ஆண் மலட்டுத்தன்மை அதிகரிப்பது ஏன்? ஆய்வு சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்!

குழந்தை, மாசுபாடு, மலட்டுத்தன்மை, கருவுறுதல்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனின் யார்க்ஷையர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சியாரன் -ஜெனிபர் ஹானிங்டன். இவர்கள் குழந்தை பேறுக்காக இரண்டு ஆன்டுகளாக முயற்சித்து வந்தனர்.

இருவரில் ஜெனிபருக்கு ஹார்மோன் கோளாறு தொடர்பான கர்ப்பப்பை பிரச்னை இருந்தது ( polycystic ovarian syndrome) பரிசோதனையில் தெரிய வந்தது. அவர் கருத்தரிக்க முடியாமல் போவதற்கு இதுயொரு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதினர்.

இருப்பினும் இந்த பிரச்னைக்கு உரிய சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம் என்று ஜெனிஃபருக்கு மருத்துவர்கள் நம்பிக்கை அளித்தனர்.

ஆனால், ஜெனிபரின் கணவர் சியாரனுக்கு இருந்த பிரச்னைக்கு மருத்துவ ரீதியாக பெரிய அளவில் தீர்வு காண முடியாது என்று மருத்துவர்கள் கூறியதை, அந்த தம்பதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆமாம்… சியாரனுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததுடன், அவற்றின் இயக்கமும் மெதுவாக இருந்ததும் சோதனைகளில் கண்டறியப்பட்டது.

ஜெனிபருக்கு கருப்பையில் இருந்த சிக்கலை விட, சியாரனுக்கு இருக்கும் இந்த குறைபாட்டுக்கு சிகிச்சை அளிப்பது மிக கடினமான விஷயம் என்று மருத்துவர்கள் கருதினர். ஒருவேளை சிகிச்சைக்கு கூட சாத்தியமில்லாமல் போகலாம் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

மருத்துவர்கள் இப்படி சொன்னதைக் கேட்டு தான் அதிர்ச்சியில் உறைந்ததாக கூறும் சியாரன், படுக்கையில் தன் மனைவியை வீழ்த்தி, ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிவிடுவேன் என்று நினைத்திருந்தேன் என கூறினார்.

மருத்துவர்கள் தமக்கு விந்தணு குறைபாடு இருப்பதாக சொன்னபோது அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் எண்ணியிருந்தேன் என கூறும் சியாரன், நாட்கள் செல்லச் செல்ல மருத்துவர்கள் சொன்னது உண்மையென தெரிய வந்தது.

தான் மனநல பாதிப்புக்கு ஆளானதாக வேதனையுடன் தெரிவிக்கிறார் அவர். அத்துடன் தனிமை தம்மை சூழ்ந்ததாகவும், அந்த சூழலில் இருந்து விடுபட மது பழக்கத்துக்கு அடிமையானதாகவும் சியாரன் கூறுகிறார்.

ஒரு இனம்புரியாத பீதி மனதில் பற்றிக் கொண்டதாகக் குறிப்பிட்டு தமது மோசமான அந்த காலத்தை விவரிக்கிறார் அவர்.

கருத்தரிப்பதில் மனிதனுக்கு உள்ள பிரச்னைகளில் ஆண் மலட்டுத்தன்மை ஏறத்தாழ பாதி அளவு பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த ஆண்களின் எண்ணிக்கையில் 7 சதவீதம் பேருக்கே மலட்டுத்தன்மை குறைபாடு உள்ளது. இருப்பினும் சமூகம், கலாசாரம் உள்ளிட்ட காரணங்களால் பெண் மலட்டுத்தன்மை அளவுக்கு ஆண்களுக்கு இருக்கும் இந்த பிரச்னை அதிகமாக விவாதிக்கப்படுவதில்லை.

சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணிகள் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும், குறிப்பாக விந்தணுவின் தரத்தை இந்த காரணிகள் பாதிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் இந்த பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகலாம் எனவும் ஆய்வுகள் எச்சரிப்பதால், தனிமனிதன் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

மறைக்கப்படுகிறதா மலட்டுத்தன்மை?

