஜ.க. தோல்வியை அடுத்து, சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் பங்களிப்புக் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இந்த விமர்சனங்கள் கடுமையாகவும் கேலியாகவும் முன்வைக்கப்படுகின்றன.
எந்தெந்தத் தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பு?
இந்தத் தேர்தலை எதிர்கொள்ள அந்த மாநிலத் தலைவர்கள்போக, பிற மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் தமிழக பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலையும் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், தர்மேந்திர பிரதானுக்கு 100 இடங்களும் அண்ணாமலைக்கு 86 இடங்களும் மன்சுக் மாண்டவியாவுக்கு 38 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் இருந்து 86 தொகுதிகளுக்கு அண்ணாமலை இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். உடுப்பி மாவட்டத்தில் ஐந்து, தாவணகெரேவில் ஏழு, ஷிவமொகாவில் ஏழு, ஹசனில் ஏழு, தக்ஷிண கன்னடாவில் எட்டு, உத்தர கன்னடாவில் ஆறு, பெங்களூரில் உள்ள 28, சிக்மகளூரில் ஐந்து, கோலாரில் 6, மாண்டியா 7 தொகுதிகள் என 86 தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்தப் பத்து மாவட்டங்களில், பா.ஜ.கவின் இந்துத்துவ சோதனைக் களமாகக் கருதப்படும் கடலோர மாவட்டங்களும் அடங்கியிருந்தன. அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக தனது பணியைத் துவங்கிய உடுப்பி, எஸ்.பியாக பணியாற்றிய சிக்மகளூர், துணை ஆணையராக இருந்த பெங்களூர் ஆகிய மாவட்டங்களும் இதில் இருந்தன.
இந்தப் பகுதிகளில் அவர் பணியாற்றியபோது அவருக்கு இருந்த நல்ல பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் தமிழ் பேசும் வாக்காளர்களைக் குறிவைத்தும் இந்தத் தொகுதிகள் அவருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த 86 தொகுதிகளில் 30 தொகுதிகளில் தமிழ் பேசும் வாக்காளர்கள் வெற்றியை முடிவுசெய்யக்கூடியவர்களாக இருந்தனர்.

பட மூலாதாரம், @annamalai_k/Twitter
அண்ணாமலை மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்
பா.ஜ.கவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில், 86 தொகுதிகளை (கிட்டத்தட்ட 3ல் ஒரு பகுதி) வெளிமாநிலத்தைச் சேர்ந்த, அரசியலில் மூன்றே ஆண்டுகள் ஈடுபட்ட ஒருவருக்கு ஒதுக்கியது மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டதோடு, கட்சித் தலைமை அண்ணாமலை மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. பா.ஜ.கவிலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர், “என்னைப் போல ஆறு - ஏழு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்கள் பலர் கட்சியில் இருக்கிறோம். ஆனால், ஒரு தேர்தலில்கூட வெல்லாதவர் எங்கள் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
இப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பா.ஜ.க. ஒட்டுமொத்தமாகவே 66 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. கே. அண்ணாமலை இணை பொறுப்பாளராக இருந்த 86 தொகுதிகளில் 33 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. அவரது பொறுப்பில் இருந்த பத்து மாவட்டங்களில் சிக்மகளூர், கோலார், மாண்டியா ஆகியவற்றில் ஒரு தொகுதியைக்கூட பா.ஜ.க. கைப்பற்றவில்லை. ஆனால், பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளில் 15 தொகுதிகள் பா.ஜ.கவுக்குக் கிடைத்தன.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்த இடங்களில் சுமார் 29.4 சதவீத இடங்களையே பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. அண்ணாமலை இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தொகுதிகளில் 38.3 சதவீத தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக அவர் வசம் இருந்த பெங்களூர் பகுதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளில் அக்கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆகவே, எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், அண்ணாமலையைப் பொறுத்தவரை, பா.ஜ.கவின் பொதுவான வெற்றியைவிட கூடுதலான வெற்றியையே பெற்றுத்தந்திருக்கிறார்.
