கள்ளச்சாராய மரணங்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய என்எச்ஆர்சி

தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பதிவாகி வரும் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இந்த விவகாரத்தில், மாநில அரசு சட்டவிரோதமான வகையிலோ கள்ளத்தனமாகவோ சாராயம் விற்பனை மற்றும் அதன் நுகர்வுக்கு தடை விதிக்கத் தவறிவிட்டது என்று ஆணையம் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
மே 12 முதல் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படும் பலர் உயிரிழந்ததாகவும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அதில், கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊடகச் செய்திகளின் தகவல் உண்மையாக இருந்தால், அது மக்களின் வாழ்வுரிமையை மீறுவதாகும் என ஆணையம் கருதுகிறது. அதன்படி, இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று அதன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் அதன் மீதான விசாரணை நிலவரம், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போன்றவை விளக்க அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
நடந்த சம்பவங்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆணையம் அறிய விரும்புவதாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயத்தை முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கி விழ அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று கள்ளச்சாராயம் குடித்ததில் 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, வசந்தா, வள்ளியப்பன், சந்திரா ஆகியோர் மரக்காணம் பகுதியில் இருந்து வாங்கிச் சென்ற விஷ சாராயம் குடித்து உடல் நலம் பாதிப்பதால் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
மரக்காணத்தில் போலீசார் குவிப்பு
இந்த நிலையில் எக்கியார்குப்பம் கிராம மக்கள் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையைக் கண்டித்து கிழக்குக் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"சாராய வியாபாரி கைது"
கள்ளச்சாராய பலி சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளச்சாராய வியாபாரி எனக் கூறப்படும் அமரன் என்பவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்படாத மொத்த சாராய வியாபாரி எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் - ஐஜி விளக்கம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் (14.5.2023) .
அப்போது, “விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாக உள்ளனர், அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள், செங்கல்பட்டில் ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் மது விலக்கு பிரிவின் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது,” என்றார் .
மேலும், தொடர்ந்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, மரக்காணம் அரசு மருத்துவமனையில் 10 நபர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், 5 நபர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனையிலும், 2 நபர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், 1 நபர் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவமனையிலும், 1 நபர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர், “பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேக சிறப்பு சிகிச்சை அறை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிக்கை
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஞ்சிய குற்றவாளிகளைத் தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனையில் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேரின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி (14.5.2023), “தமிழகத்தில் கள்ளச்சாராயம், குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக முதல்வர் காவல்துறை மாநாட்டை நடத்தி, போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவை உருவாக்கினார்.
அதனடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழகத்தில் போதைப்பொருள் தடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் இதெல்லாம் புதிதாக நடைபெறுவது போலத் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்கபட்டது. அதற்குத் துணைபோன அமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தியது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். போதைப் பொருள் விற்பனையை கடந்த ஆட்சிக் காலத்தில் வளர்த்துவிட்டுச் சென்றனர்.
ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளார். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் வருத்தமளிக்கிறது,” என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












