கர்நாடக தேர்தலில் பாஜகவை வீழ்த்த உதவிய ‘தமிழர்’ சசிகாந்த் செந்தில் - இவரின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Sasikanth Senthil
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைந்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் வார் ரூமில் நடந்த கொண்டாட்டம் சமூக ஊடகங்களில் மிக அதிகமாக பகிரப்பட்டது.
அந்த வீடியோவில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான சசிகாந்த் செந்திலும் இன்னும் சிலரும் உற்சாகமாக அந்த வார் ரூமில் இருப்பதை பார்க்க முடியும்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு பின்னால் இந்த வார் ரூமும், அதன் நிர்வாகியாக செயல்பட்ட சசிகாந்த் செந்திலின் பங்கும் முக்கியமானது என கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
கர்நாடகா அரசியல் களத்தில் பாஜகவை எதிர்த்து இந்த தேர்தல் உத்தியாளர்கள் முன்வைத்த உத்திகள் என்னென்ன? அது எந்தளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்தது?
தேர்தல் உத்தியாளர்கள் குழு

பட மூலாதாரம், Sasikanth Senthil
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக இந்த உத்திக்குழுவை ஒருங்கிணைத்தார்.
இந்த குழுவில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன் முன்னாள் தேர்தல் உத்தி நிபுணர் சுனில் கனுகோலு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோர் தலைமையிலான பின்னணிக் குழுவும் இதில் இடம்பெற்றிருந்தது.
"இந்த தேர்தலில் சுர்ஜேவாலா மற்றும் சுனில் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கான வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்கள்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
சுர்ஜேவாலா அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கர்நாடக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பாளராக மாற்றப்பட்ட உடனேயே ‘மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ள வேண்டும்‘ என்ற மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
அதையொட்டி தேர்தல் உத்திக் குழுவைச் சேர்ந்தவர்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், கர்நாடகா மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் சிக்கல் குறித்து அறியப்பட்டது.
இந்த ஆய்வின் அடிப்படையிலேயே, தேர்தலின்போது மக்களின் செல்வாக்கை பெறும் விதமாக 5 முக்கிய வாக்குறுதிகளை சித்தராமையா, சிவக்குமார், சுர்ஜேவாலா ஆகிய மூவரும் உருவாக்கினர்.
வெற்றிக்கு உதவிய வாக்குறுதிகள்

"கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை மக்கள் ஒருபோதும் கவனிக்கவில்லை என்ற முக்கியமான கருத்தை சுர்ஜேவாலா முன்வைத்தார். எனவே, அவர்தான் முக்கிய பிரச்னைகளை கண்டறிந்து கட்சி அதை எப்படி கையாளும், மக்களுக்காக என்ன செய்யும் என்பதை வாக்குறுதிகளாக முன்வைத்து பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்," என்று கர்நாடகா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் சலீம் அகமது பிபிசியிடம் தெரிவித்தார்.
அப்படித்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் முதல் வாக்குறுதி உருவானது. அதைத் தொடர்ந்து மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கும் வாக்குறுதியை சித்தராமையா முன்மொழிந்தார்.
"2013 முதல் 2018 வரை சித்தராமையா முதல்வராக இருந்தபோது 'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ் 7 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதை பாஜக அரசு வெறும் 4 கிலோவாக குறைத்தது உங்களுக்குத் தெரியும். இது உண்மையில் ஏழைகளை காயப்படுத்தியது," என்று அகமது கூறினார்.
விரைவில் பெண்களை மையமாகக் கொண்ட பிற வாக்குறுதிகளும் வந்தன.
குடும்பத் தலைவிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய், வேலையில்லாத பட்டதாரி பெண்களுக்கு 2 ஆண்டுகள் வரை மாதம் ரூ.2,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கபட்டது. இறுதியாக, பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பு வெளியானது.
"சித்தராமையா, சிவகுமார் ஆகிய இரண்டு சக்திவாய்ந்த ஆளுமைகளுக்கு இடையில் சுர்ஜேவாலா ஒரு நேர்த்தியான சமநிலைப்படுத்தும் நபராக செயல்பட்டார்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"முக்கியமான முடிவுகள் அனைத்தும் சுனில் மற்றும் சசிகாந்த் செந்திலுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டன," என்று கட்சியின் மற்றொரு தலைவர் கூறினார்.
கர்நாடகா அரசியல் களத்தில் பணியாற்றிய இந்த தேர்தல் உத்தியாளர்கள் அனைவரும் பாஜக முன்னெடுத்த பிரிவினைவாத அரசியலை நீர்த்துப்போகச் செய்யும் எதிர் பரப்புரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் என்று பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளர் விஜய் குரோவர் தெரிவித்தார்.
"இஸ்லாமிய வெறுப்பு பிரசாரம், ஆஞ்சநேயர் அரசியல் என பாஜக சார்பாக முன்வைக்கப்பட்ட பல முழக்கம் மக்களை கவரவில்லை. ஆனால் மறுமுனையில் காங்கிரஸ் கட்சி பாஜகவின் மத பிரசாரத்திற்கு பின்னால் செல்லாமல், பெண்கள் முன்னேற்றம், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்தது. இதை தங்கள் பரப்புரைகளின் போது முக்கிய ஆயுதமாக காங்கிரஸ் பயன்படுத்தியதில் அந்தக் கட்சியின் தேர்தல் உத்தியாளர்கள் பங்கு முக்கியமானது," என்றார் விஜய் குரோவர்.
பாஜகவுக்கு தலைவலியான 'PayCM' பரப்புரை