இந்தத் தேர்தலில் அண்ணாமலையின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ரா. வினோத். "பொதுவாக கர்நாடக மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழர்களாக இருந்தாலும்கூட தமிழில் பிரசாரம் செய்ய மாட்டார்கள். அது தமக்கு எதிராகப் போய்விடுமோ என அஞ்சுவார்கள். ஆனால், அண்ணாமலை தமிழர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தமிழிலேயே பிரசாரம் செய்தார். பல இடங்களில் ஆங்கிலம், கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன் மூலம் கர்நாடக தேர்தல் பிரசாரக் களத்தில் பல வருடங்களுக்குப் பிறகு, கேஜிஎஃப்பிற்கு வெளியில் தமிழில் பிரசாரத்தைப் பார்க்க முடிந்தது. அதற்குப் பலனும் கிடைத்திருக்கிறது என்பது அவர் பிரசாரம் மேற்கொண்ட தொகுதிகளைப் பார்த்தாலே தெரியும்" என்கிறார் வினோத்.
'இது அண்ணாமலையின் தோல்வியல்ல'
குறிப்பாக, புலிகேசி நகரைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். அகண்டா ஸ்ரீநிவாஸ மூர்த்தியின் கோட்டையாகக் கருதப்பட்ட அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், பா.ஜ.க. வேட்பாளரும் தமிழருமான ஏ. முரளி சுமார் 10,500 வாக்குகளைப் பெற்றார். 2013ல் சுமார் 4 ஆயிரம் வாக்குகளே கிடைத்த தொகுதி இது.
கே. அண்ணாமலை குறித்து தமிழ்நாட்டில் இருக்கும் பார்வை வேறு, இங்கு உள்ள பார்வை வேறு என்றும் சுட்டிக்காட்டுகிறார் வினோத்.
ஆனால், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. அடைந்திருக்கும் தோல்வியை, அவரது எதிர்ப்பாளர்கள் அண்ணாமலையின் தோல்வியாக சமூக வலைதளங்களில் முன்வைக்கிறார்கள்.
மற்றொரு பக்கம், காங்கிரசைச் சேர்ந்த சசிகாந்த் செந்திலுடன் அண்ணாமலையை ஒப்பிட்டும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வலம்வர ஆரம்பித்துள்ளன.
சசிகாந்த் செந்திலும் அண்ணாமலையும் தங்களுடைய அகில இந்தியப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலுக்கு வந்தவர்கள். சசிகாந்த், காங்கிரசில் இணைய, அண்ணாமலை பா.ஜ.கவில் இணைந்தார். உடனடியாக மாநிலத் தலைவராகவும் உருவெடுத்தார். ஆனால், சசிகாந்த்திற்கு அம்மாதிரி பதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், கர்நாடக மாநிலத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுடன் அதன் வியூகங்களை வகிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். தற்போது காங்கிரஸ் அங்கு பெரும் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், சசிகாந்த் செந்திலின் பணிகள் பாராட்டப்பட்டுவருகின்றன.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருந்தால், இணை பொறுப்பாளராக இருந்த அண்ணாமலையின் இமேஜிற்கு மிகப் பெரிய ஊக்கத்தை அந்த வெற்றி அளித்திருக்கும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தமிழ்நாட்டில் எப்படி அணுக வேண்டும் என்பதில் அண்ணாமலையின் கருத்துக்கு கட்சிக்குள்ளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயும் ஒரு அதீத வலிமையை அளித்திருக்கும். கூட்டணிக்கான இடங்களை முடிவுசெய்வதிலும் அவரது குரலுக்கு கூடுதல் மதிப்பிருந்திருக்கும்.
ஆனால், கர்நாடகத்தில் கட்சி அடைந்த தோல்வி, தமிழ்நாட்டில் அக்கட்சி பற்றி மட்டுமல்லாமல், அண்ணாமலை குறித்தும் ஒரு பலவீனமான பார்வையை உருவாக்கியுள்ளது. இதனை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதில்தான் அவரது அரசியல் பயணத்தின் வெற்றி இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












