பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழா சர்ச்சை: கோவில் நிர்வாகம் - புலிப்பாணி சித்தர்கள் மோதலின் பின்னணி என்ன?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பழனி முருகன் கோவிலில் புலிப்பாணி சித்தர்கள் போகர் ஜெயந்தி நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
கோவில் நடைமுறையில் இல்லாத விழாவை நடத்த முற்படுகின்றனர் என கோவில் நிர்வாகம் கூறும் நிலையில் தங்களின் நடைமுறையில் கோவில் நிர்வாகம் தலையிடுவதாக புலிப்பாணி சித்தர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
புலிப்பாணி சித்தர்கள் யார்?
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக உள்ள பழனி கோவில் முக்கியமான ஆன்மீக தளமாகவும் விளங்குகிறது.
சித்தர் வழிபாட்டு முறையில் உருவான கோவில் என்பதால் அதன் வழிவந்தவர்களுக்கு பழனி கோவிலில் முக்கியத்துவம் உள்ளதாக நம்பப்படுகிறது.
பழனி மலையில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலும் போகர் சன்னதியும் அமைந்துள்ளது.
புலிப்பாணி ஆசிரமம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. புலிப்பாணி ஆசிரமம் மற்றும் போகர் சன்னதியில் தங்களுக்கே முழு உரிமை உள்ளது என போகர் ஆதினம் கோரி வருகிறது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
போகர் ஜெயந்தியும் சர்ச்சையும்

இந்த நிலையில் தற்போது போகர் ஜெயந்தி என்கிற விழாவை நடத்த முற்படும் போகர் ஆதினத்துக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் இடையே மோதல் போக்கு காணப்படுகிறது.
இம்முறை போகர் ஜெயந்தி மே 18 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
போகர் என்பவர் தான் பழனி மலை கோவிலில் வழிபாட்டை தொடங்கி வைத்தார். சித்தர் வழிபாட்டு முறை தான் பழனி கோவிலின் பாரம்பரியம். போகர்களின் வழிவந்தவர்கள் தான் புலிப்பாணி சித்தர்கள். ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் போகருக்கு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது என போகர் ஆதினம் தெரிவிக்கிறது.
பழனியைச் சேர்ந்த செந்தில் பிபிசி தமிழிடம் பேசுகையில், “பழனி மலை கோவில் என்பது சித்தர் பூமி. ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் பிரதிஷ்டை செய்த சிலை அது. மலை மேல் இருப்பது சித்தர் வழிபட்ட தலம் தான்.
பழனி மலையின் தென் பகுதியில் அவரின் ஜீவ சமாதி உள்ளது. அங்குதான் போகர் சன்னதி உள்ளது. அவருடைய வழி வந்தவர்கள் தான் புலிப்பாணி சித்தர்கள். தற்போது வரை அவர்கள் தான் போகர் சன்னதியை பூஜை செய்து பராமரித்து வருகின்றனர்.
பழனி கோவிலை, 1960களில் இருந்து தான் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. அதற்கு முன்பு வரை கோவில் பூஜையில் புலிப்பாணி வாரிசுகளின் பங்கு அதிகமாக இருந்தது. பிரதான சன்னதியிலும் அவர்களே இருந்தனர்.
அறநிலையத்துறை வந்த பிறகு தான் அந்த நிலை மாறியது. தற்போதும் நவராத்திரி விழாவில் புலிப்பாணி சித்தர்களுக்கு தான் கோவில் நிர்வாகத்தால் முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
அதற்கான சான்றுகளும் ஓலைச் சுவடிகளும் தற்போது வரை பாதுகாப்பாக உள்ளன. ஆனால் நிர்வாகம் புலிப்பாணி சித்தர்களின் அதிகாரத்தை குறைக்க நிறைய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தார்கள். அதன் சமீபத்திய நகர்வு தான் நவராத்திரி விழாவில் உங்களுக்கு மரியாதை வழங்க முடியாது. போகர் ஜெயந்தி நடத்த அனுமதிக்க முடியாது என அறிவித்து விட்டார்கள். கோவில் நிர்வாகம் புலிப்பாணி சித்தர்களிடம் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறார்கள்,” என்றார்.