பட மூலாதாரம், ANI
கர்நாடகாவில் டெண்டர்களை நிறைவேற்ற 40% வரை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுக்கவேண்டிய நிலைமை உள்ளது என கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்தது.
இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்தி நிபுணர் சுனில் தலைமையிலான குழு ஒரு பரப்புரையை முன்னெடுத்தது.
டெண்டர்களை நிறைவேற்ற 40 சதவீத கமிஷன் கொடுக்க நிர்பந்திக்கப்படுவதாக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த முழு பிரசாரமும் நடத்தப்பட்டது.
இதை பிரபலமாக்க கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில், ஒரு QR கோட் கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டது. பாஜக முதலமைச்சருக்கு எதிரான ஊழல் பிரசாரமாக 'PayCM' மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
போஸ்டர் ஒட்டிய சில கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர், சிவக்குமார் மற்றும் சித்தராமையா போன்ற உயர்மட்டத் தலைவர்களே சுவரொட்டிகளை ஒட்டியதற்கும், போராட்டம் நடத்தியதற்கும் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் பின்னால் வந்த பாஜக

பட மூலாதாரம், Getty Images
ஊழல் குற்றச்சாட்டும், ஊழல் வாக்குறுதிகளையும் பாஜகவினர் ஒருபோதும் திறம்பட எதிர்கொண்டதில்லை. பிரதமர் மோடி ஒரு கூட்டத்தில் 'இலவசங்கள்' கலாசாரத்தை குறிப்பிட்டார். ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டபோது, யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி ஆகிய நாட்களில் மூன்று இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
கடந்த 9 ஆண்டுகள் போலல்லாமல் இம்முறை தேர்தல் பரப்புரை எதை நோக்கி செல்லவேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தீர்மானித்தது. கர்நாடகா அரசியல் களத்தில் பாஜகவால் அதை தீர்மானிக்க முடியவில்லை என்று பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் நிர்வாகி சசிகாந்த் செந்தில், “இதற்கு முன்நடந்த தேர்தல்களில் மக்களின் கவனம் எதை நோக்கி செல்லவேண்டும் என்பதை பாஜக முடிவு செய்யும். மத ரீதியிலான பரப்புரை, இஸ்லாமிய வெறுப்புணர்வு, பசு அரசியல் என ஏதாவது ஒரு பிரச்னையை நோக்கி அதன் பிரசாரத்தை பாஜக செலுத்தும். பாஜகவுக்கு எதிர்வினையாற்ற காங்கிரஸ் தன் திட்டத்தை மாற்றி, பாஜக வகுத்த பாதையில் பயணித்தது. கர்நாடகா களத்தில் இந்த நிலையை நாங்கள் மாற்றினோம். காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை தாண்டி பாஜகவின் மத ரீதியிலான பரப்புரையை மக்கள் விரும்பவில்லை,” என்று தெரிவித்தார்.
இதேபோல ஹிஜாப் தடை விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரம் போன்ற பல முக்கிய பிரச்னைகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்தியாளர்களின் பகுப்பாய்வும், கள ஆய்வும் இன்று கர்நாடக சட்டபேரவை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற அக்கட்சிக்கு உதவியது என மூத்த பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.
யார் இந்த சசிகாந்த் செந்தில்?

பட மூலாதாரம், Twitter
தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
2009ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.
2019ஆம் ஆண்டு தக்சின கன்னடா மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்தபோது தனது மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சசிகாந்த செந்தில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.
கர்நாடகா தேர்தலுக்காக ஆய்வுகள், உத்திகளை வகுக்க வார் ரூம் அமைக்கப்பட்ட போது அதை வழிநடத்தும் பொறுப்பு சசிகாந்த் செந்திலுக்கு வழங்கப்பட்டது.
சுனில் கனுகோலுவின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Twitter/INC
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோதியின் பரப்புரை குழுவை பிரசாந்த் கிஷோர் வழிநடத்தினார். அந்த குழுவில் மோதிக்காக சுனில் கனுகோலு வேலை செய்தார்.
2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் பிரசார உத்திகளை வகுக்கும் குழுவை வழிநடத்தினார்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகக்காக உத்தி வகுக்கும் பொறுப்பை ஏற்று நடத்தினார் சுனில் கனுகோலு.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள சுனில் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த இரண்டு மாதங்களில் 2024 நாடாளுமன்ற தேர்தல் உத்திகளை வகுக்கும் தேர்தல் பணிக்குழுவின் ஆலோசகர்களின் ஒருவராக சுனிலை நியமித்தார் சோனியா காந்தி.
அதைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் தேர்தல் உத்தி வகுக்கும் நிபுணராக பணியாற்றினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