குழந்தை, மாசுபாடு, மலட்டுத்தன்மை, கருவுறுதல்

கடந்த நூற்றாண்டில் உலக மக்கள்தொகை வியக்கத்தக்க அளவு உயர்ந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன் உலகின் மொத்த மக்கள்தொகை 2.5 பில்லியனாக இருந்தது. ஆனால் 2022 இல் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை எட்டு பில்லியனாக எகிறியுள்ளது. இருப்பினும் பல்வேறு சமூக, பொருளாதார காரணங்களால் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறிப்பிட்ட ஆண்டுகளில் மெதுவாகவே இருந்து வந்துள்ளது.

உலக அளவில் பிறப்பு விகிதம் அதிரடியாக குறைந்துள்ளது. உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், ஒரு பெண்ணுக்கு இரண்டும் குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ள நாடுகளில் வாழ்கின்றனர். பெண்களின் பொருளாதார சுதந்திரம், அவர்களின் இனப்பெருக்க நலன்கள் மீதான கட்டுப்பாடு போன்ற காரணங்களால் உலக அளவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.

மறுபுறம், குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில், பெரும்பாலான தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் குடும்பங்களின் ஆதரவின்மை போன்ற சமூக, பொருளாதார காரணங்களால் அவர்களின் இந்த விருப்பம் நிறைவேறாமல் போகலாம் என்கின்றன அந்த ஆய்வுகள்.

அதேசமயம் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையின்மை அதிகரிப்பு, டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் உற்பத்தி குறைதல், விரைப்பை புற்றுநோய் போன்றவை ஆண்களின் இனப்பெருக்க பிரச்னைகளை அதிகரித்து வருவதாக ஆய்வு கூறுகின்றன.

நீந்தும் செல்கள்

குழந்தை, மாசுபாடு, மலட்டுத்தன்மை, கருவுறுதல்

விந்துணுவை நேர்த்தியான செல்கள் என்று வர்ணிக்கிறார் டன் டீ பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவ பிரிவைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணரான சாரா மார்ட்டின்ஸ் டா சில்வா.

அளவில் சிறிய, நீந்தும் தன்மைக் கொண்ட விந்தணுக்கள், உடலுக்கு வெளியிலும் உயிர்வாழும் அசாதாரண நிபுணத்துவம் பெற்றவை எனக் கூறும் சாரா, வேறு எந்த செல்களுக்கும் இந்த சிறப்பு கிடையாது என்கிறார்.

விந்தணுக்களின் வடிவம், அளவு, கருமுட்டைக்குள் அதன் நகரும் திறன், அதன் எண்ணிக்கை உள்ளிட்ட காரணிகள் கருவுறுதலில் முக்கிய அம்சங்களாக கருத்தில் கொள்ளப்படுகின்றன.

ஒரு மில்லி லிட்டரில் எவ்வளவு விந்தணுக்கள்?

பொதுவாக, ஓர் ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்துவில், 40 மில்லியனுக்கும் குறைவான விந்தணுக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர் மலட்டுத்தன்மை பிரச்னைக்கு ஆளாகிறார் என்று அர்த்தம் என்கிறார் ஜெபுசலேமின் ஹீீப்ரு பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பேராசிரியரான ஹகாய் லெவின்.

“அதிகமான விந்தணுக்களின் எண்ணிக்கை மட்டும் கருவுறுதலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திவிடாது என்றாலும், ஒரு மில்லிலிட்டரில் 40 மில்லியனுக்கு குறைவான விந்தணுக்கள் இருந்தால், அது கருத்தரித்தலுக்கான வாய்ப்பை அதிரடியாக குறைக்கிறது” என்கிறார் லெவின்.

மனித விந்தணுக்களின் எண்ணிக்கை குறித்த உலக அளவிலான பகுப்பாய்வை, லெவின் மற்றும் அவரது சகாக்கள், கடந்த ஆண்டு (2022) வெளியிட்டிருந்தனர்.