போகர் ஜெயந்தி என்பது நீண்ட காலமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக போகர் ஆதினம் கூறி வருகின்றனர்.
ஆனால் அத்தகைய நடைமுறை இல்லை எனக் கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றது.
கோவில் நிர்வாகத்தின் உத்தரவு

இது தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “போகர் சன்னதி பழனி திருக்கோவிலின் ஒரு உபசன்னதியாகும். போகர் சன்னதி கோவிலின் நிர்வாக பொறுப்பில் தான் உள்ளது. கோவில் விழாக்களில் மற்ற பூசகர்களுக்கு செய்யும் அனைத்து மரியாதைகளும் போகர் பூசர்களுக்கும் செய்யப்படுகின்றன. போகர் சன்னதிக்கு உரிமை கோரும் வழக்கில் கோவில் நிர்வாகம் தடை ஆணை பெற்றுள்ளது.
இந்நிலையில் போகர் சன்னதி பூசகர்கள் தங்களின் சுய நலனுக்காகவும் உள்நோக்கத்துடனும் பழனி திருக்கோவிலின் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த முற்படுகின்றனர்.

மலைக்கோவில் நடைமுறையில் இல்லாத புதிய விழாக்கள் எதையும் நடத்தக்கூடாது என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பாக போகர் சன்னதி பூசகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போகர் ஜெயந்தி நடந்தே தீரும் என போகர் ஆதினம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், “கடந்த 2 ஆண்டுகளாக பழனி கோவில் நிர்வாகம் பாரம்பரிய நடைமுறைகளில் தலையிடுவது வேதனையளிக்கிறது. திட்டமிட்டபடி மே 18-ல் போகர் ஜெயந்தி விழா நடக்கும்,” என்கிறார்.

போகர் ஆதினத்தைச் சேர்ந்த மருத்துவர் பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கோவில் நிர்வாகம் சொல்வதைப் போல போகர் ஜெயந்தி நடைமுறையில் இல்லாத ஒன்று கிடையாது.
பல வருடங்களாக போகர் ஜெயந்தி நடத்தப்படுவதற்கான சான்று எங்களிடம் உள்ளது. ஆனால் கோவில் நிர்வாகம் கூறும் விஷயங்களுக்கு அவர்களிடம் உரிய சான்று இல்லை. பழனி கோவிலில் உள்ள நவபாஷாண சிலையில் போகர் தான் வழிபாடு தொடங்கி வைத்தார். பழனி கோவில் போகர்கள் பராமரிப்பில் தான் இருந்தது.
திருமலைநாயக்கர் காலத்தில் தான் பிராமணர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது தலைமை பொறுப்பு புலிப்பாணி சித்தர்களிடம் தான் இருந்தது.
காலப்போக்கில் அவை சுருங்கி போகர் சன்னதியை மட்டும் புலிப்பாணி சித்தர்கள் பராமரிக்கும் நிலை உருவானது. தற்போது போகர் சன்னதி மற்றும் புலிப்பாணி ஆசிரமத்தையும் அறநிலையத் துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள பார்க்கிறது.
இது தொடர்பான வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தற்போது வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. கோவில் நிர்வாகம் பல உண்மைகளை மறைத்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
போகர் சமாதி திருக்கோவிலின் உபசன்னதி அல்ல. அதே போல போகர் சன்னதிக்கு ஆதினம் உரிமை கொண்டாட எந்த தடை உத்தரவும் பெறப்படவில்லை.
புலிப்பாணி சித்தர்களுக்கான மரியாதை தற்போதும் தொடர்கிறது.
இந்த சமயத்தில் போகர் ஜெயந்தியை நடத்தக்கூடாது என கோவில் நிர்வாகம் கூறுவது தவறானது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அதில் 18ஆம் தேதி அனைத்து முறைகளையும் பின்பற்றி போகர் ஜெயந்தி நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகம் இதற்குப் பிறகும் போகர் ஜெயந்தி நடத்த முட்டுக்கட்டை போடாமல் ஒத்துழைக்க வேண்டும்,” என்கிறார்.
போகர் சன்னதி மற்றும் புலிப்பாணி ஆசிரமத்தில் யாருக்கு உரிமை உள்ளது என்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது.
இது தொடர்பாக கருத்து பெற பழனி கோவிலின் செயல் அதிகாரியை தொடர்பு கொண்டபோது அவரின் இணைப்பை பெற முடியவில்லை. அவரின் கருத்து கிடைத்த உடன் இந்தக் கட்டுரையில் இணைக்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