சரியும் விந்தணு எண்ணிக்கை

குழந்தை, மாசுபாடு, மலட்டுத்தன்மை, கருவுறுதல்

பட மூலாதாரம், Getty Images

அதில், 1973 முதல் 2018 வரையிலான 45 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 1.2% விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 1973 இல் ஒரு மனிதனின் ஒரு மில்லி லிட்டர் விந்துவில் 104 மில்லியனாக இருந்த விந்தணுக்களின் எண்ணிக்கை, 2018 இல் 49 மில்லியனாக சரிந்துள்ளதாக இந்த பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக 2000ஆம் ஆண்டில் இருந்து இந்த வீழ்ச்சி விகிதம் ஆண்டுக்கு 2.6 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மனிதனின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் அல்லது சுற்றுசூழல் மாசடைதல் போன்ற காரணிகளால் மரபணுக்களின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், விந்தணுக்களின் எண்ணிக்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறுகிறார் லெவின்.

தலைமுறை, தலைமுறையாக இந்த குறைபாடு அதிகரித்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் இருப்பதாக சொல்கிறார் அவர்.

விந்தணுக்களின் எண்ணிக்கை மாறுபாடு, ஆண் மலட்டுத்தன்மை ஆகியவற்றில் எபிஜெனெடிக்ஸ் எனப்படும் மரபணு செயல்பாடு முக்கிய பங்கு வகிப்பதாக பிற ஆய்வுகளும் கூறுகின்றன.

விந்தணு எணணிக்கை குறைதல் என்பது ஆண் வர்க்கத்தின், ஏன் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மோசமான ஆரோக்கிய அறிகுறியாகும் என்கிறார் லெவின்.

இதன் விளைவாக, ஒரு பொது சுகாதார நெருக்கடியை ஏற்றுக் கொண்டுள்ள மனித சமூகம், இதிலிருந்து மீள முடியுமா என்றும் தெரியவில்லை என்கிறார் அவர் கவலையுடன்.

மலட்டுத்தன்மை மற்றும் பிற உடல்நல பிரச்னைகளுக்கு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

“ ஒரு குழந்தையை ஆசையாய் பெற்றுக் கொள்ள விரும்பும் மனிதன், அதனை கருவுறுதலின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது போனால், அது மிகப் பெரிய பிரச்னை” என்கிறார் டா சில்வா.

லிந்தணுக்களின் தரம் குறைவதை தடுக்க, தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறை மாற்றம் மட்டும் போதுமானதாக இருக்காது. சுற்றுசூழல் மாசுப்பாடு இதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.

நச்சு சூழ் உலகம்

குழந்தை, மாசுபாடு, மலட்டுத்தன்மை, கருவுறுதல்

பட மூலாதாரம், Getty Images

மனிதன் வசிக்கும் வீடுகளில் காணப்படும் பல்வேறு ரசாயன பொருட்கள் அவனது உடல் ஆரோக்கியத்தில், குறிப்பாக இனப்பெருக்க அமைப்பில் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து, பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் கால்நடை துறை பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான ரெபக்கா பிளான்சார்ட் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

வேதிப்பொருட்களின் பயன்பாடுகளால் மனிதன் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்னைகளை, வீட்டு விலங்கான நாயும் அனேகமாக எதிர்கொள்வதால், தமது இந்த ஆராய்ச்சிக்கு நாய்களை முன்னுதாரணமாக அவர் பயன்படுத்தினார்.

பிளாஸ்டிக், தீ தடுப்பான் மற்றும் பல்வேறு விதமான வீட்டு உபயோகப் பொருட்களில் காணப்படும் ரசாயனங்களின் உடல்நல தாக்கம் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதில், நம் சுற்றுசூழல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள், ஹார்மோன் அமைப்புகளை சீர்குலைத்து ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதேபோன்ற பாதிப்புகள் நாயின் இனப்பெருக்க அமைப்பிலும் ஏற்படுத்துவதை பிளான்சார்ட்டின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ரசாயன பொருட்களின் தாக்கத்தால் மனிதனின் விந்தணு இயக்கமும் குறைவதை ஆய்வில் கண்டறிந்துள்ளோம் எனக் கூறும் பிளான்சார்ட், நாய்களுக்கும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவற்றின் தாக்கத்தால் மனித மரபணு (DNA) துண்டாகும் அளவும் அதிகரிக்கிறது என்பதும் ஆய்வில் தெரிய வந்தது என்ற அதிர்ச்சி தகவலையும் சொல்கிறார் பிளாட்சார்ட்.

தடை செய்யப்பட்ட சில வேதிப்பொருட்கள், சுற்றுச்சூழல் மற்றும் பழைய வீட்டு உபயோகப் பொருட்களின் மூலம் இன்னமும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விந்தணுவின் டிஎன்ஏ சிதைவு என்பது விந்தணுவின் மரபணு மூலக்கூறுகளில் ஏற்படும் சிதைவு அல்லது முறிவுகளை குறிக்கிறது. இது கருத்தரிப்புக்கு அப்பாற்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்கிறார் பிளாட்சார்ட்.

டிஎன்ஏ துண்டாகும் அளவு அதிகரிப்பை கொண்டு, ஆரம்பகால கருச்சிதைவு நிகழ்வுகளை அவர் விளக்குகிறார்.

பிளாஸ்டிக் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களில் கலந்துள்ள ரசாயனங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் காற்றில் கலந்துள்ள ரசாயனங்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்கள் கருவுருதலில் எற்படுத்தும் தாக்கங்கள் குறித்த பிளாட்சார்ட்டின் ஆய்வுகள், இவை தொடர்பான பிற ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப் போகின்றன.

கார்பன், பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் பேத்தலேட் (phthalates) போன்ற வேதிப்பொருட்கள் ஆண்கள், பெண்களை மட்டுமின்றி கருவில் இருக்கும் குழந்தைகளையும் கூட பாதிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பருவநிலை மாற்றம்

குழந்தை, மாசுபாடு, மலட்டுத்தன்மை, கருவுறுதல்

பருவநிலை மாற்றமும் ஆணின் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதிகரிக்கும் புவி வெப்பநிலை, வெப்ப அலைகள் போன்றவை பூச்சியினங்களின் விந்தணுக்களை சேதப்படுத்துவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இதேபோன்ற தாக்கம் மனிதனுக்கும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக சுற்றுப்புற வெப்பநிலை, புவி வெப்பமயமாதல், அதிக வெப்பமான சூழலில் பணிபுரிவது போன்றவை மனித விந்தணுவின் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக. 2022 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உணவு, மன அழுத்தம், மது பழக்கம்

சுற்றுசூழல் காரணிகளுடன் மனிதனின் சில தனிப்பட்ட பிரச்னைகளும் ஆணின் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஊட்டச்சத்துகள் அற்ற உணவுகளை உட்கொள்ளுதல், உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் மது போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடும் கருவுறுதலில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதிகரித்து வரும் ஆண் மலட்டுத்தன்மையை தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு தனிநபரும் தனது விந்தணுவின் தரத்தைப் பாதுகாக்க அல்லது அதிகரிக்க ஏதாவது செய்ய முடியுமா என்றால், இயலும் என்கிறார் பிளாங்சார்ட்.

உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளின் மூலம் விந்தணுவின் தரத்தை பாதுகாக்கலாம் என்கிறார் அவர்.

கருவுருதலுடன் தொடர்புடைய ரசாயன பொருட்கள் அல்லாத, கரிம உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தேர்வு செய்யவும் அவர் பரிந்துரைக்கிறார்.

ICSI (Intracytoplasmic Sperm Injection) எனப்புடும் IVF மருத்துவ தொழில்நுட்ப முறையான நவீன சிகிச்சை மூலம், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சியாரன் - ஜெனிபர் ஹானிங்டன். தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால் இதற்காக தாங்கள் கொடுத்துள்ள விலை மிக அதிகம் எனக் கூறும் இந்த தம்பதி, இருப்பினும் ஒவ்வொரு நாளும் எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்” என்கின்றனர் கண்ணீர் பொங்க.

ஒரு விந்தணுவை பெண்ணின் கருமுட்டையில் செலுத்தும் IVF தொழில்நுட்ப சிகிச்சைக்கு (ஒருமுறை) 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். ஜெனிபர் ஹானிங்டனுக்கு மூன்று முறை இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றால், குழந்தை பேறுக்காக இத்தம்பதி கொடுத்துள்ள விலையை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: